You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

சிவகங்கையில் 2 அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 11 பேர் பலி

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகம் முழுவதுமான சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்

முக்கிய சாராம்சம்

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. கர்நாடகா: மாநில காங்கிரஸில் தொடரும் குழப்பம் – டி.கே.சிவக்குமார் கூறியது என்ன?

    கர்நாடக காங்கிரஸில் தொடரும் குழப்பங்களுக்கு மத்தியில், துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் பிடிஐ செய்தி முகமையிடம் பேசியபோது, "காங்கிரஸ் கட்சி நீண்ட வரலாற்றைக் கொண்டது. டெல்லி எப்போதும் எங்களுக்கு வழிகாட்டியுள்ளது. நாங்கள் இங்கு (கர்நாடகாவில்) அரசாங்கத்தில் இருக்கலாம், ஆனால் இறுதியில் நாங்கள் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மற்றும் கட்டமைப்பிற்குள் பணியாற்ற வேண்டும். எனவே, கட்சி எப்போது முதலமைச்சருடன் என்னை டெல்லிக்கு அழைத்தாலும், நாங்கள் செல்வோம்," என்று கூறியுள்ளார்.

    "என்னுடைய சமூகம் காங்கிரஸ். ஆம், நான் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவனாக இருக்கலாம், அவர்களுக்கு என்னைப் பிடிக்கும், ஆனால் சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு சமூகத்துடனும் அது பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருந்தாலும், சிறுபான்மையினராக இருந்தாலும், அல்லது வேறு யாராக இருந்தாலும் சரி எனக்குத் தொடர்பு உள்ளது. ஒக்கலிகர்களும்கூட பிற்படுத்தப்பட்ட வகுப்பினரே," என்று அவர் தெரிவித்தார்.

    முன்னதாக வியாழக்கிழமை அன்று, டி.கே. சிவக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் வெளிட்ட பதிவில், “ஒருவர் தான் கொடுத்த வாக்கை காப்பாற்றுவதுதான் உலகில் மிகப்பெரிய சக்தி. அது நீதிபதியாக இருந்தாலும், குடியரசுத் தலைவராக இருந்தாலும், வேறு யாராக இருந்தாலும், ஏன் நானாக இருந்தாலும் சரி. எல்லோரும் அவர்கள் சொல்வதைப் பின்பற்ற வேண்டும். வாக்கின் சக்திதான் உலக சக்தி," என்று குறிப்பிட்டிருந்தார்.

    2023 கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, சித்தராமையா இரண்டரை ஆண்டுகளும், டி.கே. சிவக்குமார் இரண்டரை ஆண்டுகளும் முதலமைச்சராக இருப்பார்கள் என்று காங்கிரஸ் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும், இந்த விவகாரம் குறித்து ரகசிய ஒப்பந்தம் இருப்பதாக டி.கே. சிவக்குமார் சமீபத்தில் பேசியிருந்தார்.

    கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசாங்கம் அதன் இரண்டு தலைவர்களுக்கு இடையிலான மோதலால் ஆபத்தில் இருப்பதாகத் தெரிகிறது.

    டி.கே.சிவக்குமார் தனது எக்ஸ் பதிவின் மூலம், காங்கிரஸ் தலைமை தனக்கு அளித்ததாகச் சொல்லப்படும் வாக்குறுதியை நிறைவேற்றுமாறு கோருவதாகக் கூறப்படுகிறது.

  2. திட்வா புயல்: இலங்கை மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி இரங்கல்

    திட்வா புயலால் தங்கள் உறவுகளை இழந்த இலங்கை மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோதி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "புயலால் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும், விரைவில் மீண்டு வரவும் வேண்டும். எங்கள் அண்டை நாட்டுக்கு ஆதரவாக, இந்தியா 'ஆபரேஷன் சாகர் பந்து' என்ற திட்டத்தின் கீழ் உடனடி நிவாரணப் பொருட்களையும், அத்தியாவசிய மனிதாபிமான உதவிகளையும் அனுப்பியுள்ளது. நிலைமைக்கு ஏற்ப மேலும் உதவிகளை அனுப்ப நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    இந்தியாவின் 'அண்டை நாடுகளுக்கு முதன்மைத்துவம்' கொள்கை மற்றும் 'மகா சாகர்' தொலைநோக்குப் பார்வையுடன் இந்த நெருக்கடியான நேரத்தில் இந்தியா இலங்கைக்கு உறுதுணையாக நிற்கிறது," என்று கூறியுள்ளார்.

    இந்த வாரம் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் இலங்கையில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. இதில் குறைந்தது 56 பேர் உயிரிழந்துள்ளதுடன், 21 பேரை காணவில்லை. சமீப ஆண்டுகளில் இலங்கையில் ஏற்பட்ட வானிலை தொடர்பான மிகக் கடுமையான இயற்கை பேரழிவுகளில் இதுவும் ஒன்று.

  3. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இந்தியாவுக்கு எப்போது வருகிறார்?

    ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் டிசம்பர் 4ஆம் தேதியன்று இந்தியா வருகிறார். அவரது பயணம் டிசம்பர் 5 வரை நீடிக்கும்.

    இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “பிரதமர் நரேந்திர மோதியின் அழைப்பிற்கு இணங்க, ரஷ்ய அதிபர் புதின் டிசம்பர் 4,5 ஆகிய தேதிகளில் இந்தியா வருகிறார். அதிபர் புதின், 23வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டில் கலந்து கொள்வார்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தப் பயணத்தின்போது, பிரதமர் மோதியுடன் அதிபர் புதின் பேச்சுவார்த்தை நடத்துவார். அதோடு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூவையும் சந்திப்பார்.

    இந்தப் பயணம், இந்தியா, ரஷ்யா இடையிலான உறவுகளை மறுபரிசீலனை செய்வதற்கும் மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தவும் ஒரு முக்கியமான வாய்ப்பை வழங்குவதாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே உலகளாவிய பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்படும்.

    அதிபர் விளாதிமிர் புதினின் கடைசி இந்திய பயணம் 2021ஆம் ஆண்டு டிசம்பரில் நிகழ்ந்தது. இதன் பொருள், பிப்ரவரி 2022இல் யுக்ரேனுடனான போர் தொடங்கியதில் இருந்து புதின் இந்தியாவுக்கு வருகை தரவில்லை.

    கடந்த 2023 செப்டம்பரில் புதுடெல்லியில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டில்கூட புதின் கலந்துகொள்ளவில்லை.

  4. திட்வா புயல் தற்போது எங்கே உள்ளது? தமிழகத்தை எப்போது அடையும்?

    இலங்கையை ஒட்டிய கடல் பகுதிகளில் உருவாகியுள்ள திட்வா புயல் காரணமாக வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திர பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வழங்கியுள்ளது.

    கடலோர இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் திட்வா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது.

    இன்று அதிகாலை 4.30 மணிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திட்வா புயல் கடந்த ஆறு மணி நேரங்களில் மணிக்கு 10 கி.மீ என்ற வேகத்தில் நகர்ந்து 28ம் தேதி காலை இலங்கை திரிகோணமலையிலிருந்து 50 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியின் தெற்கு-தென்கிழக்கு திசையில் 460 கி.மீ தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கு திசையில் 560 கி.மீ தூரத்திலும் நிலை கொண்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது வடக்கு வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளை கடந்து, வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கரைகளை வரும் 30ம் தேதி காலை வந்தடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  5. ஹாங்காங் தீ விபத்து : உயிரிழப்பு 94 ஆக அதிகரிப்பு

    ஹாங்காங்கில் அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது.

    பல தசாப்தங்களில் ஹாங்காங்கில் ஏற்படும் கொடிய தீ விபத்து இது.

    டாய் போ மாவட்டத்தில் ஏழு அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 94 பேர் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தீயணைப்புத் துறையின் கூற்றுப்படி, இந்த விபத்தில் கொல்லப்பட்டவர்களில் 37 வயதான தீயணைப்பு வீரரும் ஒருவர், 11 தீயணைப்பு வீரர்கள் உட்பட குறைந்தது 76 பேர் காயமடைந்தனர்.

    தீ கிட்டத்தட்ட முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாகவும், மீட்புப் படையினர் காணாமல் போனவர்களை எரிந்த கட்டடங்களில் தொடர்ந்து தேடி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  6. வெள்ளை மாளிகை அருகே சுடப்பட்ட தேசிய காவல் படையை சேர்ந்தவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு

    அமெரிக்காவில் வாஷிங்டன் டி.சி.யில் புதன்கிழமை தேசிய காவலர் படையை சேர்ந்த இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் தாக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    படுகாயமடைந்த 20 வயதான சாரா பெக்ஸ்ட்ரோம் உயிரிழந்துள்ளதாக டிரம்ப் வியாழக்கிழமை மாலை தெரிவித்தார்.

    காயமடைந்த மற்றொருவரான தேசிய காவலர் உறுப்பினர், 24 வயதான ஆண்ட்ரூ வொல்ஃப், "தனது உயிருக்காக போராடுகிறார்" என்று அவர் கூறினார்.

    இருவரும் புதன்கிழமையன்று வெள்ளை மாளிகை அருகே டவுன்டவுனில் உள்ள ஃபாரகட் சதுக்கத்திற்கு அருகில் இருந்தபோது நெருங்கிய தூரத்திலிருந்து சுடப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபரான ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 29 வயதான ரஹ்மானுல்லா லகன்வாலை போலீசார் கைது செய்துள்ளனர்.

  7. வணக்கம் நேயர்களே!

    இன்று (28.11.2025) மதியம் வரையிலும் நேரலை பக்கத்துக்கான செய்திகளை தொகுத்து வழங்குவது சாரதா வி.

  8. நன்றி நேயர்களே!

    பிபிசி தமிழின் இன்றைய நேரலை பக்கம் இத்துடன் நிறைவு பெறுகிறது. மீண்டும் நாளை காலை முதல் நேரலையாக தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய சமீபத்திய நிகழ்வுகளை இங்கே பார்க்கலாம். நன்றி! வணக்கம்!

  9. பாகிஸ்தானில் இம்ரான் கான் குறித்து பரவிய வதந்திகள்: சிறை அதிகாரிகள் கூறியது என்ன?

    கடந்த புதன்கிழமை முதல், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவரும், அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் குறித்துப் பல்வேறு செய்திகள் பாகிஸ்தான் சமூக ஊடக பக்கங்களில் பரவி வருகின்றன.

    பல சமூக ஊடக பயனர்கள், இம்ரான் கான் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் இருந்து மாற்றப்பட்டதாக சந்தேகங்களை வெளிப்படுத்தினர். மேலும் சிலர் அவரது உடல்நிலை குறித்தும் கேள்வி எழுப்பினர்.

    முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அடியாலா சிறையில் வைக்கப்பட்டுள்ளார். சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் ஊழல் வழக்கில் அவருக்கு நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்தது.

    இந்நிலையில், சமூக ஊடகங்களில் பல்வேறு விதமான சந்தேகங்கள் பரவிய நிலையில், இம்ரான் கான் முற்றிலும் ஆரோக்கியமாக இருப்பதாக அடியாலா சிறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    பிபிசியிடம் பேசிய சிறை அதிகாரிகள், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் முற்றிலும் ஆரோக்கியமாக இருப்பதாகவும், சிறை விதிகள் மற்றும் நீதிமன்ற அறிவுறுத்தல்களின்படி அவருக்கு அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

    மறுபுறம், இம்ரான் கானின் சகோதரி அலீமா கான் தனது சகோதரர் தொடர்பான அனைத்து வதந்திகளையும் முற்றிலுமாக நிராகரித்துள்ளார்.

  10. இலங்கை வெள்ளம்: கால்வாயில் விழுந்த கார், 3 பேர் பலியான சோகம்

    எச்சரிக்கை: காணொளி சங்கடம் தரலாம்

    இலங்கையின் கல்முனை நகரத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் அருகே இருந்த கால்வாயில் விழுந்தது.

    இந்த சம்பவத்தில் காரில் பயணித்த ஆறு வயது குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

  11. தவெக-வில் செங்கோட்டையனுக்கு அளிக்கப்பட்ட பதவி என்ன? அறிவித்த விஜய்

    தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

    கூடுதலாக, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்படுவதாக விஜய் அறிவித்துள்ளார்.

    அதுகுறித்து இன்று வெளியிட்ட அறிக்கையில், “மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், இன்று முதல் நம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து, மக்களுக்கான அரசியலில் நம்முடன் பயணிக்கவுள்ளார்.

    அவர், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 28 பேர் கொண்ட, எனது கண்காணிப்பில் இயங்கும் கழக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார். இவர் இந்தக் குழுவை வழிநடத்தி, கழகத்தின் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுக்க எனக்கு உறுதுணையாகச் செயல்படுவார்,” என்று விஜய் தெரிவித்துள்ளார்.

    அதோடு, “ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் அவர் நியமிக்கப்படுகிறார்” என்றும் அறிக்கையில் கூறியுள்ளார்.

  12. வெள்ளை மாளிகை அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு தேசிய காவலர் உறுப்பினர்கள் படுகாயம்

    வாஷிங்டன் டி.சி.யில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு தேசிய காவலர் உறுப்பினர்கள் படுகாயமடைந்தனர் என்று எஃப்.பி.ஐ இயக்குநர் காஷ் படேல் தெரிவித்தார்.

    "தாக்குதல் நடத்தியவர் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:15 மணிக்கு தேசிய காவலர் உறுப்பினர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்தச் சம்பவம் வெள்ளை மாளிகை அருகே நடந்துள்ளது" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தாக்குதல் நடத்தியவர், கடந்த 2021ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்கு வந்த ஆப்கன் நாட்டைச் சேர்ந்த ரஹ்மானுல்லா லகன்வால் என்று சந்தேகிக்கப்படுவதாக சட்ட அமலாக்க வட்டாரங்கள் பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸிடம் தெரிவித்தன.

    தாக்குதலின்போது சந்தேக நபரும் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்தேக நபர் "பலத்த காயமடைந்துள்ளார்" என்று கூறினார்.

    இதற்கிடையில், மேற்கு விர்ஜீனியா ஆளுநர் பேட்ரிக் மோரிசி ஆரம்பத்தில் தேசிய காவலர் உறுப்பினர்கள் இருவரும் கொல்லப்பட்டதாகக் கூறினார், ஆனால் பின்னர் அவர்களின் நிலை குறித்து முரண்பட்ட தகவல்களைப் பெறுவதாகத் தெரிவித்தார்.

    அமெரிக்க பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத்தின் கூற்றுப்படி, தாக்குதலைத் தொடர்ந்து அதிபர் டிரம்ப் வாஷிங்டன் டி.சி.யில் கூடுதலாக 500 தேசிய காவலர்களை பணியில் ஈடுபடுத்த உத்தரவிட்டுள்ளார்.

  13. வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை

    வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அவரது மகள் சாய்மா வாஸீத், மகன் சஜீப் வாஸீத் ஆகியோருக்கு தலா ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    தீர்ப்பை வழங்கும்போது, ஷேக் ஹசீனா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எந்த விண்ணப்பமும் இல்லாமல் தங்கள் அதிகார எல்லைக்கு வெளியே ஒரு நிலம் ஒதுக்கப்பட்டதாகவும் நீதிமன்றம் கூறியது.

    டாக்காவின் ஐந்தாவது சிறப்பு நீதிபதி முகமது அப்துல்லா அல் மாமூன் இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

    முன்னதாக, வங்கதேசத்தில் உள்ள சர்வதேச குற்றங்கள் தீர்ப்பாயம் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்தது.

  14. தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்

    அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் விஜயின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

    கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பதவியை நேற்று (நவ. 26) அவர் ராஜினாமா செய்த நிலையில், இன்று தவெகவில் இணைந்துள்ளார்.

    அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று குரல் எழுப்பிய செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து கடந்த அக்டோபர் மாதம் நீக்கப்பட்டார். இன்று தவெக கட்சி அலுவலகத்துக்கு சென்றார். அவர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். அப்போது, செங்கோட்டையனுக்கு தவெகவின் சால்வை அணிவித்து வரவேற்றார். அப்போது, செங்கோட்டையனின் ஆதரவாளர்களும் உடனிருந்தனர்.

  15. தவெக அலுவலகத்துக்கு வந்த செங்கோட்டையன்

    அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி அலுவலகத்துக்கு சென்றுள்ளார்.

    கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பதவியை நேற்று (நவ. 26) அவர் ராஜினாமா செய்த நிலையில், இன்று தவெகவின் கட்சி அலுவலகத்துக்கு அவர் சென்றுள்ளார்.

    அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று குரல் எழுப்பிய செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து கடந்த அக்டோபர் மாதம் நீக்கப்பட்டார். அவர் தவெகவில் இணையப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், இன்று தவெக கட்சி அலுவலகத்துக்கு நேரில் வந்துள்ளார். உடன் அவரது ஆதரவாளர்களும் வந்துள்ளனர்.

  16. இன்று ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் இன்று ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ராமநாதபுரம், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு இலங்கை – இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது. இது அதற்கு அடுத்தடுத்த நாட்களில் மேலும் வலுவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக வரும் டிசம்பர் 1ம் தேதி வரை மாநிலத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஆங்காங்கே அதிகனமழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

    தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 கி.மீ முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே மணிக்கு 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். எனவே இந்தப் பகுதிகளில் இன்று மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  17. நன்றி நேயர்களே!

    பிபிசி தமிழின் இன்றைய நேரலை பக்கம் இத்துடன் நிறைவு பெறுகிறது. மீண்டும் நாளை காலை முதல் நேரலையாக தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய சமீபத்திய நிகழ்வுகளை இங்கே பார்க்கலாம். நன்றி! வணக்கம்!

  18. கோவையில் பிடிக்கப்பட்ட ரோலக்ஸ் யானை ஆனைமலையில் உயிரிழப்பு

    கோவை மாவட்டத்தில் தோட்டம் மற்றும் விவசாய நிலங்களில் சுற்றித் திரிந்த ரோலக்ஸ் யானை நீண்ட முயற்சிகளுக்குப் பிறகு வனத்துறையால் கும்கி யானைகளின் உதவியிடன் கடந்த நவம்பர் 12ஆம் தேதி பிடிக்கப்பட்டது.

    பின்னர், அது ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மந்திரிமட்டத்தில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு விடுவிக்கப்பட்டது. ரோலக்ஸ் யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் வனத்துறையின் தீவிர கண்காணிப்பில் இருந்த ரோலக்ஸ் யானை இன்று சிறுபுளிகன் ஓடை அருகே மயங்கி கீழே விழுந்தது. இதைத் தொடர்ந்து வனத்துறையினர் அருகில் சென்று சோதனை செய்ததில் யானை இறந்துகிடப்பது தெரிய வந்தது.

    ரோலக்ஸ் யானையின் இறப்புக்கான காரணம் தெரியாத நிலையில் வனத்துறையின் கால்நடை மருத்துவர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் உறுப்பினர்கள் முன்னிலையில் நாளை உடற்கூராய்வு நடத்தப்பட உள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

    மேலும் யானை விடப்பட்ட இடம் மற்றும் பதிவுகளைக் கண்காணித்து, ரேடியோ காலரின் ஜி.பி.எஸ். தரவு மற்றும் சிகிச்சை வரலாற்றை ஆய்வு செய்து, இறப்புக்கான காரணங்களைக் கண்டறிய உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும் வனத்துறை தெரிவித்துள்ளது.

  19. 'பெரிய தாக்கம் இருக்காது' - செங்கோட்டையன் ராஜினாமா பற்றி சீமான் கூறியது என்ன?

    அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயையும் சந்தித்தார்.

    இந்தச் சந்திப்பு தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாகியுள்ளது. அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இந்தச் சந்திப்பு பற்றி கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பில் செங்கோட்டையன் ராஜினாமா பற்றிப் பேசினார்.

    அப்போது அவர், “அது அவருடைய விருப்பம், தமிழ்நாட்டில் ஒரு மூத்த அரசியல்வாதியாக உள்ளார். இன்னும் இரண்டு மாதங்களில் தேர்தல் வரப் போகிறது. இவர் பதவி விலகுவதால் எந்தத் தாக்கமும் ஏற்படப் போவதில்லை.

    பிப்ரவரியில் தேர்தல் அறிவிக்கப்பட்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அவர் வேறு கட்சிக்குப் போகிறபோது இந்தக் கட்சியில் இருந்து பெற்ற பதவி வேண்டாம் என நினைத்திருக்கலாம். அதனால் அவ்வாறு செய்திருக்கலாம்” என்றார்.

  20. 2030 காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும்: அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு

    2030ஆம் ஆண்டு நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படும் என காமன்வெல்த் விளையாட்டுகள் கூட்டமைப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

    இந்தப் போட்டிகள் அனைத்தும் குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுகள் கூட்டமைப்பின் பொதுச்சபை கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    "காமன்வெல்த் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவின் முன்மொழிவை ஏற்றுள்ளனர். ஆமதாபாத்தில் நடைபெறும் இந்தப் போட்டிகளை நடத்துவதற்காக மிகவும் வலுவான முன்மொழிவை இந்தியா எடுத்து வைத்தது" என அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதைக் கொண்டாடும் விதமாக டெல்லியில் உள்ள மேஜர் தியான்சந்த் தேசிய மைதானத்தில் மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் நிகழ்ச்சி ஒன்றை ஒருங்கிணைத்திருந்தது.

    அந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்ஷுக் மாண்டவியா, "காமன்வெல்த் போட்டிகளில் 100வது ஆண்டான 2030இல் அந்தப் போட்டிகளை இந்தியாவில் நடத்துவது இரு தரப்புக்கும் முக்கியமானது" எனத் தெரிவித்தார்.