You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'நீலோத்தி' முதல் 'அடியே அழகே' வரை - ஜஸ்டின் பிரபாகரனுக்கு தனது இசையில் பிடித்த 10 பாடல்கள்
- எழுதியவர், மீனாட்சி சுந்தரம்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
தமிழ் சினிமாவில் சத்தம் இல்லாமல் இசைத்துறையில் ஜொலித்துக்கொண்டிருப்பவர் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன். விஜய் சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினி படத்தில் தொடங்கிய அவரின் இசைப்பயணம், சிறை பட நீலோத்தி பாடல் ஹிட் வரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளரான ஜஸ்டின் பிரபாகரன், தமிழில் மட்டுமல்ல, தெலுங்கில் விஜய்தேவரகொண்டா நடித்த டியர் காம்ரேட், பிரபாஸ் நடித்த ராதே ஷ்யாம், மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வந்த ஹிருதயபூர்வம், நிவன்பாலி நடிப்பில் வந்த சர்வம்மாயா உள்ளிட்ட படங்களுக்கும் இசையமைத்தவர்.
ஒருநாள் கூத்து, ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், மான்ஸ்டர், நாடோடிகள் 2, கட்டாகுஸ்தி, பர்ஹானா, ஏஸ், இறுகப்பற்று, ஹேப்பிராஜ், சிறை உட்பட 35க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
மதுரையில் பிறந்து, திரைப்படக்கல்லூரியில் படித்து, ஹாரிஸ் ஜெயராஜிடம் பணியாற்றிய ஜஸ்டின் பிரபாகரனுக்கு இன்று பிறந்தநாள்
'காயங்களை மீறி வெற்றி பெற்றார்' - இயக்குனர் நெல்சன் வெங்கடேசன்
ஜஸ்டின் பிரபாகரனுடன் அதிக படங்களில் பணியாற்றியவர்களில் ஒருவரான இயக்குனர் நெல்சன் வெங்கடசேனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.
''ஒருநாள் கூத்து தயாரிப்பாளர் செல்வகுமார்தான் ஜஸ்டினை என்னிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அந்த படத்தில் தொடங்கிய எங்கள் கூட்டணி பல படங்களில் தொடர்ந்தது. அவர் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கும் சிச்சுவேசனுக்கும் பொருத்தமாக இருக்கும். எங்கள் கூட்டணியில் வந்த ஒருநாள் கூத்து, மான்ஸ்டர், பர்ஹானா படங்களிலும் அந்த மாஜிக் இருந்தது.
அவர் இசையமைத்த பிற மொழி படங்களிலும் முத்திரை பதித்தார். இத்தனை மொழிகளில், கடந்த 10 ஆண்டுகளில் வெற்றிகரமாக இருந்து வருவது சாதாரண விஷயமல்ல. என் முதல் பட விளம்பர நிகழ்ச்சிகளுக்கு அவரை அழைத்து சென்றபோது, அவரை பார்த்து இவர் இசையமைப்பாளரா என கேட்டனர். தோற்றம் உள்ளிட்ட பல வகைகளில் பலர் காயப்படுத்தினர். அதை மீறி சிறை பட வெற்றி வரை வந்து இருக்கிறார். அவர் இசையமைத்த பாடல்களில் அடியே அழகே (ஒருநாள் கூத்து). ஒரு காதல் கனா (பர்ஹானா) பாடல்கள் பிடிக்கும். தவிர, அவர் இசையமைத்த காலகூத்து, ராதே ஷ்யாம் பட பாடல்களும் பிடிக்கும்'' என்கிறார் நெல்சன் வெங்கடேசன்.
'படமெடுத்துவிட்டு உருவான பாடல்'
சிறை பட இயக்குனர் சுரேஷ் மாரி பிபிசி தமிழிடம் பேசுகையில், ''என் முதல் படம் சிறை. அந்த படத்தின் வெற்றிக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையும், பாடல்களும் ஒரு காரணம். சிறை உணர்ச்சிபூர்வமாக கதை, அதை மக்களிடம் போய் சேர்த்ததில் இசைக்கும் பங்கு உண்டு. எனக்கு சவுண்ட் பற்றி அதிகம் தெரியாது. அதை புரிந்துகொண்டு சிறப்பான இசை கொடுத்தார். உண்மையை சொன்னால் சிறை படத்தில் ஹிட்டான நீலோத்தி பாடலை, அந்த காட்சிகளுக்காக உருவாக்கினோம். மான்டேஜ் பார்த்துவிட்டு அந்த அழகான பாடலை கொடுத்தார். படம் வெளியான பின் அந்த பாடல் கடந்த ஆண்டின் சிறந்த பாடல்களில் ஒன்றானது. அவர் படங்களில் பண்ணையாரும் பத்மினியும், ஒருநாள் கூத்து பாடல்களும் பிடிக்கும்'' என்றார்
'ஆடினே இருப்பேன் ஹிட்டான கதை'
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ஹேப்பிராஜ் பட இயக்குனர் மரியா ராஜா இளஞ்செழியன், ''ஹேப்பிராஜ் படத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் வந்த ஆடினே இருப்பேன் ஹிட்டானது. அவர் மெலோடி கிங். ஆனாலும் எங்களுக்காக, சிச்சுவேஷனுக்காக இந்த குத்து பாடலை கொடுத்தார். அந்த வைப் மக்களிடம் போய் சேர்ந்தது.
நாங்கள் பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தபோது பாடலை கொடுத்தார். காரில் செல்லும்போது ஜாலியாக ரசித்துக்கொண்டே சென்றோம். ஹேப்பிராஜ் ஹீரோ ஜி.வி.பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளர். அவரே இந்த படத்துக்கு ஜஸ்டினை ஒப்பந்தம் செய்ய சொன்னார். அந்த அளவுக்கு அவர் திறமைசாலி. ஹேப்பிராஜ் படத்தின் அப்பா, மகன் பாச கிளைமாக்ஸ் பேசப்பட்டது, பலர் அழுதனர். அதற்கு ஜஸ்டின் பிரபாகரன் பின்னணி இசையும் முக்கிய காரணம்'' என்கிறார்
'சிறந்த இசையமைப்பாளர் மட்டுமல்ல' - பாடகர் சாரதி
சிறை படத்தில் ஹிட்டான நீலோத்தி பாடலை எழுதிய பாடலாசிரியர் சாரதி, ''சிறை, ஹேப்பிராஜ் என இரண்டு படங்களில் ஜஸ்டின் பிரபாகரனுடன் வொர்க் பண்ணியிருக்கிறேன். முத்தொள்ளாயிரம் என்ற சங்க இலக்கிய தாக்கத்தில் நீலோத்தி என்ற வரி வந்தது. அதை ரசித்து பாடலில் சேர்த்தார் ஜஸ்டின் பிரபாகரன். ஜஸ்டின் பிரபாகரன் சிறந்த இசையமைப்பாளர் மட்டுமல்ல, சிறந்த மனிதநேயம் மிக்கவர். அவர் இசையமைத்த பாடல்களில் 'உனக்காக பொறந்தேனே' பாடல் ரொம்ப பிடிக்கும்'' என்கிறார்
'எனக்கு நிறைய ஹிட் பாடல் கொடுத்தார்'
இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் குறித்து பாடகி சின்மயி கூறுகையில், ''பல ஆண்டுகளாக ஜஸ்டின் பிரபாகரன் படங்களில் பாடி வருகிறேன். தமிழ், தெலுங்கில், மலையாளத்தில் எனக்கு அழகான பாடல்களை கொடுத்து இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு டியர் காம்ரேட் படத்தில் அவர் கொடுத்த ஓ கலலா காதலா பாடல் தெலுங்கில் பெரிய ஹிட்டானது. சில மாதங்களுக்கு முன்பு நிவின் பாலி நடித்த சர்வம்மாயாவிலும் சிறி தொட்டு பாடலை கொடுத்தார். அடுத்து கேட்கவே வேண்டாம், சிறை படத்தில் இடம் பெற்ற நீலோத்தி பாடலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அவர் சிறந்த கம்போசர். தவிர, ரொம்ப எளிமையானவர். அவருடன் பணியாற்றியது என் பாக்கியம் என நினைக்கிறேன்'' என்றார்
சிறை பட ஹீரோ அக்ஷய் பேசுகையில் ''நான் ஹீரோவாக அறிமுகமான சிறை படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அவ்வளவு பிளஸ் ஆக இருந்தது. நீலோத்தி என்ற பாடல், அதன் வரிகள் மக்களிடம் போய் சேர்ந்தது. படப்பிடிப்பு சமயத்தில் அவர் இசை, பின்னணி இசை பற்றி நிறைய பேசியிருக்கிறோம். அந்த படம் நிறைய விருதுகளையும் பெற்றது. அவரின் இசையில் இருகப்பற்று பின்னணி இசை ரொம்பவே இம்பரஸ் ஆக்கியது'' என்றார்
ஜஸ்டின் பிரபாகரனுக்கு பிடித்த 10 பாடல்கள்
இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனிடம் நீங்கள் இசையமைத்த படங்களில், உங்களுக்கு விருப்பமான 10 பாடல்களை அதற்கான காரணத்தை பட்டியலிட முடியுமா என்று கேட்டபோது அவர் கூறியது.
1) உனக்காக பொறந்தேனே (பண்ணையாரும் பத்மினியும்)
''என்னுடைய முதல் படத்தில் இடம் பெற்ற பாடல் இது என்பதால் கூடுதல் ஸ்பெஷல், இன்னொரு ஸ்பெஷல் கவிஞர் வாலி எழுதிய பாடல் இது, குறிப்பாக, வார்த்தைகளில் விளையாடி இருப்பார். உனக்காக பிறந்தேனே எனதழகா, பிரியாமல் இருப்பேனே பகலிரவா என பகல் இரவை கூட பிரிக்காமல் பகலிரவா என எழுதி கொடுத்து அசத்தினார்''
2) அடியே அழகே (ஒருநாள் கூத்து):
''நெல்சன் வெங்கடசேன் இயக்கத்தில் அட்டக்கத்தி தினேஷ், நிவேதா பெத்துராஜ் உட்பட பலர் நடித்த படத்தில் இடம் பெற்றது. சொல்லப்போனால் இந்த படத்துக்காக இந்த பாடல் கம்போஸ் செய்யவில்லை. இன்னொரு படத்துக்காக உருவான இதை கேட்ட இயக்குனர் 'என் படத்துக்கு சரியாக இருக்கும்' என்றார். அந்த இடத்திற்கு சரியாக பொருந்தி ஹிட்டான பாடல் இது''
3) தங்கமே தங்கமே(பாவக்கதைகள்) :
''முதலில் நாலு வரிகளாக இருந்த பாடலை, நீளமாக மாற்றினார் இயக்குனர். ஓடிடியில் பாவக்கதைகள் வந்தாலும் இந்த பாடல் பேசப்பட்டது. முருகவேள் பாடினார்.''
4) புலராத காலை (டியர் காம்ரேட்)
''இந்த பாடல் நாலு மொழிகளில் வந்து எல்லா இடத்திலும் ஹிட்டானது. தமிழில் கார்த்திக் நேத்தா எழுத சித்ஸ்ரீராம் பாடினார். இந்த பாடலின் வெற்றி பல பட வாய்ப்புகளை எனக்கு பெற்றுக்கொடுத்தது. என் கேரியரில் முக்கியமான பாடல்''
5) மன் கேசர்கேசர் (மீனாட்சிசுந்தரேஸ்வரர்)
''இந்தியில் எனக்கு முதல் பாடல் இது. இந்த பாடலால் சில இந்தி படங்கள் கிடைத்தது, சென்டிமென்ட்டாக இஷ்டம். ஒரு தமிழ் கல்யாண வீடு பின்னணியில் வரும்''
6) நின் கூடே ஞான் இல்லையோ (பச்சுவும் அற்புத விளக்கும்)
''கவுதம் பரத்வாஜ், சின்மயி பாட, பகத்பாசில் நடித்த மலையாள படத்தில் இடம் பெற்ற பாடல். நான் கல்லுாரி காலத்தில் உருவாக்கின முதல் பாடல். சில ஆண்டுகள் கழித்துதான் இந்த படத்தில் வந்தது. மறக்க முடியாத முதல் பாடல்''
7) அடியே அலங்காரி(தண்டகாரண்யம்):
''பாடகர் கிருஷ்ணராஜ் தனித்துவமான குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும், அவர் குரலில் இடம் பெற்ற பாடல்.''
8) சாரே ஜாக் மெய்ன்(ஆப் ஜெய்சா ஹோய்):
''மாதவன் நடித்த இந்தி படத்தில் இடம் பெற்ற பாடல். இந்த படத்துக்காக எனக்கு பிலிம்பேர் விருது கிடைத்தது.''
9) புது மழை (சர்வம் மாயா):
''சக்திஸ்ரீகோபாலன் வாய்ஸ் எனக்கு பிடிக்கும். அவருடன் முதலில் இணைந்த படம். கதைப்படி பல இடங்களில் இந்த பாடல் வரும், அவ்வளவு அழகாக இருக்கும்''
10) என் நீலோத்தி (சிறை):
''பாடலாசிரியர் சாரதியின் வரிகளுக்காக ரொம்பவே பிடிக்கும், கதை, சிச்சுவேஷனுக்காக பட்டிதொட்டியெல்லாம் ஹிட்டான பாடல்''
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு