அதிமுக அலுவலகம் யாருக்கு? ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு ஜூலை 25இல் ஆஜராக நோட்டீஸ்

கட்சி அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை தீர்மானிக்க இந்த விசாரணைக்கு வருமாறு இருவரும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் வன்முறை தீவிரமாகாமல் தடுக்கவே அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

பிரசாந்த் முத்துராமன்

  1. என்.டி ராமா ராவ் மகள் உமா மகேஸ்வரி தூக்கிட்டு உயிரிழப்பு

    ஹைதராபாத்தில் முன்னாள் முதல்வர் என்.டி ராமா ராவ் மகள் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. அவரது உடலை, உடல் கூராய்வு செய்ய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  2. வந்துகொண்டிருக்கும் செய்தி, மத்திய பிரதேசம் - ஜபல்பூர் மருத்துவமனையில் நடந்த தீ விபத்தில் எட்டு பேர் உயிரிழப்பு

    மத்திய பிரதேச மாநிலத்தில் ஜபல்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் நடந்த தீ விபத்தில் இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக பி.டி.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. மேலும், இந்த விபத்தில் ஒன்பது பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    மருத்துவமனையில் சிக்கியுள்ளவர்கள் மீட்கப்பட்டனர் என்று ஜபல்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  3. இந்து ராஷ்டிரா: இந்தியா இந்து தேசமாக மாறுகிறதா? அதில் சிறுபான்மையினரின் நிலை என்ன?

  4. கள்ளக்குறிச்சி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக தாயார் மனு - இன்று நடந்தது என்ன?

  5. புதுச்சேரியில் வயோதிக தம்பதியுடன் வீட்டுக்கு 'சீல்' - நடந்தது என்ன?

  6. இரானிடம் அணுகுண்டை தயாரிக்கும் திறன் உள்ளது - இரான் அணுசக்தி முகமை தலைவர்

    இரானிய அணுசக்தி முகமை

    பட மூலாதாரம், Getty Images

    இரானின் அணுசக்தி முகமை தலைவர் மொஹம்மத் எஸ்லாமி, தமது நாட்டுக்கு அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் திறன் இருப்பதாகவும், ஆனால் அத்தகைய திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார். அவரை மேற்கோள்காட்டி இரானிய செய்தி முகமையான ஃபார்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் இரானின் அதிஉயர் மத குருவின் ஆலோசகரும் இதே கருத்தை வெளியிட்டிருந்தார்.

    இரானில் இதுபோன்ற நுட்பமான தகவல்களை உயர்நிலையில் இருப்பவர்கள் பொதுவெளியில் வெளியிடுவதில்லை.

    அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட பிறகு இரான் அதன் அணுசக்தி திட்டத்தை மேலும் விரிவுபடுத்தியது. எனினும், இரான் தனது அணுசக்தித் திட்டம் அமைதியான நோக்கத்திற்காகவே என்று தொடர்ந்து கூறி வருகிறது.

    ஆனால், இரானின் இந்தக் கூற்றை மேற்கு நாடுகள் ஏற்கவில்லை. அணுசக்தி ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான காலம் மெல்ல, மெல்ல கடந்து கொண்டிருப்பதாக அவை கூறுகின்றன.

    இரானின் அணுசக்தி திட்டம் திரும்பபெறப்படும் நிலையை அடையக்கூடாது என்று அந்நாட்டின் அணுசக்தி முகமையின் தலைவர் மொஹம்மத் எஸ்லாமி கூறுகிறார்.

    இவரது இந்த கருத்து, சமீபத்தில் இரானின் அதி உயர் தலைவர் தலைவரின் ஆலோசகர் கமால் கராசியின் கூற்றை மீண்டும் வலியுறுத்தும் விதமாக பார்க்கப்படுகிறது.

  7. விருத்தாசலத்தில் பிளஸ் டூ மாணவி தற்கொலை - முழு விவரம்

  8. நன்றி நேயர்களே...

    இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருந்தமைக்கு நன்றி.

    இதுவரையிலான இன்றைய முக்கிய நிகழ்வுகள்:

    • அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
    • அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்களை நிறைவேற்ற செயற்குழு ஒப்புதல் அளித்தது.
    • அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
    • அதிமுகவில் இருந்து ஓ.பி.எஸ்.சை நீக்கித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • இந்த பொதுக்குழு செல்லாது என, சசிகலா தெரிவித்தார்.
    • "அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்களை ஒரு வாகனத்தில் அள்ளிச்சென்றிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அதற்கு காவல்துறையும் உடந்தையாக இருந்துள்ளது" என இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
    • திமுகவை வம்புக்கு இழுக்க வேண்டாம் என, அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அதிமுகவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய பிபிசி தமிழ் இணைய தளம், முகநூல், ட்விட்டர், இண்ஸ்டாகிராம் பக்கங்களில் தொடர்ந்து இணைந்திருங்கள்.

