You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வங்கதேசம் தவறவிடாத ஒரு விக்கெட்; இந்தியா தவறவிட்ட இரண்டு கேட்ச்
- எழுதியவர், அஷ்ஃபாக்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
இந்தியாவின் வெற்றிக்கு வெறும் ஒரு விக்கெட் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் வங்கதேசத்திற்கோ 51 ரன்கள் தேவைப்பட்டன. இந்தியாவுக்கு இது ஒரு பொருட்டே அல்ல, சுலபமாக வென்றுவிடும் என்றுதான் ரசிகர்கள் எண்ணிக்கொண்டிருந்தனர். ஆனால் அந்த நம்பிக்கையை சுக்கு நூறாக்கியது மெஹுதி ஹசனின் நிதானமான ஆட்டம்.
மெஹுதி ஹசனின் சென்சிபிலான ஆட்டத்தால் வரலாற்று வெற்றியை வங்கதேசம் படைத்திருப்பதாக வர்ணணையாளர் விவரித்தார். உலக கோப்பையை வென்றதுபோன்று வீரர்கள் மைதானத்திற்குள் ஓடி வந்து போட்டியை போராடி வென்ற மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். மெஹுதி ஹசனை தோள் மேல் தூக்கி வைத்து சக வீரர்கள் கொண்டாடினர்.
மைதானத்தில் திரண்டிருந்த வங்கதேச ரசிகர்கள் வெற்றியை ஆரவாரத்துடன் கொண்டாடி உணர்ச்சிவசப்பட்டனர். வெல்லவே முடியாது என்கிற கட்டத்தில் இருந்த வங்கதேசம் விடா முயற்சியால் வென்று காட்டியிருக்கிறது என சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்தன. இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளில் ஏற்படும் அதே பரபரப்பை இன்றைய ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் ரசிகர்களுக்கு வங்கதேசம் வழங்கியிருந்தது
வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. டாகாவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளரான குல்தீப் சென் அறிமுகம் செய்யப்பட்டார்.
முதலில் பேட் செய்த இந்தியா 186 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதுவும் கே.எல்.ராகுல் அதிகபட்சமாக சேர்த்த 73 ரன்களால் கணிசமான ஸ்கோரை எட்ட முடிந்தது. ரோகித், தவான், கோலி, ஷ்ரேயாஸ் என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வங்கதேச பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆட்டமிழந்தனர். கே.எல். ராகுல் 5வது இடத்தில் களமிறங்கினார். அது இந்தியாவுக்கு பலமாகவே அமைந்தது. இதுவரை அவர் 5வது இடத்தில் விளையாடிய 11 போட்டிகளில் மொத்தம் 526 ரன்கள் சேர்த்துள்ளார். சராசரி 58.44. இதில் ஒரு சதமும் 5 அரைசதமும் அடக்கம்.
ஓங்கி அடித்த ஷாகிப் அல் ஹசன்
துல்லியமாக பந்துவீசிய வங்கதேச சுழற்பந்துவீச்சாளர் ஷாகிப் அல் ஹசன், 5 விக்கெட்களை வீழ்த்தினார். 10 ஓவர்களை வீசிய அவர் 2 மெய்டன்கள் வீசியது மட்டுமின்றி 36 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதேபோல இபாதத் ஹூசைனும் 4 விக்கெட்களை சாய்த்தார். 187 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் வங்கதேசம் அணி களமிறங்கியது. முதல் ஓவரின் முதல் பந்திலேயே தீபக் சாஹர் நஜ்முல் ஹுசைனின் விக்கெட்டை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார்.
