புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இந்த 2021 சட்டமன்ற தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளுக்கு இடையே இரு முனை போட்டி நடைபெற்றது.
கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணும் பணி தொடங்கி முன்னணி நிலவரங்கள் அறிவிக்கப்பட்ட நேரத்தில் இருந்தே பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
புதுச்சேரி அரசியல் வரலாற்றில் இந்த 2021 சட்டமன்ற தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தேர்தல் தொடங்குவதற்கு 2 மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சபாநாயகர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருந்த நிலையில், முக்கிய பிரமுகர்கள் விலகியதால் கட்சி தலைமைக்கு சட்டமன்ற தேர்தலில் முகம் தெரிந்த வேட்பாளர்கள் இல்லாத காரணத்தினால் யாரை வேட்பாளர்களாக நிறுத்துவது என்ற குழப்பமான சூழல் நிலவியது. இதன் காரணமாக கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் 21 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, இந்த முறை 6 தொகுதிகள் குறைந்து 15 தொகுதிகளில் மட்டுமே தேர்தலில் போட்டியிட்டது. மேலும், கடைசி நேரத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மல்லாடி கிருஷ்ணராவ் என்.ஆர்.காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்ட காரணத்தினால், ஏனாம் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடவில்லை. இதற்கு மாறாக ஏனாம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியினர் சொற்ப இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர வேட்பாளர்களாக பார்க்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி உள்ளிட்டோர் தோல்வி அடைந்துள்ளனர்.
இந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அறிமுகம் இல்லாத வேட்பாளர்கள், தொகுதியில் செல்வாக்கு குறைந்த வேட்பாளர்களை கொண்டு களம் கண்டது அக்கட்சிக்கு சரிவாக அமைந்துள்ளது. மேலும், கடந்த ஆட்சியில் மக்கள் நல திட்டங்களை சரியாக செயல்படுத்த முடியாமல் போனது காங்கிரஸுக்கு பாதமாக மாறியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தல்களில், பாஜக குறைந்த பட்ச வாக்குகள் பெற முடியாமல் இருந்தனர்.
இந்த நிலையில், இந்த முறை அதிக இடங்களில் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, மாற்று கட்சியை சேர்ந்த முகம் தெரிந்த அரசியல் பிரபலங்களை பாஜக வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது. மேலும் புதுச்சேரியின் அரசியல் ஆளுமை பெற்ற என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் என்.ரங்கசாமியின் ஈர்ப்பு பாஜக வெற்றிக்கு படிக்கட்டுக்களாக அமைந்துள்ளது என மூத்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.