வந்துகொண்டிருக்கும் செய்தி, கர்நாடகா ஹிஜாப் வழக்கில் கல்வித்துறை தடை விதித்தது செல்லும்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

பட மூலாதாரம், Getty Images
கர்நாடகா ஹிஜாப் வழக்கில் கல்வித்துறை தடை விதித்து வெளியிட்டுள்ள அரசாணை செல்லும் என்று அம்மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரீத்து ராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ணா எஸ். தீக்ஷித், ஜே.எம். காஸி அடங்கிய அமர்வு விசாரித்து வழங்கிய தீர்ப்பில், "நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், அரசு தரப்பு பதில்கள் போன்றவற்றின் அடிப்படையில் மூன்று கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. அதற்கான விடையை இந்த தீர்ப்பின் மூலம் வழங்குகிறோம்," என்று கூறினர்.
முதலாவது கேள்வியாக இஸ்லாத்தின் கீழ் ஹிஜாப் அணிவது அவசியமான மத நடைமுறையா?
இரண்டாவது கேள்வியாக, கருத்துச் சுதந்திரம் தனி உரிமைக்கான உரிமையா?
மூன்றாவது கேள்வியாக பிப்ரவரி 5ஆம் தேதியிட்ட கர்நாடகா கல்வித்துறை அரசாணை, மனபூர்வமற்ற முறையிலும் தன்னிச்சையாகவும் வெளியிடப்பட்டதா? என நீதிமன்றத்தில் எழுப்பப்பட்டிருந்தன.
அதற்கான எங்களின் விடை, முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவது இஸ்லாத்தின் கீழ் அத்தியாவசியமான மத நடைமுறையின் ஒரு பகுதியாக இல்லை.
பள்ளி சீருடையை பரிந்துரைப்பது என்பது ஒரு நியாயமான கட்டுப்பாடு மட்டுமே, அதை மாணவர்கள் எதிர்க்க முடியாது.
இந்த விவகாரத்தில் அரசாணை வெளியிட மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.