  9. சேலம் எட்டு வழிச்சாலை எப்போது சாத்தியமாகும்? மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங் பேட்டி

    வி.கே. சிங்

    பட மூலாதாரம்,

    சென்னை - சேலம் எட்டு வழிசாலை 90 சதவீத நிலம் கையகப்படுத்தப்படும் பணிகள் முடிந்தால் மட்டுமே சாலை அமைக்கும் திட்டம் தொடங்கப்படும் என்றும் இல்லாவிட்டால் அந்த சாலை திட்டம் நிறைவேறாது என்றும் இந்திய சாலை போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே. சிங் தெரிவித்துள்ளார்.

    வேலூரில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு செய்தியாளர்களிடம் பேசினார் வி.கே. சிங். அப்போது அவர் பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசினார். அதன் விவரம்:

    • பசுமை விமான நிலையம் அமைக்க தமிழக அரசு இரண்டு இடங்களை கூறியுள்ளனர் அதில் ஓர் இடத்தை தெரிவிக்க வேண்டும்.
    • பாஜக நிர்வாகிகளுடன் தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சி குறித்து ஆலோசித்தேன்.
    • தமிழ்நாட்டி்ல சாலை திட்டத்தின் பெரும்பாலான பணிகளை தமிழக பொதுப்பணித்துறை செய்து வருகிறது. ஆனால் மத்திய சாலை போக்குவரத்துத்துறை நிதி மூலம் பணிகள் நடந்து வருகிறது.
    • சென்னை விமான முனைய பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் விமானத்தை இயக்கி சோதனை செய்யபடும்.
    • தமிழ்நாட்டில் பசுமை விமான நிலையத்தை அமைக்க தமிழ்நாடு அரசு தான் இடத்தை அறிவிக்க வேண்டும். இது தொடர்பாக இரண்டு இடங்களை ஆய்வு செய்துள்ளோம். எந்த இடம் என்பதை தமிழக அரசு தான் இறுதியாக அறிவிக்க வேண்டும்.
    • சுங்கச்சாவடிகளை அகற்ற தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் சுங்கச்சாவடி என்பது 1952 ஆம் ஆண்டு முதல் உள்ளது.
    • அரசாங்கம் புதிய சுங்கச்சாவடிகளை தொடங்கவில்லை. ஏற்கெனவே போடப்பட்ட சாலைகளை சீரமைக்கவும் பராமரிக்கவுமே சுங்கசாவடிகள் உள்ளன.
    • சாலைகளின் நடுவில் உள்ள சுங்கசாவடிகள் இரண்டு ஆண்டுகளில் அகற்றப்பட்டு அனைத்தும் ஜிபி.எஸ் வசதியுடன் நவீன டிஜிட்டல் மயம் மூலம் தானியங்கி முறையிலான கட்டணத்தை கிலோ மீட்டருக்கு ஏற்றவாறு வசூலிக்கும் வசதி ஏற்படுத்தப்படும்.
    • வேலூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக மாநில அரசு ஏதும் கூறவில்லை. அதற்காக நிலம் தேவைப்படுவதால் அதை கையகபடுத்த வேண்டும்.
    • மதுரை விமான நிலையம் முத்துராமலிங்க தேவர் என பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி எங்களுக்கு அனுப்பினால் நாங்கள் பரிசீலிப்போம்.
    • அக்னிபத் திட்டத்தில் பணியில் சேர அதிகம் பேர் விரும்பி விண்ணப்பித்துள்ளனர். இது நாட்டிற்கு நன்மைகள் பயக்கும். கார்கில் போரின் பிறகு ராணுவத்தில் பல குழுக்கள் உருவாக்கப்பட்டன. அது போல் தான் அக்னிபத் திட்டமும்.
    • சென்னை -சேலம் எட்டு வழிசாலை பணிகள் நடக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் சில இடங்களில் திட்டத்துக்கு நிலம் தேவைப்படுகிறது. சில இடங்களில் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். சாலை போட நிலம் வழங்கப்படாவிட்டால் எந்த சாலையையும் அமைக்க முடியாது. 90 சதவீத நிலம் கையப்படுத்தப்பட்டால் மட்டுமே சாலை அமைக்கும் திட்டத்தை துவங்க முடியும். மக்களுக்கு பிரச்ணைக்கு என்றால் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்றார் வி.கே. சிங்.
  10. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 6 தமிழ்நாடு மீனவர்கள் கைது

    இலங்கை காரைநகர் கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 6 தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் வசம் இருந்த ஒரு படகையும் கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து யாழ்ப்பாண மாவட்டம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு மீனவர்களை கடற்படையினர் அழைத்துச் சென்றனர்.

  11. போலி ஐபிஎல்: ரஷ்ய சூதாட்டக்காரர்களை ஏமாற்றிய குஜராத் கிராமத்தினர் கைது

    போலி ஐபிஎல்

    பட மூலாதாரம்,

    இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் (ஐபிஎல்) போலியான பதிப்பை உருவாக்கி, ரஷ்யாவில் சூதாட்டக்காரர்களை ஏமாற்றிய ஒரு கும்பலை இந்தியாவில் போலீசார் கைது செய்துள்ளனர்.

    இந்த போலி ஆட்டம் மூலம் இந்திய ரூபாய் மதிப்பில் மூன்று லட்சத்துக்கும் மேல் (கிட்டத்தட்ட $4,000) அவர்கள் ஏமாற்றியதாக போலீசார் தெரிவித்தனர்.

    இது குறித்து விரிவாக படிக்க

  12. புத்தர் முதல் காமசூத்ரா வரை: இந்தியர்களோடு இணைந்த 'மாம்பழ' கதை

  13. இந்தியாவில் அதிக வருடங்கள் வாழ்ந்த 'ராஜா' புலி இறந்தது

    ராஜா புலி

    பட மூலாதாரம்,

    இந்தியாவில் மிக நீண்ட காலம் உயிர் பிழைத்த பெங்கால் புலி 'ராஜா' உயிரிழந்தது. அதற்கு வயது 25 வருடங்கள் 10 மாதங்களாகும்.

    மேற்கு வங்க மாநிலத்தின் அலிபுர்துவாரின் மதரிஹாட்டில் உள்ள தெற்கு கைர்பாரி புலிகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் வளர்ந்து வந்த ராஜா புலி, இதுநாள்வரை 26 ஆண்டுகள் வரை வாழ்ந்த மற்றொரு புலிக்கு அடுத்தபடியாக நாட்டிலேயே மிக நீண்ட காலம் உயிர் பிழைத்த புலியாக விளங்கியது.

    "எஸ்கேபி மீட்பு மையத்தில் இருந்து 'ராஜா' என்ற புலி இன்று அதிகாலை 3 மணியளவில் இறந்துவிட்டது என்பதை மிகவும் சோகமான இதயத்துடன் உங்களுக்குத் தெரிவிக்கிறோம், அதன் மறைவால் நாங்கள் மிகவும் துக்கத்தில் ஆழ்ந்துள்ளோம்,” என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

  14. வந்துகொண்டிருக்கும் செய்தி, அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த இபிஎஸ் - ஓபிஎஸ் ஆட்சேப மனு தாக்கல்

    சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை நீக்குவது உள்பட பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மான விவரம், இந்திய தேர்தல் ஆணையத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வான எடப்பாடி பழனிசாமியின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், கட்சி விதிகளின்படி பொதுக்குழு நடத்தப்படவில்லை என்று ஆட்சேபம் தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அதில், இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வை ஏற்கக்கூடாது, அவரது தலைமைக்கு அங்கீகாரம் தரக்கூடாது என்றும் ஓ பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

  15. வந்துகொண்டிருக்கும் செய்தி, அதிமுக அலுவலக பிரச்னை: இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு ஜூலை 25இல் ஆஜராக நோட்டீஸ்

    கட்சி அலுவலகம்

    அதிமுக கட்சி அலுவலகம் யாருக்கு என்பது குறித்த விசாரணைக்காக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேரிலோ வழக்கறிஞர் மூலமாகவோ ஜூலை 25ஆம் தேதி ஆஜராகுமாறு ஆர்டிஓ நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

    கட்சி அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை தீர்மானிக்க இந்த விசாரணைக்கு வருமாறு இருவரும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    இதற்கான நோட்டீஸை இரு தலைவர்களிடமும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இன்று நேரில் வழங்கியுள்ளனர்.

    இதற்கிடையே, அதிமுக அலுவலகத்தில் வன்முறை தீவிரம் அடைவதைத் தடுக்கவே அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

    முன்னதாக, அதிமுக அலுவலக வளாகத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் பரஸ்பரம் மோதிக் கொண்டனர். இரு தரப்பினரும் கைகல்பபில் ஈடுபட்டதுடன் பரஸ்பரம் தாக்கிக் கொண்ட காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாயின.

    தமிழ்நாடு காவல்துறை

    பட மூலாதாரம்,

    படக்குறிப்பு, சென்னை காவல்துறை பத்திரிகை செய்தி - பக்கம் 1
    தமிழ்நாடு காவல்துறை

    பட மூலாதாரம்,

    படக்குறிப்பு, சென்னை காவல்துறை பத்திரிகை செய்தி - பக்கம் 2
  16. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை: அர்ஜுன் சம்பத் உள்பட 43 பேர் கைது

    அர்ஜூன் சம்பத்

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட முயன்ற அர்ஜுன் சம்பத் உள்பட 43 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தூத்துக்குடியில் பிரிவினைவாதிகளின் சதித்திட்டம் காரணமாக மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரியும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுகத்தில் முற்றுகையிட்டு மனு அளிக்க வந்தனர்.

    இதையடுத்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் சிலரை மடடும் மனு அளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    இதற்கிடையே ஆட்சியர் அலுவலகத்துக்குள் அத்திமீறி நுழைய முயன்றதாக 39 பெண்கள் உட்பட 43 பேரை சிப்காட் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மடத்தூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

  17. தனுஷ்கோடி மணல் திட்டில் பல மணி நேரம் தவித்த 6 இலங்கை தமிழர்கள் மீட்பு, பிரபுராவ் ஆனந்தன்

    இலங்கை அகதி

    இலங்கையில் நீடித்து வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் இருந்து வெளியேறி தனுஷ்கோடி மணல் திட்டில் பல மணி நேரம் தவித்த ஆறு இலங்கை தமிழர்களை இந்திய கடலோர காவல் படை உதவியுடன் மரைன் போலீஸார் மீட்டுள்ளனர்.

    தற்போது அவர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் கடும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு இலங்கை வவுனியா மாவட்டம் பறையாளங்குளம் பகுதியை சேர்ந்த பாலசுகந்தன், அனுஜா, லிங்கேஸ்வரன், அவர்களின் இரண்டு பிள்ளைகள் உட்பட 6 பேர் ஒரு ஃபைபர் படகில் புறப்பட்டு இன்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் தனுஷ்கோடி ஒன்றாம் மணல் திட்டில் வந்திறங்கினர்.

    இலங்கையர்கள்

    பட மூலாதாரம், bb

    அந்த பகுதிக்கு வந்த தமிழ்நாடு மீனவர்களிடம் தங்களை காப்பாற்றுமாறு இலங்கை தமிழர்கள் கேட்டுள்ளனர். இது குறித்து மரைந் போலீஸாருக்கு மீனவர்கள் தகவல் தெரிவிக்கவே, இந்திய கடலோர காவல் படை உதவியுடன் ஹோவர் கிராஃபட் படகு மூலம் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    கரைக்குத் திரும்பிய அவர்கள் விசாரணைக்குப் பிறகு அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டனர்.

    இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை விலை அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு உள்ளது.எனவே பட்டினி சாவில் இருந்து உயிரை காப்பாற்றி கொள்ள இலங்கை பணம் 4 லட்சம் ரூபாய் கொடுத்து ஃபைபர் படகில் தமிழ்நாட்டுக்கு வந்ததாக இலங்கை தமிழர்கள் தெரிவித்தனர்.

    இலங்கை அகதி

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி முதல் இன்று வரை இலங்கையில் இருந்து 109 இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டில் அஞ்சம் அடைந்துள்ளனர்.

    சமீபத்திய மாதங்களில் தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்த இலங்கையர்களை அகதியாக கருதும் விஷயத்தில் இந்திய வெளியுறவுத்துறை எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதனால், தமிழ்நாட்டுக்கு அடைக்கலம் தேடி வந்தாலும் அந்த மக்கள் அகதியாக பதிவு செய்யப்படாமல் தற்காலிகமாக அடைக்கலம் தேடி வந்தவர்களாகவே கருதப்பட்டு தமிழ்நாடு அரசும் உதவி வருகிறது.

