You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிபிசிஎல் ஆலையை சுற்றி பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவது ஏன்? கள நிலவரம்
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
சென்னை திருவொற்றியூர் பகுதியில் வசிக்கும் ஜோசபினின்(45) வாழ்க்கை, கடந்த ஒரு மாதமாக முழுமையாக மாறி விட்டது. ஓடி, ஓடி குடும்பத்திற்கு வேலை செய்த ஜோசபின் தற்போது மூச்சு விடவே சிரமப்படுகிறார். தினமும் வானம் இருட்டினாலே அவருக்கு அச்சம் வந்து விடுகிறது. நள்ளிரவில் தனது 20 வயது மகளின் உதவியின்றி உறங்குவதுகூட அவருக்கு சிரமமாகிவிட்டது.
திருவொற்றியூர், மணலி, எண்ணூர் பகுதிகளில் உள்ள ஆலைகளில் இருந்து வெளியேறும் நச்சுக்காற்று காரணமாக, ஜோசபின் போன்ற மூச்சுத்திணறல் (வீசிங்) நோயாளிகள் அதிக பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
குறிப்பாக கடந்த ஒரு மாதத்தில், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட்(சிபிசிஎல்) ஆலையில் இருந்து அதிக அளவில் வெளியேறிய ஹைட்ரஜன் சல்பைடு வாயுவின் காரணமாக, மாசுபாடு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கண்டறிந்துள்ளது. அத்துடன், சிபிசிஎல் தனது தயாரிப்பை 75 சதவீதமாக குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
''கேஸ் சிலிண்டர் கசிவது போன்ற வாடையை ஒரு மாதமாக நாங்கள் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். என் குடும்பத்தை முன்னேற்ற வேண்டிய நான் தற்போது பிறரின் உதவியை எதிர்பார்த்து நிற்கிறேன். எனக்கு மூன்று ஆண்டுகளாக வீசிங் இருக்கிறது. ஆனால் இந்த ஒரு மாதமாகவே நான் பல முறை மருத்துவமனைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது," என்கிறார் ஜோசபின்.
"சில நாட்கள் வீட்டிற்குள்ளும், வெளியிலும் மாறி, மாறி நடப்பேன். என்னால் தொடர்ந்து பேச முடியாது. அந்த அளவுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. மருத்துவரிடம் கேட்டபோது, மாசுபாடு காரணமாக இருக்கலாம் என்கிறார். தொழிற்சாலைகள் நச்சுக்காற்றை வெளியிட்டு விட்டு, கோடிக் கணக்கில் வருமானம் பார்க்கின்றன. ஆனால் நாங்களோ வேலைக்கு செல்லவும் சிரமப்பட்டு உடல் பாதிப்புக்கும் ஆளாகி விட்டோம்,''என்கிறார் ஜோசபின்.
கேள்விக்குறி ஆன வாழ்க்கை
முன்னதாக நச்சு வாயு வெளியேறியதாலேயே மக்கள் பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்பதை சிபிசிஎல் நிறுவனம் ஒப்புக்கொள்ளவில்லை.
நச்சுவாயு வெளியேறினால், முதலில் பாதிக்கப்படுவது ஆலையில் உள்ள தொழிலாளர்களாகத்தான் இருப்பார்கள் என்று சிபிசிஎல் தெரிவித்தது.
ஆனால், ஜோசபின் அதற்கு பதில் சொல்கிறார்.
''உயரமான புகை கூண்டுகளை வைத்து நச்சுக்காற்றை வெளியில் தள்ளி விடுகிறார்கள். காற்று சுழலும் திசையில் அந்த மாசுபட்ட வாயு எங்கள் பகுதிகளில்தான் வீசுகிறது. தொடர்ந்து இதை சுவாசிப்பதால், நாங்கள்தான் அன்றாட வாழ்க்கை வாழ அவதிப்படுகிறோம். ஆலையில் இருப்பவர்கள் நேரடியாக அந்த காற்றை சுவாசிப்பதில்லை. அவர்கள் பாதுகாப்பு அம்சங்களோடு அங்கு பணிபுரிகிறார்கள்,''என்கிறார்.
அடுத்ததாக நாம் டி.கே.எஸ். நகர் பகுதிக்கு சென்றோம்.
அங்கு நச்சு வாயு பிரச்னையால் தனது பேரக் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை என வருத்தப்படும் வேளாங்கண்ணியை (47) சந்தித்தோம்.
80 வயதை நெருங்கும் தனது தாயை திருவொற்றியூர் பகுதியில் இருந்து மாதவரத்தில் உள்ள தனது நெருங்கிய உறவினரின் வீட்டில் தங்க வைத்துள்ளதாக கூறுகிறார் இவர்.
''எங்கள் வீட்டு பிள்ளைகள் பள்ளிக்கூடம் போய் ஒரு வாரம் ஆகிறது. தலைவலி, வயிற்றுவலி என குழந்தைகள் சிரமப்படுகிறார்கள். வருகை பதிவு செய்த சிறிது நேரத்துக்கெல்லாம் பள்ளியில் இருந்து அழைப்பு வந்து விடுகிறது. உடனே குழந்தைகளை அழைத்து வர வேண்டியுள்ளது. பெரியவர்களுக்கே மூச்சுத்திணறல் ஏற்படும்போது, குழந்தைகள் எவ்வளவு சிரமப்படுவார்கள்?'' என்கிறார் அவர்.
திருவொற்றியூர், மணலி பகுதியில் ஏற்பட்டுள்ள நச்சு வாயு கசிவு தொடர்பான செய்தி சேகரிப்பதற்காக இரண்டு நாட்களாக அங்குள்ள மக்களிடம் பேசினோம்.
நாம் செய்தி சேகரித்த சமயத்தில் கூட, காலை மற்றும் மாலை வேளையில் காற்று வீசும்போது, கண் எரிச்சல், தலைவலி ஏற்பட்டது அங்கு அசாதாரணமான காற்று வீசுவதை உணர்த்தியது.
அடுத்ததாக நாம் டி.கே.எஸ். நகர் பகுதியில் கல்லூரி மாணவ, மாணவிகள், குடும்பத் தலைவிகள் பலரையும் சந்தித்தோம். ஒரு சிலர் நச்சுக் கசிவு ஒவ்வோர் ஆண்டும் தொடர்வதால், வாடை வீசுவது தங்களுக்கு பழக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தனர்.
"எங்களை போன்றவர்கள் தினமும் இதுபோன்ற ஏதோவொரு நச்சுக் காற்றை எதிர்கொண்டு வாழ்கிறோம். புதிதாக இந்த பகுதிக்கு வருபவர்கள் மூச்சுத்திணறல் பிரச்னைக்கு ஆளாவார்கள். ஆனால், கடந்த ஒரு மாதத்தில், நச்சு கசிவு மிகவும் அதிகமாக இருந்ததால், எங்களாலும் அதை உணர முடிகிறது,''என்கிறார் இளைஞர் கார்த்திக்.
''குழந்தைகளின் மூளையை பாதிக்கும்''
கடந்த ஒரு மாதத்தில், குறைந்தது 20 முறையாவது நச்சு கசிவு வெளியேறியிருக்கும் என அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் கூறினர்.
மூச்சுத் திணறல் பிரச்னையுடன் சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழக அரசின் நிபுணர் குழு அளித்த அறிக்கையை குறிப்பிட்டு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய திமுக எம்.பி.கனிமொழி, ''இந்த நச்சுகசிவுக்கு தொடர்ந்தால், குழந்தைகளின் மூளை பகுதி பாதிக்கும் ஆபத்து உள்ளது. அதனால், சிபிசிஎல் ஆலையில் இருந்து கசிவை நிறுத்துவதற்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும்,'' என தெரிவித்துள்ளார்.
புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று காற்று மாசுபாடு என சமீபத்திய லான்சென்ட் மருத்துவ இதழ் கட்டுரையை சுட்டிக்காட்டுகிறார் நுரையீரல் மருத்துவ சிகிச்சை நிபுணர் ஹிசாமுதீன் பாப்பா.
''ஹைட்ரஜன் சல்பைடு கலந்த காற்றை சுவாசிக்கும்போது, ஆரம்பத்தில் கண் எரிச்சல், மூச்சுத்திணறல், தலைவலி, குமட்டல் ஏற்படும். அந்த நச்சுவாயுவின் அளவு அதிகரிப்பது அல்லது நீண்ட நாட்களுக்கு அந்த காற்றை சுவாசிப்பதால், குழந்தைகள் மற்றும் ஏற்கெனவே ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்களுக்கு ஸ்ட்ரோக், மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. குறிப்பாக தொடர்ந்து அந்த காற்றில் வாழும் நபர்களின் ஆயுட்காலம் குறையும். நம் நாட்டில் டெல்லி போன்ற நகரங்களில் மக்கள் காற்று மாசுபாட்டோடு வாழ்கிறார்கள். தற்போது சென்னையில் அந்த நிலை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக நாம் கருத வேண்டியுள்ளது,''என்கிறார் மருத்துவர் ஹிசாமுதீன்.
மாசு கட்டுப்பாட்டு வாரியம் சொல்வது என்ன?
நச்சு கசிவு ஏற்படுவதை தொடர்ந்து கண்காணிக்க 24 மணி நேரம் இயங்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஜெயந்தி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
''காற்றின் தரத்தை 24 மணி நேரமும் கண்காணிக்கிறோம். அதற்காக இரண்டு பிரத்யேக கருவிகளை பொருத்தி இருக்கிறோம். தமிழக அரசின் நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறிய விதிகளை பின்பற்ற வேண்டும் என சிபிசிஎல் நிறுவனத்திடம் அறிவுறுத்தினோம். அவர்களும் தயாரிப்புப் பணிகளை கடந்த இரண்டு வாரங்களாக 75 சதவீதமாக குறைத்து விதிகளை பின்பற்றுகிறார்கள்.
தொடர்ந்து காற்று மாசுபடுவதை கண்காணித்து, தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்,''என்கிறார் ஜெயந்தி.
எச்சரிக்கும் சமூக செயல்பாட்டாளர்
வட சென்னையில் மாசுபாடு பிரச்னைகளை சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாது என்கிறார் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் நித்தியானந்த் ஜெயராமன்.
''வட சென்னையை பொறுத்தவரை, பெரும் தொழிற்சாலைகள் நிறைந்த இடமாக உள்ளது. இங்கு சிவப்புப் பட்டியலில் உள்ள 38 ஆலைகள் உள்ளன.
மூன்று பெரிய துறைமுகங்கள் உள்ளன. அந்த துறைமுகங்களுக்கு வந்து சேரும் கனரக வாகனங்கள் உள்ளன. நிலக்கரியை எரித்து மின்சாரம் தயாரிக்கும் நிறுவனம், சென்னையின் மிகப் பெரிய குப்பைக் கிடங்கு ஆகியவை உள்ளன. மக்கள் நெரிசல் கொண்ட மூன்று சட்டமன்ற தொகுதிகளை கொண்ட இடமாக வடசென்னை உள்ளது. இங்குள்ள மக்களை இடம் மாற்றுவது சாத்தியமற்ற ஒன்று.
ஆலைகளை இடம் மாற்றுவது பொருளாதார ரீதியாக சரியான முடிவு அல்ல. அதுமட்டுமல்ல, இதுபோன்ற ஆலைகள் எங்கு இருந்தாலும் மாசுபாடு ஏற்படும். அதனால், குறைந்தபட்சம் சட்ட விதிகளுக்கு உட்பட்டு ஆலைகளை நடத்தினால் கூட, மாசுபாட்டை குறைக்க முடியும்,''என்கிறார் நித்தியானந்த் ஜெயராமன்.
என்ன சொல்கிறது சிபிசிஎல்?
திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் சங்கரை அவரது இல்லத்தில் சந்தித்தோம்.
''கேஸ் கசிவு பற்றி தெரிந்ததும், இரண்டு முறை நேரில் சென்று சிபிசிஎல் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி விட்டோம். நச்சுகசிவு குறைய நடவடிக்கை எடுக்கிறோம் என்று எங்களுக்கு உறுதி சொன்னாலும், அடுத்த நாள் அதேபோல வாடை வீசுகிறது. நான் இந்தப் பகுதியில் வசிப்பதால், என்னாலும் அந்த வாடையை முழுமையாக உணர முடிகிறது,'' என்கிறார் சங்கர்.
சிபிசிஎல் ஆலை மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அந்த நிறுவனத்தின் பதிலை பெற பல முறை முயற்சித்தும் பதில் வரவில்லை. தொலைபேசி வாயிலாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் முயற்சித்தும் எந்த பதிலும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
ஹைட்ரஜன் சல்ஃபைட் வாயுவால் என்ன பாதிப்பு நேரலாம்?
ஹைட்ரஜன் சல்பைடு வாயுவின் வெளிப்பாடு சுவாச பிரச்னைகள் மற்றும் கண் பாதிப்பு உட்பட பல உடல் நல கோளாறுகளை ஏற்படுத்தலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி, அதிக அளவு வெளிப்படும் வாயுவால் மனிதர்களுக்கு வலிப்பு, சுயநினைவின்மை அல்லது உச்சமாக மரணத்தை கூட ஏற்படுத்தும்.
அதே சமயம், ஹைட்ரஜன் சல்பைடின் குறைந்த அளவு வெளிப்பாட்டை நீண்ட காலமாக எதிர்கொண்டாலும் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பது பற்றிய தகவல்கள் மிகக் குறைவாகவே உள்ளன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்