பாகிஸ்தானில் விழுந்த ஏவுகணை: நாடாளுமன்றத்தில் நாளை விளக்கம் தரும் ராஜ்நாத் சிங்
பாகிஸ்தானில் விழுந்த இந்திய ஏவுகணை கலன் தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தில் அதன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் நாளே (மார்ச் 15) விளக்கம் அளிக்க உள்ளார்.
பாகிஸ்தானில் மார்ச் 9ஆம் தேதி, இந்தியாவில் இருந்து தவறுதலாக இயங்கியதாகக் கூறப்படும் ஏவுகணை விழுந்தது. அந்த சம்பவத்தில் உயிர் சேதம் ஏற்படாதபோதும், நடந்த சம்பவத்துக்கு இந்தியா ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தது.
அதேசமயம், அந்த சம்பவம் தொடர்பாக இரண்டு நாட்கள் கழித்தே பாகிஸ்தான் வெளியுலகுக்கு அறிவித்தது. அதன் பிறகே இந்தியாவும் நடந்த நிகழ்வு பற்றிய விளக்கத்தை செய்திக்குறிப்பு வாயிலாக விளக்கியது.
சம்பவ நாளில் பாகிஸ்தானின் கானேவால் மாவட்டத்தில் உள்ள மியான் சன்னு நகரில் விழுந்த பொருளை விவரிக்கையில் ஏவுகணை போல தோற்றமளித்த ரசாயன ஆயுதம் ஏதுமில்லாத பொருள் அதிவேகமாக பறந்து வந்து விழுந்ததாக பாகிஸ்தான் ராணுவம் கூறியது.
ஆனால், அது இந்தியா ரஷ்யா உதவியுடன் தயாரித்துள்ள பிரமோஸ் போன்ற ஏவுகணையின் மாதிரி கலன் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இணையத்திலும் அது குறித்த படங்கள் பகிரப்பட்டன.
இந்த விவகாரம் பாகிஸ்தானில் ஆளும் இம்ரான் கான் அரசுக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் அழுத்தத்தை கொடுத்துள்ளது. இந்தியாவில் இருந்து ஏவுகணை பறந்து வந்தபோதும் அதற்கு சரியான எதிர்வினையை ஆற்றவில்லை என்று இம்ரான் கான் அரசு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
இந்த நிலையில், இந்திய ஏவுகணை விழுந்த சம்பவம் தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தில் அதன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலளிக்கவிருக்கிறார்.
இந்த ஏவுகணை விழுந்தது தொடர்பான செய்தியை விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.

