இதன் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் போட்டியில் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். முன்னதாக 2012ல் புவனேஸ்வர் குமார் ஒருநாள் போட்டியில் முதல் பந்தில் விக்கெட் எடுத்திருந்தார். அடுத்து வந்த ஹக் 14 ரன்களும் லிட்டன் தாஸ் 41 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஷாகிப் அல் ஹாசன் 29 ரன்கள் எடுத்தது வரை வங்கதேசத்தின் நிலைமை நன்றாகவே இருந்தது. வெற்றிக்கான பாதி தூரத்தை கடந்திருந்தது வங்கதேசம். வாசிங்டன் சுந்தர் வீசிய பந்தை ஓங்கி அடித்தார் ஷாகிப் அல் ஹசன்.
எக்ஸ்ட்ரா கவரில் இருந்த விராட் கோலி ஒற்றை கையால் பந்தை லாவகமாக பிடித்து ஷாகிபின் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். அது ஒரு ஸ்டன்னிங்கான கேட்ச் என்றே வர்ணிக்கப்பட்டது. ஒற்றை கையால் கோலி தாவிப்பிடித்த அந்த கேட்ச் இணையத்தில் வைரலாகத் தொடங்கியது. அந்த விக்கெட்டிற்குப் பிறகு இந்தியாவின் வெற்றி ஏறத்தாழ உறுதியானது. 9 விக்கெட்களை இழந்த வங்கதேசம், இனி ஒரேயொரு விக்கெட்டை வைத்து போட்டியை வெல்லவே முடியாது என்கிற நிலைமையில் இருந்தது. ஆனால் நிதானமான ஆட்டத்தால் மெல்ல மெல்ல சரிவில் மீளத் தொடங்கிய வங்கதேசம், இந்தியாவுக்கு முடிவில் பேரதிர்ச்சியைத் தந்தது.
பரபரப்பான கட்டத்தில் மெஹுதி ஹசன் அடித்த உயரமான பந்து கேட்சாக மாற அதை கீப்பராக இருந்த கே.எல்.ராகுல் நழுவவிட்டார். அதே ஓவரில் வாசிங்டன் சுந்தர் தாமதமாக செயல்பட்டு கேட்சை விட்டுவிட்டார். முக்கிய தருணத்தில் இந்திய அணி அடுத்தடுத்து இரண்டு நல்ல கேட்ச் வாய்ப்புகளை நழுவவிட்டது.
இந்தியா ஃபீல்டிங்கில் சொதப்பியது. இதனால் ரோகித் சர்மா கோபத்தில் கத்துவதையும் அவரது முகம் இறுக்கமாக மாறியதையும் காண முடிந்தது. மைதானத்தில் திரண்டிருந்த வங்கதேச ரசிகர்கள் பிரார்த்தனை செய்வது போல கரங்களை உயர்த்தினர். விடாது இலக்கை துரத்திய வங்கதேசம், இறுதியில் வெற்றியையும் ருசித்தது. மெஹுதி ஹசன் களத்தில் நங்கூரமிட்டு, பேட்டிங்கில் பெரிய அனுபவம் இல்லாத முஸ்தஃபிசுர் ரஹ்மானை பொறுமையாக ஆட வலியுறுத்தினார். முஸ்தஃபிசுருக்கு தனது விக்கெட்டை கொடுக்காமல் இருப்பதே பெரிய இலக்காக இருந்தது.
அதுதான் அவர்களின் வெற்றிக்கும் தேவைப்பட்டது. எக்காரணத்தைக் கொண்டும் தவறு செய்துவிடக்கூடாது என்பதில் இருவரும் கவனமாக செயல்பட்டனர். 39 பந்துகளை எதிர்கொண்ட மெஹுதி 2 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் முஸ்தஃபிசுர் 10 ரன்களை எடுத்தார். மாறி மாறி இந்திய அணி பந்துவீசினாலும் கடைசி விக்கெட்டை எடுக்க முடியாமலே போனது. இறுதியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி த்ரில் வெற்றியை பதிவு செய்தது வங்கதேசம். இதன் மூலம் 3 போட்டிகளை கொண்ட தொடரில் 1 - 0 என்கிற கணக்கில் வங்கதேசம் முன்னிலை வகிக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்