அதிமுக அலுவலகம் யாருக்கு? ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு ஜூலை 25இல் ஆஜராக நோட்டீஸ்
கட்சி அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை தீர்மானிக்க இந்த விசாரணைக்கு வருமாறு இருவரும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் வன்முறை தீவிரமாகாமல் தடுக்கவே அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
பிரசாந்த் முத்துராமன்
பொதுக்குழு மண்டபத்துக்கு ஈபிஎஸ் வருகை
அ.இ.அ.தி.மு.க. பொதுக் குழுவில் கலந்து கொள்ள எடப்பாடி பழனிசாமி வரும் நேரலைக்காட்சிகள்.
வழக்கமாக காரில் வரும் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தன் சென்னை இல்லத்திலிருந்து கிளம்பி வானகரம் பொதுக்குழு மண்டபம் வரை வேனில் வந்தார். வழி நெடுக தன் ஆதரவாளர்களை நோக்கி கையசைத்தும் வணங்கியும் வந்தார்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, அதிமுக தலைமை அலுவலக பூட்டை உடைத்தனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் - ஈபிஎஸ் ஆதரவாளர்களுடன் கடும் மோதல்
அதிமு தலைமை அலுவலகத்துக்கு தொண்டர்கள் சூழ தமது கேரவன் வாகனத்தில் ஓ.பன்னீர்செல்வம் வந்துள்ளார். அதேவேளை, அவரது ஆதரவாளர்கள் பெருமளவில் அங்கு திரண்டனர்.இந்த நிலையில், அதில் ஒரு குழுவினர் அதிமுக தலைமையக கதவின் பூட்டை உடைத்தனர்.
அப்போது ஓபிஎஸ் ஆதரவாளர்களை தாக்க ஈபிஎஸ் ஆதரவாளர்கள் முற்பட்டனர். ஆனால், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிக அளவில் திரண்டிருந்ததால் அவர்களால் முன்னேறி கதவு உடைக்கப்பட்ட பகுதிக்கு வர முடியவில்லை.இதற்கிடையே, ஓ.பன்னீர்செல்வத்தின் வாகனமும் கட்சி தலைமை அலுவலக பகுதிக்கு வந்தது. அங்கிருந்து தொண்டர்கள் சூழ ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு உள்ளே அழைத்துச் செல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து அந்த பகுதிக்கு போலீஸாரும் வந்துள்ளனர். இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதிமுக தலைமை அலுவலகம் அருகே பயங்கர மோதல்
ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் கற்கள் மற்றும் ஆயுதங்களை கொண்டு தாக்கி கொள்வதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஓ. பன்னீர்செல்வத்தின் வாகனம் அதிமுக தலைமை அலுவலகம் அருகே செல்ல முடியாத அளவுக்கு கல்வீச்சு நடைபெற்று வருகிறது. இதனால், கலவர பூமியாக காட்சியளிக்கிறது அதிமுக தலைமை அலுவலகம்.
பொதுக்குழுவுக்கு புறப்பட்ட அதிமுகவினர் விபத்து
செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் அடுத்த சிறுநாகலூர் ரெட்ட ஏரிக்கரை அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே உள்ளே சென்டர் மீடியனில் ஏறிச்சென்று எதிர்ப்புற ( திருச்சி-சென்னை மார்க்கம்) சாலைக்கு சென்றது.
மேலும், அச்சாலையில் வந்து கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து மீது உரசியவாறு சென்ற லாரி, சென்னை வானகரத்தில் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சென்ற நபர்கள் வந்த வேன் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில், ஆம்னி பேருந்தில் பயணித்த 6 பேர் மற்றும் வேனில் பயணித்த 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த மேல்மருவத்தூர் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு மேல்மருவத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
லாரி மோத வருவதை கவனித்த ஆம்னி பேருந்து ஓட்டுநர், சாமர்த்தியமாக செயல்பட்டதால் உயிரிழப்பு சம்பவம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தினால், திருச்சி-சென்னை செல்லும் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸார் விபத்துக்குள்ளான வாகனங்களை அகற்றிய பின் வாகன போக்குவரத்து சீரானது.
பட மூலாதாரம், Getty Images
சசிகலா, ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக குரல் எழுப்பினால் அடி உதை
அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
படக்குறிப்பு, சென்னை ராயப்பேட்டை
அதிமுக பொதுக்குழு: இரவில் கிழிக்கப்பட்ட பேனர்கள்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கிழிக்கப்பட்ட பேனர்
சென்னை வானகரத்தில் அதிமுகவின் பொது குழு கூட்டம் இன்று காலை9.15க்கு தொடங்கி நடைபெற உள்ளது.அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன. இந்த நிலையில்,வரவேற்புக்காக வைக்கப்பட்டிருந்த பேனர்கள் மர்ம நபர்களால் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா உருவப்படம், பேரறிஞர் அண்ணா உருவப்படம், முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் உருவப்படம் உள்ள பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளன.கடந்த முறை நடந்த பொதுக்குழு கூட்டத்தின் போது வைக்கப்பட்டிருந்த 30-க்கும் மேற்பட்ட பேனர்கள் கிழிக்கப்பட்டு அப்போது பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தற்போதும் பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளது அக்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வணக்கம் நேயர்களே!
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, வணக்கம்
நான் பிரசாந்த் முத்துராமன். பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.
இன்றைய தினம் அதிமுகவின் பொதுக்குழு குறித்த விவரங்கள் மற்றும் இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.