You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாஜகவுடன் கூட்டணி தொடருமா? அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?
பாஜக- அதிமுக இடையேயான கூட்டணி தொடர்கிறது என்று அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவப் படத்தை எரித்த பாஜகவினர் மீது அக்கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு செல்லும் என்று கடந்த மாதம் 23ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சஞ்சய் குமார் அமர்வு தீர்ப்பளித்திருந்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை எப்போது நடத்துவது என்பது தொடர்பாக ஆலோசிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினர் மத்தியில் நிலவியது.
இந்நிலையில் கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், “திமுக ஆட்சியின் அவலநிலையை மக்களிடம் எடுத்து செல்வது தொடர்பாகவும் கட்சியின் வளர்ச்சி குறித்தும் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பொதுச் செயலாளர் தேர்தல் குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை.” என்றார். பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவதில் எந்த சிக்கலும் இல்லை. உரிய நேரத்தில் இதற்கான தேர்தல் நடைபெறும். அது தொடர்பாக கட்சி சார்பில் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை பாஜகவினர் எரித்தது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று கூறிய ஜெயக்குமார், அத்தகைய செயலில் ஈடுபட்டவர்களை பாஜக மேலிடம் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்பதை நேற்றே தெரிவித்தோம். அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காது என்றும் நம்புகிறோம் என்றும் கூறினார்.
பாஜகவுடன் அதிமுகவுக்கு மோதல் இல்லை என்றும் தனது பேட்டியின்போது ஜெயக்குமார் குறிப்பிட்டார்.
“பாஜக ஐ.டி.விங்கை சேர்ந்த பக்குவப்படாத சிலர் ஒருசில கருத்துகளை தெரிவித்தனர். அதற்கு நாங்களும் பதில் அளித்துவிட்டோம். மற்றபடி கூட்டணி தொடர்கிறது. அகில இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியும், தமிழ்நாட்டை பொருத்தவரை அதிமுக தலைமையிலான கூட்டணியும் தொடர்கிறது,” என்றார் அவர்.
ஈபிஎஸ் அணியில் ஓபிஎஸ் அறிவித்த வேட்பாளர்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன் வியாழக்கிழமையன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இதற்கிடையே, செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், `ஓ.பன்னிர்செல்வத்திற்கு என்று கட்சியே இல்லை. அவர் கட்சியை நடத்தவில்லை, கடையை நடத்தி வருகிறார். அப்படி இருக்கும்போது அவர் எப்படி கட்சியில் இருந்து நீக்க முடியும்` என்று பதிலளித்தார்.
அதிமுக- பாஜக கருத்து மோதலின் பின்னணி என்ன?
பாஜக தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த சிடிஆர் நிர்மல்குமார் கடந்த வாரம் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை மீதும் கடுமையான விமர்சனங்களை அவர் வைத்திருந்தார். அதை தொடர்ந்து பாஜக ஐ.டி. விங்கைச் சேர்ந்த பலரும் அதிமுகவில் இணைந்தனர். நிர்மல்குமாரை அதிமுகவில் சேர்த்துக் கொண்டதற்காக சில இடங்களில் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பதாகைகளை வைத்திருந்த பா.ஜ.கவினர், அவரது உருவ படங்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமர்பிரசாத் ரெட்டி, கருப்பு முருகானந்தம் போன்ற பாஜக நிர்வாகிகள் பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியை பகிர்ந்து கொண்டனர்.அண்ணாமலையும் கூட அதிமுகவை விமர்சிக்க தயங்கவில்லை. "பாஜகவிலிருந்து ஆட்களை கூட்டிச் சென்றால்தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் பா.ஜ.கவின் வளர்ச்சியைக் காட்டுகிறது" என்று குறிப்பிட்ட அவர், இந்த செயலுக்கு எதிர்வினை இருக்கும் என்று எச்சரித்தார்.
இதேபோல், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களும் இந்த விவகாரத்தில் பாஜகவுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்தனர். தமிழ்நாட்டில் பாஜகவை அண்ணாமலை காலி செய்து விடுவார் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சித்திருந்தார்.
இதேபோல் ஜெயலலிதாவோடு தன்னை ஒப்பிட்டு அண்ணாமலை பேசியதற்கு கண்டனம் தெரிவித்திருந்த ஜெயக்குமார், செஞ்சிக்கோட்டையில் ஏறியவர்கள் எல்லாம் ராஜா தேசிங்கு கிடையாது. மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மனும் கிடையாது.
நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இதை புரிந்து கொள்ளலாம் என்று கூறியிருந்தார். மத்தியில் ஆட்சியில் இருக்கிறோம் என்பதற்காக அண்ணாமலை வாய் கொழுப்போடு பேசுகிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கடுமையாக விமர்சித்திருந்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்