உலகக் கோப்பைக்கு இந்திய அணியின் திட்டம் என்ன? - ரோகித் சர்மா பதில்

பிரசுரிக்கப்பட்டது

தொடர்ந்து அதிகமான போட்டிகளில் விளையாட வேண்டி இருப்பதால், கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வுக்காக இடைவெளி கொடுக்க வேண்டியுள்ளது குறித்து புரிந்துகொள்ள வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் ரோகித் சர்மா கூறியுள்ளார் என்று பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

13ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2023ஆம் ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற உள்ளன. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இந்தியா நான்காவது முறையாக நடத்த உள்ளது.

வங்கதேசத்துடனான மூன்று ஒரு நாள் போட்டிகள் நாளை தொடங்க உள்ள நிலையில் ஊடகங்களிடம் பேசிய அணித் தலைவர் ரோகித் சர்மா, “உலகக் கோப்பை போட்டிகளுக்கு முன்பாக, ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகவும், தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராகவும் அடுத்தடுத்து போட்டிகள் நடைபெற உள்ளன. சிறந்த 15 வீரர்களை வைத்துக்கொண்டு விளையாடுவது இந்தக் காலத்தில் சாத்தியமில்லை. அது நடக்கப்போவதும் இல்லை,'' என்று வெளிப்படையாகக் குறிப்பிட்டார்.

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இருந்தே உலகக் கோப்பை போட்டிக்கான முன்தயாரிப்பு தொடங்குகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பதில் அளித்த ரோகித் சர்மா,” உலகக் கோப்பை போட்டிக்கு என சிறப்பாக சிந்திப்பதற்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கின்றன. இவ்வளவு சீக்கிரத்தில் அது பற்றி சிந்திக்க முடியாது,'' என்றும் ஊடகங்களிடம் அவர் குறிப்பிட்டார்.

கிரிக்கெட் வீரர்கள் காயம் அடைவதற்கான அதிக காரணங்களில் ஒன்றாக அவர்கள் முறையான ஓய்வு இல்லாமல் அவசரம், அவசரமாக அணிக்கு திரும்புவது ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. எனவே, பொதுவாகவே ஒரு தொடருக்கும் இன்னொரு தொடருக்கும் இடையே வீரர்களுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.

மேலும் பேசிய ரோகித் சர்மா, ''ஒரு கிரிக்கெட் வீரராக, தீவிரத் தன்மையோடு இருக்க வேண்டும். அதிக அளவுக்கு கிரிக்கெட் போட்டிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. எனவேதான் வீரர்களுக்கு ஓய்வுக்கான இடைவெளி கொடுக்க வேண்டும் என்று சொல்கின்றோம். வீரர்களுக்கு ஒரு தொடருக்கும் இன்னொரு தொடருக்கும் இடையே ஓய்வு கொடுக்கும்போது பெரிய வெற்றியை மனதில் கொண்டு பணிச் சுமையை அவர்களால் நிர்வகிக்க முடியும். இதனை புரிந்து கொள்ள வேண்டும், '' என்றும் தெரிவித்தார்.

சர்வதேச கிரிக்கெட் தர வரிசை பட்டியலில் நான்காவது இடத்தில் இந்தியா இருக்கிறது. இந்திய அணி 2022இல் மட்டும் 11 டெஸ்ட் போட்டிகள், 29 ஒருநாள் போட்டிகள், 22 டி20 போட்டிகள் விளையாட வேண்டும் என்று திட்டமிடப்பட்டது. இவை மட்டுமல்லாது டி20 உலகக்கோப்பை மற்றும் ஆசிய கோப்பை போட்டிகளிலும் விளையாடியது.

“உங்களுடைய சிறந்த கிரிக்கெட்வீரர், உயர்ந்தபட்ச தீவிர தன்மையுடன் அனைத்து நேரங்களிலும் இருக்க வேண்டும். எனவே அவர்களுக்கு இடைவெளி கொடுக்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். உலகக் கோப்பை போட்டியைப் பொறுத்தவரை நானும், அணியின் பயிற்சியாளரும் (ராகுல் டிராவிட்) முடிவுகளை எடுப்போம் ” என்றும் ரோகித் சர்மா கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: