சோழர் கால வெண்கல சிலைகள்: திருடப்பட்ட 50 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்காவில் கிடைத்தது எப்படி?

பட மூலாதாரம், Tamilnadu Idol Wing CID
ஐம்பது ஆண்டுகளுக்கு முன் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் இருந்து திருடப்பட்ட இரண்டு சோழர் காலச் சிலைகள் அமெரிக்க அருகாட்சியங்களில் இருப்பதைக் கண்டறிந்துள்ள தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு, இவற்றுக்கு உரிமை கோரும் ஆவணங்களை அந்த அருங்காட்சியகத்திற்கு அனுப்பியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், ஆலத்தூர் விஸ்வநாத சுவாமி கோவிலில் இருந்த மூன்று சிலைகள் காணமல் போய்விட்டதாக கடந்த 2017ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் நாகராஜன் காவல்துறையில் புகார் அளித்தார். அந்தப் புகார் பிறகு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் நடத்திய விசாரணையில், உண்மையான சிலைகளை அங்கிருந்து அகற்றிவிட்டு, அதே போன்ற போலி சிலைகள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
அந்தக் கோவிலில் இருந்த மற்ற ஆறு சிலைகளும் இதேபோல மாற்றப்பட்டிருக்குமா என்ற சந்தேகம் எழுந்ததால், அவற்றையும் பரிசோதிக்க முடிவுசெய்யப்பட்டது.
அதில், அந்தக் கோவிலைச் சேர்ந்த யோக நரசிம்மர் மற்றும் விநாயகர் சிலைகள் கான்சாஸ் நகரத்தில் உள்ள நெல்சன் - அட்கின்ஸ் அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டறியப்பட்டது.
அங்கிருந்த சோமாஸ்கந்தர் மற்றும் நடன சம்பந்தர் சிலைகள் குறித்த தகவல்கள் தெரியாத நிலையில், தொடர்ந்து தேடல் நடைபெற்றது.

பட மூலாதாரம், Tamilnadu Idol Wing CID
கோவிலின் அதிகாரிகளிடமோ, பிற பதிவேடுகளிலோ உண்மையான சிலைகளின் படங்கள் இருக்கின்றனவா எனத் தேடியபோது, அப்படி ஒன்றும் கிடைக்கவில்லை. இதற்குப் பிறகு புதுச்சேரியில் உள்ள ஃப்ரெஞ்ச் இன்ஸ்ட்டிடியூட்டில் இந்தக் கோவிலில் எடுக்கப்பட்ட படங்கள் கிடைத்தன.
அந்தப் படங்களை அடிப்படையாகக் கொண்டு, உலகெங்கும் உள்ள அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள், ஏல மையங்களின் இணைய தளங்களில் தேடல் நடத்தப்பட்டது. அதில் சோமாஸ் கந்தர் சிலை வாஷிங்டனில் உள்ள ஃப்ரீயர் சாக்லர் அருங்காட்சியகத்தில் இருப்பது தெரியவந்ததாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கூறுகிறது.

பட மூலாதாரம், Tamilnadu Idol Wing CID
அதேபோல, நடன சம்பந்தரின் சிலை அமெரிக்காவில் உள்ள தனியார் கலைப்பொருள் விற்பனை நிறுவனத்தின் இணைய தளத்தில் இருப்பது தெரியவந்தது என்றும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கூறுகிறது.
புதுச்சேரி ஃப்ரெஞ்சு இன்ஸ்ட்டிட்டியூட்டில் உள்ள புகைப்படங்கள் 1959ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜூன் 15ஆம் தேதி எடுக்கப்பட்டவை.
யுனெஸ்கோ ஒப்பந்தத்தின் கீழ் இந்த சிலைகளை மீட்பதற்கான ஆவணங்களை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தயார் செய்து அரசிடம் ஒப்படைத்துள்ளது.
அதேபோல, யோக நரசிம்மர் மற்றும் விநாயகர் சிலைகளை கான்சாஸ் நகரத்தில் உள்ள நெல்சன் - அட்கின்ஸ் அருங்காட்சியகத்தில் மீட்பதற்கான ஆவணங்களும் தயார்செய்யப்பட்டுள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
















