பழைய ஓய்வூதிய முறைக்கு மாறுகிறதா தமிழ்நாடு? குழப்பம் ஏற்படுத்திய அறிவிப்பும் அரசின் விளக்கமும்

பிரசுரிக்கப்பட்டது

புதிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதிய முறைக்கு மாற விரும்பும் விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியலை அனுப்பி வைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதாகப் பரவும் ஒரு அறிவிப்பு பல்வேறு தரப்பினரிடமும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிராக அரசு ஊழியர்கள் நீண்டகாலமாகப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, இந்தியாவின் பல மாநிலங்களிலும் இதற்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவந்தால் அரசாங்கம் என்ன மாதிரியான விளைவுகளைச் சந்திக்கும்? தமிழ்நாடு அரசின் சுற்றறிக்கை ஏற்படுத்திய குழப்பமும், அதற்கான அரசாங்க விளக்கமும் என்ன?

தமிழ்நாடு அரசின் சுற்றறிக்கை

அரசு செயலாளர்களுக்கு கூடுதல் முதன்மை செயலாளர் அனுப்பிய சுற்றறிக்கையைச் சுட்டிக்காட்டி, புதிய ஓய்வூதிய முறையிலிருந்து பழைய ஓய்வூதிய முறைக்கு மாற விரும்பும் விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியலை அனுப்பி வைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவ ஆரம்பித்தது.

இது அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கை என்பதால், இந்த சுற்றறிக்கை அரசு ஊழியர்கள் மத்தியில் மிகப்பெரிய பேசுபொருளானது. இந்நிலையில், அரசின் இந்த அறிவிப்பு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய கூடுதல் முதன்மை செயலாளர் முருகானந்தம் ஐ.ஏ.எஸ், "01.04.2003க்கு முன் பணி நியமன ஆணை பெற்று 01.04.2003க்குப் பிறகு பணியில் சேர்ந்த சில ஊழியர்களின் பென்ஷன் திட்டம் தொடர்பான வழக்குக்காக இந்த விவரங்கள் பெறப்பட்டதாகக் கூறினார்."

மேலும், இதுதொடர்பாக அவர் அளித்துள்ள விளக்கத்தில், " புதிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறுவதற்கு விருப்பமுள்ள ஊழியர்களின் விவரங்களை அரசு கேட்டுள்ளதாக ட்விட்டர் மற்றும் சில ஊடகங்களில் தவறான செய்தி பரப்பப்படுகிறது.

இந்த செய்தி தவறானது மற்றும் அடிப்படையற்றது. தனிப்பட்ட சூழ்நிலை அடிப்படையில் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறுவதற்கான நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்ற ஊழியர்களின் விவரங்கள் மட்டுமே அந்தந்த துறைகளிடம் இருந்து கேட்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த ஓய்வூதிய திட்டத்திற்கான அறிவிப்பு இல்லை." எனக் கூறப்பட்டுள்ளது.

இரண்டு திட்டங்களுக்கும் என்ன வேறுபாடு?

புதிய மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டங்களுக்கு இடையே மிகப்பெரிய வேறுபாடாகக் கருதப்படுவது பயனாளிகளுக்கு வழங்கப்படும் தொகையின் அளவே. பழைய திட்டத்தில் பணி ஓய்வு பெறும்போது ஊழியர்கள் பெறும் ஊதியத்தில் பாதி ஓய்வூதியமாகக் கிடைக்கும்.

இதற்காக ஊழியர்களின் பணிக் காலத்தில் அவர்களது ஊதியத்திலிருந்து பிடித்தம் எதுவும் செய்யப்படாது. அதே நேரத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதம் மற்றும் அகவிலைப்படி பிடித்தம் செய்யப்படும். மேலும், பழைய திட்டம் மூலம் நிலையான ஓய்வூதியம் கிடைக்கும். ஆனால், புதிய முறை அவ்வாறு செயல்படுவதில்லை.

பழைய முறை ஏன் வேண்டும்?

நீண்ட காலமாக புதிய ஓய்வூதிய முறைக்கு எதிராகப் போராடி வரும் தமிழ்நாடு அரசு ஊழியர்களின் கோரிக்கை என்னவாக இருக்கிறது என்பது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன், "2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்கள் இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வருவார்கள். ஆனால், மத்திய அரசு இத்திட்டத்தின் கீழ் கொடுக்கக்கூடிய சில விஷயங்களை மாநில அரசு சரியாகக் கொடுப்பதில்லை. கருணைத்தொகை கூட சரியாக வழங்கப்படுவதில்லை.

