ரஷ்யாவுக்கு மீண்டும் ஒரு பின்னடைவு: வீதிகளில் வெற்றிக் களிப்பில் யுக்ரேனிய மக்கள்

    • எழுதியவர், பால் ஆடம்ஸ் மற்றும் ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜெரால்ட்
    • பதவி, பிபிசி நியூஸ்
  • பிரசுரிக்கப்பட்டது

யுக்ரேனின் முக்கிய தெற்கு நகரமான கெர்சன் பகுதியில் இருந்து படைகளை ரஷ்யா முழுமையாக திரும்பப் பெற்றிருக்கும் நிலையில், யுக்ரேனிய ராணுவ வீரர்களை பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

யுக்ரேனிய வீரர்கள் நகருக்குள் வருகை தந்த போது பொதுமக்கள் தேசியக் கொடியை அசைத்து முழக்கமிடுவதை காணொளிகளில் பார்க்க முடிகிறது. சிலர் தேசபக்திப் பாடல்களைப் பாடினர்.

பிப்ரவரியில் தொடங்கிய படையெடுப்பிற்குப் பிறகு ரஷ்யா கைப்பற்றிய ஒரே பிராந்திய தலைநகரம் கெர்சன் மட்டுமே. எனவே, இந்தப் பின்வாங்கல் நடவடிக்கை போரின் மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

30,000 ராணுவ வீரர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக ரஷ்யா கூறுகிறது. அதேபோல, சுமார் 5,000 ராணுவ வன்பொருட்கள், ஆயுதங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.

யுக்ரேனிய அதிபர் ஜெலென்ஸ்கி இதை வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று குறிப்பிட்ட நிலையில், அமெரிக்கா அசாதாரண வெற்றி என்று பாராட்டியுள்ளது.

ஆனால், யுக்ரைனின் வெளியுறவு அமைச்சர் போர் தொடர்கிறது என்று கூறியுள்ளார். கம்போடியாவில் ஆசிய நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு பேசிய டிமிட்ரோ குலேபா, “நாங்கள் களத்தில் போர்களில் வெற்றி பெறுகிறோம். ஆனால் போர் தொடர்கிறது” என்று கூறினார்.

டினிப்ரோ ஆற்றின் மேற்குக்கரை வரை துருப்புகள் முன்னோக்கித் தள்ளப்பட்டதாக வெள்ளிக்கிழமை மாலை யுக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆற்றைக் கடக்க உதவும் முக்கிய பாலமான அன்டோனிவ்ஸ்கி பாலம் பகுதியளவு இடிந்துள்ள படங்களும் வெளியாகியுள்ளன. இந்த சேதம் எப்படி ஏற்பட்டது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

கெர்சனை ஆக்கிரமித்த ரஷ்ய துருப்புகள் ஆற்றின் கிழக்குப் பகுதியில் புதிய நிலைகளை எடுப்பதாகக் கருதப்படுகிறது.

தெருக்களில் மக்கள் பாடி நடனமாடியபோது ஒரு கெர்சன் குடியிருப்பாளர் தன்னுடைய மகிழ்ச்சியை விவரித்தார்.

முன்பு தன்னை ‘ஜிம்மி’ என்று மட்டுமே குறிப்பிட்ட அவர், தற்போது அலெக்ஸி சாண்டகோவ் என்ற தன்னுடைய முழுப் பெயரையும் பிபிசியிடம் வெளிப்படுத்தினார். “கெர்சன் இப்போது சுதந்திரமாக உள்ளது, இது வேறு மாதிரியாக உள்ளது, அனைவரும் இன்று காலையிலிருந்து அழுகிறார்கள்” எனக் கூறியதோடு, நகருக்குள் வருகை தந்த யுக்ரேனிய வீரர்களை அனைவரும் கட்டியணைக்க விரும்பியதாகவும் தெரிவித்தார்.

சமீபத்திய மாதங்களில் யுக்ரேனின் துரிதமான எதிர்த்தாக்குதலைத் தொடர்ந்து, நகரின் இந்தக் கட்டுப்பாட்டு மாற்றம் நிகழ்ந்துள்ளது. அந்தத் தாக்குதல்களில் கெர்சன் அருகே 41 நிலைகளை மீண்டும் கைப்பற்றியதாக யுக்ரேன் தெரிவித்திருந்தது.

அதிபர் ஜெலென்ஸ்கி தனது மாலை உரையில், கெர்சன் மக்கள் காத்திருந்ததாகவும், யுக்ரைனை ஒருபோதும் அவர்கள் கைவிடவில்லை என்றும் கூறினார்.

ரஷ்ய சின்னங்கள் உட்பட தெருக்களில் இருந்து ஆக்கிரமிப்பாளர்கள் தங்கியதற்கான அனைத்து தடயங்களையும் அகற்ற கெர்சன் பகுதி மக்கள் பணியாற்றியதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையே, ரஷ்ய அதிபர் புதினின் செய்தித் தொடர்பாளர் இந்தப் பின்வாங்கல் நடவடிக்கை அவமானகரமான தோல்வியைப் பிரதிபலிக்கிறது என்ற கூற்றை மறுத்தார்.

கிழக்கு மற்றும் தெற்கு யுக்ரைனின் நான்கு ஆக்கிரமிக்கப்பட்ட மாகாணங்களில் நடத்தப்பட்ட தாமே அறிவித்துக்கொண்ட வாக்கெடுப்பைத் தொடர்ந்து, கெர்சன் பகுதிகளை தனது சொந்த பிரதேசமாக ரஷ்யா கருதுகிறது.

இந்த வாக்கெடுப்பு சர்வதேச சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மேலும், ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை திரும்பப் பெற யுக்ரைன் தனது முயற்சிகளைத் தொடர்ந்தது.

கெர்சன் பகுதியில் இருந்து தன்னுடைய படைகளைத் திரும்பப் பெறுவதாக கடந்த புதன்கிழமை ரஷ்யா அறிவித்தது. ரஷ்ய படைகள் பின்வாங்கியதற்கு கடந்த வியாழக்கிழமை பெரிய ஆதாரங்கள் இல்லாவிட்டாலும் கூட 7 கிமீ வரை தாங்கள் முன்னேறியுள்ளதாக யுக்ரேன் தெரிவித்தது.

ஆனால், வெள்ளிக்கிழமை ரஷ்ய துருப்புகள் வெளியேறுவது விரைவாக நடந்தது. கெர்சன் பகுதியை ரஷ்யர்கள் கைவிட்டதாக உள்ளூர் மக்களிடம் இருந்து ஆரம்பக்கட்ட தகவல்கள் கிடைத்தன.

சுதந்திர சதுக்கத்தில் பொதுமக்கள் கொடியை அசைத்து, யுக்ரேன் வீரர்களை வாழ்த்தி கோஷமிட்டதை காணொளிகளில் பார்க்க முடிகிறது.

இன்று இரவு யாரும் தூங்கமாட்டார்கள் என்று வெள்ளிக்கிழமை நண்பகல் அலெக்ஸி சாண்டகோவ் தெரிவித்தார்.

கெர்சனில் உள்ள உள்ளூர் தொலைக்காட்சி சேவை யுக்ரேனிய ஒளிபரப்புடன் மீண்டும் இணைக்கப்பட்டது.

கெர்சன் பகுதி கிட்டத்தட்ட முற்றிலும் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக உள்ளூர் நேரப்படி மாலை 4 மணியளவில் யுக்ரேன் அதிகாரி தெரிவித்தார். மேலும், டினிப்ரோ ஆற்றின் மேற்கே பெரும் பகுதி தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ரஷ்ய துருப்புகளின் கண்ணி பொறிகளின் அச்சத்திற்கு மத்தியில் யுக்ரேன் துருப்புகள் கவனமாக முன்னேறியதாக பாதுகாப்பு அமைச்சரின் ஆலோசகர் யூரி சாக் கூறினார்.

அவர் பிபிசியிடம் பேசுகையில், சில ரஷ்ய வீரர்கள் நகரத்தில் தங்கியிருப்பதாக நம்பப்படுவதாகவும், அவர்கள் சீருடைகளைக் களைந்துவிட்டு, பொதுமக்கள் போல் மாறுவேடமிட முயன்றதாகவும் கூறினார். மேலும், அவர்களை சரணடையுமாறு யூரி சாக் வலியுறுத்தினார்.

கெர்சன் நகரம் மீண்டும் கைப்பற்றப்பட்டதையும் அவர் பாராட்டினார்.

எனினும், ரஷ்ய பதிலடி குறித்து எச்சரிக்கையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

2014ஆம் ஆண்டு ரஷ்யா ஆக்கிரமித்த பகுதிகள் உட்பட மேலும் சில பகுதிகளை ரஷ்யாவிடம் இருந்து கைப்பற்றுவோம் என்றும் அவர் உறுதிகொண்டுள்ளார்.

கெர்சன் பகுதியில் இருந்து ரஷ்ய துருப்புகள் வெளியேறுவதாக கடந்த புதன்கிழமை ராணுவம் அறிவித்ததில் இருந்து தற்போதுவரை அதிபர் புதின் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: