You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கூட்டுறவு சங்க விதிகள் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற காரணம் என்ன?
தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் ஐந்தாண்டுகளாக இருப்பதை மூன்றாண்டுகளாகக் குறைக்கும் வகையில் விதிகளைத் திருத்தம் செய்ய உருவாக்கப்பட்ட மசோதாவை திரும்பப் பெற தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதோடு, பதவிக்காலம் முடிவுக்கு வரும் கூட்டுறவு சங்கங்களுக்குத் தேர்தலை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களுக்கான நிர்வாகிகளின் பதவிக்காலம் ஐந்தாண்டுகளாக இருந்து வந்த நிலையில், இதைக் குறைக்க புதிதாக ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு முடிவு செய்தது. அதன் அடிப்படையில், ஏற்கெனவே உள்ள தமிழ்நாடு கூட்டுறவு சங்க சட்டம் 1983ஐ திருத்த முடிவு செய்தது.
அந்த முடிவின்படி அந்தச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக, கூட்டுறவு சங்கங்களுக்குத் தேர்வு செய்யப்படும் நிர்வாகிகளின் பதவிக்காலம் ஐந்தாண்டுகள் என்பதற்குப் பதிலாக மூன்றாண்டுகளாகக் குறைப்பது என்ற திருத்தமும் இருந்தது. இந்த ஆண்டு ஜனவரி ஏழாம் தேதி இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டுறவு சங்கங்களில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக சங்கங்களின் உறுப்பினர்கள், பொதுமக்களிடமிருந்து வந்த புகார்களை விசாரித்தபோது, நிதி மோசடி, போலியான நகைகளுக்குக் கடன் கொடுத்தது, கடன் கொடுத்ததாக பல கோடி ரூபாய் மோசடி செய்தது ஆகியவை நடந்ததாகத் தெரியவந்தது.
அதையடுத்து, இதைச் சரிசெய்ய சங்க நிர்வாகிகளின் பதவிக் காலத்தை 3 ஆண்டுகளாகக் குறைப்பது என்றும் ஏற்கனவே செய்யப்பட்ட பல திருத்தங்களை பழைய நிலைக்கே கொண்டு செல்வது என்றும் முடிவெடுத்ததன் அடிப்படையில், இந்தச் சட்டம் திருத்தப்படுவதாக அப்போதைய கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்திருந்தார்.
மேலும், "இந்த மோசடிக்குக் காரணமான அதிகாரிகள் உள்ளிட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். சிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆட்சியில் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்தாமல் அதிமுகவினரே பதவி நீட்டிப்பு மற்றும் நியமனம் செய்யப்பட்டனர்," என்றும் ஐ. பெரியசாமி குற்றம் சாட்டினார்.
இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். வெளிநடப்பும் செய்தார்.
இந்தச் சட்டம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆளுநரின் ஒப்புதலுக்காக ஏற்கெனவே பல சட்டங்கள் காத்திருக்கும் நிலையில், இந்தச் சட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை. இந்தச் சட்டம் குறித்து பல கேள்விகளை ஆளுநர் எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக ஆளுநருக்கு சட்டத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை.
மாநிலத்தில் உள்ள 18,468 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டு, மார்ச் 12ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெற்றன. அவற்றில் 4684 கூட்டுறவு சங்கங்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. சுமார் 4,600 சங்கங்கள் தவிர, வேறு சில சங்கங்களிலும் தேர்தல்கள் நடத்த வேண்டியுள்ளது. இவை தவிர, புதிதாக சில கூட்டுறவு சங்கங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த சங்கங்களுக்கு எல்லாம் தேர்தல் நடத்த ஏதுவாக, தேர்தல் நடத்த வேண்டிய சங்கங்களின் பட்டியலை வரும் டிசம்பர் 28ஆம் தேதிக்குள் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர், இணை பதிவாளர் ஆகியோரிடம் கேட்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த சங்கங்களுக்கு வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்தப்படுமெனத் தெரிகிறது.
2018ல் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், கூட்டுறவு சங்கங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களின் ஐந்தாண்டு பதவிக்காலம் தானாகவே 2023இல் முடிவுக்கு வரும் நிலையில், இந்த மசோதாவைத் திரும்பப் பெற தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்