இன்னும் சில ஆண்டுகள் கழித்து நிதிநிலை சரியில்லை எனக்கூறி மொத்தமாக நிறுத்திவிட்டால் என்ன செய்வது? நிதிசிக்கல் என்றால், வழங்கப்படும் ஓய்வூதியத்திற்கு ஒரு உச்சவரம்பினை அரசாங்கம் வைத்து, அதில் மிச்சமாகும் நிதி மூலம் மற்ற ஓய்வூதியதாரர்களுக்குப் பயன்பெறும் வகையில் செய்யலாம்.

நாங்கள் வாங்குவதில் இரண்டு மாத சம்பளம் வரியாகப் போகிறது. அரசு ஊழியர்கள் செலுத்தக்கூடிய வரி என்பது அரசாங்கத்திற்கான நிலையான வருவாயாக இருக்கிறது. எங்களது முதன்மை கோரிக்கை பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்பதே. அப்படி அது முடியவில்லை என்றால் புதிய முறையில் மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஓய்வூதியத்தையாவது மாநில அரசு குறைக்காமல் வழங்க வேண்டும்." என்கிறார்.

மீண்டும் பழைய முறை சாத்தியமா?

இந்த ஓய்வூதிய முறைகள் குறித்தும், மீண்டும் பழைய முறையை நடைமுறைப்படுத்துவது குறித்தும் பிபிசி தமிழிடம் பேசிய பொருளாதார வல்லுநர் சோம. வள்ளியப்பன், "பழைய முறையில், அரசுகள் செய்யும் கணக்கின்படி பார்த்தால் ஊழியர்களுக்கு அவர்கள் ஓய்வுபெறும் போது பெற்ற சம்பளத்தில் பாதி ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. சுமார் 30 வருடங்கள் அரசாங்கத்திடமிருந்து தனது பணிக்கான ஊதியத்தைப் பெறும் ஒரு ஊழியர், தனது ஆயுள் உள்ளவரை ஓய்வூதியத்தைப் பெறுகிறார். சிலருக்கு பணிக் காலத்தை விடவும் ஓய்வூதியம் பெறும் காலம் அதிகமாக அமைந்துவிடும்.

காலப்போக்கில் அரசுப் பணியிடங்களின் எண்ணிக்கையும் ஓய்வூதியம் பெறுவோரின் எண்ணிக்கையும் பெருமளவில் உயர்ந்தது. இதனால், பணியாளர்களுக்கான ஊதியம், ஓய்வு பெறுவோருக்கான ஓய்வூதியம் என இரண்டையுமே அரசாங்கம் வழங்கவேண்டிய நிலை உள்ளது. இவை அனைத்தும் அரசாங்கம் நேரடியாகத் தனது நிதியிலிருந்து வழங்கக்கூடியது. இந்தியா முழுவதும் ஆண்டுக்கு நான்கு முதல் ஐந்து லட்சம் கோடி ரூபாய் வரை ஓய்வூதியத் தொகைக்காகச் செலவிடப்படுகிறது. இதனை அரசாங்கங்கள் தங்களின் வருவாயில் இருந்தே செலவிட வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் இதற்காக ஒரு கணிசமான தொகை ஒதுக்கப்படுகிறது. அரசாங்கங்கள் இந்த நிதிச்சுமையைக் குறைக்கும் வகையில் 2004ஆம் ஆண்டு கொண்டுவந்ததுதான் இந்த புதிய ஓய்வூதிய திட்டம். இதற்கு பிறகு பணியில் சேர்ந்த அனைத்து அரசு ஊழியர்களுக்கும் புதிய முறையே பொருந்தும் என்ற நிலை நிலவி வருகிறது.

ஆனால், தற்போது பஞ்சாப், ஹரியானா, சத்தீஸ்கர் உள்ளிட்ட சில மாநிலங்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தி உள்ளன. இதனால், அம்மாநில அரசாங்கங்களின் நிதிச்சுமை அதிகமாகியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதைத்தான் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் சொல்லியிருந்தார்.

அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டும் எனப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு பல மாநில அரசுகள் செவி சாய்த்துள்ளன. திமுகவும் தனது தேர்தல் அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டிருந்தது. ஆனால், அரசாங்கத்திடம் தற்போது அதற்கான நிதி இல்லை எனத் தமிழ்நாடு நிதியமைச்சரும் சொல்லி வருகிறார். பெண்களுக்கான உரிமைத்தொகை கொடுப்பதற்கே பணம் இல்லை என்றுதானே அரசு சொல்கிறது. எனவே, பழைய ஓய்வூதிய முறைக்கு மீண்டும் செல்வது அரசாங்கத்தின் மீது மேலும் சுமையை அதிகரிக்கும்." என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: