You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

இலங்கை ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட வந்த மக்கள் - போலீஸ் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு

இலங்கை அதிபரின் இல்லம் அருகே பேரணி நடத்திய ஒரு பிரிவு போராட்டக்குழுவினர் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த போலீஸாருடன் மோதலில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களை ஒடுக்க ஏற்கெனவே அங்கு தயார் நிலையில் துணை ராணுவ படையினர், போலீஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. வந்துகொண்டிருக்கும் செய்தி, கொழும்பில் ஜனாதிபதி வீட்டை முற்றுகையிட வந்தவர்கள் மீது தடியடி - போலீஸுடன் மோதிய பொதுமக்கள்

    இலங்கை நுகேகொடை − மிரிஹான பகுதியிலுள்ள ஜனாதிபதியின் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றதையடுத்து அவர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி பிரயோகமும் செய்தனர்.

    இதில் ஒருவர் பலத்த காயம் அடைந்துள்ளார். கண்ணீர் புகை குண்டு வீச்சால் ஏற்பட்ட புகையில் கண் எரிச்சல் மற்றும் பிற பாதிப்புகளுக்கு பொதுமக்கள் ஆளானதாக களத்தில் இருந்து பிபிசி தமிழுக்காக செய்திகளை வழங்கி வரும் ரஞ்சன் அருண் பிரசாத் கூறுகிறார்.

    இலங்கை தலைநகர் கொழும்பில் பல வாரங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடியால் அவதிப்பட்டு வரும் மக்கள் வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 5,000-க்கும் மேற்பட்டோர், பொருளாதார நெருக்கடியைத் தடுக்கத் தவறிய ஜனாதிபதி பதவி விலகக் கோரி கோஷமிட்டனர்.

    இலங்கை அதிபரின் இல்லம் அருகே பேரணி நடத்திய ஒரு பிரிவு போராட்டக்குழுவினர் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த போலீஸாருடன் மோதலில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களை ஒடுக்க ஏற்கெனவே அங்கு தயார் நிலையில் துணை ராணுவ படையினர், போலீஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

    இலங்கை நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அங்கு உணவு, அத்தியாவசிய பொருட்கள், எரிபொருள், எரிவாயு ஆகியவற்றுக்கு பல வாரங்களாக கடுமையான பற்றாக்குறை உள்ளது.

    13 மணி நேர மின்வெட்டு

    இந்த நிலையில், வியாழக்கிழமை மாலையில் டீசல் கிடைக்காததால், நாட்டின் பெரும்பாலான இடங்களில் அதிகபட்சமாக 13 மணி நேர மின்வெட்டுக்குள்ளாயினர்.

    சாலைகளில் மின் விளக்கு எரிய வைப்பதற்கு கூட போதிய மின்சாரம் இல்லாத நிலை இருப்பதாக களத்தில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

    இதன் காரணமாக சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. பல இடங்களில் மருந்துகள் பற்றாக்குறையால் அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டிருந்த அரசு மருத்துவமனைகளில் மின்தடை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியதாக தகவல்கள் வருகின்றன.

    மின்சார விநியோக தடையால் செல்பேசி ஒலிபரப்பு நிலைய சேவைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பல இடங்களில் செல்பேசி கோபுரங்களை இயக்க மின்சாரம் கிடைக்கவில்லை. இதனால் செல்பேசி தொலைத்தொடர்பு விநியோக சேவை பாதிக்கப்பட்டது.

    கொழும்பு பங்குச் சந்தை வர்த்தகத்தை அரை மணி நேரம் முதல் இரண்டு மணிநேரம் வரை மட்டுப்படுத்த வேண்டியிருந்தது.

    இந்த நெருக்கடி காரணமாக பல நிறுவனங்கள் அவற்றின் ஊழியர்களை வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொண்டன. மின்சாரத்தை மிச்சப்படுத்த தெரு விளக்குகள் அணைக்கப்பட்டுள்ளன என்று ஒரு அமைச்சரை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    குடும்பம், குடும்பமாக திரண்ட மக்கள்

    இத்தகைய சூழலில்தான் மக்கள் தன்னிச்சையாகவே சிறிது, சிறுதாகவும் பிறகு ஆயிரக்கணக்கிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்கு அருகில் உள்ள வீதியில், குடும்பம், குடும்பமாக திரளத் தொடங்கினர்.

    அவர்களில் பலர் "ஜனாதிபதியே பதவி விலகு" போன்ற கோஷங்களை முழங்கினர். அவர்களை கலைக்க வந்த போலீஸாருடன் பொதுமக்களில் சிலர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். அப்போது சிலர் போலீஸார் மீது பாட்டில்கள் மற்றும் கற்களை வீசினர்.

    இதையடுத்து கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை போலீஸார் கலைக்க முற்பட்டனர். சமூக ஊடக காணொளியொன்றில் மோட்டார் பைக்கில் வந்த இரண்டு போலீஸ்காரர்களை ஒரு கும்பல் சுற்றி வளைத்த காட்சி இடம்பெற்றிருந்தது.

    போராட்டக்களத்துக்கு அருகே உள்ள பகுதியில் ஒரு பேருந்தின் கண்ணாடியை போராட்டக்குழுவினர் உடைத்து நொறுக்கினார்கள். இந்த சம்பவத்தின் உச்சமாக ஒரு போலீஸ் பேருந்து தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது வீட்டில் இல்லை என்று அதிகாரபூர்வ ஆதாரங்களை மேற்கோள்காட்டி ஏஜென்ஸ் பிரான்ஸ்-பிரஸ் தெரிவித்துள்ளது.

    முன்னதாக, பல நகரங்களின் முக்கிய சாலைகளில் வாகன ஓட்டிகள் எரிபொருள் தட்டுப்பாட்டால் மறியலில் ஈடுபட்டனர்.

    ஊரடங்கு உத்தரவு

    கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு மற்றும் நுகேகொடை ஆகிய பகுதிகளுக்கு போலீஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு பிறப்பிக்கப்படும்வரை இந்த கட்டுப்பாடு அமலில் இருக்கும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

    இந்த போராட்டம் வெள்ளிக்கிழமை மேலும் வலுப்பெறலாம் என்று கூறுகிறார் கொழும்பில் இந்த போராட்ட தகவல்களை சேகரித்து வழங்கி வரும் செய்தியாளர் ரஞ்சன் அருண் பிரசாத்.

    இலங்கை ஜனாதிபதியின் மூத்த சகோதரர் மகிந்த ராஜபக்ஷ அந்நாட்டின் பிரதமராக இருக்கிறார். இளையவர் பசில் ராஜபக்ஷ நிதி இலாகாவை வைத்திருக்கிறார். மூத்த சகோதரர் சமல் ராஜபக்ஷ விவசாய அமைச்சராகவும், மகிந்தவின் மகன் நாமல் ராஜபக்ஷ விளையாட்டுத்துறை அமைச்சராகவும் இருக்கிறார்.

  2. நன்றி நேயர்களே!

    இன்றைய நேரலை பக்கம் இத்துடன் நிறைவடைகிறது. இதுவரை நடந்த நிகழ்வுகளின் முக்கிய துளிகள் இதோ...

    • பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வியாழக்கிழமை மாலையில் அந்நாட்து தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றும்போது, சமீபத்திய நெருக்கடி காரணமாக தமது பதவியில் இருந்து விலகப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், கடைசி பந்துவரை ஆடுவேன் என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
    • வன்னியர் உள் இடஒதுக்கீடு சட்டம் செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
    • பிரதமர் நரேந்திர மோதியை இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.
    • தனக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக இருந்தால், ஆட்சியை கலைப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • ரஷ்யாவிடமிருந்து எரிவாயுவை வாங்கும் வெளிநாடுகள், வெள்ளிக்கிழமை (நாளை) முதல் ரஷ்ய பணமான ரூபிள் மதிப்பில் பணத்தை செலுத்த வேண்டும் எனவும், இல்லையென்றால் அதற்கான ஒப்பந்தங்கள் நிறுத்தப்பட்டுவிடும் எனவும், இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
    • ரஷ்யப்படைகளின் தொடர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட யுக்ரேனின் தெற்கு துறைமுக நகரமான மேரியோபோலில் சிக்கியுள்ள மக்களுக்கு மனிதநேய உதவிகளை வழங்குவதற்கும் அம்மக்களை அங்கிருந்து வெளியேற்றவும் தலைநகர் கீயவிலிருந்து பேருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன.
    • தீவிரமான ஷெல் தாக்குதலுக்கு உள்ளான மேரியோபோலில் ஒரு நாள் மட்டும் போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது. ஆனால், அங்கு சிக்கியுள்ள 1,70,000 பேரை வெளியேற்ற ஒருநாள் போதுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
    • கிழக்கு யுக்ரேனில் தாக்குதலை நடத்த ரஷ்யப்படையினர் மீண்டும் ஒன்றிணைந்துள்ளதாக நேட்டோ தெரிவித்துள்ளது.
    • யுக்ரேனில் நிலவும் சூழல் குறித்து, ரஷ்யா தவறாக புரிந்துகொண்டதாக, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளின் உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
    • யுக்ரேனில் நிலவும் களச்சூழல் குறித்து ரஷ்ய அதிபர் புதினுக்கு அவருடைய ஆலோசகர்கள் உண்மையை தெரிவிக்கவில்லை என அவை தெரிவித்துள்ளன.
  3. செர்னோபில் அணுசக்தி தளத்திலிருந்து வெளியேறும் ரஷ்ய படைகள்: யுக்ரேனிய அணுசக்தி அமைப்பு

    செர்னோபில் அணுமின் நிலையத்தை கைப்பற்றிய ரஷ்ய துருப்புக்கள் வியாழக்கிழமை அந்த நிலையம் மற்றும் பிற இடங்களை விட்டு வெளியேறத் தொடங்கின என்று யுக்ரேனிய அணுசக்தி அமைப்பான எனர்கோட்டம் தெரிவித்துள்ளது.

    "இன்று காலை, படையெடுப்பாளர்கள் செர்னோபில் அணுமின் நிலையத்தை விட்டு வெளியேற தங்கள் விருப்பங்களை அறிவித்தனர்," என்று எனர்கோட்டம் தனது டெலிகிராம் தளத்தில் கூறியுள்ளது.

    ரஷ்ய துருப்புக்கள் "பெலாரூஸுடனான யுக்ரேனிய எல்லையை நோக்கி இரண்டு நெடுவரிசைகளில் அணிவகுத்துச் சென்றன. சிறிய எண்ணிக்கையிலான ரஷ்ய படைகள் விமான நிலையத்தில் தங்கியிருப்பதாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

  4. யுக்ரேனில் சமீபத்திய செய்தி என்ன?

    இந்த நேரலைப் பக்கத்தில் இப்போதுதான் இணைந்தீர்களா? யுக்ரேனில் இன்று இதுவரை என்ன நடந்தது என்பதை இங்கே வழங்குகிறோம்:

    • ரஷ்யாவிடமிருந்து எரிவாயுவை வாங்கும் வெளிநாடுகள், வெள்ளிக்கிழமை (நாளை) முதல் ரஷ்ய பணமான ரூபிள் மதிப்பில் பணத்தை செலுத்த வேண்டும் எனவும், இல்லையென்றால் அதற்கான ஒப்பந்தங்கள் நிறுத்தப்பட்டுவிடும் எனவும், இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
    • ரஷ்யப்படைகளின் தொடர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட யுக்ரேனின் தெற்கு துறைமுக நகரமான மேரியோபோலில் சிக்கியுள்ள மக்களுக்கு மனிதநேய உதவிகளை வழங்குவதற்கும் அம்மக்களை அங்கிருந்து வெளியேற்றவும் தலைநகர் கீயவிலிருந்து பேருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன.
    • தீவிரமான ஷெல் தாக்குதலுக்கு உள்ளான மேரியோபோலில் ஒரு நாள் மட்டும் போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது. ஆனால், அங்கு சிக்கியுள்ள 1,70,000 பேரை வெளியேற்ற ஒருநாள் போதுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
    • கிழக்கு யுக்ரேனில் தாக்குதலை நடத்த ரஷ்யப்படையினர் மீண்டும் ஒன்றிணைந்துள்ளதாக நேட்டோ தெரிவித்துள்ளது.
    • யுக்ரேனில் நிலவும் சூழல் குறித்து, ரஷ்யா தவறாக புரிந்துகொண்டதாக, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளின் உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
    • யுக்ரேனில் நிலவும் களச்சூழல் குறித்து ரஷ்ய அதிபர் புதினுக்கு அவருடைய ஆலோசகர்கள் உண்மையை தெரிவிக்கவில்லை என அவை தெரிவித்துள்ளன.
  5. ரஷ்ய எரிவாயுவை வாங்கும் வெளிநாடுகளுக்கு புதின் எச்சரிக்கை

    ரஷ்யாவிடமிருந்து எரிவாயுவை வாங்கும் வெளிநாடுகள், வெள்ளிக்கிழமை (நாளை) முதல் ரஷ்ய பணமான ரூபிள் மதிப்பில் பணத்தை செலுத்த வேண்டும் எனவும், இல்லையென்றால் அதற்கான ஒப்பந்தங்கள் நிறுத்தப்பட்டுவிடும் எனவும், இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

    ரஷ்யாவுக்கு எதிராக புதிய தடைகள் விதிக்கப்படும் நிலையில், ரஷ்யாவுக்கு எதிரான "பொருளாதார போர்" பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

  6. தமிழகத்தில் இன்று 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: உயிரிழப்பு இல்லை

    தமிழகத்தில் இன்று புதிதாக 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34,52,825 ஆக உயர்ந்துள்ளது.

    இதுதொடர்பாக, தமிழக பொது சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்:

    இன்றுவரை தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை: 306

    இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை: 29,858

    இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை: 29,841

    தமிழ்நாட்டில் அரசு சார்பாக 69 மற்றும் தனியார் சார்பாக 267 என, 336 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.

    இன்று கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை: 51

    தமிழகத்தில் இன்று கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை.

  7. பிரதமர் மோதியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்திய கோரிக்கைகள் என்னென்ன?

    டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காலையில் பிரதமர் மோதியை சந்தித்தது குறித்தும், என்னென்ன கோரிக்கைகளை பிரதமரிடம் வலியுறுத்தினார் என்பது குறித்தும் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக பேசிய மு.க.ஸ்டாலின், "பிரதமரை சந்தித்தபோது, கச்சத்தீவு மீன்பிடி உரிமை பிரச்னை, யுக்ரேனில் மருத்துவ படிப்பு விடுபட்டு போய் தாய்நாடு திரும்பிய மாணவர்களுக்கு இங்கேயே படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டும், மேகேதாட்டுவில் தடுப்பணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி கொடுக்கக் கூடாது, நரிக்குறவர்களை பழங்குடிகள் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

    குறிப்பாக, நீட் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சட்டமியற்றிய பிறகும் அது தொடர்பான கோப்புக்கு ஒப்புதல் வழங்காமலும் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்காமலும் ஆளுநர் தாமதப்படுத்தி வருகிறார். அது குறித்து பிரதமரிடம் பேசினேன்" என தெரிவித்தார்.

    ஸ்டாலினின் டெல்லி பயணம், டெல்லியில் யாரை சந்தித்தார், என்ன பேசினார், என்ன திட்டம் என்பது குறித்து முழு விவரங்களை அறிய இங்கே சொடுக்குங்கள்:

  8. புதின் குறித்து அமெரிக்கா புரிந்துகொள்ளவில்லை - ரஷ்ய செய்தித்தொடர்பாளர்

    யுக்ரேன் சூழல் மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான தடைகள் குறித்து, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தனது ஆலோசகர்களால் தவறாக வழிநடத்தப்படுகிறார் என, அமெரிக்க உளவுப்பிரிவு கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து ரஷ்ய அதிபர் மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, அந்நாட்டு அரசின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், அமெரிக்க பாதுகாப்பு துறையிடம் என்ன நடக்கிறது என்பது குறித்த உண்மையான தகவல் இல்ல என தெரிவித்தார்.

    "ரஷ்ய அதிபர் மாளிகையில் என்ன நடக்கிறது என்பது அவர்களுக்குப் புரியவில்லை" என அவர் தெரிவித்தார்.

    "அதிபர் புதின் குறித்து அவர்களுக்குப் புரியவில்லை. எப்படி முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்பது குறித்தும் எங்களின் பாணி குறித்தும் அவர்கள் புரிந்திருக்கவில்லை" என தெரிவித்தார்.

    "இத்தகைய தவறான புரிதல்கள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய தவறான முடிவுகளுக்கு வழிவகுக்கும் என்பதால் இது வருத்தத்திற்குரியது" என பெஸ்கோவ் தெரிவித்தார்.

  9. பிரதமர் மோதி உடனான சந்திப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.

  10. விழுப்புரத்தில் பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்

    விழுப்புரத்திலுள்ள பெரியார் சிலையின் முகப்பகுதியை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

    விழுப்புரம் மாவட்டத்தின் நகரின் மையப்பகுதியான கீழ்பெரும்பாக்கம் பஜனை கோவில் தெருவில் கடந்த 2000-ம் ஆண்டு பெரியார் திராவிட கழகத்தினர் பெரியார் சிலையை நிறுவி, அப்போதுமுதல் பராமரித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இன்று அடையாளம் தெரியாத நபர்கள் பெரியார் சிலையின் முகப்பகுதியை சேதப்படுத்தியுள்ளனர். நண்பகலில் பெரியார் சிலைக்கு போடப்பட்டிருந்த இரும்பு கூண்டின் பூட்டு உடைக்கப்பட்டு மர்ம நபர்கள் சிலையை சேதப்படுத்தி சென்று இருப்பதை கண்ட பெரியார் திராவிட கழகத்தினர், விழுப்புரம் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு அருகில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார்.

    அதனை தொடர்ந்து, பெரியார் சிலையை சேதப்படுத்திய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, திமுக, பெரியார் திராவிடர் கழகத்தினர் தமிழகத்தில் பெரியார் சிலைகள் அவமதிக்கப்படுவது, உடைக்கப்படுவதும் அரங்கேறி வருவதாக கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும், சேதப்படுத்தப்பட்ட சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் முயற்சியில் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

  11. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்: ஆட்சியை கலைத்து விடுவதாக கூறியதாக தகவல்

    தனக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக இருந்தால், ஆட்சியை கலைப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பாகிஸ்தானில் பணவீக்கம் உயர்ந்து, பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்களை நடத்தின. இந்நிலையில், இம்ரான் கானை பதவியில் இருந்து நீக்க எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வருவதாக அறிவித்தன.

    இந்த நிலையில், மார்ச் 28 அன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

    இதையடுத்து, முக்கிய கூட்டணி கட்சியான முத்தாஹிதா குவாமி இயக்கம் (MQM) ஆளும் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை நேற்று விலக்கிக்கொண்டது.

    இதனால், எதிர்க்கட்சிகளின் பலம் 177 ஆக உயர்ந்துள்ளது. இம்ரான் கான் அரசின் பலம் 164 ஆக குறைந்துள்ளது. இதனால், நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்னரே இம்ரான் கான் அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

    பாகிஸ்தானின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு தனிப்பெரும்பான்மை மட்டுமே தேவை. நாடாளுமன்றத்தில் 342 உறுப்பினர்கள் உள்ளனர், அதாவது 172 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தால், இம்ரான் கான் பதவி விலக வேண்டும்.

    இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

    இந்நிலையில், தனக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வாபஸ் பெற்றுக்கொண்டால், ஆட்சியைக் கலைத்துவிடுவதாக இம்ரான் கான் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளதாக, பாகிஸ்தான் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இதனை ஏஎன்ஐ செய்தி முகமை வெளியிட்டுள்ளது.

    இதனை ஏற்றுக்கொள்ளாவிட்டால், தான் எந்தவொரு சூழ்நிலையையும் சந்திக்க தயாராக உள்ளதாக, அவர் தெரிவித்துள்ளதாக, ஜியோ நியூஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

    இம்ரான் கானின் இந்த தகவலை எதிர்கட்சி தலைவர் ஷபாஸ் ஷரீஃபிடம் முக்கியமான நபர் ஒருவர் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இதனிடையே, இம்ரான் கான் இன்று இரவு மக்களிடையே உரையாற்ற உள்ளதாக, ஃபவாத் சௌத்ரி ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  12. விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கு - சம்பவம் நிகழ்ந்த இடத்தில் சிபிசிஐடி விசாரணை

    விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கில் போலீஸ் காவலில் உள்ள ஹரிஹரன் மற்றும் ஜூனைத் அகமது ஆகிய இருவரை கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்த மருந்து குடோனுக்கு அழைத்துச் சென்று 2 மணிநேரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    விருதுநகரில் இளம்பெண்ணை 4 பள்ளி மாணவர்கள் உள்பட எட்டு நபர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கை தற்போது சிபிசிஐடி எஸ்.பி. முத்தரசி தலைமையிலான போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    மேலும், இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேரை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து 3வது நாளாக இன்று (மார்ச் 31) விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், ஹரிஹரன் உள்ளிட்ட 3 பேர் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட இளம்பெண்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இடமான ஹரிஹரன் உறவினருக்கு சொந்தமான மருந்து குடோனுக்கு ஹரிஹரன் மற்றும் ஜூனைத் அகமது ஆகிய இருவரையும் சிபிசிஐடி டி.எஸ்.பி வினோதினி அழைத்து வந்து சம்பவம் நடைபெற்ற இடத்தில் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினார்.

    மேலும், இந்த கூட்டு பாலியல் சம்பவம் தொடர்பாக மருந்து குடோனில் வைத்து ஹரிஹரன் மற்றும் ஜூனைத் அகமது ஆகிய இருவரிடமும் சிபிசிஐடி போலீசார் பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில், சிபிசிஐடி போலீஸ் காவலில் உள்ள 4 பேரில் ஹரிஹரனை அந்த பெண்ணின் வீட்டுக்கு நேரில் அழைத்து வந்து சிபிசிஐடி டி.எஸ்.பி வினோதினி விசாரணை மேற்கொண்டனர்.

    ஹரிஹரனை சம்பவ இடத்தில் வைத்து சுமார் 3 மணிநேரம் விசாரணை நடத்தினர். மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சம்பவ இடத்தில் இருந்த தடயங்களை சேகரித்தனர்.

    மேலும், ஹரிஹரன், ஜூனைத் ஆகியோருடன் வாட்சப்பில் தொடர்பில் இருந்த அவரது நண்பர்களான 30 பேரிடம் இன்று அல்லது நாளை விசாரணை தொடங்கப்படும் என சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர்.

  13. கிறிஸ் ராக்கை அறைந்த பின்னர் நிகழ்ச்சியை விட்டு வெளியேற மறுத்துவிட்டார் வில் ஸ்மித் – ஆஸ்கர் அகாடமி

    ஆஸ்கர் நிகழ்ச்சியில் கிறிஸ் ராக்கை அறைந்த பின் வில் ஸ்மித்திடம் நிகழ்ச்சியைவிட்டு வெளியேற கோரப்பட்டது என்று ஆஸ்கர் அகாடமி தெரிவித்துள்ளது.

    வில் ஸ்மித்திற்கு எதிராக "ஒழுங்கு விசாரணை" தொடங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஆஸ்கர் அகாடமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிறிஸ் ராக்கை அறைந்த பின் நிகழ்ச்சியைவிட்டு வெளியேற வில் ஸ்மித்திடம் கோரினோம் ஆனால் அவர் மறுத்துவிட்டார். நாங்கள் சூழலை வேறு விதமாக கையாண்டிருக்கலாம் என்பதையும் ஒப்புக் கொள்கிறோம்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  14. டொனியட்ஸ்க் ஷெல் தாக்குதலில் மக்கள் காயம்

    யுக்ரேனின் கிழக்கு பிராந்தியமான டொனியட்ஸ்கில் ஷெல் தாக்குதலில் குறைந்தது 13 பேர் காயமடைந்திருப்பதாக, பிராந்திய ராணுவ நிர்வாகத்தின் தலைவர் பாவ்லோ கிரிலென்கோ தெரிவித்துள்ளார்.

    டொனியட்ஸ்கின் மத்திய பகுதியில் ரஷ்யப்படைகளின் தாக்குதல் தொடர்ந்து நடைபெறுவதாக தெரிவித்த அவர், மரின்ஸ்கி பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 11 பேர் காயமடைந்ததாகவும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ஒச்சேரேடின் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் இரண்டு பேர் காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

    மரியின்கா, கிராஸ்னோஹோரிவ்கா மற்றும் நோவோமிகைலிவ்கா ஆகிய பகுதிகளில் பாஸ்பரஸ் பயன்படுத்தி தாக்குதல் நடைபெற்றதாக அவர் கூறியுள்ளார். ஆனால், இந்த தகவல்களை பிபிசியால் தன்னிச்சையாக சரிபார்க்க முடியவில்லை.

    அங்குள்ள மக்களுக்கு குடிநீர் மற்றும் உணவு ஆகியவை தொடர்ந்து அதிகாரிகள் வழங்கிவருவதாகவும், "மக்களை வெளியேற்றுவது தற்காலிகமானது. மக்களின் உயிரை காப்பாற்றுவதுதான் மிகவும் முக்கியமானது" என தெரிவித்தார்.

    நேட்டோ தலைவர்களுடன் கடந்த வாரம் பேசிய யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, ரஷ்யா பாஸ்பரஸ் வெடிகுண்டுகளை பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியிருந்தார்.

    எளிதில் தீப்பற்றக்கூடிய வெள்ளை பாஸ்பரஸ், இன்னும் தடை செய்யப்படவில்லை. ஆனால், இத்தகைய ஆபத்துமிக்க பாஸ்பரஸை மக்களுக்கு எதிராக பயன்படுத்துவது, ஜெனிவா ஒப்பந்தத்தின்படி தடை செய்யப்பட்டுள்ளது.

  15. செரீனிஹிவ் நகரத்தில் இரவில் ஷெல் தாக்குதல் நடப்பதாக கூறும் மக்கள்

      • எழுதியவர், ஹூகோ பசேகா
      • பதவி, பிபிசி செய்திகள், லூவிவ்

    யுக்ரேனின் வடக்கு நகரமான செரீனிஹிவில் ராணுவ நடவடிக்கையை முற்றிலும் குறைப்பதாக, ரஷ்யா உறுதியளித்திருந்த நிலையில், இரண்டாவது நாளாக நேற்றிரவும் அந்நகரத்தில் அதிகளவில் ஷெல் தாக்குதல் நடைபெற்றதாக அங்குள்ள பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    அங்கு மின்சாரம், தண்ணீர், எரிவாயு இல்லாத நிலையில், செரீனிஹிவ் நகரத்தை ரஷ்யப்படைகள் சுற்றிவளைத்துள்ளனர். சுமார் 1,40,000 பேர் அங்கு சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அங்கு வசிக்கும் ஒருவர் என்னிடம் "இரவில் நான் குண்டுவெடிப்பு சத்தத்தைக் கேட்டேன்.

    நான் எனது கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் இரவில் உறங்கிக்கொண்டிருந்தேன். அதனால், என்னால் குண்டுவெடிப்பு சத்தத்தை தெளிவாக கேட்க முடியவில்லை. ஆனால், ஒரு குண்டுவெடிப்பு சத்தத்தால் நான் 01:00 மணியளவில் விழித்துவிட்டேன். நேற்றிரவு குண்டுவெடிப்பு சத்தம், அதற்கு முந்தைய நாள் இரவு கேட்டதைவிட பெருத்த சத்தமாக இல்லை.

    "இன்று (வியாழக்கிழமை காலை) மழை காரணமாக ஷெல் தாக்குதல் நிறுத்தப்பட்டிருக்கலாம். ஆனால், சில சமயங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன" என தெரிவித்தார்.

    மற்றொருவர் தெரிவிக்கையில், "இன்றைய இரவு, அதற்கு முந்தைய நாள் இரவைவிட அமைதியாக இருந்தது. என்னால் உறங்கவும் முடிந்தது... ஆனால், 05:00 மணியளவில் தீவிர ஷெல் தாக்குதல் மீண்டும் நடைபெற்றன. அதிக சத்தம் கேட்டது, ஜன்னல்கள் அசைந்தன. வானம் ஆரஞ்சு நிறமாக மாறியதை நான் தொலைவிலிருந்து பார்த்தேன், ஆனால், அது மிக தொலைவில் ஏற்பட்டது" என தெரிவித்தார்.

    ஆனால், இந்த தகவல்களை பிபிசியால் தன்னிச்சையாக சரிபார்க்க முடியவில்லை. நகரத்த்கில் தங்கியிருப்பதால் செரீனிஹிவ் குடியிருப்பாளர்களை அடையாளம் காண முடியவில்லை.

  16. யுக்ரேன் போர்: இந்தியா ஏன் ரஷ்யாவிடம் அதிகமாக எண்ணெய் வாங்குகிறது?

      • எழுதியவர், ஷ்ருதி மேனன்
      • பதவி, பிபிசி உண்மைப் பரிசோதனைக் குழு

    ரஷ்யா மீதான யுக்ரேன் படையெடுப்பால் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியுள்ளன. இதனால் ரஷ்யா புதிய வணிக வாய்ப்புகளுக்கு முயற்சி செய்து வருகிறது. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு இந்தியா மலிவு விலையில் எண்ணையை வாங்குகிறது.

    இது குறித்து அமெரிக்கா இந்த எண்ணெய் இறக்குமதி சட்டத்திற்கு எதிரானது அல்ல என்றாலும், ரஷ்யாவிற்கு ஆதரவு தெரிவிப்பது என்பது படையெடுப்புக்கு ஆதரவு தெரிவிப்பதாகும். இதன் விளைவு அழிவினையே ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளது.

    இந்தியா எங்கிருந்து எண்ணெயைப் பெறுகிறது?

    அமெரிக்கா, மற்றும் ரஷ்யாவுக்கு அடுத்து அதிக அளவு எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவுக்குத் தேவையான 80 சதவீதத்திற்கும் அதிகமான எண்ணெய் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யயப்படுகிறது.

  17. மேரியோபோலில் சிக்கியுள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற பேருந்துகள்

    ரஷ்யப்படைகளின் தொடர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட யுக்ரேனின் தெற்கு துறைமுக நகரமான மேரியோபோலில் சிக்கியுள்ள மக்களுக்கு மனிதநேய உதவிகளை வழங்குவதற்கும் அம்மக்களை அங்கிருந்து வெளியேற்றவும் தலைநகர் கீயவிலிருந்து பேருந்துகள் அனுப்பப்படுவதாக, எங்களுக்கு தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன.

    மக்களை வெளியேற்ற பாதுகாப்பான வழித்தடம் அமைக்க ரஷ்யா சம்மதித்ததாக, சர்வதேச செஞ்சிலுவை ஆணையம் இன்று உறுதிப்படுத்தியதையடுத்து, சுமார் 45 பேருந்துகள் மேரியோபோலுக்கு அனுப்பப்படுவதாக, யுக்ரேன் துணை பிரதமர் இரினா வெரேஷ்சுக் தெரிவித்துள்ளார்.

    மேரியோபோலில் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு அங்கு போர் நிறுத்தத்திற்கான முந்தைய முயற்சிகள் தோல்வியடைந்தன.

    அந்நகரத்தில் மின்சாரம், மற்றும் அடிப்படை தேவைகளுக்கான பற்றாக்குறையுடன் சுமார் 1,70,000 பேர் சிக்கியுள்ளதாக அந்நகர மேயர் தெரிவித்துள்ளார். அந்நகரம் ரஷ்யப்படைகளின் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

    யுக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பில் மேரியோபோல் நகரம் முக்கியமானதாக கருதப்படுகிறது. யுக்ரேன் படையினர் சரணடைந்தால் மட்டுமே அங்கு ஷெல் தாக்குதல்கள் நிறுத்தப்படும் என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த செவ்வாய்கிழமை தெரிவித்திருந்தார்.

  18. வன்னியர்கள் இன்னும் கூலிகளாக இருக்கிறார்கள் - அன்புமணி

  19. தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார் - எடப்பாடி பழனிசாமி

    தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார் என, எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் துபாய்க்கு (இன்பச்) சுற்றுலா மேற்கொண்டார். கடந்த எட்டு மாதமாக துபாயில் நடைபெற்று வந்த கண்காட்சி முடிய 6 நாட்களே இருந்த நிலையில், தமிழக மக்களின் வரிப்பணத்தில் பெருஞ்செலவில் அமைக்கப்பட்ட தமிழக அரங்கை மார்ச் 24 அன்று திறந்து வைத்துள்ளார். பொருட்காட்சியின் நிறைவு நாள் நெருங்கி உள்ளதால், பல அரங்கங்கள் மூடும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனஎன்று செய்திகள் தெரிவிக்கின்றன.

    மேலும், தமிழகம் முழுவதும் உள்ள பெருநகரங்களில் ஷாப்பிங் மால்கள் அமைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். தமிழகத்தில் சிறு வணிகர்கள் நலன் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்று ஆட்சியில் இல்லாதபோதுஆர்ப்பாட்டம் செய்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர், முதல்வரானவுடன், தமிழக வணிகர்களின் வயிற்றில் அடிக்கும் வகையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

    ஒரு முதல்வரின் வெளிநாட்டுப் பயண நிகழ்ச்சிகளை அங்குள்ள இந்திய தூதரகம் மேற்கொள்ளாமல்,மருமகனும் மகனும் செய்தது ஏன் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.

    பதவிக்கு வந்த 10 மாத காலத்தில் பல்வேறு சிக்கல்களில் சிக்கியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றக் கோரி பிரதமர் மோதிமற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரதுகாலில் விழ, நேற்று இரவு டெல்லி சென்றிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    ஸ்டாலினின் மாய்மாலத்திலும், நாடகத்திலும் மயங்க, நமது பிரதமர் போதி, இந்திரா காந்தி அம்மையார் அல்ல. சட்ட விரோதபணப் பரிமாற்றக் குற்றச்சாட்டு உண்மை என்றால், உப்பை தின்றவர்கள் தண்ணீர் குடித்தாக வேண்டும். ஊழலுக்கு எதிரான, நெருங்க முடியாத நெருப்பைப் போன்றவர் பிரதமர் மோதி என்பதை திமுகவினர் உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை" என தெரிவித்துள்ளார்.

  20. யுக்ரேனில் சமீபத்திய செய்தி என்ன?

    இந்த நேரலை பக்கத்தில் இப்போதுதான் இணைந்தீர்களா? யுக்ரேனில் இன்று இதுவரை என்ன நடந்திருக்கிறது என்பதை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:

    மேற்கு நாடுகள் என்ன சொல்கின்றன?

    • பிரிட்டனின் சைபர் உளவு முகமையான GCHQ தலைவர் ஜெரிமி ஃப்ளெமிங், யுக்ரேனின் நிலைமை குறித்து ரஷ்யா "தப்புக்கணக்கு போட்டுவிட்டதாகவும்" ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு யுக்ரேன் நிலைமை குறித்து உண்மை விளக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
    • மிகவும் கடினமான சூழ்நிலையில் உள்ள ரஷ்யப்படையினர் தங்களின் சொந்த ஆயுதங்களையே அழிப்பதாகவும், எதிர்பாராவிதமாக தங்களின் சொந்த போர் விமானத்தையே சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
    • மேலும் "ரஷ்ய ராணுவத்தால் புதின் தவறாக வழிநடத்தப்படுவதாக" தங்களிடம் தகவல் உள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்கா, இதன்காரணமாக, "புதினுக்கும் அந்நாட்டு ராணுவ தலைமைக்கும் இடையே முரண் ஏற்பட்டுள்ளதாகவும்" தெரிவித்துள்ளது.
    • அமெரிக்க பாதுகாப்பு துறை அலுவலக செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், யுக்ரேன் சூழல் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படாத புதின், அமைதி பேச்சுவார்த்தையின் மூலம் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வருவதில் "குறைவான நம்பிக்கையுடையவராக" அவரை மாற்றலாம் என தெரிவித்துள்ளார். மேலும், "அப்படிப்பட்ட தலைவர் (புதின்) கெட்ட செய்திகளுக்கு எப்படி எதிர்வினையாற்றுவார் என்பதும் நமக்குத் தெரியாது" என அவர் தெரிவித்துள்ளார்.

    களத்தில் என்ன சூழல்:

    • டான்பஸ் பிராந்தியத்தில் ரஷ்யப்படைகளின் "புதிய தாக்குதல்களை" எதிர்கொள்ள தங்கள் நாடு தயாராகிவருவதாக, யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
    • மேலும், யுக்ரேன் தலைநகர் கீயவ் மற்றும் செரீனிஹிவ் நகரங்களை சுற்றியுள்ள பகுதிகளில் தாக்குதலை குறைப்போம் என, ரஷ்யா கூறியதை தான் நம்பவில்லை என, ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா உறுதியளித்தபின்பும் அந்நகரங்களில் தாக்குதல் நடைபெற்று வருகிறது.
    • செரீனிஹிவ் நகரத்தில் "குறிப்பிடத்தக்க அளவில் ரஷ்யப்படைகள் ஷெல் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை" தொடர்ந்துவருவதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.