'ஆடு தேடிச் சென்றேன்; தங்கம் கிடைத்தது': சிறிய கிராமத்தில் ஆயிரக்கணக்கானோர் தங்க வேட்டை

கென்யாவில் தங்க வேட்டை
    • எழுதியவர், அகிஸா வாண்டேரா
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

மேற்கு கென்யாவின் தொலைதூரப் பகுதியைச் சேர்ந்த ஒரு ஆடு மேய்ப்பவர் பிபிசியிடம் பேசுகையில், தனது தற்செயலான தங்கக் கண்டுபிடிப்பால் கடந்த சில வாரங்களாக தங்களது சிறிய கிராமம் தங்கம் தேடும் ஆயிரக்கணக்கான நபர்களால் நிரம்பியுள்ளதாக தெரிவித்தார்.

33 வயதான மனாசே லோமாச்சார், தாம் கண்டெடுத்த மூன்று கிராம் தங்கத்தை சில வாரங்களுக்கு முன்பு 36,000 கென்யா ஷில்லிங்கிற்கு (சுமார் 280 அமெரிக்க டாலர்) விற்றார். இந்தச் செய்தி பரவிய பிறகே செபோரோர் கிராமத்துக்கு தங்கம் தேடும் ஆயிரக்கணக்கானோர் வரத் தொடங்கியதாக அவர் நம்புகிறார்.

கடந்த மாதம் வரை புதர்காடுகளும் மேய்ச்சல் நிலங்களுமாக இருந்த அந்தப் பகுதி, தற்போது தோண்டப்பட்ட பள்ளங்கள், மண் மேடுகள் மற்றும் தற்காலிக சுரங்க முகாம்களால் நிரம்பியுள்ளது.

இந்த பரபரப்புக்கு லோமாச்சாரின் கண்டுபிடிப்பே காரணமா அல்லது அதன்பிறகு நிகழ்ந்த பிற தங்கக் கண்டுபிடிப்புகள் காரணமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், தங்க வேட்டை உச்சகட்டத்தில் இருந்தபோது சுமார் 10,000 பேர் அப்பகுதிக்கு வந்ததாக உள்ளூர் நிர்வாகம் மதிப்பிடுகிறது.

சிறிய அளவிலான தங்கமே கிடைத்தாலும், கென்யா மற்றும் அண்டை நாடான உகாண்டாவில் உள்ள பலரின் வாழ்க்கையை அது மாற்றக்கூடியதாக இருக்கிறது. அவர்களில் பலர் நிலையான வருமானமின்றி விவசாயத்தையே நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

கென்யாவில் தங்க வேட்டை

பட மூலாதாரம், Edwin Naitale / BBC

இந்தப் பகுதிகளில் சிலர் அவ்வப்போது தங்கம் தேடுவது வழக்கம்தான். ஆனால் கணிசமான அளவில் தங்கம் கிடைப்பது அரிது.

தனது தங்கக் கண்டுபிடிப்பு முற்றிலும் தற்செயலாக நிகழ்ந்ததாக லோமாச்சார் கூறுகிறார். காணாமல் போன ஆட்டைத் தேடிச் சென்றபோது, ஆற்றங்கரையில் தங்கத் துகள்களைத் தேடிக் கொண்டிருந்த பெண்கள் குழுவை அவர் சந்தித்துள்ளார்.

"நானும் அவர்களுடன் சேர்ந்து தேடினேன். அப்படித்தான் இந்தப் பகுதியில் தங்கம் இருப்பதை கிராம மக்கள் அறிந்துகொண்டனர்," என்று அவர் கூறினார்.

அருகிலுள்ள நபாவோய் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியும் கால்நடை வளர்ப்பாளருமான பாட்ரிக் லோகோலியா, தனது குடும்பத்துக்கு கூடுதல் வருமானம் ஈட்டும் நம்பிக்கையில் தங்க வேட்டையில் இணைந்துள்ளார்.

"எனது குழந்தைகள் பள்ளியில் படிக்கிறார்கள். அவர்களுக்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்துவது எனக்கு மிகவும் சிரமமாக உள்ளது," என்று பிபிசியிடம் பேசிய அவர் தெரிவித்தார்.

18 வயதான அபிகேல் செலெங்காட், தான் இதற்கு முன் ஒருபோதும் சுரங்கப்பணியில் ஈடுபட்டதில்லை என்று கூறுகிறார். ஆனால் கல்விக் கட்டணத்தைச் செலுத்தவும், தன் இளைய சகோதர சகோதரிகளைப் பள்ளியில் தொடர்ந்து படிக்க வைக்கவும் போதுமான தங்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அருகிலுள்ள மாவட்டத்திலிருந்து செபோரோருக்கு வந்துள்ளார்.

கென்யாவில் தங்க வேட்டை

பட மூலாதாரம், Edwin Naitale / BBC

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அவருக்குப் பின்னால் நூற்றுக்கணக்கானோர் மண் வெட்டிகள் மற்றும் மண்வாரிகளைக் கொண்டு நிலத்தைத் தோண்டிக் கொண்டிருந்தனர்.

சிலர் தோண்டிய மண்ணை அருகிலுள்ள ஆற்றுக்குக் கொண்டு செல்கின்றனர். அங்கு பெரும்பாலும் பெண்கள் சேறும் சகதியுமாக இருக்கும் நீரில் அமர்ந்து, மண் மற்றும் மணலை அலசி தங்கத் துகள்கள் கிடைக்குமா எனத் தேடுகின்றனர்.

அனுபவமிக்க சில சுரங்கத் தொழிலாளர்கள், ஆழமான குழிகளில் இறங்கி மண்ணை அகற்றுவதோடு பாறைகளையும் துளையிட்டு வருகின்றனர்.

இத்தனை முயற்சிகளுக்கும் பின்னால் உள்ள நம்பிக்கைக்கு காரணம், லோமாச்சார் போன்றோர் அடைந்த வெற்றி தான்.

மேற்கு போகோட் கவுண்டியின் துணை ஆணையர் சாமுவேல் கியாரி, இரண்டு முக்கியமான கண்டுபிடிப்புகளே இந்த தங்க வேட்டைக்கு அடித்தளம் அமைத்ததாக நம்புவதாகத் தெரிவித்தார்.

"சில இளைஞர்கள் கணிசமான அளவு தங்கத்தைக் கண்டுபிடித்தனர். அதற்கடுத்த நாளே பெண்கள் குழுவொன்றும் அதே பகுதியில் குறிப்பிடத்தக்க தங்கத்தைக் கண்டுபிடித்தது," என்று அவர் கூறினார்.

பல ஆண்டுகளாக அந்த ஆற்றுப்படுகையில் பெண்கள் சிறிய அளவில் தங்கத் துகள்களை சேகரித்து வாரத்திற்கு 8 முதல் 23 டாலர் வரை சம்பாதித்து வந்ததாக அவர் கூறினார்.

கென்யாவில் தங்க வேட்டை

ஆனால் ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் அதிக அளவில் தங்கம் கிடைத்ததாகத் தகவல் பரவியதே ஆயிரக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்தது.

வதந்திகள் பரவியபோது, கண்டுபிடிக்கப்பட்ட தங்கத்தின் அளவும் அதன் மதிப்பும் மிகைப்படுத்திக் கூறப்பட்டதாக கியாரி கருதுகிறார். இதன் காரணமாக சுரங்க அனுபவமே இல்லாத ஏராளமானோர் அதிர்ஷ்டத்தை தேடி அங்கு குவிந்தனர்.

ஆரம்பத்தில் 10,000 பேரை எட்டிய தங்கம் தேடுபவர்களின் எண்ணிக்கை தற்போது சுமார் 2,500 ஆகக் குறைந்திருப்பதாகவும், பலர் நம்பிக்கை இழந்து திரும்பிச் சென்றுவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அப்பகுதியில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மண்ணுக்கடியில் உள்ள தங்கப் படிவத்தின் அளவு மற்றும் அதன் வணிக சாத்தியக்கூறுகள் இன்னும் தெளிவாகவில்லை.

"சிறிய அளவிலான தங்க வியாபாரிகளிடம் தினமும் சுமார் 100 பேர் வரை தங்கம் விற்க வந்ததாகத் தகவல் கிடைத்துள்ளது," என்று கியாரி கூறினார். இருப்பினும், அவர்கள் கொண்டு வந்தது உண்மையில் தங்கம்தானா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

தனிநபர்கள் கண்டுபிடித்த தங்கத்தின் மதிப்பு சில நூறு கென்யா ஷில்லிங்கில் இருந்து, 78,000 கென்யா ஷில்லிங் (சுமார் 600 டாலர்) மதிப்புள்ள கண்டுபிடிப்பு வரை மாறுபட்டதாகக் கூறப்படுகிறது.

உகாண்டா எல்லையை ஒட்டியுள்ள இந்தப் பகுதியில் இரு நாடுகளின் மக்களுக்கும் நீண்டகால சமூக மற்றும் குடும்ப உறவுகள் உள்ளன.

உகாண்டாவின் புசியா (Busia) பகுதியைச் சேர்ந்த சுரங்கத் தொழிலாளி முகிஷா காட்ஃபரே, நண்பர் ஒருவரிடம் இந்தச் செய்தியைக் கேட்டு உடனடியாக செபோரோருக்கு புறப்பட்டார். பயணச் செலவுக்காக மட்டும் அவர் சுமார் 100,000 உகாண்டா ஷில்லிங் (27 டாலர்) செலவிட்டுள்ளார்.

ஆனால் அங்கு நிலவும் வாழ்க்கைச் சூழல் மிகவும் கடினமானது என அவர் கூறுகிறார்.

"நாங்கள் மரங்களின் கீழ் தூங்குகிறோம். காலையில் மீண்டும் வேலைக்குச் செல்கிறோம். சில நேரங்களில் பகலும் இரவும் தொடர்ந்து உழைக்கிறோம்," என்று அவர் கூறினார்.

கென்யாவில் தங்க வேட்டை

பட மூலாதாரம், Edwin Naitale / BBC

இதுவரை அவருக்கு எந்தத் தங்கமும் கிடைக்கவில்லை. இருந்தாலும் அவர் மனம் தளரவில்லை.

"ஏதாவது கிடைக்காமல் நாங்கள் திரும்ப முடியாது. தேடியதைப் பெற்ற பிறகே வீட்டுக்குத் திரும்புவோம்," என்றார்.

ஆனால், தங்கம் தோண்டாமல் இருந்தும் இந்த தங்க வேட்டை சிலருக்கு புதிய வருமான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

உள்ளூர் அதிகாரிகளின் தகவல்படி, தண்ணீர், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் 200-க்கும் மேற்பட்ட சிறு தொழில்கள் அப்பகுதியில் உருவாகியுள்ளன.

அருகில் உள்ள பாரிங்கோ மாவட்டத்தைச் சேர்ந்த ஐரீன் அமேஜா, புதிய வர்த்தக வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள அங்கு வந்துள்ளார். தண்ணீர் பாட்டில், குளிர்பானங்கள், ரொட்டி, பால் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்கிறார்.

"நான் திரும்பும்போது, என் வியாபாரத்தை விரிவுபடுத்தும் அளவுக்கு பணம் சம்பாதித்திருப்பேன் என்று நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.

ஆனால் மக்கள் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததால், அப்பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாத நிலை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

"இது ஒரு காடு. மலைகளின் நடுவே இருக்கிறோம். குடிப்பதற்கோ குளிப்பதற்கோ சுத்தமான தண்ணீர் இல்லை," என்று அவர் கூறினார்.

பெண்களுக்கு இரவு நேரத்தில் சவால்கள் இன்னும் அதிகம் எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

"இங்கு தங்கியிருப்பவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள். எனவே பெண்கள் பாதுகாப்பாக தங்க இடம் தேட வேண்டிய நிலை உள்ளது," என்றார்.

மக்கள் வருகை அதிகரித்ததால் உள்கட்டமைப்பு இல்லாத பகுதியில் கடும் அழுத்தம் ஏற்பட்டிருப்பதை அதிகாரிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

நோய் பரவாமல் தடுப்பதற்காக சுகாதாரப் பணியாளர்கள் அங்கு நியமிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பு தொடர்பான கவலைகள் காரணமாக பாதுகாப்பு ரோந்துப் பணிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கென்யாவில் தங்க வேட்டை

பட மூலாதாரம், Edwin Naitale / BBC

செப்டம்பரில் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், குழந்தைகள் தங்கம் தேடும் பணிகளில் ஈடுபட்டு கல்வியைப் புறக்கணித்துவிடக் கூடும் என்ற அச்சமும் அதிகாரிகளிடம் உள்ளது.

அதேநேரத்தில், தங்கம் தேடுபவர்கள் இன்னும் ஆழமாக தோண்டத் தொடங்கியுள்ளனர். பல லாரி மண் மாதிரிகள் ஏற்கனவே அருகிலுள்ள ஓர்டம் நகரத்துக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன.

அவற்றின் முடிவுகள் வரும் வரை, அங்கு பெரிய அளவிலான தங்கச் சுரங்கத் தொழிலை முன்னெடுக்க முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

லோமாச்சாரின் கருத்தில், தங்க வேட்டையை நிறுத்துவது தீர்வல்ல; அதை ஒழுங்குபடுத்த வேண்டும்.

"உலோகம் கண்டறியும் கருவிகள் போன்ற வசதிகளை அரசு வழங்க வேண்டும். அப்போதுதான் இங்கு வேறு கனிம வளங்கள் உள்ளனவா என்பதையும் கண்டறிய முடியும். அதன் மூலம் எங்கள் சமூகமும் முன்னேற முடியும்," என்றார்.

கிராமத்தின் வறுமை நிலைக்கு ஆதாரமாக சுற்றியுள்ள வீடுகளைச் சுட்டிக்காட்டும் அவர், "சுற்றிப் பாருங்கள். தகரக் கூரையுடன் கூடிய வீடுகள் மிகவும் குறைவு. பெரும்பாலானவை புல்லால் வேயப்பட்ட குடிசைகள்தான்," என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு