ஆசிய கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அடுத்த இலக்கு உலகக் கோப்பை

பட மூலாதாரம், ANI
இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத தருணங்களில் ஒன்று 2011ஆம் ஆண்டின் ஆண்களுக்கான ஒருநாள் போட்டி உலகக்கோப்பையின் இறுதிப் போட்டி. அதன் இறுதிப் பந்தில் நடந்த அதிரடியின் உணர்வுகளை, நேற்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணியும் உண்டாக்கியது.
பேட்ஸ்மேனின் கோட்டை தாண்டி, லாங் ஆனில் இந்தியாவின் உலகக் கோப்பை வெற்றியை உறுதி செய்த சிக்சரை அடித்துவிட்டு தோனி நின்றிருந்தார். அதேபோல், 11 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று வங்கதேசத்தின் சில்ஹெட்டில் நடந்த ஆசிய கோப்பையின் இறுதிப் போட்டியில் ஸ்மிருதி மந்தனாவும் ரசிகர்களின் உள்ளத்தில் உணர்ச்சிப் பெருக்கை ஏற்படுத்தினார்.
இலங்கையுடனான இறுதி ஆட்டத்தில், அதேபோல் கோட்டைத் தாண்டி வந்து லாங் ஆனில் மந்தனா அடித்த சிக்ஸ் ஆசிய கோப்பையை இந்திய மகளிர் அணிக்கு உறுதி செய்தது. தொடக்கத்தில் ஆடிய இலங்கை அணியை, கடுமையான பவுலிங் மற்றும் திறமையான ஃபீல்டிங் மூலம் இந்திய அணியின் வீராங்கனைகள் 20 ஓவர்களில் 65 ரன்கள் மட்டுமே எடுக்கும் அளவுக்கு தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
இரண்டாவதாக ஆடியபோதும் பத்து ஓவர்கள் மீதம் இருக்கும்போதே இந்திய அணி வெற்றியை நெருங்கிவிட்டிருந்தது. அந்த நேரத்தில் இந்தியாவுக்குத் தேவைப்பட்டது ஒரு ரன் மட்டுமே. அதை சாவகாசமாக எடுத்திருக்க முடியும், அவசரம் ஒன்றுமில்லை. ஆனால், மந்தனா அந்த பந்தில் சிக்சர் அடித்து தங்களது ஆசிய கோப்பை வெற்றியை ஒரு பிரகடனமாக்க முடிவு செய்தார்.
இந்திய மகளிர் அணி, 2022 ஆசிய கோப்பையில் இலங்கையை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஏழாவது முறையாக ஆசிய கோப்பையைக் கைப்பற்றியது.


ஆட்டத்தின் வர்ணனையாளர் கூட, "இந்திய அணியிடம் எச்சரிக்கையாக இருங்கள். அடுத்த உலகக் கோப்பையில் மிகப்பெரிய போட்டியாளராக இருக்கப் போகிறது," என்று சொல்லும் அளவுக்கு, இந்தப் போட்டியில் இந்திய அணியின் வெற்றியடைய வேண்டுமென்ற பிடிவாதமும் கட்டுப்பாடும் இருந்தது.
இந்திய அணியில் ஆடிய ரேணுகா சிங் 5 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா 25 பந்துகளில் 51 ரன்களை எடுத்தார்.
இந்த ஆண்டின் ஆசிய கோப்பை போட்டிகளில், பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு லீக் ஆட்டத்தைத் தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி, இந்திய அணியின் பெருமையை உலக கிரிக்கெட்டில் உயர்த்தியுள்ளது.
"இந்த வெற்றி எங்கள் வலிமையைக் காட்டுகிறது"
ஆசிய கோப்பைக்கு முன்பாக இந்திய அணி இங்கிலாந்தில் ஒரு தொடரில் விளையாடியது. அந்தக் குளிர் காலத்தில் அங்கு நடந்த மூன்று ஒருநாள் போட்டிகளில் இந்திய மகளிர் அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. அதற்கு முன்பாக, இலங்கை அணியை அவர்கள் மண்ணிலேயே வீழ்த்தியது.

