இலங்கை: மருந்தின் அளவு மாறியதால் இறந்த 14 வயது சிறுமி - பெற்றோர், மருத்துவமனை கூறுவது என்ன?

    • எழுதியவர், யூ.எல். மப்றூக்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த இலங்கை காங்கேயனோடையைச் சேர்ந்த ஜப்ரா எனும் 14 வயது மாணவி, மருந்து வழங்குவதில் ஏற்பட்ட தவறு காரணமாக பாதிக்கப்பட்டு, கடந்த திங்கட்கிழமை (டிசம்பர் 9ஆம் தேதி) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இவர் உயிரிழந்தார். இது பிராந்தியம் முழுக்க அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

இலங்கையின் கிழக்கு மாகாணம் - மட்டக்களப்பில் அமைந்துள்ளது காங்கேயனோடை எனும் கிராமம்.

புற்று நோயால் கடந்த வருடம் பாதிக்கப்பட்ட ஜப்ரா எனும் மாணவி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை புற்றுநோய் பிரிவில் கடந்த 10 மாதங்களாக ஒவ்வொரு வாரமும் 'கிளினிக்' சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

கடந்த ஜுலை மாதம் ஜப்ராவுக்கு ஏற்பட்ட புற்று நோயின் தீவிரம் குறைந்து, அவர் கணிசமானளவு தேறிவிட்டதாக அவரின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

மருந்து வழங்குவதில் தவறு

இந்த நிலையில், டிசம்பர் மூன்றாம் தேதி வழக்கம்போல் வாராந்த சிகிச்சைக்காக வீட்டிலிருந்து தனது தாயுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்றிருந்த ஜப்ராவுக்கு, அங்கு வழங்க வேண்டிய மருந்தை விடவும் அதிகமான அளவு மருந்து உட்செலுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து ஏற்பட்ட பக்கவிளைவினைக் குணப்படுத்த முடியாதால், 6 நாட்கள் கடந்த நிலையில் ஜப்ரா உயிரிழந்தார்.

காங்கேயனோடை அல் அக்ஸா மகா வித்தியாலயத்தில் இவ்வருடம் 10ஆம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதிய ஜப்ரா, 11ஆம் வகுப்புக்கு தேர்ச்சி ஆனார். படிப்பு தவிர ஏனைய புறவிருத்திச் செயற்பாடுகளிலும் ஜப்ரா திறமை மிக்கவர் என்கின்றனர் அவரை அறிந்தவர்கள்.

தனது மகளின் திடீர் மரணத்தால் அதிர்ச்சியடைந்த நிலையிலிருந்த ஜப்ராவின் தாய் ஜெஸ்மியாவை, அவரின் வீட்டில் சந்தித்து பிபிசி தமிழுக்காக பேசினோம்.

கடந்த சில நாட்களாகவே சாப்பிடாமல் தூக்கமின்றி அழுது கொண்டிருக்கும், அவர் மிகவும் சிரமத்துக்கிடையில், என்ன நடந்தது என்பதைக் நம்மிடம் கூறினார்.

நடந்ததை விவரிக்கும் தாய்

"வழக்கமாக கிளினிக் செல்வது போல், கடந்த 3ஆம் தேதி ஜப்ராவை அழைத்துக் கொண்டு வைத்தியசாலை சென்றேன். ஜப்ராவுக்கு ஒவ்வொரு மாதமும் VCR எனும் மருந்தை 2 மில்லிலிட்டர் எனும் அளவில் வைத்தியசாலையில் உட்செலுத்துவார்கள். அன்றைய தினமும் VCR எனும் மருந்தை ஜப்ராவுக்கு உட்செலுத்த வேண்டியிருந்தது. ஜப்ராவின் உடலில் சலைன் பாய்ச்சுவார்கள்.

அப்போது, அந்த சலைனுடன் VCR மருந்தையும் கலந்து விடுவார்கள். ஆனால், அன்று வழக்கத்துக்கு மாறாக அதிகளவான மருந்தை தாதியொருவர் கலந்து விட முயற்சித்தார். அதனைக் கவனித்த எனது மகள் வழக்கத்தை விடவும் அது அதிகளவான மருந்து என்பதை, தாதியிடம் சுட்டிக்காட்டினார்".

"அதனையடுத்து, அந்தத் தாதி - சிரேஸ்ட தாதியிடம் சென்று விடயத்தைக் கூறினார். அப்போது ஜப்ராவுக்கான மருந்து அட்டையில் வைத்தியர் எழுதிய மருந்தின் அளவை அந்தத் தாதி சரி பார்த்தார். அதில் 20 மில்லிலிட்டர் என்றுதான் எழுதப்பட்டிருந்தது. எனவே, எழுதப்பட்டளவு மருந்தைத்தான் வழங்குவதாகக் கூறி அந்த மருந்தை ஏற்றினார்கள்".

"ஏற்கனவே VCR எனும் மருந்து - மாதம் ஒரு தடவை எனும் கணக்கில், ஐந்து தடவை எனது மகள் ஜப்ராவுக்கு ஏற்றப்பட்டிருந்தது. அப்போது 2 மில்லி லிட்டர் அளவான மருந்தே அவருக்கு வழங்கப்பட்டது. அப்போதெல்லாம் அந்த மருந்தின் அளவைக் குறிப்பிட்டவர்கள் வேறு வைத்தியர்கள். ஆனால், 0ஆம் தேதி சம்பவ தினமன்று பிரசாந்த் எனும் வைத்தியர்தான் 20 மில்லி லிட்டர் அளவு மருந்தை வழங்குமாறு ஜப்ராவின் மருந்து அட்டையில் குறிப்பிட்டிருந்தார்".

"அந்த மருந்தை ஜப்ராவின் உடலில் ஏற்றியவுடன் அவர் வாந்தியெடுக்க ஆரம்பித்தார். 03ஆம் தேதி பகல் 1.00 மணியளவில் ஜப்ராவுக்கு மருந்து ஏற்றப்பட்டது. அதையடுத்து நாங்கள் வீட்டுக்கு வந்தோம். மகள் தொடர்ந்து வாந்தியெடுத்துக் கொண்டிருந்தார், வலியினால் அவதிப்பட்டார். அதனால் வைத்தியசாலையிலுள்ள தாதியர்களை எனது மகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தனக்கு ஏற்பட்டுள்ள நிலைபற்றிக் கூறினார். எனது மகளுக்கு அதிகளவு மருந்து ஏற்றப்பட்டு விட்டதை நாம் விளங்கிக் கொண்டோம்".

"பிற்பகல் 3.30 மணியளில் ஜப்ராவை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அங்கிருந்து தொலைபேசியில் அழைத்துச் சொன்னார்கள். அதனையடுத்து ஜப்ராவை நாங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவில் அனுமதித்தோம்".

உண்மையைச் சொன்ன மருத்துவர்

"இந்த தருணத்தில்தான் அங்குள்ள மயூரி எனும் பெண் மருத்துவர், என்னை அழைத்து உண்மையைக் கூறினார். ஜப்ராவுக்கு வழங்க வேண்டிய அளவை விடவும் அதிகளவு மருந்து ஏற்றப்பட்டு விட்டது என்றும், 5 நாட்கள் அப்படியே இருந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்றும் சொன்னார்.

எனவே, எனது மகளின் ரத்தத்தை சுத்திகரிக்க வேண்டும் என்றும், அதற்காக அவரை கண்டி வைத்தியசாலைக்கு அனுப்ப வேண்டியிருப்பதாகவும் கூறினார். கடந்த 10 மாதங்களாக எனது மகளுக்கு டாக்டர் மயூரிதான் சிகிச்சை வழங்கி வந்தார்".

"அதனையடுத்து, கண்டி வைத்தியசாலைக்கு அன்றைய தினமே எனது மகளை கொண்டு சென்றார்கள். அங்கு அவரின் ரத்தம் சுத்திகரிக்கப்பட்டது. பின்னர் 7ஆம் தேதி கண்டியிலிருந்து மீண்டும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எனது மகளைக் கொண்டு வந்தார்கள். அங்கு எனது மகளுக்கு வலிப்பு ஏற்பட்டது. அவருக்கு சிகிச்சை வழங்கினார்கள். ஆனாலும் 9ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 5.00 மணியளவில் எனது மகள் மரணித்து விட்டார்" என்றார் ஜெஸ்மியா.

"மட்டக்களப்பு வைத்தியசாலைத் தரப்பினர் உங்களிடம் எதுவும் கூறவில்லையா"? என்று ஜப்ராவின் தாயிடம் கேட்டேன்.

"எனது மகள் மரணிப்பதற்கு முன்னர், என்னை அழைத்த பெரிய டாக்டர் சசிகலா என்னிடம் மன்னிப்புக் கோரினார். 'எங்கள் தரப்பில் தவறொன்று நடந்து விட்டது, வைத்தியர்கள் எல்லோரையும் நீங்கள் மன்னிக்க வேண்டும்' என்று அவர் சொன்னார். அதற்கு, 'நீங்கள் என்ன சொன்னாலும், எனது மகள் எனக்கு உயிருடன் வேண்டும்' என்று மட்டும் அவரிடம் நான் கூறினேன்" என்றார் ஜப்ராவின் தாயார்.

தவறு நிகழ்ந்து விட்டது: பணிப்பாளர்

ஜப்ராவின் மரணத்தையடுத்து 10ஆம் தேதி செவ்வாய்கிழமையன்று ஊடகவியலாளர்களைச் சந்தித்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கே. கலாரஞ்சனி, தமது வைத்தியசாலையின் தவறு காரணமாக ஜப்ராவின் மரணம் நிகழ்ந்தமையை ஏற்றுக் கொண்டார்.

"எமது வைத்தியசாலையில் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வந்த, காங்கேயனோடையைச் சேர்ந்த பாத்திமா ஜப்ரா என்கின்ற 14 வயது சிறுமிக்கு, கடந்த 3ஆம் தேதி புற்றுநோய் மருந்து ஏற்றப்பட்ட போது நிகழ்ந்த தவறு காரணமாக பக்க விளைவுகள் ஏற்பட்டு, அதற்குரிய சிகிச்சை பலனின்றி 9ஆம் தேதி மாலை உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு அறிவித்துள்ளதுடன், நிகழ்ந்த தவறு தொடர்பில் ஆராய்வதற்கு ஆரம்ப கட்ட விசாரணைகள் நடைபெற்று வருகிறது" என்று, ஊடகவியலாளர்களிடம் பணிப்பாளர் கலாரஞ்சனி தெரிவித்தார்.

தண்டனை வழங்கப்பட வேண்டும்

இதேவேளை, தனது மகளின் மரணத்துக்கு நஷ்டஈடாக தனக்கு எதுவும் தேவையில்லை என்று பிபிசி தமிழிடம் அழுதவாறு கூறிய ஜப்ராவின் தாயார்; "எனது மகளின் சிகிச்சை தொடர்பில் தவறிழைத்த வைத்தியர் தண்டிக்கப்பட வேண்டும்" என்றார்.

ஜப்ராவின் பெற்றோருக்கு நான்கு பிள்ளைகள். அவர்களில் மூவர் பெண்கள். ஜப்ரா இரண்டாவது பிள்ளை. ஹோட்டலொன்றில் ஜப்ராவின் தந்தை வெயிட்டராக வேலை செய்து - குடும்பத்தைப் பராமரித்து வந்த நிலையில்தான், இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது.

இதேவேளை, புதன்கிழமை பிற்பகல் வைத்தியசாலையிலிருந்து காங்கேயனோடைக்குக் கொண்டு வரப்பட்ட ஜப்ராவின் ஜனாஸா (சடலம்), அங்கு பெரும் சனத்திரளான மக்களின் பங்குபற்றுதலுடன் அடக்கம் செய்யப்பட்டது.

ஜப்ராவின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில், ஜப்ராவின் குடும்பமும், அந்தப பிரதேச மக்களும் உறுதியாக உள்ளார்கள்.

இப்படியொரு தவறு காரணமாக, இன்னுமொரு மரணம் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதுதான் தனது கோரிக்கை என்கிறார் ஜப்ராவின் தாயார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: