மோதி வெளியிட்ட ரீலை கேலி செய்த 'ஜென் ஸி' இளைஞர்கள் - இன்ஸ்டாகிராமில் பாஜக சந்திக்கும் மிகப்பெரிய சவால்

பட மூலாதாரம், Reuters
- எழுதியவர், நிகிதா யாதவ்
- பதவி, பிபிசி நியூஸ், புது டெல்லி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
இந்தியாவின் பல ஜென் ஸி மற்றும் மில்லினியல் தலைமுறையினர் நரேந்திர மோதியை நண்பராகக் கருதாமல் இருக்கலாம். ஆனால், இந்தியப் பிரதமர் இப்போது அவர்களை நண்பரைப் போல அணுக முயற்சித்து வருகிறார்.
75 வயதான மோதி, நீண்ட உரைகள், முறைப்படுத்தப்பட்ட ஒளிபரப்புகள் மற்றும் கவனமாகத் திட்டமிடப்பட்ட பொது நிகழ்ச்சிகள் மூலம் வலிமையான தலைமைத்துவப் பிம்பத்தை உருவாக்கியுள்ளார்.
ஆனால், சமீபத்திய வாரங்களில், இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இன்ஸ்டாகிராமில் அவர் மிகவும் இயல்பான, முறைசாராத பாணியைப் பின்பற்றத் தொடங்கியுள்ளார்.
சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு வரை, மோதியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் கவனமாகத் தயாரிக்கப்பட்ட பதிவுகள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. இப்போது, அதில் சில 'கேன்டிட்' (candid) எனப்படும் இயல்பான, முன்தயாரிப்பில்லாத பதிவுகளும் இடம்பெறத் தொடங்கியுள்ளன.
இதில், "கெட் ரெடி வித் மீ" (என்னுடன் தயாராகுங்கள்) போன்ற ரீல்களும், இளைஞர்களை "நண்பர்களே" என்று அழைத்து உரையாற்றும் செல்ஃபி பாணியிலான பல வீடியோக்களும் அடங்கும்.
ஒரு வீடியோவில், ஜென் ஸி மத்தியில் பிரபலமான "என் பரம்பரையில் முதல் நபர்" (first in my bloodline) என்ற சொற்றொடரையும் அவர் பயன்படுத்தினார். டெல்லியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர், "ராக்கெட்டுகள், சிப்கள் மற்றும் ட்ரோன்களை உருவாக்கிய தலைமுறையைச் சேர்ந்தவன் நான்" என்றார்.
மோதியை இன்ஸ்டாகிராமில் 10.6 கோடிக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். இதனால், இந்தத் தளத்தில் அதிகம் பின்தொடரப்படும் அரசியல் தலைவர்களில் ஒருவராக அவர் உள்ளார்.
ஆனால், இந்தத் தளத்தில் மோதியின் தகவல் தொடர்பு பாணி இதுவரை அவரது குழுவின் அல்லது பாரதிய ஜனதா கட்சியின் சமூக ஊடக உத்தியின் முக்கிய அங்கமாக இருந்ததில்லை.
2014ஆம் ஆண்டு தேர்தல் வெற்றிக்கு வழிவகுத்த டிஜிட்டல் உத்தியை திறம்படப் பயன்படுத்திய கட்சியாக பாஜக அப்போது அங்கீகரிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற இளைஞர்களின் போராட்டங்களுக்குப் பிறகு நிலைமை மாறியது.
நையாண்டி அரசியல் அமைப்பான 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டம், மீம்கள், நேரலை ஒளிபரப்புகள் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்கள் மூலம் பரவியது. பின்னர், அது மிகவும் செல்வாக்கு மிக்கதாக மாறியதால், மத்திய கல்வி அமைச்சர் பதவி விலகும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
சிஜேபி முதலில் ஒரு நகைச்சுவையாகத் தொடங்கப்பட்டது. ஆனால், இணையத்தில் கிடைத்த ஆதரவைத் தெருக்களில் திரண்ட மக்கள் கூட்டமாகவும், அரசியல் அழுத்தமாகவும் மாற்றிய அதன் திறன் பாஜகவையே ஆச்சரியப்படுத்தியது.

பட மூலாதாரம், NurPhoto via Getty Images
எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான அனுராக் மைனஸ் வர்மா கூறுகையில், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, வாட்ஸ்அப் குழுக்கள், ஃபேஸ்புக் பக்கங்கள் மற்றும் எக்ஸ் கணக்குகள் மூலம் தனது செய்திகளைப் பரவலாகப் பகிர்ந்து, இந்தியாவின் வலிமையான இணைய அரசியல் சக்திகளில் ஒன்றாக பாஜக உருவெடுத்துள்ளது.
ஆனால், இந்திய இளைஞர்கள் உள்ளடக்கத்தையும் அரசியலையும் வேறுபட்ட விதத்தில் பார்க்கிறார்கள், புரிந்துகொள்கிறார்கள்.
நிபுணர்களின் கூற்றுப்படி, இந்தியாவின் மக்கள்தொகையில் 60 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் 35 வயதுக்குட்பட்டவர்கள். 1997 முதல் 2012ஆம் ஆண்டுக்குள் பிறந்த ஜென் ஸி தலைமுறையினர், 2029 மக்களவைத் தேர்தலின்போது நாட்டின் மிகப்பெரிய வாக்காளர் குழுக்களில் ஒன்றாக மாறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்களைக் கவர வேண்டுமெனில், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களை அணுகுவது மிகவும் முக்கியம். அங்கு தனிப்பட்ட, தணிக்கை செய்யப்படாத இயல்பான உள்ளடக்கம், வழக்கமான அரசியல் செய்திகளைக் காட்டிலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
மோதி வெளியிட்ட ரீலை கேலி செய்த 'ஜென் ஸி' இளைஞர்கள்
மோதியின் புதிய பதிவுகள் இன்ஸ்டாகிராமில் முதன்முதலில் தோன்றியபோது, இளைஞர்கள் உடனடியாக அவற்றைக் கேலி செய்யத் தொடங்கினர்.
இளைஞர்களின் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அதுகுறித்து தனது மௌனத்தைக் கலைத்து மோதி வெளியிட்ட முதல் செல்ஃபி வீடியோ ரீலை பலரும் கேலி செய்தனர்.
ஆனால், அவர் "நண்பர்களே" என்று கூறிய பிறகு எடுத்த நீண்ட இடைவெளிதான் அதிக கவனத்தை ஈர்த்தது.
விரைவில், அந்த வீடியோவின் பல்வேறு வடிவங்கள் இணையத்தில் வைரலாகத் தொடங்கின.
வீடியோக்களில் பலரும் விதவிதமான எடிட்டிங் மற்றும் நகைச்சுவை அம்சங்களைச் சேர்த்தனர். சிலர் வீடியோவில் இருந்த விளக்குகள் மற்றும் கேமரா கோணங்களைக்கூட கேலி செய்தனர்.

பட மூலாதாரம், Reuters
அடுத்தடுத்த பதிவுகளில், மோதியின் குழு இந்த விமர்சனங்களுக்கு ஓரளவு பதிலளிக்கும் வகையில், வெவ்வேறு கேமரா கோணங்கள், பின்னணிகள் மற்றும் விளக்குகளைப் பயன்படுத்திப் பரிசோதிக்கத் தொடங்கியது.
சில இளம் பயனர்கள் இந்தப் புதிய பாணியைப் பாராட்டினாலும், பலர் அதன் நேரம் குறித்துக் கேள்வி எழுப்பினர்.
22 வயதான ஜின்னி மாலியா கூறுகையில், தன் வயதுடையவர்களுடன் தொடர்பை ஏற்படுத்த பாஜக ஏன் முயற்சிக்கிறது என்பதைத் தன்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், "இந்தத் திடீர் செயல்பாட்டுக்கான நேரம்தான் நாம் மிகவும் கவனமாகப் பார்க்க வேண்டிய கேள்வி" என்கிறார்.
இந்த வீடியோக்கள் ஜென் ஸி தலைமுறையின் மொழியையும், காட்சிப்படுத்தும் பாணியையும் ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால், போராட்டங்கள் வெடிக்கக் காரணமான பிரச்னைகள் குறித்து அவை பேசவில்லை என்கிறார்.
இது மோதியின் இன்ஸ்டாகிராம் கணக்குடன் மட்டும் நின்றுவிடவில்லை.
இளைஞர்களை அணுகுவதற்காக பாஜகவின் சமூக ஊடகப் பக்கங்களிலும் மீம்கள், பேச்சுவழக்கு வார்த்தைகள் மற்றும் பிரபலமான கலாசாரக் குறிப்புகள் பயன்படுத்தப்படத் தொடங்கியுள்ளன.
போராட்டங்கள் முடிந்த சிறிது காலத்திலேயே, பாஜக ஒரு உடற்பயிற்சிக் கூடத்தில் எடுக்கப்பட்ட ரீலைப் பதிவிட்டது. அதில் சில இளைஞர்களும் வயதான பயிற்சியாளரும் இடம்பெற்றிருந்தனர். இந்திய இளைஞர்கள் போராட்டங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று அவர்கள் வாதிடுவது போல் அந்த வீடியோ அமைந்திருந்தது.
ஆனால், பலரும் அந்த வீடியோவுக்கு கருத்து தெரிவித்ததுடன், அதை "கிரிஞ்ச்" (cringe) என்று குறிப்பிட்டு பகிர்ந்தனர். இங்கு கிரிஞ்ச் என்பது செயற்கையாகவும் சங்கடமாகவும் இருப்பது என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பாஜக வெளியிட்ட மற்றொரு வீடியோவில், 1990களின் பிரபலமான நகைச்சுவைத் தொடரான 'ஃபிரெண்ட்ஸ்' தொடரின் தலைப்புப் பாடல் பின்னணியில் ஒலித்தது. அதில் "பிரதமர் மோடி உங்களுக்காக இருக்கிறார்." (PM Modi is for you) என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.
மில்லினியல் தலைமுறையினரிடம் பிரபலமாக இருந்த அந்தத் தொலைக்காட்சித் தொடருக்கு, ஜென் ஸி தலைமுறையினரிடையே அதிக அறிமுகம் இல்லை.
ஜின்னி மாலியா கூறுகையில், 'தன்னுடைய வயதினரிடையே இதுபோன்ற வீடியோக்கள் அரசியல் செய்தியாகவோ அல்லது மக்கள் தொடர்பு முயற்சியாகவோ பார்க்கப்படுவதில்லை. மாறாக, அவை "பொழுதுபோக்கு உள்ளடக்கம்" என்றே பார்க்கப்படுகின்றன.'
பாஜகவின் சமூக ஊடக உத்தியில் மாற்றம்
பாஜகவும் இளைஞர்களை அணுகும் தனது முயற்சிகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதை உணர்ந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போராட்டங்கள் நடைபெற்றபோது, சமூக ஊடகங்களில் தங்களது செயல்பாடுகளை அதிகரித்து, இளைஞர்களை அணுகுமாறு தனது அமைச்சரவை சகாக்களிடம் மோதி கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்ட செய்தியின்படி, புதன்கிழமை மத்திய அமைச்சர்களுக்கு சமூக ஊடகங்களில் அவர்களது செயல்பாடு குறித்த "செயல்திறன் அறிக்கை" வழங்கப்பட்டதுடன், பல்வேறு தளங்களில் தங்களது இருப்பை அதிகரிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.
சமீபத்தில், பாஜக தனது சமூக ஊடகப் பிரிவு தலைவராக இருந்த அமித் மால்வியாவையும் அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கியது.
2015ஆம் ஆண்டு முதல் அவர் இந்தப் பொறுப்பை வகித்து வந்தார்.
போராட்டங்களின்போது பாஜக இணையத்தில் சந்தித்த விமர்சனங்களும், சமூக ஊடகங்களில் உருவான போக்கையும் திறம்படக் கட்டுப்படுத்த முடியாததும் இதற்கான ஒரு காரணமாக இருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
இளைஞர்களை அணுக முயற்சிப்பது பாஜக மட்டுமல்ல.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி செல்ஃபி பாணியிலான வீடியோக்களையும், புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். போராட்டங்களுக்குப் பிறகு, இன்ஸ்டாகிராமில் "என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்" (Ask Me Anything) நிகழ்ச்சியையும் நடத்தினார். அதில் சில கேள்விகளுக்கு நகைச்சுவையான முறையில் பதிலளித்தார்.
உதாரணமாக, ஒரு கேள்விக்குப் பதிலளித்த அவர் நகைச்சுவையாக, "நானும் பேட்மேனும் ஒரே அறையில் இருப்பதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?" என்று கேட்டார்.
இன்ஸ்டாகிராமில் கவனத்தைப் பெறுவது மட்டும் போதுமா?
இன்ஸ்டாகிராமில் மக்களின் கவனத்தை ஈர்ப்பது ஒரு விஷயம். ஆனால், அங்கு நடக்கும் உரையாடலின் போக்கைக் கட்டுப்படுத்துவது முற்றிலும் வேறொரு விஷயம்.
மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் சமூக ஊடகங்களின் அரசியல் பயன்பாடு குறித்து கற்பிக்கும் ஜோயோஜித் பால் கூறுகையில், பாஜக நீண்ட காலமாக எக்ஸ் தளம் மற்றும் வாட்ஸ்அப்பில் உள்ள தனது ஆதரவாளர்களின் வலையமைப்பைப் பயன்படுத்தி தனது செய்திகளைப் பரப்பி, பொதுமக்களின் கருத்துகள் மீது தாக்கம் செலுத்த முயன்று வருகிறது.
ஆனால், இந்த உத்தி இன்ஸ்டாகிராமில் அதே விதமாக செயல்படுவதில்லை.
அதிக ஈர்ப்பை பெறும் உள்ளடக்கங்களையே இந்தத் தளம் பொதுவாக முன்னிலைப்படுத்துகிறது. இதில் நீண்ட நேரப் பார்வைகள், மீண்டும் பார்ப்பது, பகிர்வுகள் மற்றும் கருத்துகள் ஆகியவை அடங்கும்.
"200 பின்தொடர்பவர்களை (followers) மட்டுமே கொண்ட ஒரு கணக்கு பதிவிட்ட ரீல் 1 கோடி முறை பார்க்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடிப்பது கடினமல்ல. அதே நேரத்தில், கோடிக்கணக்கான பின்தொடர்பவர்களைக் கொண்டவர்களின் சில பதிவுகள் சில ஆயிரம் பார்வைகளை மட்டுமே பெறுகின்றன" என்கிறார் ஜோயோஜித் பால்.
"பாஜகவுக்கு இது ஒரு சவால். ஏனெனில், அதன் உத்தி வலையமைப்பை அடிப்படையாகக் கொண்ட பழைய இணையத்துக்காக உருவாக்கப்பட்டது. ஆனால், இன்றைய சமூக ஊடகத் தளங்கள் உணர்ச்சிகளையும் எதிர்வினைகளையும் அதிகம் அடிப்படையாகக் கொண்டுள்ளன" என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Metin Aktas/Anadolu Agency/Getty Images
வீடியோ பதிவிடப்பட்ட பிறகு அதன் மீதான கட்டுப்பாட்டை இழப்பதும் பாஜகவுக்கு மற்றொரு சவாலாக இருக்கலாம்.
இதற்கு மோதியின் முதல் ரீலே சிறந்த உதாரணம். அது 40 கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு, மிகப்பெரிய பார்வையாளர்களைச் சென்றடைந்தது.
ஆனால், வர்மாவின் கூற்றுப்படி, இளைஞர்கள் அந்த வீடியோவை நையாண்டி மற்றும் நகைச்சுவையான எடிட்டிங்குடன் மறுபகிர்வு செய்தனர்.
இதனால், மோதியின் அசல் நோக்கத்திலிருந்து வீடியோவின் தொனி முற்றிலும் மாறிவிட்டது. இந்தச் சூழலுக்கு ஏற்ப பாஜக தன்னை மாற்றிக்கொள்வது சவாலாக இருக்கலாம்.
"இன்ஸ்டாகிராம் அடிப்படையில் நையாண்டி மற்றும் கேலியை மையமாகக் கொண்ட ஒரு தளம். தீவிரமான அரசியல் செய்திகளைக்கூட ரீல் வடிவில் வழங்குவதன் மூலம் கேலிக்குரியதாக மாற்றிவிட முடியும்" என்கிறார் வர்மா.
ஜென் ஸி-ஐ கவர்வது மட்டும் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்குமா?
இருப்பினும், ஜென் ஸி தலைமுறையினரைக் கவரும் பாஜகவின் முயற்சிகளுக்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இன்ஸ்டாகிராமில் பதிவிடப்படும் உள்ளடக்கங்களின் செயல்பாட்டைவிட, பாஜகவின் தேர்தல் வெற்றி அதன் அமைப்பு ரீதியான வலிமை மற்றும் ஆதரவுத் தளத்தையே அதிகம் சார்ந்துள்ளது என்கிறார் அவர்.
"தேர்தலில் வெற்றி பெறும் திறனும், சமூக ஊடக உரையாடலின் போக்கை மாற்றும் திறனும் இரண்டு வெவ்வேறு விஷயங்கள்" என்கிறார் ஜோயோஜித் பால்.
"சமூக ஊடகங்களில் இருக்கும் ஒவ்வொரு ஜென் ஸி இளைஞரும் பாஜகவை வெறுத்தாலும், அக்கட்சி அமோக வெற்றி பெற்று தேர்தலில் வெல்ல முடியும்."
தற்போது, இந்திய அரசியலில் உள்ள பல கட்சிகளைப் போலவே, பாஜகவும் தனக்குப் புதிதாக இருக்கும் ஒரு களத்தில் செயல்படக் கற்றுக்கொண்டு வருகிறது.
ஆனால், இறுதியில் பாஜக இந்தச் சூழலைப் புரிந்துகொண்டு வெற்றிபெறுவது ஆச்சரியமல்ல என்கிறார் ஜோயோஜித் பால்.
புதிய அரசியல் தகவல் தொடர்பு முறைகளை ஏற்றுக்கொண்ட நீண்ட வரலாறு பாஜகவுக்கு உள்ளது.
தேர்தல் பிரசாரத்துக்காக சமூக ஊடகங்களை ஆரம்பகாலத்திலேயே பயன்படுத்தியதில் இருந்து, பாட்காஸ்ட்கள் மற்றும் சமூக ஊடகப் பிரபலங்களுடனான நேர்காணல்கள் போன்ற புதிய வடிவங்களை ஏற்றுக்கொள்வது வரை, காலத்துக்கு ஏற்ப அக்கட்சி தன்னை மாற்றிக்கொண்டுள்ளது.
"ஆனால், அதற்கு கால அவகாசம் தேவைப்படும். இப்போது நாம் இந்தப் பிரச்னையைப் பார்க்கிறோம் என்பதே, அவர்கள் புதிய விதிகளைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் என்பதைக் காட்டுகிறது" என்கிறார் அவர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































