வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம், (Bangladesh International Crimes Tribunal) முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் குற்றவாளி எனக் கண்டறிந்ததாகவும், அவருக்கு மரண தண்டனை விதிப்பதாகவும் தீர்ப்பளித்துள்ளது.
தாக்கா நீதிமன்ற உத்தரவுக்கு வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார், அந்த உத்தரவு "ஒருதலைப்பட்சமானது மற்றும் அரசியல் ரீதியாக உந்தப்பட்டது" என தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை-ஆகஸ்டில் வங்கதேசத்தில் நடந்த இளைஞர்கள் போராட்டத்தின் போது, ஷேக் ஹசீனா மீது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அவர் இந்தியாவில் தஞ்சமடைந்த நிலையில், அவர் மீதான வழக்கு அவர் இல்லாத நேரத்தில் (in absentia) நடத்தப்பட்டது.
தற்போது இந்தியாவில் வசித்து வரும் ஷேக் ஹசீனா மற்றும் அசாதுஸ்ஸாமான் கான் கமல் ஆகியோரை நாடு கடத்துமாறு வங்கதேசம் கோரியுள்ளது.
இந்நிலையில், வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்ஸாமான் கான் கமல் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதித்துள்ளது.
இந்த முடிவைத் தொடர்ந்து, வங்கதேச வெளியுறவு அமைச்சகம் திங்களன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது
அதில், "சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தப்பியோடிய ஷேக் ஹசீனா மற்றும் அசாதுஸ்ஸாமான் கான் கமல் ஆகியோர் குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட இந்த நபர்களுக்கு அடைக்கலம் வழங்கும் எந்தவொரு நாடும் நட்பற்ற நடத்தை மற்றும் நீதியை அவமதிக்கும் ஒரு செயலாகும்."
"இந்திய அரசாங்கம் உடனடியாக இரு குற்றவாளிகளையும் வங்கதேச அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இரு நாடுகளுக்கும் இடையிலான நாடுகடத்தல் ஒப்பந்தத்தின்படி இது இந்தியாவின் பொறுப்பாகும்" என்று வங்கதேச வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஷேக் ஹசீனாவை நாடு கடத்தக் கோரி வங்கதேசம் அதிகாரப்பூர்வமாக பல கடிதங்களை அனுப்பியுள்ளது. இருப்பினும், இந்த கோரிக்கைகளுக்கு இந்தியா பதிலளிக்கவில்லை.
பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த வங்கதேச வெளியுறவு ஆலோசகர், அவர்களை திருப்பி அனுப்பக் கோரி வங்கதேசம் பலமுறை கடிதங்களை அனுப்பியதாகவும், ஆனால் இந்தியாவிடமிருந்து எந்த நேர்மறையான பதிலும் கிடைக்கவில்லை என்றும் கூறினார்.