  18. அதிமுக நெருக்கடி: திமுகவை வம்புக்கு இழுக்க வேண்டாம் - எச்சரிக்கும் ஆர்.எஸ். பாரதி

    திமுக அதிமுக மோதல் விளக்கம்
    படக்குறிப்பு, ஆர்.எஸ். பாரதி

    அதிமுக உள்கட்சி சண்டையில் திமுகவுக்கு தொடர்பு உள்ளதாகக் கூறி எங்களை வம்புக்கு இழுக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார் திமுக முன்னாள் எம்.பி ஆர்.எஸ். பாரதி.

    இது தொடர்பாக சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ். பரதி, "அதிமுக கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவை எடப்பாடி பழனிசாமி எப்படி நடத்தினார் என்பது எல்லோருக்கும் பட்டவர்த்தனமாகவே தெரியும்.," என்று கூறினார். அவரது பேட்டியில் இருந்து....

    தன்னுடன் தொடர்புடையவர்களின் இடங்களில் வருமான வரித்துறை சோதனைகள் நடந்து வருகின்றன. அந்த வருமான வரித்துறை அதிமுக கூட்டு வைத்திருக்கும் மத்திய அரசின் கையில் உள்ளது. அதைக் கண்டித்துப் பேச எடப்பாடி பழனிசாமியால் முடியவில்லை.

    எதற்கெடுத்தாலும் தமிழ்நாடு முதலமைச்சரையும் திமுகவையும் தொடர்புபடுத்திப் பேசிவது எடப்பாடி பழனிசாமிக்கு வாடிக்கையாகி விட்டது. அவர்களின் கட்சிக்குள் நிலவும் பிரச்னையை அவர்களாகவே தீர்த்துக் கொள்ள வேண்டும்.

    ஜெயலலிதா, எம்ஜிஆர் காலத்தில் கூட அதிமுக பொதுக்குழு கூட்டங்கள் நடந்துள்ளன. அப்போது எல்லாம் அந்த கூட்டங்களில் பங்கேற்க வந்தவர்கள் ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்க வைக்கப்பட்டதாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

    கடந்த இரண்டு நாட்களாக எந்த ஹோட்டல்களிலும் தங்குவதற்கு அறை கிடைக்காத நிலை இருந்தது. இதை செய்தியாளர்களே விசாரித்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இந்த அளவுக்கு கட்சிக்கூட்டத்தை நடத்தும் அளவுக்கு எடப்பாடி பழனிசாமி பணத்தை சம்பாதித்து வைத்துள்ளார்.

    ஆனால், இதில் திமுகவை தொடர்புபடுத்தக் கூடாது. நீதிமன்றத்துக்கு கட்சித் தலைமை தொடர்பாக சென்றது யார்? எம்ஜிஆர் மறைந்ததில் இருந்து அதிமுக ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விவரத்தை சந்தித்து பிரிந்து பிறகு சேரும் வழக்கத்தை கொண்டுள்ளது.

    இப்போது கூட இந்த கட்சியினர் பிரிந்து விட்டாலும் மீண்டும் சேர்ந்து விடுவார்கள் என நினைக்கிறேன். சசிகலா காலில் விழுந்து பதவியை வாங்கியவர்கள் ஒரே வாரத்தில் அவருக்கு எதிராக செயல்பட்ட வரலாறையும் அந்த கட்சி பார்த்துள்ளது.

    அதிமுக தலைமை அலுவலக மோதலில் இரு தரப்பிலும் மோதல் கடுமையாக இருந்ததால் கட்சிக்கு உரிமை கொண்டாட முற்பட்டனர். அதனால், ஆர்டிஓ தலையிட்டு கட்சி அலுவலகத்துக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுத்தார். எனவே நீதிமன்றத்தை அணுகி உரிய தீர்வை அந்த கட்சியினர் பெற வேண்டும்.

    சட்டம் ஒழுங்கு பிரச்னை வரும் என்பதாலேயே காவல்துறையும் ஆர்டிஓவும் உரிய நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார்.

    நீதிமன்றத்தின் தீர்ப்பு காலை 9 மணிக்கு வரும் என தெரியும்போது அதிமுக அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் செல்வார் என்பது கூட தெரியாமல் கட்சிக்கூட்டத்தை வானகரத்தில் நடத்திக் கொண்டிருந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவர் ஏமாந்து விட்டு பிரச்னை முற்றும் அளவுக்கு இடம்கொடுத்து விட்டு இப்போது திமுகதான் காரணம் என குற்றம்சாட்டுவதை யாரும் நம்ப மாட்டார்கள் என்றும் ஆர்.எஸ். பாரதி கூறினார்.

  19. ஜூலை 15இல் கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்: எம்பி ரஞ்சித் மதுமா

    இலங்கை நாடாளுமன்றம் ஜூலை 15ஆம் தேதி கூடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மதுமா பண்டாரா தெரிவித்துள்ளார்.

    அவரது கூற்றுப்படி, புதிய ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட வேட்பு மனுதாக்கல் ஜூலை 18ஆம் தேதி பெறப்படும் என்றும் ஜூலை 20ஆம் தேதி புதிய ஜனாதிபதி தே்ரவு செய்யப்படுவார்.

  20. அதிமுக தலைமை அலுவலக மோதல் - இதுவரை என்ன நடந்தது?

    அதிமுக மோதல்
    படக்குறிப்பு, மாவட்ட நிர்வாகத்தால் சீல் வைக்கப்பட்டுள்ள அதிமுக தலைமை அலுவலகம்
    • சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று காலையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆதரவாளர்களுக்கு இடையே நடந்த மோதலில் இரு தரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
    • இந்த நிலையில், அந்த கட்சி அலுவலக முகப்புக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே இருந்த ஆவணங்களை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எடுத்துச் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    • முன்னதாக, அந்த தலைமையகத்துக்குள் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் தமது ஆதரவாளர்களுடன் வந்திருந்தார்.
    • ஆனால், அதிமுக கட்சிப் பொதுக்குழுவை கூட்ட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • மேலும் ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கவும் சிறப்புத் தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.
    • இதையடுத்து ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை தாம் கட்சியில் இருந்து நீக்குவதாகவும் அறிவித்தார்.
    அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல்
    படக்குறிப்பு, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்க அதிகாரிகள் வந்த பிறகு அங்கிருந்து புறப்பட தயாராகும் ஓ.பன்னீர்செல்வம்
    • இந்த நிலையில், கட்சி அலுவலகத்தில் நடந்த மோதல் மற்றும் அதைக் கைப்பற்ற ஓ.பன்னீர்செல்வம் தரப்பு முயல்வதாக கூறப்பட்டதையடுத்து அங்கு காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.
    • இந்த விவகாரத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் உரிய முடிவை எடுக்கும்வரை பொதுநலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கட்சி அலுவலகத்துக்கு சீல் வைக்க மாவட்ட வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
    • இதையடுத்து கட்சித் தலைமையகத்துக்கு வந்த அதிகாரிகள், ஓ.பன்னீர்செல்வத்தை அங்கிருந்து வெளியேறும்படி நிர்பந்தித்தனர்.
    • முதலில் அதிமுக வளாகத்தில் இருந்து வெளியேற மறுத்த அவர், பிறகு தமது ஆதரவாளர்களுடன் வாகனத்தில் புறப்பட்டுச் சென்றார்.
    அதிமுக
    படக்குறிப்பு, அதிமுக தலைமை அலுவலக வளாக மோதலில் கட்சிக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன
    • இதேவேளை, கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக பொதுக்குழுவில் தேர்வான எடப்பாடி பழனிசாமி, காலையில் நடந்த மோதலில் காயம் அடைந்த அதிமுக தொண்டர்கள் சேர்க்கப்பட்டிருந்த அரசு பொது மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.
    • பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக பாெதுக்குழு விதிகளுக்கு கட்டுப்படாமல் சுயநலத்துடன் செயல்பட்டு கட்சித் தொண்டர்களை குண்டர்கள் மூலம் ஓ.பன்னீர்செல்வம் தாக்கியதாக குற்றம்சாட்டினார்.
    எடப்பாடி பழனிசாமி
    படக்குறிப்பு, எடப்பாடி பழனிசாமி
    • ஆளும் திமுகவின் துணையுடன் அதிமுக அலுவலகத்தை கைப்பற்றும் நோக்குடன் அவர் ரவுடிகளை பயன்படுத்தி மோதலை நடத்தியுள்ளதாகவும் சம்பவம் நடந்தபோது அதிமுக தலைமைக்கழகத்தில் போதிய போலீஸ் பாதுகாப்பு தரப்படவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
    • தற்போது அதிமுக தலைமை அலுவலகத்தை அரசு சீல் வைத்துள்ளதால், சிவில் நீதிமன்றத்தை அணுகி உரிய சட்ட அனுமதியைப் பெற்று கட்சித் தலைமையகத்தை மீட்போம் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
    • இதேபோல, ஓ.பன்னீர்செல்வமும் சட்ட நடைமுறைகளை மேற்கொண்டு கட்சியை மீட்போம் என்று தெரிவித்துள்ளார்.