சீட்டுக்கட்டு போல சரிந்த இந்திய விக்கெட்டுகள்; உடைந்துபோன ரசிகர்களின் நம்பிக்கை

பிரசுரிக்கப்பட்டது

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் சீட்டுக்கட்டுகளைப் போல தனது விக்கெட்டுகளை சரியவிட்ட இந்திய அணி முதல் இன்னிங்சில் 109 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது.

நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் இரண்டு போட்டிகளை இந்திய அணி வென்றது. மூன்றாவது போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி தொடரைக் கைப்பற்றும் என எண்ணியிருந்த இந்திய ரசிகர்களுக்கு, மூன்றாவது போட்டியின் முதல் நாளே சற்று அதிர்ச்சியாக அமைந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதற்கு முன்னர் இந்திய அணி இந்த மைதானத்தில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் மிகப்பெரிய வித்தியாசத்தில் எதிரணியை வீழ்த்தி வெற்றி பெற்றிருப்பதாலும், குறுகிய பௌண்டரிகளும், பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிட்ச்சும் இந்தியாவுக்குக் கைகொடுக்கும் என்பதாலும் இந்திய அணியின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர்.

இத்தனை எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கியது இந்திய அணி. கே.எல். ராகுலுக்கு பதிலாக அணியில் இடம்பிடித்த சுப்மான் கில்லும், இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மாவும் ஆட்டத்தைத் தொடங்கினர்.

இருவருமே நிதானமாக ரன்களை சேர்த்துக்கொண்டிருந்த போது, மேத்யூ குஹ்னேமன் வீசிய ஆறாவது ஓவரின் கடைசி பந்தை கிரீஸுக்கு வெளியே வந்து ஆட நினைந்த ரோஹித் சர்மா ஸ்டம்ப்பிங் முறையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அப்போது இந்திய அணியில் ஸ்கோர் 27 ரன்கள்.

கேப்டனின் விக்கெட்டை தொடர்ந்து புஜாரா களத்திற்கு வந்தார். ஆனால், அடுத்த சில பந்துகளிலேயே மறுமுனையில் விளையாடிக் கொண்டிருந்த கில், மேத்யூ குஹ்னேமன் பந்தை ஸ்டீவ் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ராகுலுக்கு மாற்றாக வந்த கில், 18 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதற்கு அடுத்த ஓவரிலேயே ஒரு ரன் எடுத்திருந்த புஜாராவும் போல்ட் ஆகி வெளியேற, கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

இவர்கள் இருவருமே அணியைப் பல முறை சரிவிலிருந்து மீட்டவர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்திய ரசிகர்களை இவர்களது ஆட்டத்தை எதிர்நோக்க, அந்த எதிர்பார்ப்பை சிறிது நேரத்திலேயே சுக்கு நூறாக்கினார் ஜடேஜா. பதினோராவது ஓவரில் நான்கு ரன்கள் அடித்திருந்த ஜடேஜா வெளியேற, அடுத்த ஓவரிலேயே வந்த வேகத்திற்கு டக் அவுட் ஆகி வெளியேறினார் ஷ்ரேயஸ் ஐயர். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 12 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 45 ரன்கள்.

இதன்பிறகு கோலியுடன் ஜோடி சேர்ந்த பரத் நிதானமாக ரன்களை சேர்க்கத் தொடங்கினார். அடுத்த பத்து ஓவர்களில் 25 ரன்களை சேர்த்த இந்த ஜோடி, டாட் மர்பி வீசிய 22வது ஓவரில் பிரிந்தது. ஆஸ்திரேலியாவின் புதுமுகமாக மர்பியிடம் இந்த போட்டியிலும் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் கோலி. அதன்பிறகு 25ஆவது ஓவரில் பரத், 29ஆவது ஓவரில் அஸ்வின், 33ஆவது ஓவரில் உமேஷ் யாதவ் என இந்திய அணியின் விக்கெட்கள் அடுத்தடுத்து சரிந்தன.

இறுதியில் 33.2 ஓவர்களில் 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 22 ரன்களும், சுப்மான் கில் 21 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா அணியின் மேத்யூ குஹ்னேமன் வெறும் 16 ரன்களை மட்டுமே கொடுத்த ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: