டோக்யோ ஒலிம்பிக்: கமல்ப்ரீத் கவுரின் கதை - வயல்வெளியில் பெற்றோர்; ஒலிம்பிக்கில் விளையாடிய மகள்

    • எழுதியவர், வந்தனா
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

டோக்யோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான வட்டெறிதல் போட்டியில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளார் இந்தியாவின் கமல்ப்ரீத் கவுர்.

இவரது முதல் முயற்சியின்போது 61.62 மீட்டர் தூரத்துக்கு வட்டை எறிந்தார். ஆனால், இரண்டாம் முயற்சி ஃபவுல் ஆனது.

பதக்கத்திற்கு மிக நெருங்கி வந்தும் மில்கா சிங் போலவே கமல்ப்ரீத்தால் ஒரு பதக்கம் வெல்லும் கனவை எட்ட முடியவில்லை. இன்றைய இறுதிப் போட்டியில் அவர் 6ஆம் இடம் பிடித்தார்.

வட்டெறிதல் போட்டியில் சுதந்திர இந்தியாவில் இது வரை எந்தப் பெண்ணும் செய்திராத, தடகளத்தில் ஒலிம்பிக் இறுதிக்கு செல்லும் சாதனையை கமல்ப்ரீத் கவுர் செய்திருந்தார்.

தன்னுடைய மிகச் சிறந்த செயல்பாட்டால் இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருந்தார் கமல்ப்ரீத்.

தற்போது ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டியில் இடம் பிடித்து அனைவரின் பாராட்டையும் பெற்று வரும் பஞ்சாபின் கமல்ப்ரீத் கவுரின் பெயரோ ஆட்டமோ இது வரை அதிகம் பிரபலமாகியிருக்கவில்லை.

ஒலிம்பிக் விளையாட்டிற்குச் செல்வதற்கு முன்னால், பிபிசிக்கு அவர் பேட்டியளித்த போது, அவருடைய ஆட்டம் பற்றி நான் அவரிடம் கேட்டேன்.

"தேசிய அளவில் நான் பதக்கம் வெல்லத் தொடங்கிய போது எனக்குப் பலரும் வந்து வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் வாழ்த்தெல்லாம் கூறிய பிறகு அவர்கள் கேட்ட கேள்வி, வட்டெறிதல் என்றால் என்ன? அதை எப்படி விளையாடுகிறீர்கள்? என்பதுதான்," என்று அவர் தெரிவித்தார்.

அதிகம் பிரபலம் அடையாத கமல்ப்ரீத், கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக இடைவிடாது உழைத்து ஒலிம்பிக் வரை வந்திருக்கிறார்.

பஞ்சாப் மாநிலம் முக்த்சர் சாஹப் மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த கமல்ப்ரீத், இந்த விளையாட்டை ஆடத் தொடங்கிய காலத்தில் இது குறித்து மக்கள் அதிகம் அறிந்திருக்கவில்லை.

மெதுவாகத் தகவல் திரட்டி, பாதல் கிராமத்தில் ஒரு விளையாட்டு மையம் இருப்பதை அறிந்து அங்கு விளையாடத் தொடங்கினார். ஆட்டத்தில் நல்ல திறமையைப் பெற்ற கமல்பிரீத், டிஸ்கஸ் த்ரோ எனப்படும் வட்டு எறிதலில் தேர்ச்சி பெற்று வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கினார்.

தொடக்க காலத்தில் தனது கிராமத்திலேயே இந்த விளையாட்டிற்குச் சரியான வழிகாட்டுதல் இருந்திருந்தால், டோக்யோவிற்கு முன்னர், ரியோ ஒலிம்பிக்கிலேயே விளையாடியிருக்கலாம் என்று கூறுகிறார் கமல்ப்ரீத்.

ஆனால் இதற்கும் முன்னர், மற்றொரு சவாலையும் அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இன்றும் கூட பொதுவாகப் பெண்களை விளையாட்டுத் துறையில் அனுமதிப்பதற்குத் தயக்கம் நிலவுகிறது.

அக்கம்பக்கத்தவர்களைப் போலவே, இவரது பெற்றோரும் பெண், கொஞ்சம் படித்துத் திருமணம் செய்து கொண்டு விட வேண்டும் என்றே விரும்பினார்கள். ஆனால் கமல்ப்ரீத்தின் பிடிவாதம், பெற்றோரின் மனதை மாற்றியது.

குடும்பத்தினர் ஆதரவுடன் துணிவு பெற்ற கமல்ப்ரீத், கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து, 2019-ல் வட்டெறிதலில் பல காலமாக முறியடிக்கப்படாமல் இருந்த தேசிய சாதனையை முறியடித்தார்.

விவசாயத்தில் ஈடுபட்டிருந்த அவரது பெற்றோரால் இவருடன் செல்லவோ, இவருக்கான விமான டிக்கெட் எடுக்கவோ இயலவில்லை என்றாலும், தனது மன உறுதியால் அவர் முன்னேறினார்.

இந்த ஆண்டு அவர், ஃபெடரேஷன் கோப்பையில் 65.06 மீட்டர் தூரம் வட்டெறிந்தார். சில நாள் கழித்து, இந்த ஆண்டு, 66.59மீட்டர் தூரம் எறிந்தார். 65 மீட்டருக்கும் அதிகமாக எறிந்த முதல் இந்திய வீராங்கனை இவராவார்.

தொடக்க காலத்தில் பயிற்சியில் மட்டுமே ஈடுபட்டிருந்த தனக்கு, உணவு விதிமுறைகள் போன்ற விளையாட்டின் பிற அம்சங்கள் குறித்து எதுவும் தெரியாமல் இருந்ததாக இவர் கூறுகிறார்.

"கிராமத்தில், சப்பாத்தியும், காய்கறியும் தான் சரியான உணவு என்று தான் எண்ணிக்கொண்டிருந்தோம். ஆனால், பின்னர்தான் ஊட்டச்சத்து மிக்க உணவு என்றால் என்ன என்பது குறித்து அறிந்து கொண்டேன். அதன் பிறகு உணவில் கவனம் செலுத்தத் தொடங்கினேன்." என்று பி பி சி-க்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிடுகிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தன் ஆட்டத்தைச் சீராக்கிக் கொண்டே வந்த கமல்ப்ரீத்தின் முயற்சி ஒலிம்பிக்கில் ஒளி விடுகிறது.

சகலகலா வல்லியாகத் திகழும் கமல்ப்ரீத், கிரிக்கெட்டும் விளையாடுகிறார். கிரிக்கெட் ஆட்டத்தில் சேரவும் விரும்புகிறார். வாய்ப்பு கிடைக்கும் போது கிரிக்கெட்டிலும் தன் கை வரிசையைக் காட்டுவது இவரது கனவு.

ஆனால், தற்சமயம் ஒரே குறிக்கோள் வட்டெறிதல் மற்றும் ஒலிம்பிக்தான்.

கமல்ப்ரீத் ஒலிம்பிக்கின் இறுதிப்போட்டியை நோக்கிப் பயணப்பட்ட காலத்தில், அவரது பெற்றோர், வயலில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். காரணம், விவசாயத்திற்கு விடுமுறை நாள் என்பதே கிடையாது.

மகளின் வருகைக்காக அந்தக் குடும்பமும் காத்திருக்கிறது. பதக்கம் வெல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், ஒலிம்பிக் வரை சென்றதே அந்தக் குடும்பத்துக்குப் பதக்கம் வென்றது போலதான்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :