தனியார் விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள்

தமிழ்நாடு அரசியலில் அடுத்தடுத்த மாற்றங்கள் நடந்துவரும் நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் பலர் புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
தவெகவுக்கு ஆதரவு தர வேண்டும் என ஒரு தரப்பினரும், தரக்கூடாது என அதிமுகவில் மற்றொரு தரப்பினரும் நேற்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் பேசியிருந்ததாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.
ஆனால், தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிப்பது என்பது தவறான செய்தி என, அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுக தவெகவுக்கு ஆதரவளிப்பது போன்ற செய்திகளும் கருத்துக்களும் வந்துகொண்டிருக்கின்றன. அது முற்றிலும் தவறான செய்தி. அதிமுக மிகப்பெரிய இயக்கம். எந்தச் சூழ்நிலையிலும் அதிமுகவிலிருந்து தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்கப்படவில்லை என்பதை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அனுமதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்." என்றார்.
இந்த சூழலில், அதிமுக எம்எல்ஏக்கள் பலர் புதுச்சேரி சொகுசு விடுதியில் தங்குவது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.


