33 வயதில் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகம் - யார் இந்த சாரன்ஷ் ஜெயின்?

33 வயதைக் கடந்த பிறகு சர்வதேச அணியில் அறிமுகமான இரண்டாவது இந்திய வீரர் சாரன்ஷ் ஜெயின்.

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, 33 வயதைக் கடந்த பிறகு சர்வதேச அணியில் அறிமுகமான இரண்டாவது இந்திய வீரர் சாரன்ஷ் ஜெயின்.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணிக்காக 33 வயதான புதிய ஆல் ரவுண்டர் சாரன்ஷ் ஜெயின் அறிமுகமானார்.

டாஸ் போடுவதற்கு முன், அவருக்கு ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கேப்பை வழங்கினார். 33 வயதுக்குப் பிறகு சர்வதேச அணியில் அறிமுகமான இரண்டாவது இந்திய வீரர் சாரன்ஷ். இதற்கு முன்பு, 1998-ஆம் ஆண்டு ராபின் சிங் இந்தச் சாதனையைப் படைத்திருந்தார்.

காயமடைந்த வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக சாரன்ஷ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சாரன்ஷ் ஜெயின் வலது கை ஆஃப்-ஸ்பின் பந்துவீச்சாளர். மேலும், அவர் வலது கை பேட்டராகவும் உள்ளார்

கீழ் வரிசையில் பேட்டிங் செய்யும் அவர், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் அணிக்கு சமநிலையை வழங்கும் திறன் கொண்டவர்.

அந்தத் திறன்தான் அவரை வாஷிங்டன் சுந்தருக்கு பொருத்தமான மாற்று வீரராக ஆக்குகிறது.

சாரன்ஷ் ஜெயின் வலதுகை ஆஃப் ஸ்பின் பந்துவீச்சாளர்; இடதுகை பேட்ஸ்மேனாகவும் விளையாடுகிறார்.

பட மூலாதாரம், VIDEO GRAB/BCCI

கிரிக்இன்ஃபோவின் தகவல்படி, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதான ஆல் ரவுண்டர் சாரன்ஷ் ஜெயின், 54 முதல்தர போட்டிகளில் 31.75 சராசரியில் 2223 ரன்கள் எடுத்துள்ளார். பந்துவீச்சில் 188 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

அவர் 67 லிஸ்ட்-ஏ மற்றும் டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இருப்பினும், டெஸ்ட் கிரிக்கெட்டே அவரது மிக வலுவான வடிவமாக இருந்து வருகிறது.

சாரன்ஷ் ஜெயின், ரவிச்சந்திரன் அஸ்வினை தனது மிகப் பெரிய முன்மாதிரியாகக் கருதுகிறார்.

2024-ல் கிரிக்இன்ஃபோவிற்கு அளித்த பேட்டியில் "அஸ்வினிடம் இருந்து எனக்கு ஊக்கம் கிடைக்கிறது. நானும் அவரைப் போலவே முழு அர்ப்பணிப்புடன் என் கிரிக்கெட் பயணத்தை முன்னெடுத்து செல்ல விரும்புகிறேன்" என கூறினார்.

பயிற்சியின்போது பயிற்சியாளர் கவுதம் கம்பீருடன் ஆலோசனை மேற்கொள்ளும் சாரன்ஷ் ஜெயின்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, பயிற்சியின்போது பயிற்சியாளர் கவுதம் கம்பீருடன் ஆலோசனை மேற்கொள்ளும் சாரன்ஷ் ஜெயின்

இதுவரையிலான அவரது கிரிக்கெட் பயணம் எப்படி இருந்தது?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

கிரிக்இன்ஃபோவின் தகவல்படி, முதல்தர கிரிக்கெட் வீரரான சுபோத் ஜெயினின் மகனான சாரன்ஷ், கடந்த சில சீசன்களாக உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

எனினும், அவரது கிரிக்கெட் வாழ்க்கை மெதுவாகவே முன்னேறியது. 2014-ல் அவர் ரஞ்சி கோப்பையில் அறிமுகமானார். ஆனால், 2022-ல்தான் அதிக கவனம் பெற்றார். அதுவரை அவர் முதல்தர போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தார். அந்த ஆண்டில் ரஞ்சி கோப்பையின் நாக்-அவுட் சுற்றில், மத்தியப் பிரதேச அணிக்காக அவர் 13 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன், ஒரு அரைசதமும் அடித்தார். இதன் மூலம் அந்த அணி தனது முதல் ரஞ்சி கோப்பை பட்டத்தை வென்றது.

அண்மையில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை சீசன், அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் மிகச் சிறந்த சீசனாக அமைந்தது. அவர் 57.55 சராசரியில் 518 ரன்கள் எடுத்ததுடன், 20.43 சராசரியில் 30 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். துலீப் கோப்பையிலும் அவர் சிறப்பாக விளையாடினார். சென்ட்ரல் ஜோன் அணிக்காக விளையாடிய அவர், இரண்டு போட்டிகளில் இரண்டு அரைசதங்கள் அடித்ததுடன், 16 விக்கெட்டுகள் கைப்பற்றி தொடர் நாயகன் விருதையும் வென்றார்.

இலங்கை சுற்றுப்பயணத்திற்காக அவர் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார்?

வாஷிங்டன் சுந்தர் காயமடைந்ததால், சாரன்ஷ் ஜெயினுக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைத்தது

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, வாஷிங்டன் சுந்தர் காயமடைந்ததால், சாரன்ஷ் ஜெயினுக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைத்தது

அவரது தேர்வுக்குப் பின்னால் பல காரணங்கள் இருந்தன. காயம் காரணமாக வாஷிங்டன் சுந்தர் முதல் டெஸ்டில் விளையாட முடியவில்லை.

மேலும், இலங்கை அணியில் பல இடதுகை பேட்ஸ்மேன்கள் இருப்பதால், தேர்வாளர்கள் அணியில் ஓர் ஆஃப் ஸ்பின்னரை சேர்க்க விரும்பினர்.

அந்தச் சூழலில், சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருந்தவர் சாரன்ஷ்.

இலங்கை மைதானங்களை கருத்தில் கொண்டு, இந்திய அணி மூன்று சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கத் திட்டமிட்டிருந்தது.

மூன்றாவது சுழற்பந்துவீச்சாளர் இடத்திற்காக மாணவ் சுதார் மற்றும் சாரன்ஷ் ஜெயின் இடையே போட்டி இருந்தது. ஆனால் இந்தப் போட்டியில் சுதாரும் சாரன்ஷும் இருவரும் விளையாடுகின்றனர்.

இலங்கை அணியில் பல இடதுகை பேட்ஸ்மேன்கள் இருப்பது, சாரன்ஷுக்கு சாதகமாக அமையக்கூடும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு