You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நோய் எதிர்ப்பாற்றல் கண்டுபிடிப்பு: `பல வகை புற்றுநோய்களுக்கு சிகிச்சை தரலாம்'
நமது உடலில் நோய்த் தடுப்பு மண்டலத்தில், புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு விஷயத்தை செம்மைப்படுத்தினால், பல வகையான புற்றுநோய்களுக்கும் சிகிச்சை தரலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். விதைப்பை, மார்பகம், நுரையீரல் மற்றும் பிற வகை புற்றுநோய் செல்களை ஆய்வக சூழலில் கொன்றுவிடக் கூடிய ஒரு வழிமுறையை கார்டிப் பல்கலைக்கழகத்தில் ஒரு குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
Nature Immunology சஞ்சிகையில் இந்தக் கண்டுபிடிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நோயாளிகளிடம் இது இன்னும் பரிசோதிக்கப்படவில்லை. ஆனால், இதற்கு ``அதிக திறன்'' உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இதற்கான பணிகள் ஆரம்பகட்டத்தில் உள்ளன என்றாலும், இது மிகவும் உற்சாகம் தரும் விஷயம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
அவர்களுடைய கண்டுபிடிப்பு என்ன?
நமது உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பாற்றல் தொற்று கிருமிகளுக்கு எதிராக செயல்படக் கூடியது. அது புற்றுநோய் செல்களை எதிர்த்தும் செயல்படக் கூடியது.
நோய்த் தடுப்பாற்றல், கட்டிகளுக்கு எதிராக எப்படி இயற்கையாக செயல்படுகிறது என்பதில் இதுவரை கண்டுபிடிக்க முடியாத ``வழக்கத்திற்கு மாறான'' விஷயத்தைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்.
மனித ரத்தத்தில் டி-செல் (T-cell) என ஒன்று இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உடலில் அகற்றப்பட வேண்டிய, அச்சுறுத்தலான செல்கள் ஏதும் இருக்கின்றனவா என்று உடல் முழுக்க ஸ்கேன் செய்யும் வேலையை இந்த டி-செல்கள் செய்கின்றன.
ஒரு நபருக்கு பல வகை புற்றுநோய்கள் வரலாம்.
``எல்லோ நோயாளிகளுக்கும் சிகிச்சை தர இதில் வாய்ப்பு உள்ளது'' என்று ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ஆண்ட்ரூ செவேல் பிபிசியிடம் தெரிவித்தார்.
``இது சாத்தியம் என்று முன்பு யாருக்கும் நம்பிக்கை இல்லை'' என்று அவர் கூறினார்.
``இதன் மூலம் `அனைவருக்கும் ஒரே அணுகுமுறை' என்ற முறையில் புற்றுநோய் சிகிச்சை அளிக்கலாம். ஒரு குறிப்பிட்ட வகை டி-செல் உடலில் பல வகையான புற்றுநோய் செல்களையும் அழிக்க வல்லதாக இருக்கும்'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது எப்படி செயலாற்றுகிறது?
டி-செல்களின் மேற்பரப்பில் ``உணர் பொறிகள்'' உள்ளன. மற்ற செல்களின் ரசாயனத் தன்மையை ``கண்டறியும்'' நுட்பம் அந்த உணர்பொறிகளில் உள்ளது.
பல வகையான புற்றுநோய் செல்களை ஆய்வக சூழ்நிலையில் இந்த டி-செல்கள் கண்டறிந்து அழிப்பதாக கார்டிப் குழுவினர் கண்டறிந்துள்ளனர். நுரையீரல், தோல், ரத்த, ஆசனவாய், மார்பக, எலும்பு, விதைப்பை, கருப்பை, சிறுநீரக மற்றும் கழுத்தெலும்பு உள்ளிட்ட புற்றுநோய்களைக் கண்டறிந்து அழிப்பதாக அவர்கள் கண்டறிந்திருக்கின்றனர்.
இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், சாதாரண செல்களை இது தொடுவது கூட இல்லை.
அது எப்படி சாத்தியமாகிறது என்பதை இனிமேல் தான் கண்டறிய வேண்டும்.
இந்தக் குறிப்பிட்ட டி-செல் உணர்பொறியானது, மனித உடலில் ஒவ்வொரு செல்லின் மேற்பரப்பிலும் உள்ள MR1 என்ற மரபணுவுடன் தொடர்பு கொள்கிறது.
புற்றுநோய் செல்களுக்குள் நடைபெறும் கோளாறான செயல்பாடுகள் பற்றி MR1 மூலம் நோய்த்தடுப்பு மண்டலத்துக்குத் தகவல் அனுப்பப்படுகிறது.
``புற்றுநோய் செல்களில் உள்ள MR1-ஐ டி - செல்கள் கண்டுபிடிக்கின்றன என்பதை நாங்கள் தான் முதன்முதலில் விவரித்திருக்கிறோம். இதற்கு முன் யாரும் இதைக் கூறியதில்லை'' என்று ஆராய்ச்சி மாணவர் கேரி டோல்ட்டன் பிபிசியிடம் கூறினார்.
இது ஏன் முக்கியமானது?
டி-செல் புற்றுநோய் சிகிச்சை முறைகள் ஏற்கெனவே உள்ளன. புற்றுநோய் எதிர்ப்பாற்றலை உருவாக்குவது என்பது, இந்தத் துறையில் உற்சாகம் தரும் முன்னேற்றமாக இருந்து வருகிறது.
இதில் மிகவும் பிரபலமான உதாரணமாக CAR-T உள்ளது. நோயாளியின் டி-செல்களில் மரபணு மாற்றத்தை ஏற்படுத்தி, புற்றுநோய் செல்களைக் கண்டறிந்து அழிப்பதற்கான ரசாயன மருந்தாக அது உள்ளது.
மீள முடியாத நிலைக்குச் சென்றுவிட்ட நோயாளியை, மீட்டு சரி செய்வதில் ஆச்சர்யம் ஏற்படுத்தும் அளவுக்கு மாற்றத்தைத் தருவதாக CAR-T உள்ளது.
இருந்தபோதிலும், இதற்கான அணுகுமுறை அதிக கவனத்துடன் செய்ய வேண்டியதாக உள்ளது. குறிப்பிட்ட சில வகை புற்றுநோய்களுக்கு மட்டுமே இந்த அணுகுமுறையைக் கையாள முடியும். குறிப்பிட்ட இடத்துக்கு டி-செல்களை செலுத்தும் நுட்பம் இதில் தேவைப்படுகிறது.
ரத்தப் புற்றுநோய் போன்றவற்றைவிட, கட்டிகள் என்பவை போன்ற ``கெட்டியான தன்மை உள்ள புற்றுநோய்'' சிகிச்சையில் இது சிரமப்படுகிறது.
டி-செல் உணர்பொறி என்பது புற்றுநோய் சிகிச்சையில் ``ஒரே தரத்திலான சிகிச்சையாக'' இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
நடைமுறையில் இது எப்படி செயல்படும்?
புற்றுநோயாளியிடம் இருந்து ரத்த சாம்பிள் எடுக்கப்படும்.
அவர்களுடைய டி-செல்கள் பிரித்தெடுக்கப்படும். பிறகு, புற்றுநோய் கண்டறியும் உணர்பொறி தன்மை உள்ளதாக ஆக்கிட மரபணு மாற்றம் செய்ப்படும்.
மேம்படுத்தப்பட்ட செல்கள் பெருமளவில் உருவாக ஏற்ற சூழ்நிலை ஆய்வகத்தில் ஏற்படுத்தப்படும். பிறகு அவை நோயாளியின் உடலில் செலுத்தப்படும். CAR-T சிகிச்சை முறையில் பின்பற்றப்படும் அதே நடைமுறைதான் இதுவும்.
இருந்தபோதிலும், இது விலங்குகள் மீது, ஆய்வகத்தில் உள்ள செல்களில் தான் பரிசோதிக்கப் பட்டுள்ளது. மனிதர்களுக்கு இதன் மூலம் சிகிச்சை அளிப்பதற்கு முன், நிறைய பாதுகாப்பு பரிசோதனைகள் செய்யப்பட வேண்டியுள்ளது.
நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
இந்த ஆராய்ச்சிக்கு ``நல்ல செயல்திறன் வாய்ப்பு'' உள்ளது என்று சுவிட்சர்லாந்தில் உள்ள பசெல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லூசியா மோரி மற்றும் ஜென்னரோ டி லிபெரோ ஆகியோர் கூறியுள்ளனர். அனைத்து புற்றுநோய்களுக்கும் இதன் மூலம் சிகிச்சை அளிக்க முடியுமா என்பதை இப்போது கூறிவிட முடியாது என்கி்றனர்.
``இந்தப் புதிய டி-செல் தொகுப்புகளின் நோய்த்தடுப்பு செயல்பாடு எங்களுக்கு மிகவும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. கட்டியில் உள்ள செல்களை சரி செய்யும் சிகிச்சையில் செல் உணர்திறன்களை பயன்படுத்தும் வாய்ப்பும் ஆச்சரியம் தருவதாக உள்ளது'' என்று அவர்கள் கூறியுள்ளனர்.
``இப்போதைக்கு இது மிகவும் அடிப்படை நிலையில் உள்ள ஆராய்ச்சி. நோயாளிகளுக்கு மருந்தாக தருவதற்கான நிலை வெகு தூரத்தில் உள்ளது'' என்று மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் நோய்த் தடுப்பாற்றல் துறை பேராசிரியர் டேனியல் டேவிஸ் கூறுகிறார்.
``நோய்த் தடுப்பாற்றல் மற்றும் புதிய மருந்துகளின் எதிர்காலத்தைப் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்வதில், இது மிகவும் உற்சாகம் தரும் கண்டுபிடிப்பு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை'' என்று அவர் கூறுகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: