இன்றைய நேரலைக்கு வரவேற்கிறோம்!
பிபிசி தமிழ் நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம். இன்றைய உலகம், இந்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் உங்களுக்கு வழங்குகிறோம்.நேற்றைய நேரலை பக்கத்திலிருந்து சில முக்கிய நிகழ்வுகள் இதோ.
- இலங்கை நுகேகொடை − மிரிஹான பகுதியிலுள்ள ஜனாதிபதியின் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றதையடுத்து அவர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி பிரயோகமும் செய்தனர்.
- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வியாழக்கிழமை மாலையில் அந்நாட்து தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றும்போது, சமீபத்திய நெருக்கடி காரணமாக தமது பதவியில் இருந்து விலகப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், கடைசி பந்துவரை ஆடுவேன் என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
- வன்னியர் உள் இடஒதுக்கீடு சட்டம் செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
- பிரதமர் நரேந்திர மோதியை இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.
- தனக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக இருந்தால், ஆட்சியை கலைப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
- ரஷ்யாவிடமிருந்து எரிவாயுவை வாங்கும் வெளிநாடுகள், வெள்ளிக்கிழமை (நாளை) முதல் ரஷ்ய பணமான ரூபிள் மதிப்பில் பணத்தை செலுத்த வேண்டும் எனவும், இல்லையென்றால் அதற்கான ஒப்பந்தங்கள் நிறுத்தப்பட்டுவிடும் எனவும், இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
- ரஷ்யப்படைகளின் தொடர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட யுக்ரேனின் தெற்கு துறைமுக நகரமான மேரியோபோலில் சிக்கியுள்ள மக்களுக்கு மனிதநேய உதவிகளை வழங்குவதற்கும் அம்மக்களை அங்கிருந்து வெளியேற்றவும் தலைநகர் கீயவிலிருந்து பேருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன.
- தீவிரமான ஷெல் தாக்குதலுக்கு உள்ளான மேரியோபோலில் ஒரு நாள் மட்டும் போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது. ஆனால், அங்கு சிக்கியுள்ள 1,70,000 பேரை வெளியேற்ற ஒருநாள் போதுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
- கிழக்கு யுக்ரேனில் தாக்குதலை நடத்த ரஷ்யப்படையினர் மீண்டும் ஒன்றிணைந்துள்ளதாக நேட்டோ தெரிவித்துள்ளது.
- யுக்ரேனில் நிலவும் சூழல் குறித்து, ரஷ்யா தவறாக புரிந்துகொண்டதாக, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளின் உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
- யுக்ரேனில் நிலவும் களச்சூழல் குறித்து ரஷ்ய அதிபர் புதினுக்கு அவருடைய ஆலோசகர்கள் உண்மையை தெரிவிக்கவில்லை என அவை தெரிவித்துள்ளன.