You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

சிவகங்கையில் 2 அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 11 பேர் பலி

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகம் முழுவதுமான சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்

முக்கிய சாராம்சம்

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. 201 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்; 288 ரன்கள் முன்னிலை பெற்றது தென்னாப்பிரிக்கா

    தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருக்கிறது. இதன்மூலம் 288 ரன்கள் முன்னிலை பெற்றது தென்னாப்பிரிக்கா.

    இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி கவுஹாத்தியில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 489 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் செனுரன் முத்துசாமி சதமடித்தார். அதிரடியாக விளையாடிய யான்சன் 93 ரன்கள் எடுத்தார்.

    அடுத்து விளையாடிய இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் 9-0 என்றிருந்தது.

    மூன்றாவது நாளில் இந்திய பேட்டர்களால் தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. ஜெய்ஸ்வால் (58 ரன்கள்) ஒருபுறம் அரைசதம் அடித்திருக்க, மறுபக்கம் விக்கெட்டுகள் மடமடவென விழுந்தன. யான்சன், ஹார்மர் இருவரும் பெரும் சவாலாக இருந்தார்கள்.

    லோயர் ஆர்டரில் தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 48 ரன்கள் எடுத்தார். வேறு யாரும் பெரிய ஸ்கோர் எடுக்காததால் இந்திய அணி 201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பேட்டிங்கில் சிறப்பாக ஆடிய மார்கோ யான்சன் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சைமன் ஹார்மர் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

    தென்னாப்பிரிக்காவை விட 288 ரன்கள் பின்தங்கிய இந்தியாவால் ஃபாலோ ஆனை தவிர்க்க முடியவில்லை. இருந்தாலும், தென்னாப்பிரிக்க அணி ஃபாலோ ஆன் கொடுக்காமல் இரண்டாவது இன்னிங்ஸை பேட்டிங் செய்யத் தீர்மானித்தது.

  2. "6.16 கோடி வாக்காளர்களுக்கு எஸ்ஐஆர் படிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன" - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

    தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், அதில் 50% படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்டிருப்பதாக தெரிவித்தார். எந்த காரணமும் இல்லாமல் வாக்காளர்களின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்படாது என்றும் அவர் கூறினார்.

    இந்த முதல் கட்டப் பணி டிசம்பர் 4 வரை தொடரும் என்றும் கூடுதல் அவகாசத்துக்கு வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார்.

    பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், "அக்டோபர் 27 தேதிப்படியுள்ள 6.41 கோடி வாக்காளர்களில் 6.16 கோடிப் பேருக்கு எஸ்ஐஆர் படிவம் தரப்பட்டுள்ளது. 50% வாக்காளர்களின் படிவங்களை பூர்த்தி செய்து பெறப்பட்டுள்ளது. அதை டிஜிட்டல் மயமாக்கும் பணி நடந்துகொண்டிருக்கிறது" என்று அவர் குறிப்பிட்டார்.

    2 லட்சம் விண்ணப்பங்கள் ஆன்லைனில் பூர்த்தி செய்து அனுப்பப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

    "இந்தப் பணியில் பூத் லெவல் அதிகாரிகள், மேற்பார்வையாளர்கள், நான் உள்பட 83,256 பேர் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். 33,000 தன்னார்வலர்கள் இதில் பங்களித்திருக்கிறார்கள். அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பூத் லெவல் ஏஜென்ட்கள் 2,45,340 பேர் இந்தப் பணியில் தீவிரமாக பங்காற்றிக்கொண்டிருக்கிறார்கள். பிஎல்ஏ-க்கள் எண்ணிக்கையில் இது இந்தியாவிலேயே அதிகபட்சம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

    கணக்கீட்டு படிவங்களில் பெருமளவு பெயர்கள் நீக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை மறுத்த அவர், "தகவல்கள் சரியாக இருந்தால் எந்த படிவமும் நிராகரிக்கப்படாது என்று கூறினார். வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இடம்பெறாதபட்சத்தில் ஒவ்வொரு பெயருக்கும் அதற்கான காரணம் என்னவென்று சொல்லவேண்டும், அதைக் காட்சிப்படுத்தவும் வேண்டும்" என்றும் அவர் கூறினார்.

  3. பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திரா காலமானார்

    ஹிந்தி சினிமாவின் 'ஹீ-மேன்' என்று அழைக்கப்படும் நடிகர் தர்மேந்திரா தனது 89 வயதில் காலமானார்.சில நாட்களுக்கு முன்பு, தர்மேந்திரா சுவாசக் கோளாறு காரணமாக மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் சிகிச்சைக்குப் பிறகு, அவர் வீடு திரும்பினார்.ஷோலே போன்ற பல பாலிவுட் படங்களில் அவர் நடித்துள்ளார்.

  4. வணக்கம் நேயர்களே!

    இன்று (24.11.2025) இரவு வரையிலும் நேரலை பக்கத்துக்கான செய்திகளைத் தொகுத்து வழங்குவது பிரதீப் கிருஷ்ணா.

  5. தென்காசியில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 6 பேர் பலி

    தென்காசி மாவட்டம் இடைகால் பகுதியில் தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்ததுள்ளதாகவும், சுமார் 32 பேர் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தி உள்ளார்.

    விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும்,விபத்தில் சிக்கிய அனைவரும் மீட்கப்பட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் கூறினார்.

    மதுரையிலிருந்து தென்காசிக்குச் சென்ற பேருந்தும், தென்காசியில் இருந்து கடையநல்லூர் நோக்கிச் சென்ற பேருந்தும் இன்று காலை விபத்துக்குள்ளானது.

    மேலும் உயிரிழந்தவர்களின் முகவரி சேகரிக்கப்பட்டு உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் கமல்கிஷோர் தெரிவித்தார்.

  6. இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யா காந்த் பதவியேற்றார்

    இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யா காந்த் பதவியேற்றார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    சுமார் 15 மாதங்கள் அவர் தலைமை நீதிபதியாக இருப்பார். பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோதி உட்பட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

  7. ரஷ்யா-யுக்ரேன் பேச்சுவார்த்தையில் “குறிப்பிடத்தக்க முன்னேற்றம்” : அமெரிக்கா

    அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட ரஷ்யா - யுக்ரேன் இடையிலான அமைதி திட்டத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகளில் "குறிப்பிடத்தக்க முன்னேற்றம்" ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

    சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் யுக்ரேனிய மற்றும் ஐரோப்பிய பேச்சுவார்த்தையாளர்களை சந்தித்த பின்னர், "இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியுள்ளது” என்று ரூபியோ கூறினார்.

    டிரம்ப்பின் குழு யுக்ரேனுக்கு செவிமடுப்பதற்கான அறிகுறிகள் தெரிவதாக யுக்ரேனிய அதிபர் ஜெலென்ஸ்கி கூறினார்.

    யுக்ரேனும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் அமைதி திட்ட முன்மொழிவுகள் பற்றி கசிந்த தகவல்கள் குறித்து கவலை தெரிவித்திருந்தன, அவை ரஷ்யாவுக்கு சாதகமாக பார்க்கப்பட்டன. இதனை புதின் "ஒரு தீர்வுக்கான அடிப்படையாக" கூறி வரவேற்றார்.

    யுக்ரேன் ஒரு "மிகவும் கடினமான தேர்வை" எதிர்கொள்கிறது என்று ஜெலென்ஸ்கி கூறினார். "கண்ணியத்தை இழக்கும் அபாயம்" அல்லது "ஒரு முக்கியமான கூட்டாளியை இழக்கும் அபாயம்." என்று அவர் பேசினார்.

  8. வணக்கம் நேயர்களே!

    இன்று (24.11.2025) மதியம் வரையிலும் நேரலை பக்கத்துக்கான செய்திகளை தொகுத்து வழங்குவது சாரதா வி.

  9. வியட்நாம்: கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் குறைந்தது 90 பேர் பலி

    வியட்நாமில் பல நாட்களாக பெய்து வரும் கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டதில் குறைந்தது 90 பேர் இறந்துள்ளனர், 12 பேர் காணாமல் போயுள்ளனர்.

    வியட்நாம் முழுவதும் 1,86,000 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், 3 மில்லியனுக்கும் அதிகமான கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டதாகவும் வியட்நாம் அரசாங்கம் கூறுகிறது.

    ஏ.எஃப்.பி செய்தி முகமையின்படி, மலைப்பாங்கான மாகாணமான டக் லக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, நவம்பர் 16 முதல் 60-க்கும் மேற்பட்ட இறப்புகள் அங்கு பதிவாகியுள்ளன.

    வியட்நாம் பிரதமர் பாம் மின் சின் ஞாயிற்றுக்கிழமை காலை தென்னாப்பிரிக்காவில் இருந்தவாறு, ஒரு மெய்நிகர் அவசரக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். அவர் G20 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள அங்கு சென்றுள்ளார்.

    காலநிலை மாற்றம் காரணமாக, வியட்நாமில் வானிலை தொடர்பான பேரழிவுகளின் ஆபத்து அதிகரித்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

  10. பார்வையற்றோர் மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி- கேப்டன் கூறியது என்ன?

    பார்வையற்றோருக்கான மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நேபாளத்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

    வெற்றியைத் தொடர்ந்து பேசிய இந்திய அணியின் கேப்டன் தீபிகா டி.சி., "நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம். எங்கள் அணியை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறோம், இது மிகப்பெரிய வெற்றி. இதற்காக நாங்கள் அனைவரும் மிகவும் கடினமாக உழைத்தோம். இது மிகவும் வலுவான அணி" என்று கூறினார்.

    கொழும்புவில் நடைபெற்ற முதல் மகளிர் பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் இந்தியா ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியது.

    முதலில் பேட்டிங் செய்த நேபாளம் 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சரிதா கிமிரே அதிகபட்சமாக 35 (ஆட்டமிழக்காமல்) ரன்களும், பிம்லா ராய் 26 ரன்களும் எடுத்தனர்.

    இந்திய அணி 12.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    இந்தியா சார்பாக கருணா கே அதிகபட்சமாக 27 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார், ஃபுலா சரென் 27 பந்துகளில் 4 பவுண்டரிகள் உட்பட ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் எடுத்தார்.

  11. 1.78 மில்லியன் பவுண்டுக்கு ஏலம் போன டைட்டானிக் பயணியின் கடிகாரம்

      • எழுதியவர், ராஸ் மெக்கி
      • பதவி, பிபிசி நியூஸ்

    டைட்டானிக் கப்பலில் பயணித்த ஒரு செல்வாக்கான பயணியின் உடலிலிருந்து மீட்கப்பட்ட தங்கக் கடிகாரம் 1.78 மில்லியன் பவுண்டுக்கு ஏலத்தில் வாங்கப்பட்டிருக்கிறது.

    டைட்டானிக் கப்பல் விபத்தில் இறந்த 1,500க்கும் மேற்பட்ட பயணிகளில் இசிடோர் ஸ்டிராஸ் மற்றும் அவரது மனைவி ஈடா ஆகியோரும் அடங்குவர். அந்த விபத்து நடந்த சில நாள்களுக்குப் பிறகு இசிடோரின் உடல் மீட்கப்பட்டது. அதில் ஒரு 18 காரட் தங்கத்தால் ஆன ஜூல்ஸ் ஜார்கன்சன் பாக்கெட் கடிகாரமும் இருந்தது.

    இந்தக் கடிகாரம் உள்பட பல பொருள்கள் சனிக்கிழமையன்று ஏலத்தில் விடப்பட்டன.

    இந்தக் கடிகாரம், டைட்டானிக் அலைகளுக்கு மத்தியில் மறைந்த தருணமான 02:20ல் நின்றிருக்கிறது. இது ஈடா ஸ்டிராஸ் தன் கணவரின் 43வது பிறந்த நாளுக்கான பரிசாகக் கொடுத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதில் ஸ்டிராஸின் இனிஷியல்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன.

    விபத்துக்குப் பிறகு தன் கணவரைப் பிரியக்கூடாது என்பதற்காக, ஈடா உயிர்காக்கும் படகில் இடத்தை மறுத்ததாகவும் நம்பப்படுகிறது. அவரது உடல் கண்டுபிடிக்கப்படவே இல்லை.

    அதேபோல், டைட்டானிக்கில் உள்ள பொருள்களைப் பயன்படுத்தி ஈடா எழுதிய கடிதம் ஒன்று 1 லட்சம் பவுண்டுக்கு ஏலம் விடப்பட்டது.

    ஏலம் விடுபவரான ஆண்ட்ரூ ஆல்ட்ரிட்ஜ், இந்தக் கடிகாரத்துக்குக் கிடைத்திருக்கும் உலக சாதனை விலை டைட்டானிக் கதை மீதான அடங்காத ஆர்வத்தைக் காட்டுகிறது என்றார்.

  12. பார்வையற்றோர் மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்தியா சாம்பியன்

    பார்வையற்றோருக்கான மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நேபாளத்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

    கொழும்புவில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நேபாள அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்தது.

    அடுத்து விளையாடிய இந்திய அணி 12.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக இந்திய வீராங்கனை ஃபுலா சரென் 27 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார்.

    இதன்மூலம் மகளிர் பார்வையற்றோர் டி20 உலகக் கோப்பையின் முதல் சாம்பியன் ஆனது இந்தியா.

    குரூப் சுற்றில் விளையாடிய 5 போட்டிகளையும் வென்றிருந்த இந்திய அணி, அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. இதன்மூலம் இந்த உலகக் கோப்பையில் விளையாடிய 7 போட்டிகளையுமே வென்று சாம்பியன் ஆகியிருக்கிறது இந்தியா.

  13. முத்துசாமி சதம், யான்சன் அரைசதம்; வலுவான நிலையில் தென்னாப்பிரிக்கா

    இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரண்டாம் நாள் உணவு இடைவேளையின்போது 428/7 என்ற வலுவான நிலையில் இருக்கிறது தென்னாப்பிரிக்க அணி. அந்த அணியின் செனுரன் முத்துசாமி சதமடித்து விளையாடிக்கொண்டிருக்கிறார்.

    247/6 என்ற ஸ்கோரில் இருந்து இரண்டாவது நாள் ஆட்டத்தைத் தொடங்கிய தென்னாப்பிரிக்காவின் முத்துசாமி, வெரெய்னே இருவரும் நிதானமாக ஆடி விக்கெட்டே இழக்காமல் முதல் செஷனைக் கடந்தனர். இரண்டாவது செஷனில் ஜடேஜா பந்துவீச்சில் வெரெய்ன் ஸ்டம்பிங் செய்யப்பட்டு 45 ரன்களோடு வெளியேறினார்.

    ஆனால், அதன்பிறகு களமிறங்கிய ஆல்ரவுண்டர் மார்கோ யான்சன் அதிரடியாக விளையாடி வேகமாக ரன் சேர்த்தார். அவர் 53 பந்துகளில் அரைசதம் கடந்தார். இவர் அதிரடி ஒருபக்கம் இருக்க, நிதானமாகவும் உறுதியாகவும் விளையாடிய செனுரன் முத்துசாமி, தன் முதல் டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்தார். இவர் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

    இரண்டாவது செஷன் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 428/7 என்ற நிலையில் இருக்கிறது. முத்துசாமி 107 ரன்களுடனும், யான்சன் 51 ரன்களுடனும் களத்தில் இருக்கிறார்கள். இன்று இதுவரை வீசப்பட்ட 55.1 ஓவர்களில் இந்தியா 1 விக்கெட்டை மட்டுமே வீழ்த்தியிருக்கிறது.

  14. "தற்குறி அல்ல, அரசியல் மாற்றத்துக்கான அறிகுறி" - காஞ்சிபுரத்தில் விஜய் பேச்சு

    காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சி தலைவர் விஜய், தாங்கள் ஆட்சிக்கு வரும்போது செய்ய விரும்பும் விஷயங்கள் என்ன என்பதைக் குறிப்பிட்டார். மேலும், தன் ஆதாரவாளர்கள் மீது முன்வைக்கப்படும் விமர்சன ரீதியிலான சொல்லாடலுக்கும் அவர் கண்டனம் தெரிவித்தார்.

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு மக்களை சந்தித்த விஜய், காஞ்சி மக்களின் பிரச்னைகளைப் பற்றிப் பேசி தன் உரையைத் தொடங்கினார்.

    மேலும், "வாலாஜாபத் அருகே அவலூர் ஏரி, பாலாறை விட உயரமாக இருப்பதால் ஆற்றுத் தண்ணீர் ஏரிக்குப் போக முடியவில்லை. அங்கு தடுப்பணை கட்டுவதன் மூலம் விவசாயம் சிறப்பாக நடக்கும். இதற்காக எத்தனை ஆண்டுகள் மக்கள் போராட வேண்டும்?" என்றும் விஜய் கேள்வியெழுப்பினார்.

    மேலும், "பரந்தூர் விமான நிலையப் பிரச்னையில் நாங்கள் விவசாயிகளின் பக்கம் மட்டுமே நிற்போம்" என்றும் அவர் கூறினார்.

    மேலும், புகழ்பெற்ற காஞ்சிப் பட்டு நெய்பவர்களின் நிலை மோசமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    60 ஆண்டுகளாக காஞ்சிபுரம் பேருந்து நிலையம் புதுப்பிக்கப்படாமல் இருப்பதையும் விமர்சித்த அவர், அரசால் அதற்கு ஒரு இடத்தை ஒதுக்க முடியாதா என்ற கேள்வியையும் எழுப்பினார்.

    தவெக அரசு ஆட்சிக்கு வந்தபின்னர் தான் செய்ய நினைக்கும் விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புவதாகக் கூறி சில விஷயங்களை அவர் பகிர்ந்தார்.

    "எல்லோருக்கும் நிரந்தரமான வீடு. எல்லா வீட்டுக்கும் ஒரு மோட்டார் சைக்கிள் வாகனம் உறுதியாக இருக்கும். கார் லட்சியம், அதற்கான வசதி வாய்ப்பை உண்டாக்கும் வகையில் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும். ஒவ்வொரு வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் குறைந்தது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வீட்டில் குறைந்தது ஒருவருக்கு நிரந்தர வருமானம். அதற்கான வேலைவாய்ப்பை உருவாக்கவேண்டும்." என பல்வேறு திட்டங்கள் குறித்து கூறினார் விஜய்.

    இந்தத் திட்டங்கள் எப்படி செயல்படுத்தப்படும் என்பது தவெகவின் தேர்தல் அறிக்கையில் தெளிவாக விளக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    ஆதரவாளர்கள் மீதான விமர்சனத்திற்கு பதில்

    தவெக ஆதராவளர்கள் மீது முன்வைக்கப்படும் விமர்சனம் குறித்து பேசிய விஜய், "தற்குறி தற்குறி என்கிறீர்களே, இவர்களெல்லாம் ஒன்றாக சேர்ந்துதான் இத்தனை நாள் ஆட்சி செய்த உங்களின் அரசியலை கேள்விக்குறியாக்கப் போகிறார்கள். இவர்களெல்லாம் தமிழ்நாட்டு அரசியலின் ஆச்சர்யக்குறி. தமிழ்நாட்டு அரசியல் மாற்றத்திற்கான அறிகுறி" என்றும் அவர் கூறினார்.

  15. இலங்கை: கண்டி கடுகண்ணாவ மண்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6ஆக உயர்வு

    கண்டியின் கடுகண்ணாவ பகுதியில் நேற்று (நவம்பர் 22) ஏற்பட்ட மண்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது. இந்த மண்சரிவில் மேலும் நால்வர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

    உணவகம் ஒன்றிற்கு பின்புறத்திலுள்ள மலையொன்றில் இருந்த பாரிய கல்லொன்று சரிந்துள்ளதை அடுத்து, இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

    இந்த மண்சரிவில் பலர் சிக்குண்ட நிலையில், உடனடியாக மீட்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. ராணுவம், போலீஸார், இடர் முகாமைத்துவ நிலையத்தின் அதிகரிகள் உள்ளிட்ட பலர் இந்த மீட்பு பணிகளை முன்னெடுத்திருந்தனர். இந்த மண்சரிவில் முதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்ட போதிலும், மீட்பு பணிகளின் போதே உயிரிழப்பு அதிகரித்தமை தெரியவந்தது. உணவகத்திற்கு வருகைத் தந்திருந்த பலர் இந்த மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர்.

    இந்த நிலையில், மீட்பு பணிகள் நேற்றிரவு வரை தொடர்ந்திருந்தது. நேற்றிரவு சுமார் 9 மணியளவிலேயே மீட்பு பணிகள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டது. நிறைவு பணிகள் நிறைவடைந்த போதிலும், வீதி மறு அறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை மூடப்பட்டுள்ளது.

    ''பிரதேச மக்களின் பாதுகாப்பு மற்றும் பயணிகளில் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்திற் கொண்டு வீதியை மறு அறிவித்தல் பிறப்பிக்கும் வரை முழுமையாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மண்சரிவு ஏற்பட்ட இடத்தைப் பார்வையிட வருகை தர வேண்டாம். நாங்கள் அதற்கு அனுமதி வழங்க மாட்டோம். போலீஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த இடம் பாதுகாப்பற்ற பிரதேசமாக காணப்படுகின்றது" என கேகாலை மாவட்ட செயலாளர் ஜகத் எம் ஹேரத் ஊடகங்களின் ஊடாக மக்களுக்கு அறிவித்துள்ளார்.

  16. பார்வையற்றோர் மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டி: பந்துவீச்சை தேர்வு செய்தது இந்தியா

    பெண்களுக்கான பார்வையற்றோர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய அணி நேபாளத்துக்கு எதிராக முதலில் பந்துவீசுகிறது.

    முதல் முறையாக நடக்கும் இந்தத் தொடரில் மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியோடு ஒருமுறை மோதின. 5 குரூப் சுற்றுப் போட்டிகளையும் வென்ற இந்திய அணி, அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

    நேபாள அணி பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. நேபாளம் மற்றும் இந்திய அணிகள் மோதும் இந்த இறுதிப் போட்டி கொழும்புவில் நடக்கிறது.

  17. ஐக்கிய நாடுகள் காலநிலை மாநாட்டில் எட்டப்படாத புதைபடிவ எரிபொருள்கள் குறித்த உடன்பாடு

    கடுமையான சர்ச்சைகளுக்குப் பிறகு, பிரேசிலின் பெலெமில் நடந்த ஐ.நா காலநிலை உச்சிமாநாடு (COP30) புதைபடிவ எரிபொருள்கள் குறித்த உடன்பாடு இல்லாமல் முடிந்தது.

    எண்ணெய், நிலக்கரி மற்றும் எரிவாயு பயன்பாட்டைக் குறைப்பது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் உடன்பாடு எட்டப்பட வேண்டும் என்று எதிர்பார்த்திருந்த பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்பட 80-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இது ஏமாற்றமாக அமைந்துள்ளது.

    ஆனால், எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் தங்கள் பொருளாதாரத்தை உயர்த்த தங்களின் புதைபடிவ எரிபொருள் வளங்களைப் பயன்படுத்த உரிமை வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.

    உலகளாவிய வெப்பநிலை உயர்வை தொழில்மயமாக்கல் முந்தைய நிலைகளை விட 1.5 டிகிரி செல்ஷியஸுக்குள் கட்டுப்படுத்தும் முயற்சிகள் தோல்வியடைந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ள நிலையில் இந்த சந்திப்பு வந்துள்ளது.

    சனிக்கிழமையன்று நடைபெற்ற இறுதிக் கூட்டத்தில் கடுமையாக பதிலளித்த கொலம்பியாவின் பிரதிநிதி, ஒப்பந்தத்திற்கு ஆட்சேபனைகளை எழுப்புவதில் இருந்து நாடுகள் தடுக்கப்படுகின்றன என்றார்.

    இறுதி ஒப்பந்தமானது, 'புதைபடிவ எரிபொருள்களை தாங்களாக முன்வந்து குறைக்க' நாடுகளை அழைக்கிறது.

    காலநிலை உச்சிமாநாட்டுக்கு அமெரிக்கா தங்கள் பிரதிநிதியை அனுப்பாதது இதுதான் முதல் முறை. பாரீஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை விலக்கிக்கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், காலநிலை மாற்றத்தை 'புரளி' என்றும் கூறியிருந்தார்.

  18. "யுக்ரேன் போர் பற்றிய அமெரிக்காவின் திட்டங்கள் இன்னும் முடியவில்லை" - டிரம்ப்

    ரஷ்யா – யுக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா முன்வைத்துள்ள முன்மொழிவு இறுதியானது அல்ல என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    யுக்ரேனின் கூட்டாளிகள் இந்த முன்மொழிவு குறித்து கவலை வெளிப்படுத்தியுள்ள நேரத்தில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

    சனிக்கிழமை, ஐரோப்பா, கனடா மற்றும் ஜப்பான் ஆகியவற்றின் தலைவர்கள், இந்த திட்டத்தில் நியாயமான மற்றும் நிலையான அமைதி பெறுவதற்கான முக்கிய கூறுகள் உள்ளன என்று தெரிவித்துள்ளன. அதேசமயம், இன்னும் கூடுதல் பணிகள் தேவைப்படும் என்றும் அந்நாடுகள் கூறியிருக்கின்றன.

    ஞாயிற்றுக்கிழமை, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் யுக்ரேன் ஆகிய நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவில் சந்திக்கவுள்ளனர்.

    இந்த திட்டத்தைப் பற்றிப் பேசிய யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். "யுக்ரேன் தனது கண்ணியத்தைக் கைவிட வேண்டியிருக்கும் அல்லது அமெரிக்காவுடன் கை கோர்க்க வேண்டியிருக்கும்" என்று கூறியிருந்தார்.

    சொல்லப்போனால், டிரம்பின் இந்த அமைதி திட்டம் ரஷ்யாவின் பக்கம் சாய்ந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

    டிரம்பின் 28 அம்சங்கள் கொண்ட இந்த திட்டத்தை ஏற்க நவம்பர் 27 வரை யுக்ரேனுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதே நேரத்தில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், இந்த திட்டம் ஒரு ஒப்பந்தத்தின் அடித்தளமாக அமையக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்.

    யுக்ரேனுக்கான தற்போதைய வரைவு அவரது இறுதி முன்மொழிவா என்று சனிக்கிழமை வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் டிரம்பிடம் கேட்டதற்கு, "இல்லை, இது எனது இறுதி முன்மொழிவு அல்ல” என்று அவர் கூறினார்.

    மேலும், "இந்த யுத்தத்தை நாம் எப்படியாவது முடிவுக்குக் கொண்டுவர முடியும். நாங்கள் அதில் பணியாற்றிக்கொண்டிருக்கிறோம்" என்றும் டிரம்ப் கூறினார்.

  19. வங்கக்கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி - எங்கெல்லாம் கனமழை பெய்ய வாய்ப்பு?

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாகவும், அது நாளை (திங்கள்) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

    நேற்று மதியம் 2.15 மணியளவு அந்த மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "நவம்பர் 21 அன்று தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேல்சுழற்சியின் காரணமாக, நவம்பர் 22 காலை மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது.

    இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகின்ற 24ம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெறக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    இதனையடுத்து, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, அரியலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டிருக்கிறது.

    தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும் இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் என்று குறிப்பிட்டிருக்கும் வானிலை ஆய்வு மையம், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தியிருக்கிறது. மேலும், ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் வருகின்ற 24ம் தேதிக்குள் கரைக்குத் திரும்புமாறும் கேட்டுக்கொண்டிருக்கிறது.

  20. வணக்கம் நேயர்களே!

    இன்று (23.11.2025) மதியம் வரையிலும் நேரலை பக்கத்துக்கான செய்திகளைத் தொகுத்து வழங்குவது பிரதீப் கிருஷ்ணா.