அதிமுக அலுவலகம் யாருக்கு? ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு ஜூலை 25இல் ஆஜராக நோட்டீஸ்

கட்சி அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை தீர்மானிக்க இந்த விசாரணைக்கு வருமாறு இருவரும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் வன்முறை தீவிரமாகாமல் தடுக்கவே அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

பிரசாந்த் முத்துராமன்

  1. அதிமுக நெருக்கடி: ஓபிஎஸ் மனு நிராகரிப்புக்கு என்ன காரணம்? தீர்ப்பின் முழு விவரம்

  2. அதிமுகவில் இருந்து ஓ.பி.எஸ்.சை நீக்கித் தீர்மானம்

    "கழக கொள்கைக்கும் கோட்பாடுகளுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம். தான் கையொப்பமிட்டு கூட்டிய பொதுக்குழுவுக்கு எதிராக காவல்துறையில் புகாரளித்தது கழக விதிகளுக்கு எதிரானதாகும். கழக நலன் குறித்து சிறிதும் அக்கறையின்றி செயல்பட்டு கழகத்தின் கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அவர்களை இந்த பொதுக்குழு கண்டிக்கிறது.

    தொடர்ந்து, சட்டதிட்ட விதி 35இன் படி கழக அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க இந்த பொதுக்குழு தீர்மானித்துள்ளது.

    அத்துடன், ஆர்.வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகிய மூவரும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அவர்களின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்படுகின்றனர்" என்ற தீர்மானத்தை நத்தம் விஸ்வநாதன் பொதுக்குழுவில் வாசித்தார்.

    ஓ.பன்னீர்செல்வம்.

    பட மூலாதாரம், Getty Images

  3. ஓபிஎஸ் நீக்கம் - கே.பி.முனுசாமி பேச்சு

    பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின், நத்தம் விஸ்வநாதன் பேசிக்கொண்டிருந்தபோது, `ஓபிஎஸ்ஸை நீக்க வேண்டும்` என்று மேடைக்குக் கீழே அமர்ந்திருந்த பொதுக்குழு உறுப்பினர்கள் குரலெழுப்பினர். அப்போது குறுக்கிட்டு பேசிய கே.பி.முனுசாமி, "தொண்டர்களின் உணர்வுகள் நிச்சயம் நிறைவேற்றப்படும்" என்று பேசினார்.

    இதைத்தொடர்ந்து, திண்டுக்கல் சீனிவாசனுக்குப்பின் உரையாற்ற வந்த கே.பி.முனுசாமி, "நீதிமன்ற தீர்ப்புக்குப்பிறகு தற்போது பொதுக்குழு நடைபெற்று வருகிறது. அதிமுகவில் எந்த தியாகமும் செய்யாதவர் ஓ.பன்னீர்செல்வம்."

    பொதுக்குழு உறுப்பினர்களாகிய நீங்கள் உங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி இருக்கின்றீர்கள். அதிமுகவில் உச்ச அதிகாரம் கொண்டது பொதுக்குழுவும் பொதுக்குழு உறுப்பினர்களும்தான். இந்த நேரத்தில் திமுகவுடன் சேர்ந்து நம்மை எதிர்க்கும் நம் எதிரிகளை உங்கள் சக்தி அழிக்கும்" என்றும் பேசினார்.

  4. வரவு செலவுக் கணக்கை வாசித்த விஜயபாஸ்கர்

    16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகு அதிமுகவின் வரவு செலவுக் கணக்கை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பொதுக்குழு மேடையில் வாசித்தார்.

  5. அதிமுக பொதுக்குழு: 16 தீர்மானங்கள் என்னென்ன?

    அதிமுக

    அதிமுகவின் பொதுக்குழுகூட்டத்தில் இன்று நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள்:

    • அதிமுக அமைப்பு தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட கழக நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தல்
    • பெரியார், அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா வழங்க வலியுறுத்தல்
    • இரட்டை தலைமை முறை ரத்து. பொதுச்செயலாளர் குறித்து விவாதித்து முடிவு
    • அதிமுகவுக்கு ஒரு இடைக்கால பொதுச்செயலாளரை உருவாக்க முடிவு
    • கழக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு
    • 4 மாதங்களுக்குள் கழக பொதுச்செயலாளர் பொறுப்புக்கான தேர்தல் அறிவிப்பு
    • கழகம் எழுச்சிபெற ஒற்றைத் தலைமை தேவை
    • எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியின் சாதனைகள்
    • அம்மா அரசின் திட்டங்களை முடிவுக்கு கொண்டுவந்த திமுக அரசுக்கு கண்டனம்
    • விலைவாசி உயர்வு மற்றும் மின்வெட்டு காரணமாக திமுக அரசுக்கு கண்டனம்
    • சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க தவறிய திமுக அரசுக்கு கண்டனம்
    • மேகேதாட்டுவில் புதிய அணைகட்டும் கர்நாடகாவின் முயற்சியை தடுத்து நிறுத்த மத்திய , மாநில அரசுக்கு வலியுறுத்தல். நதிநீர் இணைப்பை விரைந்து செயல்படுத்த மாநில அரசுக்கு வலியுறுத்தல்
    • இலங்கை தமிழர்களின் நலன் காக்க மத்திய மாநில அரசுகளை வலியுத்தல்
    • அகவிலைப்படி, பழைய ஓய்வூதியம் ஆகிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு
    • நெசவாளர்களின் துயர் துடைக்கும்விதமாக, நூல் விலையேற்றத்தை தடுத்து நிறுத்த மத்திய மாநில அரசுகளுக்கு வலியுறுத்தல்
    • வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பழிவாங்கி வரும் திமுக அரசுக்கு கடும் கண்டனம்
  6. அதிமுக தலைமையக கதவை உடைத்த ஓபிஎஸ் ஆதரவு தொண்டர்கள் மீது வழக்கு

  7. அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு

    அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றாக, அதிமுகவின் இரட்டைத் தலைமை முறை ரத்து செய்யப்பட்டு பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படும் என்று தீர்மானம் 4இன் படி அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, இந்தப் பொறுப்புக்கான இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார் (தீர்மானம் 5).

    பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தேவையான விதிகள்

    • 10 ஆண்டுகள் கட்சியின் உறுப்பினராக இருக்க வேண்டும்
    • தலைமைக் கழக பொறுப்புகளில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்
    • குறைந்தது 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிதல், 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிதல் அவசியம்
    இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு
  8. அதிமுக அலுவலகத்தில் அவசர ஊர்திகள்

    சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு முன்னாள் முதல்வரும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது.

    அதேவேளை, அதிமுக தலைமை அலுவலகத்தில் கதவை உடைத்து தன் ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர் செல்வம் உள்ளே நுழைந்துள்ளார். முன்னதாக அங்கு நடைபெற்ற மோதலில் பலரும் காயமடைந்ததைடுத்து அதிமுக அலுவலகத்துக்கு அவசர ஊர்திகள் வந்துள்ளன.

    ஆம்புலன்சுகள்
  9. செயற்குழு கூட்டம் நிறைவு

    அதிமுகவின் செயற்குழு கூட்டம் நிறைவுபெற்றது. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் செயற்குழு கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது.

    இதைத்தொடர்ந்து அஇஅதிமுகவின் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. இதில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

    செயற்குழு கூட்டம் நிறைவு
  10. வந்துகொண்டிருக்கும் செய்தி, அதிமுகவில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவி -- பொதுக்குழுவில் தீர்மானம்

    அதிமுகவில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கவும் இதுவரை நடைமுறையில் இருந்த இரட்டைத் தலைமை முறையை ரத்து செய்யவும் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. முன்னதாக பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்களுக்கு செயற்குவில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.

    சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி ம்ண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்றது

    இந்த கூட்டத்தில் கட்சியில் ஜெயலலிதா இருந்த காலத்தில் இருந்ததுபோலவே கட்சியின் தலைமை பொறுப்பை பொதுச்செயலாளர் ஏற்கும் வகையிலான பதவியை மீண்டும் உருவாக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    புதிய பொதுச்செயலாளர் முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும்வரை இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க வேண்டும்.

    அதன்படியே இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை பொதுக்குழு தேர்வு செய்ய வேண்டும்.

    நிரந்தர பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தலை நான்கு மாதங்களுக்குள் நடத்தவும் பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

  11. வந்துகொண்டிருக்கும் செய்தி, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுக்கும் தீர்மானத்துக்கு செயற்குழுவில் ஒப்புதல்

    அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்ற ஏதுவாக செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்களை நிறைவேற்ற செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதில் ஒன்றாக எடப்பாடி பழனிசாமியை கட்சியின் பொதுச்செயலாளராக பொதுக்குழு தேர்ந்தெடுக்க வகை செய்யும் தீர்மானமும் இடம்பெற்றுள்ளது.

  12. வந்துகொண்டிருக்கும் செய்தி, அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்களை நிறைவேற்ற செயற்குழு ஒப்புதல்

    சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு முன்னாள் முதல்வரும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது.

    இந்த கூட்டத்தில் பொதுக்குழு கூடுவதற்கு முன்னதாக, கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. இதில், 16 தீர்மானங்களை பொதுக்குழுவில் நிறைவேற்ற முறைப்படி ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.

    அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால், இதை வலியுறுத்த உத்தேசிக்கப்பட்ட கட்சியின் பொதுக்குழுவை கூட்டுவதற்கு எதிராக கட்சியின் தற்போதைய ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அவருக்கு பின்னடைவை தரும் வகையில் பொதுக்குழுவை நடத்தலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

    இந்த நிலையில், அதிமுகவின் ஒற்றைத் தலைமை கோரிக்கையை செயல்படுத்தும் விதமாக இன்றைய பொதுக்குழுவில் தீர்மானம் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  13. அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கியது

    சென்னை வானகரத்தில் அதிமுகவின் பொதுக்குழு தொடங்கியது.

    கூட்டத்தை நடத்த அனுமதி அளித்து உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானதையடுத்து பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.

    முதல் கட்டமாக செயற்குழுவை மூத்த தலைவர் பொன்னையன் தொடங்கி வைக்க, செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் வரவேற்புரை ஆற்றினார். செயற்குழு கூட்டம் முடிந்தபிறகு, பொதுக்குழு நடைபெற உள்ளது.

  14. மோதலில் ஹெல்மெட்டுடன் கலந்துகொண்ட நபர்

    அதிமுக தலைமையகத்தின் அருகே ஈபிஎஸ் ஓபிஎஸ் இருதரப்பினரிடையே நடந்த மோதலில் கல்வீச்சு நடந்தது. இதற்கிடையே இந்த மோதலில் ஹெல்மெட்டுடன் ஒருவர் கலந்து கொண்டார்.

    man with helmet
  15. வந்துகொண்டிருக்கும் செய்தி, அதிமுக பொதுக்குழுவுக்கு முன்பாக தொடங்கியது செயற்குழு கூட்டம்

    சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்படுவதற்கு முன்பாக கட்சியின் செயற்குழு கூட்டம் சற்று முன்பு தொடங்கியுள்ளது.

  16. வந்துகொண்டிருக்கும் செய்தி, அதிமுக பொதுக்குழு மேடையில் எடப்பாடி பழனிசாமி - நீதிமன்ற உத்தரவு குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை

    அதிமுக பொதுக்குழு மேடையில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஏறியிருக்கிறார். அந்த மேடையில் கட்சியின் பிற மூத்த நிர்வாகிகளுடன் அவரும் அமர்ந்துள்ளார்.

    முன்னதாக, அவரை அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் வரவேற்றார்.

    இந்த கூட்டம் காலை 9.15 மணிக்கு தொடங்கவுள்ளது.

    மேடையில், அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு அருகே ஓ.பன்னீர்செல்வத்துக்கு இருக்கை போடப்பட்டிருக்கிறது.

  17. வந்துகொண்டிருக்கும் செய்தி, அதிமுக பொதுக்குழுவை நடத்த அனுமதி: சென்னை உயர் நீதிமன்றம்

    அதிமுக தலைமை அலுவலகம்
    படக்குறிப்பு, அதிமுக தலைமை அலுவலக முகப்புப் பக்கம்

    அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள மனு மீதான உத்தரவு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று பிறப்பிக்கப்பட்டது.

    நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அளித்துள்ள உத்தரவின் முக்கிய அம்சங்கள்:

    • பொதுக்குழு கூட்ட வேண்டும் என்பது பெரும்பான்மை உறுப்பினர்களின் கோரிக்கை. அந்த வகையில் பொதுக்குழு நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
    • கட்சி விதிகளுக்கு உட்பட்டு இந்த பொதுக்குழுவை நடத்த வேண்டும்.
    • ஜூலை 11ஆம் தேதி கட்சியின் பொதுக்குழு நடத்தப்படும் என்ற முடிவை ஜூன் 23ஆம் தேதியே கட்சி நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். அதன்படியே கட்சி விதிகளுக்கு உள்பட்டு இந்த கூட்டத்தை நடத்தலாம்.
    • பொதுக்குழு நடத்தப்படும் செயல்முறையில் விதிகள் மீறப்பட்டால் மீண்டும் மனுதாரர்கள், எதிர் மனுதாரர்கள் நீதிமன்றத்தை அணுகலாம்.

    இந்த வழக்கில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரும் வழக்கறிஞருமான இன்பதுரை, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அதன் விவரம்:

    அதிமுக நடத்தும் பொதுக்குழுவை நீங்கள் நடத்திக் கொள்ளலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை.

    அதிமுகவின் 2,150க்கும் மேலான பெருவாரியான பொதுக்குழு உறுப்பினர்களின் விருப்பத்தின்படியே அதிமுக பொதுக்குழு கூட்டப்படுகிறது. எனவே அந்த பொதுக்குழு கூட்டப்படும் விவகாரத்தி்ல் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை.

    ஒரு கட்சியின் உள் விவகாரத்தில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது என்று ஏற்கெனவே வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அதன்படியே தற்போதைய விவகாரத்திலும் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. கட்சித் தொண்டர்களின் விருப்பத்தின்படியே பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம் என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது.

    இந்த விவகாரத்தில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து என்பவரும் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று நீதிபதி கூறியுள்ளார்.

    அதிமுகவில் பொதுக்குழுதான் உச்சபட்ச அதிகாரம் படைத்த அமைப்பு. அந்த பொதுக்குழுவிலேயே அடுத்த கூட்டத்துக்கான தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் அதை நீதிபதி தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார் என்று இன்பதுரை தெரிவித்தார்.

  18. வந்துகொண்டிருக்கும் செய்தி, அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் கூட்டத்தைக் கலைக்க போலீஸ் தடியடி

    அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் வன்முறையில் ஈடுபட்ட குழுவினரை கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். அந்த பகுதி மிகவும் பதற்றத்துடன் காணப்படுகிறது.

  19. வந்துகொண்டிருக்கும் செய்தி, அதிமுக நெருக்கடி: சுயநலத்துக்காக செயல்படுகிறார் ஓபிஎஸ் - பொதுக்குழுவில் உரிய முடிவு - கே.பி. முனுசாமி

    சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு நடத்த திட்டமிடப்பட்ட பகுதியில் இருந்து கட்சியின் மூத்த தலைவர் கே.பி. முனுசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் ராயப்பேட்டை கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் சம்பவங்கள் தொடர்பாக கருத்து கேட்கப்பட்டது. அதற்கு முனுசாமி அளித்த பதில்:

    தீர்மானங்களை ஏற்றுக் கொளளாவிட்டால் மறுப்பு தெரிவிக்கலாம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், இந்த கருத்தை தெரிவித்த பிறகும் ஓபிஎஸ் தரப்பினர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த 23ஆம் தேதி பொதுக்குழு நடந்தபோது ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோருக்கு வாய்ப்பு தரப்பட்டது. அதேபோல இன்றும் அவர்கள் அமருவதற்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    ஆனால், இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் குண்டர் கூட்டத்தை சேர்த்துக் கொண்டு கட்சி அலுவலகத்தில் கலவரத்தை தூண்ட ஓ.பன்னீர்செல்வம் முயன்று வருகிறார்.

    அவர் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார். இந்த செயல்பாடுகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். சுயநலத்துக்காக கட்சியை அழிக்க அவர் முயன்று வருகிறார்.

    பொதுக்குழு உறுப்பினர்கள் இந்த விவகாரத்தில் முடிவெடுத்து நடவடிக்கை எடுப்பார்கள்.

  20. அதிமுக தலைமை அலுவலகம் அருகே தாக்குதல் - நேரலை

    அதிமுக தலைமை அலுவலகம் அருகே ஓபிஎஸ் - ஈபிஎஸ் இரு தரப்பினரிடயே ஏற்பட்ட மோதலில் கல்வீச்சு நடைபெறுவதுடன் ஆயுதங்கள் கொண்டும் தாக்கப்படுகின்றனர்.

    அதிமுக தலைமை அலுவலகத்தின் அருகே நடந்த தாக்குதலின் நேரலைக் காட்சிகள்.