You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆட்சியை இழந்த ஒரே மாதத்தில் நெருக்கடி: மம்தா பானர்ஜியிடம் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் நழுவுகிறதா?
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, இந்தியச் செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
அரசியல் கட்சிகள் பொதுவாகத் தோல்விகளிலிருந்து மீண்டெழுந்துவிடும்.
ஆனால், திடீரென ஏற்படும் அதிகார இழப்பைச் சமாளிப்பதற்கே பெரும்பாலும் அவை போராடுகின்றன.
கிழக்கு இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில், திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) கட்சி தற்போது எதிர்கொண்டுள்ள இக்கட்டான நிலை இதுதான்.
ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட ஒரு மாத காலத்திற்குள்ளாகவே, அந்தக் கட்சி தனது பெரும்பாலான சட்டப்பேரவை உறுப்பினர்களின் கிளர்ச்சியையும், நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே சாத்தியமான பிளவையும், அதன் நிறுவனர் மம்தா பானர்ஜியின் அதிகாரம் குறித்த அதிகரித்து வரும் சந்தேகங்களையும் எதிர்கொண்டு வருகிறது.
மம்தா பானர்ஜி ஒன்றும் சாதாரண பிராந்தியத் தலைவர் அல்ல.
2011ஆம் ஆண்டில், பலரும் சாத்தியமற்றது என்று நினைத்த ஒரு சாதனையை பானர்ஜி நிகழ்த்திக்காட்டினார்.
மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகள் நீடித்த இடதுசாரி ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்ததுடன், உலகின் மிக நீண்ட காலம் பதவியில் இருந்த, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடதுசாரி அரசாங்கங்களில் ஒன்றையும் வீழ்த்தினார்.
பின்னர் , டைம் இதழ் உலகின் மிகச்சிறந்த செல்வாக்கு மிக்க 100 மனிதர்களில் ஒருவராக அவரைத் தேர்வு செய்தது.
மம்தா பானர்ஜி தொடர்ந்து 15 ஆண்டுகள் ஆட்சி செய்தார், இதன் மூலம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை இந்தியாவின் மிக வெற்றிகரமான பிராந்தியக் கட்சியாகவும், தன்னை நாட்டின் மிக வலிமையான எதிர்க்கட்சி அரசியல்வாதிகளில் ஒருவராகவும் அவர் கட்டமைத்தார்.
கடந்த ஒரு மாத கால நிகழ்வுகள், இவ்வளவு அதிர்ச்சியூட்டுவதாக மாறுவதற்கான காரணம் இது தான்.
கடந்த மாதம் ஆட்சிக்கு எதிரான அதிருப்தி, மத ரீதியாக வாக்குகள் பிரிந்தது மற்றும் வாக்காளர் பட்டியலைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் ஆகியவற்றின் வலுவான கலவைக்கு மத்தியில், நரேந்திர மோதியின் பாரதிய ஜனதா கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 15 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, மேற்கு வங்கத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றியது.
இருப்பினும், மம்தா பானர்ஜியின் கட்சி முற்றிலுமாக பலமிழந்து விடவில்லை.
அது பாஜகவை விட சுமார் 30 லட்சம் வாக்குகள் மட்டுமே குறைவாக, அதாவது 2.6 கோடி வாக்குகளைப் பெற்று, மக்கள் வாக்குகளில் ஏறத்தாழ 40%-ஐத் தக்க வைத்துக் கொண்டது.
மாநில சட்டப்பேரவையில் 80 உறுப்பினர்களையும், 28 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொண்டு, இன்னும் ஒரு சக்தி வாய்ந்த அரசியல் சக்தியாகவே அக்கட்சி விளங்கி வருகிறது.
எந்தவொரு வழக்கமான அளவுகோலின் படியும், அது தோல்விக்குப் பிறகு தன்னை மீண்டும் ஒருங்கிணைத்துக் கொண்டிருக்க வேண்டும்.
மாறாக, அக்கட்சி உடைந்து சிதறுவது போலத் தோன்றுகிறது.
உண்மையான அதிர்ச்சி சட்டப்பேரவையில் இருந்து வந்தது.
தேர்தல் முடிந்த சில வாரங்களுக்குள், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தோராயமாக முக்கால்வாசி சட்டப்பேரவை உறுப்பினர்கள், பானர்ஜி மற்றும் அவரது வாரிசாகப் பரவலாகப் பார்க்கப்படும் அவரது உறவினர் அபிஷேக் பானர்ஜி ஆகிய இருவருக்கும் எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
கிளர்ச்சியாளர்கள் கட்சியின் சட்டப்பேரவைக் குழு கட்டுப்பாட்டைக் கைப்பற்றி, சொந்த எதிர்க்கட்சித் தலைவரை நியமித்ததுடன் சட்டமன்ற ஆவணங்களில் கட்சித் தலைமை போலியாகக் கையெழுத்திட்டதாகவும் குற்றம் சாட்டினர்.
ஆரம்பத்தில் மாநில அளவிலான ஒரு கிளர்ச்சியாகத் தோன்றியது இப்போது டெல்லிக்கும் பரவியுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸின் 28 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 20 பேர், கட்சியின் நாடாளுமன்றக் குழுவிலிருந்து பிரிந்து சென்று, பாஜக தலைமையிலான ஆளும் கூட்டணியுடன் தங்களை இணைத்துக் கொள்ள அனுமதி கோரி நாடாளுமன்ற சபாநாயகருக்குக் கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது உறுதிப்படுத்தப்பட்டால், இந்த நெருக்கடியானது ஒரு சட்டமன்றக் கிளர்ச்சியிலிருந்து, கட்சியின் தலைமைத்துவம் மற்றும் ஒற்றுமைக்கான ஒரு சவாலாக மாறும் .
இந்த நாடாளுமன்றக் கிளர்ச்சி என்பது ஒரு பரந்த வீழ்ச்சியின் மிகத் தெளிவான அறிகுறி மட்டுமே.
2021ஆம் ஆண்டில் திரிணாமுல் காங்கிரஸ் 56% வாக்குகளுடன் வெற்றி பெற்ற ஃபால்டா தொகுதியில், மறுதேர்தலுக்கான களத்தில் ஒரு வேட்பாளரைக்கூட அந்த கட்சியால் நிறுத்த முடியவில்லை.
பின்னர் அதன் வீழ்ச்சியின் மிகத் தெளிவான அறிகுறி வெளிப்படத் தொடங்கியது .
ஜூன் மாத தொடக்கத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்திற்கு வெறும் சில நூறு பேர் மட்டுமே வந்திருந்தனர். இது ஒரு காலத்தில் பானர்ஜியின் அரசியல் ஆதிக்கத்திற்குச் சான்றாக இருந்த பெரும் கூட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது.
அதிகாரம் அதிர்ச்சியூட்டும் வேகத்தில் சரிந்துவிட்டது.
கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். கட்சி அலுவலகங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. அதன் கட்டமைப்புகள் சிதைக்கப்பட்டு வருகின்றன. ஒரு காலத்தில் செல்வாக்குடன் வலம் வந்த தலைவர்கள் இப்போது தங்களது சொந்த கோட்டைகளிலேயே பகிரங்கமாகத் தாக்கப்படுகிறார்கள்.
"தற்போது நடந்திருப்பது இதற்கு முன் கண்டிராத ஒன்று" என்கிறார் அரசியல் ஆய்வாளரான துவைபாயன் பட்டாச்சார்யா.
திரிணாமுல் காங்கிரஸ் சரிந்து வரும் வேகம் அதன் ஆழமான பலவீனத்தைச் சுட்டிக்காட்டுகிறது.
2011-இல் அக்கட்சி வீழ்த்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தைப் போலன்றி, அதிகார இழப்பைத் தாங்கி மீளக்கூடிய ஒரு வலுவான சித்தாந்தக் கட்டமைப்பை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஒருபோதும் உருவாக்கவில்லை.
பானர்ஜியின் ஈர்ப்புமிக்க தனிப்பட்ட ஆளுமையும், அதிகாரத்தால் கிடைக்கும் ஆதரவும் இணைந்ததே அதன் ஒருங்கிணைக்கும் சக்தியாக இருந்தது.
பட்டாச்சார்யா கூறுவது போல், "மம்தாவின் நற்பெயர் மற்றும் அரசாங்க வளங்கள்"போன்ற இரண்டு தூண்களின் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிலைபெற்றிருந்தது.
"வங்காளம் முழுவதும் கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொள்ள, பானர்ஜி கட்சியின் அமைப்புகளை விட, தங்களது சொந்தப் பகுதிகளில் கணிசமான சுயாட்சி வழங்கப்பட்ட சக்தி வாய்ந்த உள்ளூர் தலைவர்களையே அதிகம் நம்பியிருந்தார்" என்கிறார் பட்டாச்சார்யா.
கட்சி அதிகாரத்தில் இருந்தவரை இந்த முறை பயனளித்தது.
உள்ளூர் செல்வாக்குமிக்கவர்கள் அதிகாரத்திற்காகக் கடுமையாகப் போட்டியிட்டனர். இது பெரும்பாலும் கடுமையான உட்கட்சிப் பூசல்களையும் வன்முறையையும் உருவாக்கியது.
ஆனால் அதிகாரம் என்பது ஆதரவு, பாதுகாப்பு மற்றும், விமர்சகர்கள் குற்றம் சாட்டுவது போல, செல்வம் சேர்ப்பதற்கான வாய்ப்புகளையும் கொண்டு வந்தது.
இப்போது இந்த அமைப்பை ஒன்றாகத் தாங்கிப் பிடித்திருந்த இரண்டு தூண்களான அரசு அதிகாரமும், பானர்ஜியின் வீழ்த்த முடியாத பிம்பமும் பலவீனமடைந்துள்ளன.
"திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை இழந்துவிட்டது. கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி சந்தித்த தனிப்பட்ட தேர்தல் தோல்வி அதன் அரசியல் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியுள்ளது.
இதன் விளைவாக, பல உள்ளூர் செல்வாக்கு மிக்கவர்கள் தங்களது போட்டியாளர்கள், விசாரணைகள் மற்றும் பொதுமக்களின் கோபத்திற்கு ஆளாகும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இது கட்சியை விட்டு வெளியேறுவதற்கோ அல்லது விசுவாசத்தை மாற்றுவதற்கோ வலுவான தூண்டுதல்களை உருவாக்குகிறது" என்கிறார் பட்டாச்சார்யா.
இங்குதான் பாஜக இந்தக் கதைக்குள் நுழைகிறது.
டெல்லியைத் தளமாகக் கொண்ட கொள்கை ஆராய்ச்சி மையத்தின் ஆய்வாளர் ராகுல் வர்மா, தேசிய அளவில் ஆதிக்கம் செலுத்தும் பாஜகவின் எழுச்சியானது, பிராந்திய அரசியல்வாதிகள் எதிர்கொள்ளும் தூண்டுதல்களை மாற்றியமைத்துள்ளதாகக் குறிப்பிடுகிறார்.
"முன்பெல்லாம், கட்சித் தாவல்கள் என்பது தனிப்பட்ட தலைவர்கள் பிரிந்து செல்வதோடு முடிந்துவிடும். இன்று ஒட்டுமொத்தக் குழுக்களும் கிளர்ச்சி செய்ய முடிகிறது, ஏனென்றால் பாஜக மாற்று அதிகார மையம், செல்வம் மற்றும் அரசியல் பாதுகாப்பை வழங்குகிறது.
இந்த வடிவம் சிவசேனா [மேற்கு இந்தியாவில் ஒரு சக்திவாய்ந்த பிராந்திய கட்சி] போன்ற கட்சிகளில் சமீபத்தில் ஏற்பட்ட பிளவுகளைப் போலவே உள்ளது. அங்கு வாரிசுப் போட்டியும், ஒரே குடும்பத்திற்குள் அதிகாரம் குவிக்கப்பட்டதும் ஒரு பெரிய அளவிலான கிளர்ச்சியைத் தூண்டின" என்று வர்மா விவரிக்கிறார்.
திரிணாமுல் காங்கிரஸின் பிரச்னைகளை இந்திய அரசியலில் ஒரு பரந்த மாற்றத்தின் பகுதியாகப் பார்க்கிறார் வர்மா . பிராந்தியக் கட்சிகள் அதிகளவில் மையப்படுத்தப்பட்டவையாகவும், குடும்பத்தை மையமாகக் கொண்டவையாகவும் மாறிவிட்டன என்று அவர் குறிப்பிடுகிறார்.
"லட்சியம் கொண்ட துணைத் தலைவர்கள் ஒரு தலைவரின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் தலைமைத்துவம் ஒரு குடும்ப வாரிசுக்கு மாற்றப்படும்போது பெரும்பாலும் அவர்கள் தயங்குகிறார்கள். உத்தவ் தாக்கரே தனது மகன் ஆதித்யாவை உயர் பதவியில் அமர்த்திய பிறகு, சிவசேனாவில் ஏற்பட்ட பிளவு இந்தச் சிக்கலை விளக்கியது" என்று வர்மா விளக்குகிறார்.
முந்தைய வாரிசுப் போர்கள் அரசியல் குடும்பங்களுக்குள்ளேயே முடிந்துவிடும் அல்லது கடுமையான சவாலை ஏற்படுத்துவதற்கான வளங்கள் இல்லாத அதிருப்தியாளர்களை மட்டுமே உள்ளடக்கியதாக இருந்தன.
ஆனால், பாஜகவின் இருப்பு அந்தச் சமன்பாட்டை மாற்றியுள்ளது.
"தலைமுறை மாற்றங்கள் மற்றும் ஆதரவை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட கட்சித் கட்டமைப்புகளுடன் இது இணையும் போது ஒரு சக்திவாய்ந்த கலவையை உருவாக்குகிறது. ஒரு கட்சி ஆட்சியை இழந்தவுடன், அதிகாரம் மற்றும் செல்வாக்கிற்காக இணைந்த உள்ளூர் தலைவர்கள் தொடர்ந்து அங்கேயே இருப்பதற்கு பெரும்பாலும் எந்தக் காரணத்தையும் காண்பதில்லை" என்கிறார் வர்மா.
தற்போதைக்கு, 71 வயதான மம்தா பானர்ஜி இன்னும் ஒரு சவாலாகவே நீடிக்கிறார்.
அவர் பாஜகவின் வெற்றியை "சட்டவிரோதமானது" மற்றும் " நெறிமுறையற்றது" என்று விவரித்துள்ளார். சுமார் 100 இடங்கள் "சூறையாடப்பட்டதாக" குற்றம் சாட்டியுள்ளார்.
மம்தா பானர்ஜி இந்த கிளர்ச்சியை சந்தர்ப்பவாதம் என்று குறிப்பிடுகிறார்.
"இவ்வளவு காலமாக சிலர் அதிகாரத்தை அனுபவித்தார்கள், இப்போது நாம் தோற்றவுடன், அவர்கள் உடனடியாக மற்றொரு கட்சியுடன் ஒரு உடன்பாட்டிற்கு வந்துவிட்டதாகத் தெரிகிறது" என்று அவர் கடந்த வாரம் கூறியிருந்தார்.
இருப்பினும் கட்சி மீண்டெழும் என்று மம்தா பானர்ஜி உறுதியாகக் கூறுகிறார். "நாங்கள் கட்சியைப் புதிதாகக் கட்டியெழுப்புவோம். திரிணாமுல் காங்கிரஸ் அதன் தலைவர்களுக்கானது அல்ல. அது அதன் தொண்டர்களுக்கானது"என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகரித்து வரும் இருத்தல் சார்ந்த நெருக்கடியிலிருந்து திரிணாமுல் காங்கிரஸால் மீண்டு வர முடியுமா என்றால், அதைக் குறித்து இப்போதே சொல்வது, மிகவும் முன்கூட்டியே கருத்து சொல்வதாக அமையும்.
இந்த கிளர்ச்சி வலுவிழந்து போகலாம்.
ஆனால் இப்போது பிளவுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தால், ஆரம்பத்தில் பலர் நினைத்ததை விட இந்த சவால் மிகவும் தீவிரமான அரசியல் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
இருப்பினும், மம்தா பானர்ஜியின் அரசியல் பயணம் முடிந்துவிட்டதாக இப்போதே கருதுவது அவசரமான முடிவாக இருக்கும்.
"அவரால் மீண்டும் திரும்பி வர முடியும்" என்று கூறும் பட்டாச்சார்யா, "வங்காளத்தில் இன்னமும் மக்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு முகமும், மக்கள் அவ்வளவு எளிதாக நிராகரிக்க முடியாத ஒரு குரலும் இருக்குமானால், அது அவருடையது தான்"என்கிறார்.
ஆனால் எந்தவொரு மறுமலர்ச்சிக்கும் ஈர்ப்புமிக்க பிம்பத்தை விடவும் கூடுதல் விஷயங்கள் தேவைப்படும் என்பதை அவர் குறிப்பிடுகிறார்.
அதற்காக கட்சியை புதுப்பிக்கும் மனப்பக்குவமும், அதன் தலைமையைப் பற்றிய கடினமான முடிவுகளை எடுக்கத் தயாராக இருப்பதும் தேவைப்படும்.
இதுவரை, அது பானர்ஜியின் பலமான அம்சமாக இருந்ததில்லை.
தனது வாழ்க்கை முழுவதும், மம்தா பானர்ஜி அரசியல் ரீதியான தடைகளைத் தகர்த்தெறிந்துள்ளார். இருப்பினும் அவருக்கு முன்னால் உள்ள இந்தப் பணி அவர் இதுவரை எதிர்கொண்ட மற்ற பணிகளைப் போன்றது அல்ல.
ஓர் அரசாங்கத்தைக் கவிழ்ப்பது என்பது வேறு விஷயம்.
ஆனால், ஒரு கட்சியின் சொந்தத் தலைவர்களே அதைக் கைவிட்டுச் சென்ற பிறகு, அந்தக் கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவது என்பது முற்றிலும் வேறுபட்ட ஒரு விஷயமாக இருக்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு