நன்றி நேயர்களே!
பிபிசி தமிழின் இன்றைய நேரலை பக்கம் இத்துடன் நிறைவு பெறுகிறது. மீண்டும் நாளை காலை முதல் நேரலையாக தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய சமீபத்திய நிகழ்வுகளை இங்கே பார்க்கலாம். நன்றி! வணக்கம்!
You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகம் முழுவதுமான சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்
பிபிசி தமிழின் இன்றைய நேரலை பக்கம் இத்துடன் நிறைவு பெறுகிறது. மீண்டும் நாளை காலை முதல் நேரலையாக தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய சமீபத்திய நிகழ்வுகளை இங்கே பார்க்கலாம். நன்றி! வணக்கம்!
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடக்கும் ஜி20 உச்சி மாநாட்டிற்காக பிரதமர் நரேந்திர மோது சென்றுள்ளார். இன்று நடைபெற்ற ஜி20 தலைவர்கள் கூட்டத்தின் முதல் அமர்வில் அவர் உரையாற்றினார்.
வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “பிரதமர் தனது உரையில் இந்தியாவின் நாகரீக சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட ஒருங்கிணைந்த மனிதநேயம் என்ற கருத்தைக் குறிப்பிட்டதாக” பதிவிட்டுள்ளார்.
வளர்ச்சிக்கும் பூமிக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்துவதே இந்தச் சிந்தனையின் நோக்கம் என்றும் அவர் கூறினார். புது டெல்லியில் நடந்த ஜி20 மாநாட்டில் எடுக்கப்பட்ட பல வரலாற்று முடிவுகள் செயல்படுத்தப்பட்டு இருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
திறம்மிக்க இடப்பெயர்வு, சுற்றுலா, உணவுப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் பொருளாதாரம், புதுமை, பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்ற துறைகளில் தென்னாப்பிரிக்காவின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை பிரதமர் பாராட்டினார்.
உலகளாவிய நிர்வாகக் கட்டமைப்பில், தெற்கின் குரல் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் இயந்திரங்களைப் பயன்படுத்தி பால் கறப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மதுரையில் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், “தமிழ்நாட்டின் அனைத்து பால் கூட்டுறவு சங்கங்களும் லாபத்தில் இயங்கக்கூடிய சூழலுக்கு வந்துள்ளன. பாலின் தரத்தை அறிய மாநிலம் முழுவதும் 10,450 இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றின் வாயிலாக தரத்தை துல்லியமாகக் கணக்கிட்டு, பாலுக்கான விலை வழங்கப்பட்டு வருகிறது.
பால் கறப்பதற்குத் தரமான இயந்திரங்களை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். தரம் குறைந்த இயந்திரங்களை பயன்படுத்துவதால் மாட்டிற்கு உடல்நலக் குறைவு ஏற்படும். மேற்கத்திய நாடுகளைப் போல தமிழ்நாட்டிலும் விரைவில் இயந்திரங்களின் மூலம் பால் கறப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்..
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 156/2 என்ற வலுவான நிலையில் இருக்கிறது தென்னாப்பிரிக்கா.
கவுஹாத்தியில் நடந்துவரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஓப்பனர்கள் எய்டன் மார்க்ரம் மற்றும் ரயன் ரிக்கில்டன் இருவரும் அந்த அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 82 ரன்கள் எடுக்க, முதல் செஷனின் கடைசி ஓவரில் அந்த ஜோடியைப் பிரித்தார் பும்ரா. 38 ரன் எடுத்திருந்த மார்க்ரமை அவர் போல்டாக்கினார்.
முதல் செஷனின் கடைசி ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்த தென்னாப்பிரிக்கா, இரண்டாவது செஷனின் முதல் ஓவரில் இன்னொரு விக்கெட்டையும் இழந்தது. மற்றொரு ஓப்பனரான ரிக்கில்டன் 35 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ஆனால், அதன்பிறகு அந்த முழு செஷனிலும் தென்னாப்பிரிக்கா விக்கெட் இழக்காத வகையில் கேப்டன் டெம்பா பவுமா மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இருவரும் ஆடினார்கள். இந்திய கேப்டன் பந்த் அனைத்து பௌலர்களையும் பயன்படுத்திப் பார்த்தார். ஆனால், அந்த பார்ட்னர்ஷிப்பை உடைக்க முடியவில்லை.
இரண்டாவது செஷன் முடிவில் தென்னாப்பிரிக்க அனி 156/2 என்ற நிலையில் இருக்கிறது. ஸ்டப்ஸ் 32 ரன்களிலும், பவுமா 36 ரன்களிலும் களத்தில் இருக்கிறார்கள்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நியூ யார்க் நகர மேயர் ஸோஹ்ரான் மம்தானி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அப்போது, இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான ராணுவ மோதலை முடிவுக்குக் கொண்டு வந்ததில் தான் பங்காற்றியதாக டிரம்ப் மீண்டும் கூறினார்.
மம்தானியுடனான சந்திப்பு ‘நன்றாக’ அமைந்ததாக டிரம்ப் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது, வரிவிதிப்பு எச்சரிக்கையின் மூலம், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ராணுவ மோதலை தான் தடுத்து நிறுத்தியதாக டிரம்ப் மீண்டும் ஒருமுறை தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் 22 அன்று காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தானால் நிர்வகிக்கப்படும் காஷ்மீர் பகுதிகளில் மே 6-7 அன்று இரவில் ராணுவ முகாம்களை இந்திய ராணுவம் இலக்கு வைத்தது.
இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயர் வைக்கப்பட்டது, இது இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ராணுவ மோதல் ஏற்பட வழிவகுத்தது.
மே 10 அன்று சண்டை நிறுத்த முடிவு எட்டப்பட்டதால் இந்த மோதல் முடிவுக்கு வந்தது.
டிரம்ப் இதேபோன்ற கூற்றுகளை முன்பும் தெரிவித்துள்ளார். எனினும், எந்தவொரு உலக தலைவரும் சிந்தூர் ஆபரேஷனை நிறுத்துமாறு கூறவில்லை என இந்தியா கூறியுள்ளது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி கவுஹாத்தியில் தொடங்கியிருக்கிறது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா பேட்டிங் தேர்வு செய்தார்.
இந்திய அணிக்கு இந்தப் போட்டியில் ரிஷப் பந்த் கேப்டனாக செயல்படுகிறார். கடந்த போட்டியின்போது கழுத்தில் காயம் ஏற்பட்டு கேப்டன் கில் வெளியேறினார். அதன்பிறகு அவர் அந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை. இன்னும் அதிலிருந்து அவர் முழுமையாக குணமடையாததால், ரிஷப் பந்த் கேப்டன் பொறுப்பை ஏற்றிருக்கிறார்.
கில்லுக்குப் பதில் பிளேயிங் லெவனில் தமிழ்நாட்டு வீரர் சாய் சுஷர்ஷன் இடம்பெற்றிருக்கிறார். மேலும், இந்தப் போட்டியில் இன்னொரு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ஆல்ரவுண்டர் அக்ஷர் பட்டேலுக்குப் பதிலாக நித்திஷ் குமார் ரெட்டி இடம்பெற்றிருக்கிறார். தென்னாப்பிரிக்க அணியில் கார்பின் பாஷுக்குப் பதிலாக செனுரான் முத்துசாமி களமிறக்கப்பட்டிருக்கிறார்.
இரண்டாவது போட்டிக்கான இந்திய அணி: கே.எல்.ராகுல், யஷஷ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்ஷன், வாஷிங்டன் சுந்தர், ரிஷப் பந்த் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), துருவ் ஜுரெல், ரவீந்திர ஜடேஜா, நித்திஷ் குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, மொஹம்மது சிராஜ்.
ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா விதித்திருக்கும் நிபந்தனைகள் காரணமாக, அமெரிக்காவின் ஆதரவை இழக்கும் நிலை ஏற்பட்டுவிடலாம் என்று தெரிவித்துள்ளார் யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி.
வெள்ளிக்கிழமை தன் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜெலென்ஸ்கி, “யுக்ரேன் மிகவும் கடினமான ஒரு முடிவை மேற்கொள்ளவேண்டும். ஒன்று, நாம் நமது கண்ணியத்தை இழக்க வேண்டி வரலாம், அல்லது நம் மிக முக்கியமான கூட்டாளியான அமெரிக்காவை விட்டு விலகவேண்டியதாகி விடலாம்” என்று கூறினார்.
"இது நம் வரலாற்றின் மிகவும் கடினமான தருணங்களுள் ஒன்று" என்றும் அவர் கூறினார்.
ரஷ்யா மற்றும் யுக்ரேன் இடையிலான போருக்கு முடிவு காண அமெரிக்கா தயாரித்த அமைதி திட்டத்தின் வரைவு ஊடகங்களுக்கு கசிந்ததையடுத்து, ஜெலன்ஸ்கி இந்த கருத்துகளை வெளியிட்டார்.
இது, யுக்ரேன் முன்பு ஏற்க மறுத்த அதே நிபந்தனைகளை மீண்டும் முன்வைக்கிறது. 28 அம்சங்களைக் கொண்ட இந்த அமைதி வடிவமைப்பு, யுக்ரேன் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியிலிருந்து படைகளைப் பின்வாங்குவது, அதன் படை எண்ணிக்கையை குறைப்பது, மேலும் யுக்ரேன் ஒருபோதும் நேட்டோ (NATO) கூட்டணியில் சேராது என்பதற்கான உத்தரவாதம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
2022ம் ஆண்டு யுக்ரேன் மீது படையெடுத்த ரஷ்யா, அதன் 20 சதவிகித பகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது.
சூப்பர் ஓவரில் ஒரு ரன் கூட அடிக்காமல், வங்கதேச ஏ அணிக்கு எதிரான ரைஸிங் ஆசிய கோப்பை அரையிறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்திருக்கிறது இந்திய ஏ அணி.
ரைஸிங் ஆசிய கோப்பை தொடர் கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்துவருகிறது. இதன் அரையிறுதி போட்டியில் வங்கதேச ஏ அணியை நேற்று (நவம்பர் 21) எதிர்கொண்டது இந்திய ஏ அணி. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச ஏ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய இந்திய ஏ அணியும் 20 ஓவர்கள் முடிவில் வங்கதேசத்தைப் போல் 194/6 என முடித்தது. இரு அணிகளும் ஒரு ஸ்கோரை எடுத்ததால் ஆட்டம் சூப்பர் ஓவருக்குச் சென்றது.
சூப்பர் ஓவரில் இந்திய ஏ அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் பந்திலேயே கேப்டன் ஜித்தேஷ் ஷர்மா போல்டாகி வெளியேறினார். அடுத்து களமறங்கிய அஷுதோஷ் ஷர்மாவும் முதல் பந்திலேயே ஆட்டமிழக்க ரன் ஏதும் எடுக்காமல் இந்தியாவின் சூப்பர் ஓவர் முடிவுக்கு வந்தது.
நவம்பர் 20 மலாக்கா நீரிணையின் மத்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தில் ஏற்பட்ட சுழற்சி (Upper Air Cyclonic Circulation) சராசரி கடல் மட்டத்திலிருந்து 5.8 கிமீ உயரம் வரை நீடிக்கிறது. அதன் தாக்கத்தால், நவம்பர் 22 (சனிக்கிழமை) அன்று தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று (நவம்பர் 21) வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், "அந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 24 அன்று மத்திய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் தாழ்வு நிலையாக மாறும் வாய்ப்புள்ளது. அதன் பிறகும் அது மேற்கு-வடமேற்குத் திசையில் நகர்ந்து, அடுத்த 48 மணி நேரங்களில் தென்மேற்கு வங்கக்கடலில் மேலும் வலுவடையும் வாய்ப்பு அதிகம்" என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதனால் இன்று (நவம்பர் 22) தமிழ்நாட்டின் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களிலும், காரைக்காலிலும் ஆங்காங்கே கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில், தமிழக கடற்கரை, மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய கன்னியாகுமரியின் பகுதிகளில் மணிக்கு 40 கிமீ முதல் 50 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும், அது மணிக்கு 60 கிலோமீட்டர் வேகம் வரை வலுப்பெறலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்நாள்களில் மீனவர்கள் கடலுக்குள் செல்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று (22.11.2025) மதியம் வரையிலும் நேரலை பக்கத்துக்கான செய்திகளைத் தொகுத்து வழங்குவது பிரதீப் கிருஷ்ணா
பிபிசி தமிழின் இன்றைய நேரலை பக்கம் இத்துடன் நிறைவு பெறுகிறது. மீண்டும் நாளை காலை முதல் நேரலையாக தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய சமீபத்திய நிகழ்வுகளை இங்கே பார்க்கலாம். நன்றி! வணக்கம்!
மத்திய அரசு இன்று முதல் நான்கு தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது. பி.ஐ.பி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, "இந்தச் சட்டங்கள் தற்போது நடைமுறையில் உள்ள 29 தொழிலாளர் சட்டங்களுக்குப் பதிலாக அமல்படுத்தப்படுகின்றன."
இந்த 29 சட்டங்களில், நான்கு சட்டங்கள் ஊதியம் மற்றும் சம்பளம் தொடர்பானவை, ஒன்பது சட்டங்கள் சமூகப் பாதுகாப்பு தொடர்பானவை, மற்றும் 13 சட்டங்கள் தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் தொடர்பானவை. மீதமுள்ள மூன்று தொழில்துறை விதிகள் தொடர்பானவை.
இந்த மாற்றங்கள் அமைப்பு சார்(organized) மற்றும் அமைப்பு சாரா (unorganized) துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்குப் பயனளிக்கும் என்று அரசு கூறுகிறது. பிரதமர் நரேந்திர மோதி, இந்த முடிவை வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோதி தனது பதிவில், "இது நமது உழைக்கும் சகோதர, சகோதரிகளுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். நமது அரசு நான்கு தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்தியுள்ளது.
சுதந்திரத்திற்குப் பிறகு தொழிலாளர்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய சீர்திருத்தம் இதுவே. இது நாட்டின் உழைக்கும் மக்களுக்குப் பெரிதும் அதிகாரமளிக்கும். இது விதிகளைப் பின்பற்றுவதை எளிதாக்குவதுடன், தொழில் செய்வதையும் எளிதாக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
சிபிஎம் எதிர்ப்பு
அரசின் இந்த முடிவைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டது. இந்தப் புதிய சட்டங்கள் தொழிலாளர்களுக்கு எதிராகவும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும் உள்ளதாக விமர்சித்துள்ளது.
இந்த ஆண்டு ஜூலை மாதம், இந்தியாவில் உள்ள பத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகளின் சபை, இந்த நான்கு தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது.
மேலும், 29 தொழிலாளர் சட்டங்களை திருத்துவதற்காகக் கொண்டு வரப்பட்ட இந்த நான்கு தொழிலாளர் சட்டங்களும் பெருநிறுவனத் துறைக்குப் பயனளிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் வாதிட்டன.
சுதர்சனம் கொலை வழக்கில் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று(நவம்பர் 21) தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோர் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்துள்ளார்.
இவர்களுக்கான தண்டனை விவரங்கள் வரும் 24ஆம் தேதி அறிவிக்கப்பட இருப்பதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் என்ன நடந்தது? அனைத்தையும் முழுமையாகத் தெரிந்துகொள்ள ஓய்வுபெற்ற டி.ஜி.பி. எஸ்.ஆர்.ஜாங்கிட்-ஐ பிபிசி சந்தித்தது. விரிவாக காணொளியில்...
இந்தியாவின் சிவிங்கிப்புலி பாதுகாக்கும் முயற்சியின் முக்கிய மைல்கல் தருனமாக, இந்தியாவில் பிறந்த முதல் சிவிங்கிப்புலியான முகி, ஐந்து குட்டிகளை ஈன்றுள்ளது.
இந்தியாவில் சிவிங்கிப்புலி அழிந்துவிட்ட உயிரினமாக அறிவிக்கப்பட்டு சுமார் 70 ஆண்டுகள் கழித்து, இந்திய அரசின் 'சிவிங்கிப்புலி மறு அறிமுக திட்டத்தின்' ஒரு பகுதியாக முகி இருந்தது.
நமீபிய சிவிங்கிப்புலிக்கு பிறந்த முகி, இந்திய வாழ்விடத்தை ஏற்க தீவிரமான சூழ்நிலைகளை எதிர்கொண்டது. பின் அது இனப்பெருக்கமும் செய்தது. சமீபத்திய வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவிலேயே பிறந்த சிவிங்கிப்புலி ஈன்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
சமூக ஊடகப் பதிவில், தாயும் குட்டிகளும் நலமாக உள்ளதாக சுற்றுசூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்தார்.
கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தைக் கொண்டுவர திமுக கூட்டணியைச் சேர்ந்த 40 எம்.பிக்களும் டெல்லியில் போராடி நாடாளுமன்றத்தை முடக்குவதுதான் சரியாக இருக்கும் என அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கோவையில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் தொய்வடைந்து இருப்பதாகவும், திமுகவினர் அதிகாரிகளைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும், மொத்தமாக படிவங்களை வாங்கிச் செல்வதாகவும்” குற்றம் சாட்டினார்.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளுக்குப் புறம்பான நடவடிக்கைகள் நடப்பதாகவும் வேலுமணி குறிப்பிட்டார். அதிமுக ஆட்சியில் கோவையில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாவும், 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியைக் கொண்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
“மெட்ரோ ரயில் திட்டத்திற்கான திட்ட அறிக்கையில் தவறான மக்கள் தொகையை திமுக அரசு கொடுத்திருக்கக் கூடாது” எனக் குறிப்பிட்ட அவர் மெட்ரோ ரயில் திட்டம் பற்றி மத்திய அரசு கேட்கும் விளக்கங்களை அளித்து திட்டத்தை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார்.
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயலபடுத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் வேலுமணி தெரிவித்தார். அதோடு, 2026இல் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானவுடன் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் எனவும் கூறினார்.
மேலும் பேசிய எஸ்.பி. வேலுமணி, “பிரதமரிடம்தொழில் வளர்ச்சிக்கான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை எடப்பாடி பழனிச்சாமி வழங்கி இருக்கிறார். அதிமுக ஆட்சி அமைந்ததும் அவை அனைத்தையும் மத்திய அரசிடம் இருந்து பெற்றுத் தருவார்” எனவும் கூறினார்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திரா தனது கணவர் துவாரக நாதன் மற்றும் குடும்பத்தினருடன் திண்டுக்கல் செவாலியர் சிவாஜி நகரில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், இன்று (நவம்பர் 21) மதியம் 1:30 மணியளவில் கோவை ஜி.எஸ்.டி நுண்ணறிவுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் ஐந்து பேர் இந்திராவின் வீட்டிற்கு வருகை தந்தனர்.
அவர்கள் மேற்கொண்டு வரும் சோதனை ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்தத் தகவல் அறிந்து வீட்டின் முன்பாக திமுக தொண்டர்கள் குவிந்து வருவதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
மேலும், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அமைச்சர் ஐ.பெரியசாமியின் இல்லம், அவரது மகனும் பழனி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான ஐபி செந்தில்குமார் வீடு, இந்திராவின் வீடு மற்றும் 3 வர்த்தக நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
ஜி-20 உச்சி மாநாட்டை அமெரிக்கா புறக்கணிப்பதால் தான் பிரதமர் நரேந்திர மோதி அதில் பங்கேற்கிறார் என்றும், அங்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் சமூக ஊடக தளமான எக்ஸ் பக்கத்தில், "பிரதமர் மோதி ஜி -20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்கிறார். அமெரிக்கா இந்த உச்சிமாநாட்டைப் புறக்கணித்து வருவதால் அவரால் இந்த பயணத்தை எளிதாக மேற்கொள்ள முடிகிறது."
"சில நாட்களுக்கு முன்பு, கோலாலம்பூரில் நடந்த இந்தியா-ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோதி கலந்துகொள்ளவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஏனெனில் அவர் அங்கு அதிபர் டிரம்பை சந்திக்க வேண்டியிருந்திருக்கும்.” என்று பதிவிட்டிருந்தார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "அடுத்த ஜி-20 உச்சி மாநாடு ஒரு வருடத்திற்குப் பிறகு அமெரிக்காவில் நடைபெறும். அதற்குள், இந்தியா அமெரிக்காவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை கொண்டிருக்கும். ஆனால் கடந்த ஏழு மாதங்களில் அதிபர் டிரம்ப் 'ஆபரேஷன் சிந்தூரை' நிறுத்தியதாக 61 முறை கூறியதைப் போலவே, அடுத்த 12 மாதங்களில் அவர் இந்த கூற்றை இன்னும் எத்தனை முறை மீண்டும் சொல்வார் என்று கற்பனை செய்து பாருங்கள்.” என்றும் தெரிவித்திருந்தார்.
பிரதமர் நரேந்திர மோதி இன்று தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் புறப்பட்டார். நவம்பர் 21 முதல் 23 வரை அங்கு நடைபெறும் 20-வது ஜி20 உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார்.
பிரேசிலின் வாலெமில் நடந்த ஐ.நா காலநிலை மாநாடு COP30 இன் போது தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த இடத்திலிருந்து உடனடியாக வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இருப்பினும், தீ உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
சுமார் ஆறு நிமிடங்களுக்குள் தீ கட்டுக்குள் வந்ததாக நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இருப்பினும், புகையை சுவாசித்ததால் பாதிக்கப்பட்ட 21 பேரை மருத்துவர்கள் பரிசோதித்தனர்.
தீ விபத்து ஏற்பட்ட இடத்திலிருந்து தீப்பிழம்புகள் மற்றும் புகை எழுவதை பிபிசி நிருபர்கள் கண்டனர். மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். தீயணைப்பு படை வாகனங்கள் உள்ளே விரைந்து செல்வதைக் காண முடிந்தது.
ஆறு நிமிடங்களில் தீ அணைக்கப்பட்டதாகவும், புகையை சுவாசித்ததால் 13 பேர் சிகிச்சை பெற்றதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
காலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான அடுத்த நடவடிக்கைகள் குறித்த உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சிகள் இறுதி கட்டத்தில் இருந்தன, ஆனால் தீ விபத்து காரணமாக பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டன.
இருப்பினும், வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும் என்று ஐ.நா அறிக்கை தெரிவித்துள்ளது.
தென் கிழக்கு வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை (நவ. 22) உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் நாட்களில் தொடர்ந்து வலுவடையக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிரமடையும். தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் வரும் 24ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது வலுப்பெறும். அதற்கு அடுத்த 48 மணி நேரங்களில் அது தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் தீவிரமடையக் கூடும்" என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று பத்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பெய்யக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து, வரும் 26ம் தேதி வரை தென் மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (21.11.2025) மதியம் வரையிலும் நேரலை பக்கத்துக்கான செய்திகளை தொகுத்து வழங்குவது சாரதா வி.