ரஷ்ய எண்ணெய் கிடங்கில் தாக்குதல் - "அமைதி பேச்சுவார்த்தையை பாதிக்கும்"
ரஷ்ய எண்ணெய் கிடங்கில் நடைபெற்ற தாக்குதல் அமைதி பேச்சுவார்த்தையை பாதிக்கும் என, ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
தங்கள் நகரத்தில் உள்ள எண்ணெய் கிடங்கை யுக்ரேனிய ராணுவ ஹெலிகாப்டர்கள் தாக்கியதாக, ரஷ்யாவின் பெல்கோரோட் நகர ஆளுநர் குற்றம்சாட்டியிருந்தார். ஆனால், இந்த தாக்குதலுக்கு யுக்ரேன் பொறுப்பேற்றுக்கொள்ளவில்லை.
இந்நிலையில், இத்தாக்குதல் தொடர்பாக, ரஷ்ய அதிபர் மாளிகையின் கருத்து கிடைக்கப்பெற்றுள்ளது.
எண்ணெய் கிடங்கில் நடைபெற்ற தாக்குதல் அமைதி பேச்சுவார்த்தை தொடர்வதற்கான சாதகமான சூழ்நிலையை உருவாக்காது என, ரஷ்ய அதிபர் மாளிகை கூறியுள்ளதாக, ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, ரஷ்ய செய்தித்தொடர்பாளர் கூறுகையில், இத்தாக்குதல் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளதாகவும், எரிபொருள் விநியோகத்தை மீண்டும் ஒருங்கமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருதாகவும் அவர் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.