You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

மு.க.ஸ்டாலின் முதல்வர் பதவியேற்பு எப்போது? எந்தக் கட்சிக்கு எவ்வளவு வாக்கு?

தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. வாக்குகள் எண்ணப்பட்டு இன்னும் 2 தொகுதிகளுக்கு முடிவு, இன்று அறிவிக்கப்படவுள்ளது. எனவே கள நிலவரம் குறித்த அண்மைய தகவல்களை நேயர்கள் இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. சென்னை தொகுதிகளில் மீண்டும் திமுக கூட்டணி முன்னிலை

    தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், தொடக்கம் முதலே சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே முன்னிலை வகித்து வந்தது.

    வேளச்சேரி தொகுதியில் அக்கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் முன்னிலை பெற்ற நிலையில், மற்ற 15 தொகுதிகளில் திமுகவே முன்னிலை வகித்து வந்தது.

    இந்த நிலையில் பகல் 1 மணிக்கு திடீர் திருப்பமாக மயிலாப்பூர் தொகுதியில் அதிமுகவும், துறைமுகம் தொகுதியில் பாஜகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்றன.

    அதன் பின்னர் தற்போது வெளியான தொகுதி நிலவரங்களின் அடிப்படையில், துறைமுகம் தொகுதியில் திமுகவின் சேகர் பாபு மீண்டும் முன்னிலை பெற்றுள்ளார். மயிலாப்பூர் தொகுதியிலும் திமுகவே முன்னிலையில் உள்ளது.

  2. கோவை தெற்கில் மட்டும் கவனம் செலுத்தினாரா கமல் ஹாசன்?

  3. பாஜக இரு இடங்களில் முன்னிலை

    தமிழகத்தின் வாக்குப்பதிவு விவரங்கள் வெளியாக தொடங்கியநேரத்தில், நான்கு தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்துவந்தது. நாகர்கோயில் தொகுதியில் எம் ஆர் காந்தி, தாராபுரம் தொகுதியில் பாஜக மாநில தலைவர் எல். முருகன், திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன் மற்றும் மொடக்குறிச்சி தொகுதியில் சரஸ்வதி ஆகியோர் முன்னிலையில் இருந்தனர்.

    ஆனால் தற்போதைய நிலவரப்படி, பாஜக நாகர்கோயில் மற்றும் திருநெல்வேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. மொடக்குறிச்சியில் திமுகவின் சுப்புலட்சமி ஜெகதீசன் மற்றும் தாராபுரம் தொகுதியில் திமுகவின் கயல்விழி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

  4. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த அர்விந்த் கெஜ்ரிவால்

    ”தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். வெற்றிகரமான ஆட்சியமைய வாழ்த்துக்கள்” என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் அர்விந்த் கெஜ்ரிவால்.

  5. அதிமுகவுக்கு மீண்டும் கைக்கொடுக்கும் கொங்கு மண்டலம், சக்திவேல், சேலத்திலிருந்து பிபிசி தமிழுக்காக

    கடந்த சட்டமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அதிக இடங்களில் அதிமுக கட்சியே வெற்றி பெற்றது. இதனால், 2016 ஆம் ஆண்டு ஆட்சி அமைத்த போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்களுக்கு முதன்மையான அமைச்சரவை இடங்கள் கிடைத்தன. முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்பு எடப்பாடி கே. பழனிசாமி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    கடந்த பத்து ஆண்டுகளாக அதிமுக ஆட்சி செய்துவரும் நிலையில், அதிருப்தி அலையால் கொங்கு மண்டலத்தில் திமுக பெரிய அளவில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவுகள் பெரிய அளவில் அதிருப்தியை வெளிப்படுத்தவில்லை என்பதும், கொங்கு மண்டலம் மீண்டும் அதிமுக-வுக்கு கைகொடுத்துள்ளது என்பதையும் தேர்தல் முன்னிலை நிலவரங்கள் உணர்த்துகின்றன.

    கொங்கு மண்டலத்தில் உள்ள 60 தொகுதிகளில் 41 தொகுதிகளில் அதிமுக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. திமுக கூட்டணி 18 தொகுதிகளிலும், மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது.

    கோவை மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதிகளில் எட்டு தொகுதிகளிலும், சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் 8 தொகுதிகளிலும், நாமக்கல் மாவட்டத்தில் ஆறு தொகுதிகளில் நான்கு தொகுதிகளிலும் அதிமுக முன்னிலையில் உள்ளது.தருமபுரி மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளில் அனைத்திலும் அதிமுக கூட்டணியே முன்னிலையில் உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளில் நான்கு தொகுதிகளில் அதிமுக முன்னிலையில் உள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் எட்டு தொகுதிகளில் ஐந்து தொகுதிகளில் அதிமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மூன்று தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியே முன்னிலையில் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளில் திமுக ஐந்து தொகுதிகளில் முன்னிலையில் பெற்றுள்ளது.

    மூன்று தொகுதிகளில் மட்டும் அதிமுக முன்னிலையில் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் அதிமுக முன்னிலையில் உள்ள மூன்று தொகுதியில் இரண்டு அமைச்சர்களின் தொகுதிகள் ஆகும்.

    கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் திமுக முன்னிலை பெற்று வருகிறது. ஒரே தொகுதியில் மட்டும் அதிமுக முன்னிலை பெற்று வருகிறது.கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜக கட்சியில் நட்சத்திர வேட்பாளரான அண்ணாமலையும் பின்னடைவைச் சந்தித்து வருகிறார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட பிஜேபி கட்சியில் மாநிலத்தலைவர் எல். முருகன் முன்னிலை பெற்று வருகிறார்.

    அதிமுக கட்சிக்கு மீண்டும் கொங்கு மண்டலம் கைகொடுத்திருக்கிறது என்பதையே தேர்தல் முன்னிலை நிலவரங்கள் உணர்த்துகின்றன.

    கொங்கு மண்டலத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய மாவட்டங்கள் அடங்கும்.

  6. புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் பாஜக வெற்றி அதிகாரப் பூர்வ அறிவிப்பு

    புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஜான் குமார் 7229 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    இதில் பாஜக வேட்பாளர் ஜான்குமார் 16687 வாக்குகளை பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஷாஜகான் 9458 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

  7. தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்?

    தேர்தல் முடிவுகள் குறித்து பிபிசி தமிழ் வழங்கும் நேரலை

  8. புதுச்சேரி கதிர்காமம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி, அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

    புதுச்சேரி கதிர்காமம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    கதிர்காமம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரமேஷ் 12,246 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.இவர் அதிக பட்சமாக 17775 வாக்குகள் பெற்றுள்ளார்.

    இவரை எதிர்த்து போட்டியிட்ட 5529 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் செல்வானந்த் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

  9. கணிசமான வாக்குகளை பெற்றுள்ள நாம் தமிழர்

    நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்பட அந்த கட்சியின் வேட்பாளர்கள் யாரும் முன்னிலை பெறவில்லை.

    இதுவரை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளில் எங்கும் வெற்றியை நெருங்கவில்லை என தெரிகிறது. 234 தொகுதிகளில் தனித்து நின்ற நாம் தமிழர் கட்சியில், 117 பெண் வேட்பாளர்களை அந்த கட்சி நிறுத்தியது. திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட சீமான் வெற்றி பெறுவார் என அவரது ஆதரவாளர்கள் பெருமளவில் எதிர்பார்த்த நிலையில், அவர் முன்னிலையில் இல்லை.

    ஆனால், திமுக, அதிமுக கட்சிகளை விடுத்து தனித்து நின்று தேர்தலை எதிர்கொண்ட அந்த கட்சி பல தொகுதிகளில் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, திருவொற்றியூர் தொகுதியில், சுமார் 22.32 சதவீத வாக்குகளை சீமான் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  10. புதுவை - உப்பளம் தொகுதியில் திமுக வெற்றி

    புதுச்சேரியில் உள்ள உப்பளம் தொகுதியில், திமுக வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உப்பளம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அனிபால் கென்னடி, 4780 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் 13433 வாக்குகள் பெற்றுள்ளார்.

    இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அன்பழகன் 8653 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

  11. திருநெல்வேலி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம் - காரணம் என்ன?

    திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    17 C Formல் உள்ள எண்ணுக்கும், கன்ட்ரோல் யூனிட்டில் உள்ள எண்ணுக்கும் வித்தியாசம் இருப்பதால் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    திருநெல்வேலி தொகுதியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் இதுவரை முன்னிலை வகித்து வருகிறார்.

  12. மு.க. ஸ்டாலின் கடந்து வந்த பாதை

    தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில், திமுக அதிக இடங்களில் முன்னிலை பெற்று வரும் நிலையில், அதன் தலைவர் மு.க. ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கை குறித்த கட்டுரை இது.

    தி.மு.கவின் பகுதி பிரதிநிதியாக அரசியல் வாழ்வைத் துவங்கி, கட்சியின் தலைவராக உயர்ந்திருக்கும் மு.க. ஸ்டாலின், தான் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளில் கடுமையாக உழைக்கக்கூடியவர்.

    தி.மு.கவின் இளைஞரணி செயலராக மு.க. ஸ்டாலின் மீது வெளிச்சம் படர ஆரம்பித்தபோது, வாரிசு அரசியல் என்ற விமர்சனம் எழுந்தாலும் மு. கருணாநிதியின் மகன் என்பதால் மட்டுமே தான் இந்த இடத்திற்கு வரவில்லை என்பதை தன் கடுமையான உழைப்பின் மூலம் சுட்டிக்காட்டியவர் மு.க. ஸ்டாலின்.

  13. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: திமுக தனித்து பெரும்பான்மை இடங்களைப் பிடிக்குமா?

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை சுமார் 5 மணி நேரத்தைக் கடந்திருக்கும் நிலையில் திமுக கூட்டணி உறுதியான முன்னிலையை வகிக்கிறது.

    அந்தக் கூட்டணி முன்னிலை வகிக்கும் இடங்கள் வெற்றிக்குத் தேவையான 118 இடங்களைத் தாண்டி கணிசமான அளவு அதிகமாக உள்ளது.

    முதல்வர் எடப்படாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தங்கள் தொகுதிகளில் கணிசமான முன்னிலை பெற்றுள்ளார்கள்.

  14. கோவை மாவட்டம் - அதிக இடங்களில் அதிமுக கூட்டணி முன்னணி

    இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், பகல் 1 மணிக்கு கோவை மாவட்ட தொகுதிகளின் அதிகாரபூர்வ முன்னணி நிலவரம் என்ன?

    மதியம் 1 மணி நிலவரம்

    மேட்டுப்பாளையம்

    அதிமுக - 30590

    திமுக - 31769

    பொள்ளாச்சி

    அதிமுக - 28765

    திமுக - 23248

    கிணத்துக்கடவு

    அதிமுக - 21666

    திமுக - 17100

    மநீம - 3234

    சூலூர்

    அதிமுக - 40475

    திமுக - 28163

    மநீம - 3667

    கவுண்டம்பாளையம்

    அதிமுக - 34687

    திமுக - 29047

    மநீம - 5029

    வால்பாறை

    அதிமுக - 55193

    சிபிஐ - 37533

    நாத - 4489

    கோவை வடக்கு

    அதிமுக - 9968

    திமுக - 9046

    மநீம - 2400

    கோவை தெற்கு

    மநீம - 11409

    காங்கிரஸ் - 9367

    பாஜக - 8575

    தொண்டாமுத்தூர்

    அதிமுக - 47074

    திமுக - 22107

    மநீம - 2453

    மன்சூர் - 113

    சிங்காநல்லூர்

    அதிமுக - 11583

    திமுக - 9658

    மநீம - 5857

  15. காட்பாடியில் துரைமுருகன் பின்னடைவு

    தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கையில், திமுக வேட்பாளர்கள் கூடுதல் தொகுதிகளில் முன்னிலை வகித்து வரும் சூழலில், அக்கட்சியின் பொது செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் காட்பாடி தொகுதியில் பின்னடைவை சந்தித்து வருகிறார்.

    காட்பாடி தொகுதியில் பலமுறை வென்ற துரைமுருகனை விட, அதிமுக வேட்பாளரான ராமு 1309 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகிக்கிறார்.

    அதேவேளையில், ஏ.வ. வேலு, கே. என். நேரு, பொன்முடி, தங்கம் தென்னரசு, ஐ. பெரியசாமி போன்ற பல முன்னாள் திமுக அமைச்சர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர்.

  16. அதிக இடங்களில் முன்னணி; கொண்டாட்டத்தில் அண்ணா அறிவாலயம்

    தமிழக சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கையில், திமுக வேட்பாளர்கள் 118 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதை அடுத்து, அக்கட்சி தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கொண்டாட்ட மனநிலை காணப்படுகிறது.

    தொண்டர்கள் பலர் இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும், நடனமாடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    திமுகவின் வெற்றியை கொண்டாடும் தொண்டர்கள் திமுக தலைவர் ஸ்டாலினின் பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டு ஆரவாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அதோடு, திமுகவின் பிரச்சாரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 'ஸ்டாலின்தான் வராரு' என்ற பாடலை பாடி வெற்றியை கொண்டாடிவருகின்றனர்.

    திமுகவின் மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் திமுக கொடிகளை ஏந்தி மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்

  17. செல்லூர் ராஜு, எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்கள் முன்னிலை

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்களை தவிர, அதிமுகவின் சில மூத்த அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் 2021சட்டமன்ற தேர்தலில் முன்னிலை வகிக்கின்றனர்.

    மதுரை திருமங்கலம் தொகுதியில் அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார், கோவில்பட்டியில் கடம்பூர் ராஜு, குமாரபாளையம் தொகுதியில் தங்கமணி, கோவில்பட்டி தொகுதில் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    அதேபோல், கடலூர் தொகுதியில் எம்.சி.சம்பத், ஆரணி தொகுதியில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், கோபி தொகுதியில் அமைச்சர்செங்கோட்டையன், தொண்டாமுத்தூரில் எஸ்.பி. வேலுமணி, பவானி தொகுதியில் கே சி கருப்பணன். ராசிபுரம் தொகுதியில் அமைச்சர் சரோஜா மற்றும் திண்டுக்கல் தொகுதியில் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரும் முன்னிலை பெற்றுள்ளனார்.

    தற்போதைய நிலவரப்படி, அதிமுகவைச் சேர்ந்த 15 முக்கிய அமைச்சர்கள் முன்னிலையில் உள்ளனர். எட்டு மூத்த அமைச்சர்கள் பின்னடைவை சந்திக்கின்றனர்.

  18. முன்னிலையை உறுதிப்படுத்தும் திமுக கூட்டணி

    தேர்தல் ஆணையத் தகவல்களின்படி திமுக கூட்டணி தமது முன்னிலை நிலவரத்தை உறுதிப்படுத்தி வருகிறது. 231 தொகுதிகளுக்கான முன்நிலை நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் வெற்றிக்குத் தேவையான 118 இடங்களை திமுக மட்டுமே பெற்றுள்ளது. தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை திமுக என்பது உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்துதான் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் அதிமுக 79 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. கூட்டணி கணக்குகளைப் பார்த்தால், 137 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. 93 இடங்களில் அதிமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. மக்கள் நீதி மையம் ஓர் இடத்தில் முன்னிலை வகிக்கிறது.

  19. தொடர்ந்து முன்னிலை வகிக்கும் எடப்பாடி பழனிசாமி

    இன்று காலை முதல் நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகித்து வருகிறார்.

    அந்த தொகுதியில் கடைசியாக வெளியான தகவல்களின்படி, எடப்பாடி பழனிசாமி 24565 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகிக்கிறார்.

    அதேவேளையில், நெல்லை தொகுதியில் நான்காம் சுற்றில் 4424 வாக்குகள்கூடுதலாக பெற்று பாஜக முன்னிலை வகிக்கிறது.

    பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் இதுவரை 13,239 வாக்குகள் பெற்றுள்ளார்.

  20. சென்னையில் அனைத்து தொகுதிகளிலும் திமுக முன்னிலை

    தமிழக சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கையில், சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ள நிலையில், சென்னையின் மற்ற 15 தொகுதிகளிலும் திமுக முன்னிலை வகிக்கிறது.

    கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை பெற்றுள்ளார். அதேபோல் அக்கட்சியின் இளைஞரணி தலைவரான உதயநிதி ஸ்டாலின் முன்னிலை பெற்றுள்ளார்.