You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'ஒரே நாளில் சுமார் ரூ.6 கோடிக்கு விற்பனை' - இந்த கடலில் ஆக்டோபஸ்கள் எண்ணிக்கை திடீரென உயர்ந்தது ஏன்?
- எழுதியவர், லிசா யங்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
பிரிட்டனின் டெவோன் மற்றும் கார்ன்வால் கடற்பகுதிகளில் பெருமளவில் காணப்படும் ஆக்டோபஸ்கள் இனி நீண்ட காலம் இங்கேயே தங்கிவிடக்கூடும் என்று கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடல்சார் உயிரியல் சங்கம் வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வில், கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்து வரும் ஆக்டோபஸ் பெருக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அந்த ஆய்வின்படி, பிரிட்டன் கடல் பகுதிகளில் பரவிவரும் இந்த ஆக்கிரமிப்பு இன ஆக்டோபஸ்கள் அங்கு வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்து வருவதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
முன்னதாக, ஆக்டோபஸ்கள் மீனவர்களின் தூண்டில்களில் இருந்த லாப்ஸ்டர் மற்றும் நண்டுகளை சாப்பிட்டு வந்தன. ஆனால் தற்போது, இந்த இரு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் சாதனை எண்ணிக்கையில் ஆக்டோபஸ்களைப் பிடித்து வருகின்றனர். பிரிக்ஸ்ஹாம் பகுதியில் ஒரே நாளில் பிடிக்கப்பட்ட ஆக்டோபஸ்களின் விற்பனை 5 லட்சம் பவுண்டுகளை (சுமார் ரூ.6 கோடி) எட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இதுபோன்ற ஆக்டோபஸ் பெருக்கங்கள் சில காலத்திற்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளன. எனவே, தற்போது கிடைத்து வரும் இந்த புதிய வருமான வாய்ப்பை இழந்துவிடுவோமோ என்ற கவலை மீனவர்களுக்கு இருந்தது.
கடந்த காலங்களில் ஆக்டோபஸ்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்த நிகழ்வுகள் பின்னர் முடிவுக்கு வந்துள்ளன. எனவே, தற்போது கிடைத்து வரும் இந்த புதிய கடல் வளத்தையும் இழந்துவிட நேரிடுமோ என்ற கவலை மீனவர்களிடம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனால், இது "ஒரு வித்தியாசமான பெருக்கமாகத் தெரிகிறது... அவை இங்கேயே தங்கிவிடும் போலத் தோன்றுகிறது" என்று கடல்சார் உயிரியல் சங்கத்தை சேர்ந்த முனைவர் பிரைஸ் ஸ்டீவர்ட் கூறியுள்ளார்.
"கரைக்கு கொண்டு வரப்படும் ஆக்டோபஸ்களின் எண்ணிக்கையைப் பாருங்கள். ஒரு வாரத்தில் 100 டன் வரை பிடிக்கப்படுகின்றன. வெள்ளிக்கிழமைக்குள் அது 200 டன் என்ற அளவை எட்டக்கூடும்." என டெவோனின் பிரிக்ஸ்ஹாமில் அமைந்துள்ள இயன் பெர்க்ஸ் மீன் வர்த்தக நிறுவனத்தின் பங்குதாரரான இயன் பெர்க்ஸ் கூறுகிறார்
"இந்த ஆக்டோபஸ்கள் தினமும் தங்களது உடல் எடையின் 6% முதல் 8% வரை உணவாக உட்கொள்கின்றன. அதாவது, தினமும் சுமார் 10,000 கிலோ அளவிலான சிப்பி வகை கடல்வாழ் உயிரினங்களை உண்கின்றன என்று மதிப்பிடுகிறோம்."
"தற்போதைய நிலையில், இங்கு ஆக்டோபஸ்கள் திடீரென மறைந்துவிட்டாலும், கடலில் நண்டுகள் மற்றும் பிற சிப்பி வகை உயிரினங்களின் எண்ணிக்கை இயல்பு நிலைக்குத் திரும்ப எட்டு முதல் 10 ஆண்டுகள் வரை ஆகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்," என்றார்.
மூன்றாம் தலைமுறை லாப்ஸ்டர் மீனவரும், லூ துறைமுக ஆணையருமான வில் ஜோகாக், ஆக்டோபஸ்களின் திடீர் வருகை "சிப்பி வகை கடல் உணவுத் தொழிலையே தலைகீழாக மாற்றிவிட்டது" என்றார்.
மேலும், "இந்த ஆண்டில் சிப்பி வகை கடல் உணவுத் தொழில் கிட்டத்தட்ட முற்றிலும் அழிந்துவிட்டது. சில நாட்களில் எங்களின் வருவாய் 90% முதல் 100% வரை குறைந்துள்ளது. மிகவும் நல்ல நாளாக இருந்தாலும் கூட, 70% முதல் 75% வரை வருவாய் இழப்பு ஏற்படுகிறது."
இதனால், சிப்பி வகை கடல்வாழ் உயிரினங்களைப் பிடித்துவந்த வில் ஜேகாக் போன்ற பல மீனவர்கள், தற்போது ஆக்டோபஸ்களைப் பிடிப்பதற்கு மாறியுள்ளனர்.
"இப்போது இங்கு மிக அதிகமான அளவில் ஆக்டோபஸ்கள் உள்ளன. கடல் முழுவதும் அவை நிறைந்திருக்கின்றன. பொருளாதார ரீதியாகப் பார்த்தால், தற்போதைக்கு இது மிகவும் லாபகரமானதாக இருக்கிறது. ஏனெனில் ஆக்டோபஸ்களுக்கு மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையும் உள்ளது."
"நாங்கள் நீண்ட காலமாகப் பயன்படுத்தி வரும் மீன்பிடி உபகரணங்கள் அல்லது அதைப் போன்ற உபகரணங்களைக் கொண்டே இவற்றைப் பிடிக்க முடிகிறது. எனவே, அவற்றைப் பிடிக்க தனியாக பெரிய முதலீடு செய்ய வேண்டியதில்லை."
"இது மகிழ்ச்சியான மற்றும் உற்சாகமான ஒரு விஷயமாக இருக்கிறது. 2019-ல் மீன் சந்தை மூடப்பட்டதிலிருந்து 'லூ' பகுதி இப்போதுதான் மிகவும் பரபரப்பாகவும் மக்கள் நடமாட்டம் மிகுந்ததாகவும் காணப்படுகிறது" என்று அவர் கூறினார்.
"இப்போது அனைவரும் ஆக்டோபஸ் பிடிக்கிறார்கள். அதனால் கடலில் பரபரப்பு அதிகமாக உள்ளது. ஆனால் அது மகிழ்ச்சியான போட்டி உணர்வை உருவாக்கியுள்ளது. அனைவரும் நல்ல மனநிலையில்தான் இருக்கிறார்கள்," என்றும் அவர் கூறினார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு, பிரிக்ஸ்ஹாம் மீன் சந்தையில் ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 103 டன் ஆக்டோபஸ்கள் விற்கப்பட்டன. அவற்றின் மொத்த மதிப்பு 5 லட்சம் பவுண்டுகளுக்கும் அதிகமாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் பெர்கெஸ், "லாப்ஸ்டர் மீன்பிடியை மட்டுமே நம்பி வாழும் மீனவர்களுக்கு இது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மறுபுறம், தற்போது ஆக்டோபஸ்களைப் பிடிப்பதன் மூலம் அவர்கள் முன்பைவிட மூன்று முதல் நான்கு மடங்கு அதிக வருமானம் ஈட்டுகின்றனர்," என்றார்.
'முழுச் சுழற்சி'
கடல்சார் உயிரியல் சங்கத்தை சேர்ந்த முனைவர் பிரைஸ் ஸ்டீவர்ட், ''ஆக்டோபஸ்களின் எண்ணிக்கை திடீரென அதிகரிப்பதும் பின்னர் குறைவதுமான நிகழ்வுகள் வரலாற்றில் இதற்கு முன்பு நிகழ்ந்திருந்தாலும், தற்போதைய நிகழ்வு அதிலிருந்து வேறுபட்டதாகத் தெரிகிறது'' என்கிறார்.
"மிகவும் கடுமையான குளிர்காலம் ஏற்பட்டால், அது ஆக்டோபஸ்களின் எண்ணிக்கையை பெரிதும் குறைக்கக்கூடும். ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக அப்படிப்பட்ட கடும் குளிர்காலங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஆக்டோபஸ்களை அழித்துவிடக்கூடிய அளவிலான கடுமையான குளிர்காலத்தை நாம் சந்திக்கவில்லை."
"இப்போது ஆக்டோபஸ்கள் பிரிட்டன் கடல் பகுதிகளில் நிச்சயமாக இனப்பெருக்கம் செய்து வருகின்றன. இது ஒப்பீட்டளவில் புதிய நிகழ்வாகும். மக்கள் தற்போது இளம் ஆக்டோபஸ்களையும், மிகச் சிறிய குட்டி ஆக்டோபஸ்களையும் பார்க்கத் தொடங்கியுள்ளனர்."
"அதனால், வாழ்க்கையின் முழுச் சுழற்சியும் இப்போது இங்கு நடைபெற்று வருகிறது. அதனால்தான் இது கடந்த காலங்களில் நிகழ்ந்த பெருக்கங்களிலிருந்து வேறுபட்டதாக நான் கருதுகிறேன்."
"இப்போது இவை இங்கே நிரந்தரமாகத் தங்கிவிடும் போல் தெரிகிறது. எதிர்காலத்தில் இத்தகைய மாற்றங்கள் இன்னும் அடிக்கடி நிகழக்கூடும் என்பதால், அதற்கேற்ப நாம் திட்டமிட வேண்டும்" என்று முனைவர் பிரைஸ் ஸ்டீவர்ட் கூறுகிறார்.
இதற்கிடையில், கார்ன்வால் கடலோர மீன்வளம் மற்றும் பாதுகாப்பு ஆணையம் ஆக்டோபஸ் மீன்பிடியில் ஈடுபடும் படகுகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அவசர விதிமுறையை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.
இந்த விதிமுறையை ஜூலை 1ஆம் தேதி முதல் ஒரு ஆண்டுக்கு அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது ஆக்டோபஸ்களைப் பிடிப்பதற்காக அதிக எண்ணிக்கையிலான படகுகள் களமிறங்கியுள்ளதால், இது ஆக்டோபஸ் இனங்களின் எண்ணிக்கையையே பாதிக்கும் அபாயம் இருப்பதாக அச்சம் எழுந்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு