'அமைச்சர் கூறிய கருத்தும் வருத்தமாக இருந்தது' - கீர்த்தனாவுடன் ஒப்பிட்டு வெளியான வீடியோ; மலேசிய பெண் பிபிசியிடம் கூறியது என்ன?

பட மூலாதாரம், X/Keerthana4VNR, vinosha ravi
- எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
"என்னுடைய காணொளி வெளியான பின்பு நடக்கும் நிகழ்வுகள் எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் எனக்கு எதிராக உருவ கேலி அதிகளவில் நடக்கிறது. இதனால் மனமுடைந்து அழுதேன்," என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய வினோஷா ரவி.
தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவை குறிவைத்து இணையத்தில் நடைபெறும் கேலிகள், ட்ரோல்கள் மலேசியாவை சேர்ந்த தமிழ் பெண் வினோஷா ரவி வரை நீண்டுள்ளது. தன்னுடைய காணொளியை யாரோ ஒருவர் அமைச்சர் கீர்த்தனா எனக்கூறி சமூக வலைதளங்களில் பதிவிட்டதையடுத்து, தனக்கு இணையத்தில் ட்ரோல்கள் அதிகரித்துள்ளதாக வினோஷா ரவி கூறுகிறார்.
சமீபத்தில் எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அமைச்சர் கீர்த்தனா எனக்கூறி பெண் ஒருவர் காரில் இருந்து இறங்கும் காணொளி வைரலானது. பலரும் சமூக வலைதளங்களில் அப்பெண் அணிந்திருக்கும் உடையை குறிப்பிட்டு அமைச்சர் கீர்த்தனாவை தொடர்புப்படுத்தி அவர் மீது இணைய தாக்குதலில் ஈடுபட்டனர்.
ஆனால், அந்த காணொளியில் இருப்பது தான் அல்ல என அமைச்சர் கீர்த்தனா தெளிவுபடுத்தியிருந்தார்.
ஆனால், அது "நானாகவே இருந்திருந்தாலும், அதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது? ஒரு பெண்ணின் உடை, தோற்றம் அல்லது மகிழ்ச்சி ஆகியவை இன்றும் ஏன் பொதுவெளியில் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய விஷயங்களாகக் கருதப்படுகின்றன?" என அவர் தன் எக்ஸ் பக்கத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.
கொள்கைகள், ஆட்சி அல்லது செயல்பாடுகள் குறித்து தங்களைக் கேள்வி கேட்க முடியாதபோது, தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களைப் பற்றிய கதைகளை இட்டுக்கட்டத் தொடங்குகிறார்கள் என்றும் ஆணாதிக்கமும் பெண் வெறுப்பும், ஆக்கப்பூர்வமாகவும் அர்த்தமுள்ளதாகவும் பங்களிக்க எதுவும் இல்லாதவர்களின் மிகப் பழமையான ஆயுதங்கள் என்றும் அமைச்சர் கீர்த்தனா தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
"வெறும் தோற்ற ஒற்றுமை காரணமாக இந்த விவகாரத்துக்குள் இழுக்கப்பட்ட அந்தப் பெண்ணிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். உங்கள் விருப்பப்படி, உங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்து வாழுங்கள்" என பதிவிட்டுள்ளார் அமைச்சர் கீர்த்தனா.
"இணைய தாக்குதல் தொடர்கிறது"

பட மூலாதாரம், X/Keerthana4VNR, vinosha ravi
அந்த காணொளியில் இருப்பது தான் தான் என மலேசியாவை சேர்ந்த வினோஷா ரவி என்பவர், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த காணொளியில், "அதில் இருப்பவர் அமைச்சர் அல்ல, நான்தான். இரண்டு தினங்களாக நடந்துகொண்டிருப்பவை எனக்கு மிகுந்த மனசோர்வை ஏற்படுத்தியுள்ளது. அந்த காணொளியில் தவறாக என்ன இருக்கிறது என தெரியவில்லை. நான் என் காரில் இருந்து இறங்கி அலுவலகத்துக்கு செல்லும் காணொளி அது. இந்த காணொளியை எடுத்துப் பதிவிட்டவர் குறித்து கண்டுபிடிக்க மலேசிய காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளேன்." என தெரிவித்துள்ளார்.
தன்னை கேலி செய்து ட்ரோல் செய்யும் வகையில் எடிட் செய்யப்பட்ட வீடியோக்களும் தனக்கு வந்த மோசமான பின்னூட்டங்களும் "தன்னை உடைத்துவிடவில்லை." என்றும் அவர் கூறியுள்ளார்.
"நான் பொருத்தமற்ற வகையில் ஆடை அணிந்திருப்பதாக சிலர் கூறுகின்றனர். அப்படி என்ன உடை அணிந்தேன்? நான் வேறு ஆடை அணிந்திருந்தாலும் இதை செய்திருப்பார்கள். ஏனெனில், அவர்கள் வேறு யாரையோ குறிவைத்து இந்த வீடியோவை வெளியிட்டிருக்கின்றனர்." என்றார்.
பிபிசி தமிழிடம் இதுகுறித்து மேலும் பேசிய வினோஷா ரவி, "நான் மலேசிய தமிழ்ப் பெண். மலேசியாவின் கோலாலம்பூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவருகிறேன். நான் எப்போதும் சாதாரணமாக வேலைக்கு செல்வதை யாரோ ஒருவர் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளனர். அதை பல நாட்களுக்கு முன்பே எடுத்து இப்போது பதிவிட்டிருப்பார் என நினைக்கிறேன்." என்றார்.
அமைச்சர் கீர்த்தனா நிகழ்ச்சியொன்றில் இதுகுறித்து பேசுகையில், "அரைகுறை ஆடை அணிந்த பெண்ணை நான் எனக்கூறி விமர்சிப்பதாக" தெரிவித்திருந்தார். அமைச்சர் கீர்த்தனாவின் கருத்தும் தனக்கு வருத்தமாக இருந்ததாக வினோஷா கூறினார்.
"எனக்கு இது மிகவும் புதிதாக இருக்கிறது. எப்படி இவற்றை எடுத்துக்கொள்வது என தெரியவில்லை. ஆரம்பத்தில் சாதாரணமாகவே நினைத்தேன். ஆனால், இது பெரிதானவுடன் என் குடும்பத்தினருக்கும் இதுகுறித்து கேள்விகள் வர ஆரம்பித்துவிட்டன. அமைச்சர் கீர்த்தனாவை குறிவைத்து ஆரம்பிக்கப்பட்டது என்னை ட்ரோல் செய்யும் அளவுக்கு மாறிவிட்டது." என கூறினார்.
இது தனக்கு மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாகவும், உடைந்து அழுததாகவும் தெரிவித்த வினோஷா, தான் விளக்கம் அளித்தும் தனக்கு எதிரான ட்ரோல்கள் நிற்கவில்லை என கூறினார். "உடல் ரீதியாக கேலி செய்வது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நான் கார்ப்பரேட் அலுவலகத்தில் பணியாற்றுகிறேன். என் உடை எப்போதும் நேர்த்தியாகவே இருக்கும்." என்கிறார் வினோஷா.
"என்னுடைய துணைவர், குடும்பத்தினர், நண்பர்கள் இதில் உறுதுணையாக இருந்தனர். இதில் என் தவறு எதுவும் இல்லை என அவர்கள் ஆறுதல் கூறினர். இப்போதும் நான் வலுவாகவே இருக்கிறேன்." என்கிறார் அவர்.
கனிமொழி கூறியது என்ன?
பொது வாழ்க்கையில் இருக்கும் பெண்களை அவர்களின் உடை, தனிப்பட்ட வாழ்க்கை, குறிப்பாக சினிமா உள்ளிட்ட அவர்களின் முந்தைய தொழில்களை தொடர்புப்படுத்துவதும் உருவ கேலி செய்வதும் பல பத்தாண்டுகளாகவே தொடர்ந்துவருகின்றன.
தமிழ்நாட்டிலும் அரசியல் வாழ்க்கையில் இருக்கும் பெண்கள் இத்தகைய தனிப்பட்ட தாக்குதல்களை பல சமயங்களில் எதிர்கொண்டுள்ளனர்.
அமைச்சர் கீர்த்தனாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி, "காலம் காலமாக, கட்சி வேறுபாடின்றி பொதுவாழ்வில் இருக்கும் பெண்கள் மீது அநாகரிகமான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.
ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் களத்தில் துணிச்சலுடன் செயலாற்றும் பெண்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல், அவர்களின் உடை, தோற்றம், தனிப்பட்ட வாழ்க்கை போன்றவற்றை வைத்து விமர்சிப்பது மலிவான அரசியலின் வெளிப்பாடாகும். இத்தகைய தாக்குதல்களில் ஈடுபடுபவர்களின் பிற்போக்குத்தனமான மனநிலையே இதன் மூலம் வெளிப்படுகிறது. பெண்கள் இதையெல்லாம் கடந்தே வெற்றி பெற வேண்டும்." என தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

குறிப்பாக, தேர்தல் காலங்களில் அரசியல் வாழ்க்கையில் உள்ள பெண்கள் மீதான கேலிகள், ட்ரோல்கள் ஆகியவை அதிகளவில் நடக்கின்றன. தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் சிலர் இதுகுறித்து சில சந்தர்ப்பங்களில் பேசியுள்ளனர். இந்தியளவில் மாயாவதி, மமதா பானர்ஜி, பிரியங்கா காந்தி போன்ற தலைவர்களும் இத்தகைய தனிப்பட்ட தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தான் உருவ கேலி செய்யப்பட்டது குறித்து வெளிப்படையாக பலமுறை பேசியுள்ளார். "அந்த கேலிகளை நான் வளர்வதற்கான ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டேன்" என அவர் கூறியுள்ளார்.
அதேபோன்று, சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா, இணையத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் மற்றும் சில சமூக வலைதள கணக்குகள் மூலம் தன்னைத் தொடர்ந்து குறிவைத்து அவதூறான கருத்துகள், மார்பிங் செய்யப்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்கள் பரப்பப்பட்டதாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த ஜூலை மாத இறுதியில் புகார் அளித்திருந்தார்.
"பெண் விரோத போக்கு தொடர்கிறது"
தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் ஜென் ஸி தலைமுறை அரசியல் மாற்றங்களை நிகழ்த்தும் சூழலிலும் பெண் தலைவர்கள் மீதான மனநிலையில் பெரும் மாற்றம் வரவில்லை என்கிறார் பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான வ.கீதா.
"பெண்கள் மீதான பார்வையில் தமிழ்நாட்டில் எந்த மாற்றமும் வரவில்லை. தமிழ்நாட்டு பொது வாழ்க்கை மிகவும் பெண் விரோதமாகவே உள்ளது. முற்போக்கு சிந்தனை உடையவர்கள் கூட பெண்களை நல்ல விதமாக நடத்துவதில்லை. இளைஞர்கள் மத்தியில் எந்த விழிப்புணர்வும் இல்லை. அரசியல் தெளிவு உள்ள ஆண்களை தவிர, மற்றவர்கள் பெண் விரோதத்துடனும் பெண்களை மதிக்காத போக்கும் கேலியாகப் பேசுவதும் தொடர்கிறது." என்றார்.
இலக்கிய மேடைகள் முதல் அரசியல் மேடைகள் வரை பெண் விரோதப் போக்கு நிறைந்துள்ளதாக குறிப்பிட்ட வ.கீதா, "இளைய தலைமுறையிடம் சிறிது மாற்றம் இருக்கலாம். ஆனால், முக்கால்வாசிக்கு மேற்பட்டவர்களுக்கு பெண்களுக்கு எதிரான எண்ணமே உள்ளது. இதை எடுத்துச் சொன்னால் தங்களை மற்றவர்கள் குறிவைப்பதாக இளம் தலைமுறையினர் நினைக்கின்றனர். அரசியல் கட்சிகளைத் தாண்டி பொதுச் சமுதாயத்தில் மாற்றங்கள் வர வேண்டும்." என்றார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் அவரை நோக்கி அக்காலகட்டத்தில் மற்ற கட்சியினர் பேசியவை "மிகவும் தரம் தாழ்ந்த மனநிலையிலேயே இருந்ததாக" அவர் குறிப்பிட்டார்.
"அமைச்சர் கீர்த்தனாவும் அந்த பெண் குறித்து பேசியதை பெரிய பிரச்னையாக நினைக்க வேண்டாம். அவர் வளர்ந்த சூழலில் இருந்து பேசுகிறார். இளம் வயதில் ஆண் செல்வாக்கு நிறைந்த துறையில் பணியாற்றுகிறார், அவருக்கும் நிறைய பிரச்னைகள் இருக்கும், அவருக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்." என்றார்.

பட மூலாதாரம், Valarmathi
அதிமுக முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி பிபிசி தமிழிடம் பேசுகையில், "இந்த போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது. உடை என்பது அவரவர் விருப்பம். யாராக இருந்தாலும் அவர்களை தரம்தாழ்த்தி பேசுவது மிகவும் தவறு. பெண்கள் அரசியலுக்கு அதிகளவில் வர ஆரம்பித்துவிட்டனர். அரசியல் ரீதியாக விமர்சிக்கலாமே தவிர, அநாகரிகமாக விமர்சிக்கக் கூடாது. பெண்கள் இவற்றை பொருட்படுத்தக் கூடாது. மன சோர்வடைந்துவிடக் கூடாது. இந்திரா காந்தி, ஜெயலலிதா உள்ளிட்டோரும் இத்தகைய விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளனர். அதை அவர்கள் பொருட்படுத்தியதில்லை," என தெரிவித்தார்.
கடந்த 2020-ஆம் ஆண்டு ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு, பெண் அரசியல் தலைவர்கள் சந்திக்கும் இணைய தாக்குதல்கள் குறித்த ஆய்வுக்காக, மார்ச் - மே 2019 காலகட்டத்தில் அரசியலில் உள்ள 95 பெண்களை குறிப்பிட்டு (mention) வெளியான 1,14,716 ட்வீட்டுகளை ஆய்வு செய்தது. இது, 2019- ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களுக்கு முன்னும் பின்னும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வாகும். அதன்படி, 13.8% ட்வீட்டுகள் "பிரச்னைக்குரியதாகவும்," "துன்புறுத்தும் வகையிலும்" இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலில் உள்ள முஸ்லிம் பெண்கள் 94.1% இன, மத ரீதியான துன்புறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளனர்.
துன்புறுத்தல்கள் அல்லாத தளத்தை உருவாக்குவது தங்களின் முன்னுரிமைகளுள் ஒன்று என அப்போதைய ட்விட்டர் நிர்வாகம் இதற்கு எதிர்வினையாற்றியிருந்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































