You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கெலரி: ஒரே பரிசோதனையில் 50 வகை புற்றுநோய் பாதிப்புகளைக் காட்டும் புதிய முறை
ஒரேயொரு ரத்தப் பரிசோதனையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வகையான புற்றுநோய்களை கண்டறியும் பரீட்சார்த்த முயற்சியில் நேர்மறையான முடிவுகள் கிடைத்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர் பிரிட்டன் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளைச் சேர்ந்த, புற்றுநோய் அறிகுறிகளுடன் தங்களின் பொதுநல மருத்துவர்களை அணுகிய 5,000 பேர்களிடம், ‘கெலரி’ (Galleri) என்று அழைக்கப்படும் இந்த ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மூன்றில் இரண்டு வகை புற்றுநோய்கள் சரியாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
கெலரி ரத்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 85 சதவீதம் பேருக்கு புற்றுநோய் இருப்பதற்கான முடிவுகள் கிடைத்துள்ளதுடன், சம்பந்தப்பட்டவர்களின் உடம்பில் அதன் ஆரம்பப்புள்ளி எங்கு இருக்கிறது என்பதும் தெரிய வந்துள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், இந்நோய்க்கு ஆளாவோரின் உயிரை காப்பாற்றி விடலாம் என்று மருத்துவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்த நிலையில், பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கு ஆளாவோரின் மரபணுக்களில் ஏற்படும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கருத்தில் கொண்டு கெலரி ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
“இந்த பரிசோதனையில் இன்னும் நிறைய கட்டங்களை தாண்ட வேண்டியுள்ளது. இவற்றுக்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன” என்கின்றனர் பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை திட்டத்தின் கீழ் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
ஆனால், இந்த பரிசோதனை பல்வேறு வகையான புற்றுநோய்களை அடையாளம் காண்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
எடை இழப்பு போன்ற அறிகுறிகளை கொண்டுள்ள நோயாளிகளுக்கு, அதற்கான காரணத்தை கண்டறிவதற்கு பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்காக அவர்கள் பலமுறை மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது. இந்த நிலையில் கெலரி ரத்தப் பரிசோதனை முக்கியத்துவம் பெறுகிறது என்கின்றனர் அவர்கள்.
75 சதவீதம் நேர்மறை முடிவு
புற்றுநோய் அறிகுறிகளுடன் இருந்த 350 க்கும் மேற்பட்டவர்களிடம் கெலரி ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் அனைவருக்கும் புற்றுநோயை உறுதி செய்ய வழக்கமாக மேற்கொள்ளப்படும் ஸ்கேன் மற்றும் பயாப்சி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டோரில் 75 சதவீதம் பேருக்கு புற்றுநோய் இருப்பதற்கான நேர்மறை முடிவுகள் கிடைக்கப் பெற்றன. 2.5 சதவீதம் பேருக்கு மட்டும் இந்தப் பரிசோதனையில் எதிர்மறை முடிவுகள் வந்தன.
ஒருவருக்கு புற்றுநோய் இருப்பதை உறுதி செய்யவோ அல்லது இந்த நோய் இல்லை என்ற சொல்லவோ இது துல்லியமான பரிசோதனை இல்லை என்றாலும், நோயாளிகளுக்கு இப்பரிசோதனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பிபிசியிடம் கூறினார் இந்த திட்டத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆய்வாளரான மார்க் மிடில்டன்.
“ஒருவரின் உடலில் எந்தப் பகுதி அல்லது உறுப்பில் இருந்து புற்றுநோய் தொடங்கியது என்பதை கண்டறிவதில் கெலரி ரத்தப் பரிசோதனை 85 சதவீதம் துல்லியமாக இருந்தது” என்றும் கூறினார் அவர்.
அத்துடன், ”புற்றுநோய் அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளுக்கு அதனை உறுதிப்படுத்த எந்தவிதமான பரிசோதனை தேவை என்பது பல நேரங்களில் உடனடியாக தீர்மானிக்க இயலாது. அத்தகைய தருணங்களில் கெலரி ரத்தப் பரிசோதனை உண்மையில் பயனுள்ளதாக இருக்கும்” என்றும் கூறுகிறார் மிடில்டன்.
“இந்த பரிசோதனையில் கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில், குறிப்பிட்ட நோயாளிக்கு மேற்கொண்டு எண்டோஸ்கோபிக் பரிசோதனை தேவையா அல்லது ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமா என்று மருத்துவர்கள் எளிதில் தீர்மானிக்க இயலும். இதன் பயனாக முதன்முறையே நோயாளிகளுக்கு சரியான பரிசோதனையை மேற்கொள்ள முடியும்” என்கிறார் அவர்.
புற்றுநோய் தொடர்பான கெலரி ரத்தப் பரிசோதனை ஆய்வில் கண்டறியப்பட்ட வியக்கத்தக்க முடிவுகள், சிகாகோவில் நடைபெறவுள்ள ‘அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் கிளினிக்கல் ஆன்காலஜி’ மாநாட்டில் சமர்பிக்கப்பட உள்ளது. அத்துடன் ‘லான்செட் ஆன்காலஜி’ இதழிலும் வெளியிடப்பட உள்ளது.
ஒரு மில்லியன் பேருக்கு சோதனை நடத்த திட்டம்
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ‘கிரெயில்’ எனும் நிறுவனம், கெலரி ரத்தப் பரிசோதனை முறையை மேம்படுத்தியது. புற்றுநோய் அறிகுறிகள் இல்லாத ஆயிரக்கணக்கான மக்களின் உடலில் இக்கொடிய நோய் ஒளிந்துள்ளதா என்பதை கண்டறியும் நோக்கத்துடன், பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை திட்டத்தின் கீழ் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு இறுதியில் இப்பரிசோதனை முடிவுகள் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இம்முடிவுகள் நேர்மறையாக இருக்கும்பட்சத்தில், 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் மேலும் ஒரு மில்லியன் பேரிடம் இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள பிரிட்டன் அரசின் சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.
தலை, கழுத்து, குடல், நுரையீரல், கணையம் மற்றும் தொண்டை என கண்டறிவதற்கு சிரமமாக உள்ள பகுதிகளில் ஏற்படும் புற்றுநோயை எளிதில் அடையாளம் காண கேலரி ரத்தப் பரிசோதனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
“புற்றுநோய் அறிகுறிகளுடன் தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு மேற்கொண்டு உரிய சிகிச்சை மேற்கொள்வதற்கான பரிந்துரையை அளிக்க, பொது மருத்துவர்களுக்கு கெலரி ரத்தப் பரிசோதனை பயனுள்ளதாக இருக்கக்கூடும். ஆனாலும் இதுதொடர்பாக இன்னும் நிறைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவை உள்ளது” என்கிறார் Cancer Research UK எனும் தன்னார்வ நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் டேவிட் கிராஸ்பி.
“புற்றுநோயை விரைவாக கண்டறிவதற்கான புதிய வழிமுறையில் இந்த ஆய்வு முதல்படி” எனகிறார் பிரிட்டனின் தேசிய புற்றுநோய் திட்ட இயக்குநரும், பேராசிரியருமான பீட்டர் ஜான்சன்.
“புற்றுநோயை அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல் என்பது மிகவும் முக்கியம். எனவே கெலரி ரத்தப் பரிசோதனை பல்வேறு வகையான புற்றுநோய்களை ஆரம்ப நிலையில் கண்டறிந்து, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்” என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார் அவர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்