பட மூலாதாரம், Getty Images
இங்கிலாந்துக்குப் பிறகு வங்கதேசம் சென்ற இந்திய அணி, முன்பிருந்த அசாதாரண குளிர்காலத்தையும் சரி வங்கதேசத்தின் கோடைக்காலத்தையும் சரி சமாளித்தனர். இரண்டிலும் தங்கள் செயல்திறனை இழக்காமல் வெற்றியடைந்தனர்.
இந்த நாடுகளில் வானிலை மட்டும் வேறுபடவில்லை. ஆடுகளத்தின் நிலைமைகளுக்கும் மைதான நிலைமைகளுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. ஆனால் இரண்டையும் இந்திய அணி சமாளித்தது. இதில் ஒரு சாம்பியன் அணிக்கான அறிகுறி தெரியும்.
அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் இறுதிப் போட்டிக்கு முன்பாக, "எங்களுக்கு ஒரேயொரு பயிற்சி ஆட்டம் மட்டுமே கிடைத்தது. ஆனால், இந்த வெற்றி நாங்கள் எவ்வளவு வலிமையாக இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது. எங்கள் அணியின் பண்புகளும் நாளுக்கு நாள் வலுவடைகிறது. மேலும் எங்கள் அணியின் கூட்டங்களின்போதும் இதைப் பாராட்டுகிறோம்," என்று கூறுகிறார்.
இந்திய அணியின் இலக்கு கோப்பை மட்டுமே இல்லை
சாம்பியன் அணி, ஒன்று அல்லது இரண்டு வீராங்கனைகளைச் சார்ந்து மட்டுமே இல்லை. மாறாக அது பல்வேறு சிறந்த வீராங்கனைகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆட்டத்திலும் புதுப்புது வீராங்கனைகள் ஆட்டநாயகிகளாக வருவார்கள். ஆசிய கோப்பையிலும் அதையே இந்திய மகளிர் அணி செய்தது.

பட மூலாதாரம், Getty Images
அவர்களுடைய நோக்கம் கோப்பையைக் கைப்பற்றுவதாக மட்டுமே இருக்கவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் ஒரு புதிய வீராங்கனை சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று அணி விரும்பியது.
"ஒவ்வொரு வீராங்கனையும் முன்வந்து அணியின் வெற்றியில் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும். அணி, ஒன்றோ இரண்டோ வீராங்கனைகளை மட்டுமே சார்ந்து இருக்கக்கூடாது, புதியவர்களை வெற்றியடைய வைக்க வேண்டும் என முடிவு செய்தோம்," என்று தங்கள் இலக்கு எதுவாக இருந்தது என்பதை ஹர்மன்ப்ரீத் விளக்கினார். அணியினரின் இந்த உத்தி வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியிலும் 5 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ரேணுகா சிங் ஆட்டநாயகி பட்டத்தைப் பெற்றார்.
ஆசிய கோப்பை வெற்றிக்குப் பிறகு, இந்திய மகளிர் அணியின் பார்வை உலகக் கோப்பையின் மீது உள்ளது.
அடுத்த உலகக் கோப்பை 2023ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ளது. இந்திய அதற்குத் தயாராகத் தொடங்கிவிட்டது. ஹர்மன்ப்ரீத், "தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமென விரும்புகிறோம். அதற்குத் தயாராகும் வகையில் ஆசிய கோப்பையில் நாங்கள் மேற்கொண்ட சில சோதனைகள் வெற்றி பெற்றுள்ளன," என்று கூறியுள்ளார்.
உலக கிரிக்கெட் அரங்கில் இந்திய வீராங்கனைகளின் அதிரடி ஆட்டத்தையும் தன்னம்பிக்கையையும் மொத்த உலகமும் பார்த்துக் கொண்டிருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













