கீழடி நாகரிக மக்களின் வழித்தோன்றல்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்கள்? டிஎன்ஏ ஆய்வில் புதிய தகவல்

கீழடி மக்கள், வரலாறு, அகழாய்வு, டிஎன்ஏ மூலக்கூறுகள்

பட மூலாதாரம், keeladimuseum

படக்குறிப்பு, கீழடி
    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

கீழடி அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட மனித எலும்புகள் தெற்காசிய மக்களின் டிஎன்ஏ மூலக்கூறுகளோடு ஒத்துப்போவதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொல் மரபியல் ஆய்வகத்தின் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

இந்த எலும்புகளில் இருந்து கிடைத்த டிஎன்ஏ மூலக்கூறுகள், தென்னிந்திய மக்கள், இலங்கை தமிழர்கள் உட்பட தெற்காசியாவைச் சேர்ந்த மக்களுடன் பொருந்துவதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் குமரேசன் கூறுகிறார்.

அதேபோல, கீழடியில் வாழ்ந்த மக்கள் என்ன மாதிரியான உணவுகளைச் சாப்பிட்டார்கள் என்பது குறித்தும் இந்த ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை நகரத்திற்கு தென்கிழக்கில் சுமார் 13 கி.மீ. தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடி கிராமத்தில் 2014ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை மத்திய தொல்லியல் துறை அகழாய்வுகளை நடத்தியது.

இந்த அகழாய்வில் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த கட்டடத் தொகுதிகள் கண்டறியப்பட்டன. மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆய்வுகளுக்குப் பிறகு, 2017ஆம் ஆண்டில் இருந்து மாநில தொல்லியல் துறை அங்கு தொடர்ந்து அகழாய்வுகளை நடத்தி வருகிறது. கடந்த மார்ச் மாதம் முதல் அங்கு 11ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இங்கு கிடைத்த விரிவான கட்டடத் தொகுதிகளும் இங்கு கிடைத்த தொல் பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் கிடைத்த முடிவுகளும் கி.மு. ஆறாம் நூற்றாண்டு வாக்கிலேயே ஒரு நகரம் இந்தப் பகுதியில் இயங்கியிருக்கலாம் என்ற செய்திகளைத் தந்தன.

கீழடி மக்கள், வரலாறு, அகழாய்வு, டிஎன்ஏ மூலக்கூறுகள்

பட மூலாதாரம், Tamil Nadu State Department of Archaeology

படக்குறிப்பு, 'கீழடிக்கு அருகில் இருக்கும் கொந்தகை பண்டைய காலத்தில் இடுகாடாக இருந்திருக்கக்கூடும்'

கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருள்களின் கரிமப் பகுப்பாய்வு, கீழடிப் பண்பாட்டின் காலம் கி.மு. 6-ஆம் நூற்றாண்டு என்பதை உறுதிப்படுத்தியது.

கங்கைச் சமவெளியில் இரண்டாம் நகர நாகரிகம் (சிந்து சமவெளி நாகரீகம் முதலாம் நகர நாகரீகம்) கிட்டத்தட்ட கி.மு. ஆறாம் நூற்றாண்டில் தோன்றியது. அதற்கு இணையான காலகட்டத்தில் தமிழ்நாட்டில் எந்த நகர நாகரிகமும் இருந்ததற்கான ஆதாரங்கள் கீழடி அகழாய்வுகளுக்கு முன் கிடைத்ததில்லை.

இரண்டாம் நகர நாகரிக காலத்தில் தமிழ்நாட்டிலும் நகர நாகரிகம் இருந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகளை கீழடி வெளிப்படுத்தியது. எனவே, கீழடி இந்தியா முழுவதும் பேசுபொருளானது.

10 லட்சம் டிஎன்ஏ மூலக்கூறுகள்

கீழடி மக்கள், வரலாறு, அகழாய்வு, டிஎன்ஏ மூலக்கூறுகள்

பட மூலாதாரம், Tamil Nadu State Department of Archaeology

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

கீழடிக்கு அருகில் இருக்கும் கொந்தகை பண்டைய காலத்தில் இடுகாடாக இருந்திருக்கக்கூடும் என்பதற்கு ஆதாரங்களாக முந்தைய அகழாய்வுகளில் அங்கிருந்து முதுமக்கள் தாழிகளும், மண்டை ஓடுகளுடன் கூடிய எலும்புக் கூடுகளும் கிடைத்தன.

குறிப்பாக, 2020, ஜூன் மாதம் நடைபெற்ற அகழாய்வுகளில் குழந்தை ஒன்றின் முழு அளவிலான எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. இடுகாடாக பயன்படுத்தப்பட்ட கொந்தகையில் முதலாம், 2ஆம், 3ஆம் நிலை எலும்பு துண்டுகள் தொடர்ச்சியாக கிடைத்துள்ளன. குழந்தையின் எலும்பு கூடுகள் 3ஆம் நிலை என கருதப்படுவதாக தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறு அகழாய்வுகளில் கிடைக்கும் தொல்லியல் எச்சங்களை அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்வதற்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொல் மரபியல் ஆய்வகம் ஒன்று 2020ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

"இந்த ஆய்வின் முதன்மை நோக்கம் என்னவென்றால், தொல்லியல் துறையில் கிடைக்கும் மனித எச்சங்கள், தொல் எச்சங்கள் மற்றும் விலங்கினங்கள் அல்லது பயிரினங்களின் எச்சங்களை ஆராய்ந்து, உலகத்திலுள்ள மற்ற முக்கியமான தொல்லியல் இடங்களுக்கும் நமக்கும் அக்காலகட்டத்தில் இருந்த தொடர்புகள் என்ன என்பதையும், மனிதர்களின் இடப்பெயர்வு எவ்வாறு நிகழ்ந்தது என்பதையும் கண்டறிவதாகும்." என்கிறார் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் மரபியல் துறைத் தலைவர், பேராசிரியர் குமரேசன்.

"3000 அல்லது 5000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் மரபணுக்கள் எவ்வாறு இருந்தன, அவர்களின் இடப்பெயர்வுப் பாதைகள் (Migration routes), மற்றும் அக்காலத்தில் அவர்கள் பின்பற்றிய விவசாய முறைகள் ஆகியவற்றை நாங்கள் ஆராய்கிறோம். ஏனெனில், மனிதர்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயரும் போது, அவர்கள் தம்முடன் விவசாயப் பழக்கவழக்கங்களையும் எடுத்துச் செல்வார்கள். அதேபோன்று விலங்குகளும், குறிப்பாக கால்நடைகளும் அவர்களுடன் சென்றிருக்கும்" என்றும் அவர் கூறுகிறார்.

கீழடி மக்களின் வழித்தோன்றல்கள்

கீழடி மக்கள், வரலாறு, அகழாய்வு, டிஎன்ஏ மூலக்கூறுகள்
படக்குறிப்பு, பேராசிரியர் குமரேசன்

இந்த ஆய்வைத் தொடங்கிய போது ஒரு சிக்கல் இருந்ததாகக் குறிப்பிடும் குமரேசன், 'தற்போதைய மனிதர்களின் டிஎன்ஏ-வை எடுப்பது மிகவும் எளிதானது; அரை மணி நேரத்தில் மைக்ரோகிராம் அளவில் டிஎன்ஏ-வை எளிதில் பெற்றுவிடலாம். ஆனால், 2000 முதல் 3000 ஆண்டுகள் பழமையான மாதிரிகளில் இருந்து டிஎன்ஏ-வை எடுப்பது கடினம். அவை வேதியியல் மாற்றங்களுக்கு உட்பட்டு, சிதைவடைந்திருக்கும்.' என்கிறார்.

இந்த ஆய்வில் கொந்தகையில் கிடைத்த தொல் மனிதர்களின் எலும்புகளை பரிசோதித்துள்ளனர். குறிப்பாக பற்கள் மற்றும் காதில் உள்ள சில எலும்புகள்.

"பற்கள் மற்றும் காதில் உள்ள எலும்புகளில் அதிக டிஎன்ஏ இருக்கும் என்பது ஏற்கனவே அறியப்பட்ட ஒன்றாகும். எனவே, அதிக அளவிலான மாதிரிகளைப் பரிசோதித்தோம். ஒட்டுமொத்தமாக 10 லட்சம் டிஎன்ஏ மூலக்கூறுகளை எங்களால் பிரித்தெடுக்க முடிந்தது. அதன்பிறகு, அவற்றை உலகிலுள்ள பிற மக்கள் கூட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தோம்" என்கிறார் பேராசிரியர் குமரேசன்.

இந்த ஒப்பீட்டிற்கு '1000 ஜீனோம்' (1000 Genomes) என்றொரு தரவுத்தளம் உள்ளது. அதில் உலகில் உள்ள 26 வெவ்வேறு மக்கள் கூட்டத்தின் மரபணுத் தகவல்கள் உள்ளன. அதனுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது, தற்போதைய தென்னிந்தியர்கள், இலங்கையில் வாழும் தமிழர்கள் உட்பட தெற்காசியாவைச் சேர்ந்த மக்களின் மரபணுக்களுடன் கொந்தகையில் கிடைத்த மாதிரிகள் பெருமளவு ஒத்துப்போவது கண்டறியப்பட்டது.

"இதிலிருந்து என்ன அறிய முடிகிறது என்றால், 2500 ஆண்டுகளுக்கு முன்பு கொந்தகை மற்றும் கீழடியில் வாழ்ந்த மனிதர்கள்தான் நமது நேரடி மூதாதையர்கள் ஆவர். இதனைத் தொழில்நுட்ப ரீதியாக 'மரபணுத் தொடர்ச்சி' என்று கூறலாம். அந்த மக்களின் வழித்தோன்றல்களே நாம்" என்கிறார் பேராசிரியர் குமரேசன்.

கீழடி மக்கள் என்ன சாப்பிட்டார்கள்?

கீழடி மக்கள், வரலாறு, அகழாய்வு, டிஎன்ஏ மூலக்கூறுகள்

பட மூலாதாரம், keeladimuseum

படக்குறிப்பு, கீழடியில் கிடைத்த பானை

கீழடி அகழாய்வுகளில் சிறிய அளவிலான பல்வேறு பானைகள் கிடைத்துள்ளன. அவற்றில் சிலவற்றை படையல் பானைகள் என தொல்லியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். கொந்தகை உட்பட எல்லா இடங்களிலும் இவை கிடைத்துள்ளன.

"இறந்தவர்களைப் புதைக்கும் போது உணவுப் பொருட்கள் போன்ற ஏதோ சில பொருட்களை அதனுள் வைத்திருக்கலாம் என்று அனுமானிக்க முடிகிறது. அதனைத் துளையிட்டு அதனுள் ஏதேனும் வேதியியல் மூலக்கூறுகள் உள்ளனவா என்று ஆராய்கிறோம். கொழுப்பு அமிலங்கள் நீண்ட காலம் நிலைத்திருக்கும் என்று உலகம் முழுவதும் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் தெரிவிக்கின்றன." என்கிறார் பேராசிரியர் குமரேசன்.

அவ்வாறு பார்க்கும்போது, "பாலில் உள்ள சில மூலக்கூறுகளைக் காண முடிந்தது. அத்துடன் அரிசி, தினை, விலங்குகளின் மாமிசம், மற்றும் விளக்கெண்ணெயில் உள்ள சில மூலக்கூறுகளும் இருப்பதை அறிய முடிந்தது. இன்னும் பல மூலக்கூறுகள் உள்ளன; அவற்றை தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறோம்" என்றும் அவர் கூறுகிறார்.

அரிசி, தினை, பால் மற்றும் அசைவ உணவுகள் கீழடி மக்களின் பிரதான உணவுகளாக இருந்திருப்பது உறுதியாகிறது என்றாலும், எந்த வகையான மாமிசம் என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.

கீழடி மக்கள், வரலாறு, அகழாய்வு, டிஎன்ஏ மூலக்கூறுகள்

பட மூலாதாரம், keeladimuseum

படக்குறிப்பு, பானைக் குவியல்கள் (கீழடி)

இந்த உணவுப் பொருட்கள் குறித்து சங்க இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன எனக் கூறும் பேராசிரியர் குமரேசன், "சங்க இலக்கியங்களில் சுமார் 50, 60 இடங்களில் தினை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. தினையோடு வெல்லம் சேர்த்து உண்டதையும், தினையையும் ஆட்டின் ரத்தத்தையும் கலந்து இறைவனுக்குப் படைத்ததையும் அவ்விலக்கியங்கள் கூறுகின்றன" என்கிறார்.

இதற்கு ஒரு உதாரணம், ஐங்குறுநூறில் வரும் ஒரு பாடல்.

"தாஅய் இழந்த தழுவரிக் குருளையொடு

வளமலைச் சிறுதினை உணீஇ கானவர்

வரைஓங்கு உயர்சிமைக் கேழல் உறங்கும்

நல்மலை".

இதற்கு அர்த்தம், கானவர்கள் பயிரிட்ட சிறுதினையைத் தின்றுவிட்டு, உயர்ந்த மலை உச்சியில் தாயை இழந்த பன்றிக்குட்டி உள்ளிட்ட காட்டுப் பன்றிகள் நிம்மதியாக உறங்குகின்றன.

"சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பல தகவல்களை, தற்போது கிடைக்கும் அறிவியல் சான்றுகளோடு நம்மால் பொருத்திப் பார்க்க முடிகிறது. ஏனெனில் இவை அனைத்தும் ஏறக்குறைய ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவை" என்கிறார் பேராசிரியர் குமரேசன்.

"எந்தவொரு உயிரினமும் வாழ வேண்டுமென்றால் புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு ஆகியவற்றை நிச்சயம் உட்கொள்ள வேண்டும். கீழடி அகழாய்வில் கிடைத்துள்ள மாமிசத்தின் சுவடுகள், அம்மக்களும் அத்தகைய உணவுமுறையை பல ஆண்டுகளுக்கு முன்பே பின்பற்றியிருக்கலாம் என்பதைக் காட்டுகிறது".

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு