இலங்கை எரிபொருள் நெருக்கடி: "பெட்ரோலுக்காக காத்திருந்து மரணிக்கவும் செய்துள்ளனர்"

    • எழுதியவர், யூ.எல். மப்றூக்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

பாம்பு போல் - வளைந்து நெளிந்து, சில கிலோமீட்டர் தூரத்துக்கு நீண்டிருக்கிறது - அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் எரிபொருள்களுக்காகக் காத்திருக்கும் வாகன வரிசை. பல நாட்களாக அங்கு இதுதான் நிலைமை. இக்பாலின் முச்சக்கர வண்டியும் இந்த வரிசையில்தான் நிற்கிறது.

நிந்தவூரில் அமைந்துள்ள 'ஐஒசி' (இந்தியன் ஆயில் கம்பனி) எரிபொருள் நிலையத்துக்கு முன்னாலுள்ள பிரதான வீதியின் ஒரு பக்கத்தில் பெட்ரோலினைப் பெறுவதற்கான வாகனங்களும், மறு பக்கத்தில் டீசலைப் பெறுவதற்குரிய வாகனங்களும் வரிசைகளில் காத்துக் கிடக்கின்றன.

ஆனாலும் கடந்த சில நாட்களாக எந்த எரிபொருளும் அங்கு வரவில்லை.

நிந்தவூரைச் சேர்ந்த இக்பால் ஒரு முச்சக்கர வண்டியோட்டி. அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்துகிறார். பிள்ளைகள் மனையுடன் அவர் வீட்டில் மொத்தம் 6 பேர் உள்ளனர்.

இலங்கையில் இப்போது பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 470 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. ஆனாலும் பெட்ரோலுக்கு கடுமையான தட்டுப்பாடும் நிலவுகிறது. இதன் காரணமாக முச்சக்கர வண்டிகளுக்கான பயணக் கட்டணங்களும் பல மடங்கு அதிகரித்திருக்கின்றன. இதனால் முச்சக்கர வண்டிகளுக்கு பெரும்பாலும் தொழில் இல்லை.

பெருநாளைக் கொண்டாட முடியாத நிலை

இந்த நிலை காரணமாக, முச்சக்கர வண்டியோட்டிப் பிழைக்கும் இக்பால் - தன் அன்றாட வருமானத்தை கணிசமாக இழந்துள்ளதாகக் கூறும் அவர், "கிடைக்கும் வருமானம் குடும்பச் செலவுகளை சமாளிப்பதற்கே போதவில்லை" எனவும் கவலைப்படுகிறார்.

இலங்கையில் எரிபொருள்களுக்கான தட்டுப்பாடு கடந்த சில வாரங்களாக கடுமையாக அதிகரித்திருக்கிறது. இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் - எரிபொருள்கள் எவையும் இல்லை. 'ஐஒசி' நிலையங்களில் மட்டுமே அவ்வப்போது எரிபொருள்கள் வழங்கப்படுகின்றன.

அதனால்தான் 'ஐஒசி' எரிபொருள் நிலையங்களை அண்மித்து வாகனங்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றன. இக்பாலும் தனது முச்சக்கர வண்டிக்கு பெட்ரோலைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, கடந்த நான்கு நாட்களாக காத்திருப்பதாக, நாம் அவரை சந்தித்த போது (05ஆம் தேதி) தெரிவித்தார்.

நிந்தவூரிலுள்ள 'ஐஒசி' எரிபொருள் நிலையத்தில் இறுதியாக கடந்த 03ஆம் தேதியன்று பெட்ரோல் விநியோகிக்கப்பட்டதாக, அதன் முகாமையாளர் ஏ.எம்.எம். றஜீப் கூறினார். அதன் பின்னர் இந்தக் கட்டுரைக்காக படங்களையும் தகவல்களையும் சேகரிப்பதற்காக - குறித்த இடத்துக்கு நாம் சென்ற நாள் வரை (06ஆம் தேதி), அங்கு பெட்ரோல் வழங்கப்படவில்லை. ஆனால், அன்றைய தினம் டீசல் விநியோகிக்கப்பட்டது.

பெட்ரோலுக்காக நிந்தவூர் 'ஐஒசி' எரிபொருள் நிலையத்தை அண்மித்து இக்பாலினைப் போல் - பல நூறுபேர் தமது முச்சக்கர வண்டிகளுடன் வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். "இன்று வீட்டில் என்ன கறி என்று எனக்குத் தெரியாது. நேற்று இரவு பொட்டியான் கருவாடு, பலாக்கொட்டைக் கறியுடன் வீட்டிலிருந்து சாப்பாடு அனுப்பியிருந்தார்கள்.

ஆட்டோவை (முச்சக்கர வண்டி) இங்கு நிறுத்திவிட்டும் வீட்டுக்குப் போக முடியாது. திருடி விடுவார்கள். அதனால் இந்த வரிசையில்தான் நாட்கள் கழிகின்றன' என்கிறார் இக்பால்.

"இத்தனை நாட்கள் காத்திப்புக்குப் பிறகு - பெட்ரோல் வந்தாலும், 2500 ரூபாய்க்குத்தான் (கிட்டத்தட்ட 05 லிட்டர்) தருவார்கள். அதை வைத்து இரண்டு நாட்கள் ஓட்டலாம், அதன்பிறகு திரும்பவும் இங்கு வரவேண்டும். 10ஆம் தேதி ஹஜ் பெருநாள் வருகிறது. வீட்டில் யாருக்கும் புது உடுப்பு கூட எடுக்கவில்லை" என, தனது நிலை குறித்து அவர் விவரித்தார்.

எரிபொருளுக்கான இந்த வரிசையில் - பல நாட்களாக காத்திருப்போர் இங்கேயே சாப்பிடுகிறார்கள், தேநீர் அருந்துகின்றார்கள், தூங்குகின்றார்கள், சிலர் பொழுதைப் போக்குவதற்காக சீட்டுக்கட்டு விளையாடுவதையும் காண முடிந்தது.

மரணத்தில் முடியும் காத்திருப்பு

நாடெங்கும் நிலவரம் இப்படித்தான் உள்ளது. அதிகமான எரிபொருள் நிலையங்களில் குழப்பமும் கை கலப்பும் ஏற்படுகின்றன. சில இடங்களில் ராணுவம் மற்றும் போலீசாரால் எரிபொருளுக்காக காத்திருப்போர் தாக்கப்படுகின்றனர். அதில் சிலர் அங்கேயே மரணித்துள்ளனர்.

கடந்த மாதம் 07ஆம் தேதி வரை, நாட்டில் எரிபொருள் வரிசைகளில் காத்திருந்த போது - மரணித்தோரின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. பயகல பகுதியில் எரிபொருளுக்காக காத்திருந்த போது, திடீர் சுகயீனமுற்ற மொரட்டுவையைச் சேர்ந்த 60 வயதான நபரொருவர் - வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணித்தார்.

உச்சம்தொடும் கறுப்புச் சந்தை

இன்னொருபுறம் தற்போதையை எரிபொருள் தட்டுப்பாட்டை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவோரும் உள்ளனர். வரிசையில் காத்திருந்து எரிபொருளைப் பெற்றுக் கொள்வோரில் சிலர், அவற்றை பல மடங்கு அதிக விலையில் விற்பதை பிபிசி தமிழ் உறுதி செய்து கொண்டது. 470 ரூபா பெறுமதியுடைய பெட்ரோல் - கறுப்புச் சந்தையில் 2500 ரூபா வரையில் விற்பனையாகிறது.

பெட்ரோலை இவ்வாறு அதிக விலைக்கு கறுப்புச் சந்தையில் பெற்றுக் கொண்ட ஒருவருடன் பிபிசி தமிழ் பேசிய போது; "பல நாட்கள் வரிசையில் காத்திருந்து, அங்குள்ள கடைகளில் உணவு மற்றும் தேநீருக்காக செலவு செய்து, இறுதியில் இரண்டு, மூன்று லிட்டர் பெட்ரோலை - நிரப்பும் நிலையங்களில் பெறுவதை விடவும், கறுப்புச் சந்தையில் இவ்வாறு அதிக விலையில் பெட்ரோலைப் பெற்றுக் கொள்வது - எல்லா வகையிலும் லாபமானது" என்றார்.

எரிபொருளுக்கான கறுப்புச் சந்தை உருவானதை அடுத்தே, எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கான வரிசை - தொடர்ந்தும் நீண்டு கொண்டு செல்வதாகவும் பொதுமக்களிடையே ஒரு குற்றச்சாட்டு உள்ளது.

இதனைத் தவிர்க்கும் வகையிலும், எரிபொருளை மக்களுக்கு நேர்த்தியான முறையில் வழங்கும் வகையிலும் - இதுவரையில் வெற்றிகரமானதொரு பொறிமுறையை அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் வரிசையைக் குறைக்கும் பொருட்டு, அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ராணுவத்தினர், 'டோக்கன்' முறையொன்றை அறிமுகம் செய்தனர். ஒவ்வொரு எரிபொருள் நிலையத்துக்கும் கிடைக்கின்ற எரிபொருள்களின் அளவுக்கேற்ற தொகையினருக்கு மட்டும், இதனடிப்படையில் 'டோக்கன்'கள் வழங்கப்பட்டன.

ஆனாலும், எரிபொருளைப் பெற்றுக் கொள்வோருக்கு இது இரட்டிப்பு அவஸ்தையினை ஏற்படுத்தியது. 'டோன்கன்'களைப் பெறுவதற்காக ஒரு தடவையும், பின்னர் எரிபொருளுக்காக மற்றொரு தடவையும் வரிசையில் நிற்கும் நிலை இதனால் ஏற்பட்டது.

இதனையடுத்து 'டோக்கன்' முறை - இனி இல்லை என, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்திருந்தார். ஆனால் அதன் பிறகும் 'டோக்கன்' முறை - சில இடங்களில் நடைமுறையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அத்தியவசியத் துறையினருக்கு முன்னுரிமையின் அடிப்படையில் எரிபொருளை வழங்குமாறு அரசு அறிவித்துள்ளது. அதற்கிணங்க சுகாதாரம், துறைமுகம் உள்ளிட்ட சில பிரிவுகள் மட்டும் அத்தியவசியத் துறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. கல்வி - அத்தியவசிய துறைக்குள் உள்வாங்கப்படவில்லை. இதனால் பாடசாலைகளை நடத்துவதில் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு இலங்கையில் எரிபொருளுக்கான நெருக்கடி அதிகரித்திருப்பதன் காரணமாக, ஒவ்வொரு தரப்பினரும் ஏதோவொரு அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இக்பால் போன்று, முச்சக்கர வண்டியோட்டிப் பிழைக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை மிகவும் நெருக்கடிக்குள் சிக்கியிருக்கின்றது. எரிபொருள் இல்லை என்பதுதான், இங்கு இப்போது - எரியும் பிரச்சினையாக உள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: