தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இல்லை: கசப்பை உணரும் விவசாயிகள்

    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

 

தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறாமல் போனதால் கரும்பு விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். விளைந்த கரும்புகளை இடைத்தரகர்கள் மிகவும் குறைந்த விலைக்கு கேட்பதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஆனால் பொங்கல் தொகுப்புடன் ரொக்கமாக ரூ.1,000 அளிப்பதால், தனியாகக் கரும்பை கொள்முதல்  செய்யவில்லை என்று அரசு தரப்பில் சொல்லப்படுகிறது.

 செங்கரும்பை சாகுபடி செய்துள்ள திருவாரூர், மன்னார்குடி பகுதிகளில் கரும்பு விவசயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் இறங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

 2022ல் பொங்கல் திருநாளை ஒட்டி குடும்ப அட்டை வைத்திருப்போருக்கு 21 பொருட்களை இலவசமாக வழங்கியது தமிழ்நாடு அரசு. அதில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, பாசிப் பருப்பு, கரும்பு உள்ளிட்டவற்றை வழங்கியது.

 அதில் பலருக்கு வழங்கப்பட்ட வெல்லம் போன்ற பொருட்களின் தரம் மிக மோசமாக இருந்தது என்றும் தரமான கரும்பு ஒரு சிலருக்கு மட்டுமே கிடைத்தது என்ற விமர்சனம் எழுந்தது. புகார்  வந்த இடங்களில் பொருட்களை மாற்றிக் கொடுக்க அரசு எவ்வளவோ முயன்றும், பொங்கல் திருவிழா வரை புகார்கள் வந்துகொண்டேயிருந்தன. பொங்கல் பரிசு பையில் தரமற்ற பொருட்களை கொடுத்ததாக எதிர்க் கட்சிகளும் தொடர்ந்து விமர்சனங்களை அடுக்கின.

அதனால், இந்த ஆண்டு பொங்கல் பரிசு அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. கடந்த ஆண்டை போலவே அரசு செங்கரும்பை கொள்முதல் செய்யும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் பலரும் செங்கரும்பு பயிர் செய்யும் பரப்பளவையும் அதிகரித்திருந்தார்கள் என விவசாயிகள் சங்கத்தினர் கூறுகின்றனர்.

 ஆனால் இந்த ஆண்டு பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரூ.1,000 பணத்தை  ரொக்கமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதாக அரசு  அறிவித்துள்ளதால், கரும்பு விவசயிகள் நம்பிக்கையற்ற நிலையில் இருப்பதாக கூறுகின்றனர்.

 2022ல் பொங்கல் பரிசு தொகுப்பு 2.15 கோடி அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.

அதற்காக பொருட்கள் அடங்கிய பரிசு பைக்கு  ரூ.1,088 கோடி, கரும்புக்கு ரூ.71 கோடி என மொத்தம் ரூ.1,159 கோடியைத் தமிழ்நாடு அரசு செலவிட்டது.

 பொங்கல் பரிசு தொகுப்பு 2023ல்,2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

அதற்காக, பச்சரிசிக்கு ரூ.77 கோடி,சர்க்கரைக்கு ரூ.86 கோடி, பரிசு தொகையாக 2.19 கோடி குடும்ப அட்டைகளுக்கு ரூ.1,000 வீதம் ரூ.2,193 கோடி என மொத்தம் ரூ.2356 கோடியைத் தமிழ்நாடு அரசு செலவிடுகிறது.

 கடந்த ஆண்டை விட, பொங்கல் பரிசு கொடுப்பதற்காக ரூ.1,197 கோடி கூடுதல் செலவை அரசு ஏற்றுள்ளது. ஆனால் கரும்பு இதில் இடம்பெறவில்லை. பச்சரிசி, வெல்லம் தவிர பிற பொருட்களுக்கு பதிலாக பணம் ரூ.1,000 தரப்படுகிறது என்பது அரசின் நிலைப்பாடு.

கரும்பு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யாதது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக மூத்த அமைச்சர் எ.வ. வேலு, வெல்லம், கரும்பு, முந்திரி பருப்பு போன்ற பொருட்களின் தரத்தின் குளறுபடிகள் இருப்பதாக புகார்கள் வந்ததால், இந்த ஆண்டு மக்கள் தங்களின் விருப்பப்படி, பொருட்களை வாங்கிக் கொள்வதற்காக அரசு ரொக்கமாக ரூ.1,000 அளித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

 ''பரிசுத் தொகுப்பில் பல்வேறு குறைகளை கண்டுபிடிப்பதால், தற்போது பணமாக கொடுக்கப்பட்டு உள்ளது. கரும்பை கொடுத்தால் முக்கால் கரும்பு, ஒண்ணே கால் கரும்பு கொடுப்பதாகவும், முந்திரி பருப்பு கொடுத்தால், சிறிய முந்திரியாக இருப்பதாகவும், வெல்லம் கொடுத்தால் ஒழுகுவதாகவும் பலரும் புகார் அளிக்கின்றனர். இதை உணர்ந்ததால் தான் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உங்களுக்கு தேவையானதை வாங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காக 1000 ரூபாயை பொங்கலுக்கு வழங்குவதாக அறிவித்து உள்ளார்,''என அமைச்சர் வேலு கூறியது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. 

தமிழ்நாட்டில் மதுரை,  திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, தேனி, கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், விழுப்புரம், தருமபுரி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் செங்கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் செங்கரும்பு நடவு  தொடங்கும்; டிசம்பர், ஜனவரி மாதத்தில் அறுவடை செய்யப்படுகிறது. பொங்கலுக்காக பயிரிடப்படும் செங்கரும்பு, 2.5லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது. சுமார் ஒரு லட்சம் விவசாயிகள் செங்கரும்பை பயிரிடுகிறார்கள்.

ஒரு ஏக்கருக்கு ரூ.40,000 வரை செலவிடும் விவசாயிகள், அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாயை ஒரு ஏக்கரில் சம்பாதிக்க முடியும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கூறுகின்றனர்.  

 கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்த கரும்பு விவசாயி வி.கே.குமரகுரு பேசுகையில், '' எங்களிடம் கரும்பு வாங்கவரும் இடைத்தரகர்கள் ஒரு கரும்பை ரூ.5-க்கு கேட்கிறார்கள். அதன்படி கொடுத்தால், கரும்பை வெட்டுவதற்கு நாங்கள் தரும் கூலியைக் கூட ஈடுசெய்யமுடியாது. 2014 முதல் அரசு கரும்பை கொள்முதல் செய்யத் தொடங்கியது. அதனால் ஒரு ஏக்கருக்கு ரூ.40,000 வரை  செலவிட்டு ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம் என்ற உறுதி எங்களுக்கு இருந்தது. ஆனால் இந்த ஆண்டு நாங்கள் கரும்பை வெட்டும் கூலிக்கு கூட பணம் ஈட்டமுடியாத நிலையில் உள்ளோம்,'' என்கிறார்.  

கடந்த ஆண்டு கரும்பு ஒன்றை ரூ.33 என அரசு கொள்முதல் செய்தது என்றும் தற்போது ஒரு கரும்பை இடைத்தரகர்கள் ரூ.5க்கு கேட்கிறார்கள் என்கிறார் குமரகுரு.

 மேலும், ''தமிழகத்தில் உள்ள 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்கினால் மக்களும் மகிழ்ச்சி அடைவார்கள் விவசாயிகளுக்கும் பயனாக இருக்கும். அரசு கொள்முதல் செய்யவில்லை எனில் இந்த பொங்கல் எங்களுக்கு கவலை தரும் பொங்கலாகதான் இருக்கும்,''என்கிறார் குமரகுரு.

 பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம் பெறாதது விவசாயிகளுக்கு பெறுத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் பல விவசாயிகள் கரும்பை விற்பனைக்கு எடுத்துசெல்வதற்கு பதிலாக வெட்டி அவர்களின் நிலத்தில் உரத்திற்கு பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது என்று விவசாயிகள் சங்கத்தினர் கூறுகின்றனர்.

 ''தமிழ்நாடு அரசு நியாய விலை கடைகள் மூலம் வழங்கி வந்த பொங்கல் தொகுப்புடன்  ரேஷன் கடைகளில், செங்கரும்பு வழங்கப்பட்டு வந்தது. இதனால் தமிழ்நாடு முழுவதும் பொங்கல் கொள்முதலுக்காக விளைவிக்கப்படும் செங்கரும்புக்கு ஓரளவு கட்டுபடியான விலை கிடைத்து வந்தது. இந்த ஆண்டு தமிழக முதல்வர் அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் செங்கரும்பு வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படாமல் உள்ளது விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நடப்பு ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களிலும், மாநிலம் முழுவதும் பரவலான இடங்களில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, கரும்பின் விலை கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால், இடைத்தரகர்கள் அடிமாட்டுவிலைக்கு கரும்வை விவசாயிகளிடம் இருந்து வாங்குகிறார்கள்,'' என்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன் கூறுகிறார்.

 பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு கரும்பு வழங்காத திமுக அரசின் முடிவை அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி விமர்சித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசின் இந்த நடவடிக்கை கரும்பு விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாகவும், சில இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

 ''திமுக, எதிர்க்கட்சியாக இருந்தபோது, ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூபாய் 5,000 ரொக்கத்தை பொங்கல் பரிசாக வழங்க வேண்டும் என்று கூறினார்கள். இப்போது அந்த கோரிக்கையை நிறைவேற்றுவதுடன், ரேஷன் கார்டுதாரர்கள் ஒவ்வொருவருக்கும் கரும்பு வழங்க வேண்டும்,'' எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: