பெங்களூரு வெள்ள மேலாண்மையைக் கிண்டலடிக்கும் சமூக ஊடகப் பதிவுகள்: 'வெனிஸ் ஆன பெங்களூரு'

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

நேற்று பெய்த கடும் மழையில் பெங்களூரு கிட்டத்தட்ட மிதந்த நிலையில், ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் கர்நாடகாவின் பாஜக அரசாங்கத்தையும், பெங்களூரு பெருநகராட்சி மன்றத்தின் (பிபிஎம்பி) செயல்பாட்டையும் கடுமையாக விமர்சிக்கின்றனர்.

பெங்களூரு வெனிஸ் நகரமாகிவிட்டதாகவும், நகரம் முழுவதும் வாட்டர் தீம் பார்க் ஆகிவிட்டதாகவும் சமூக ஊடகத்தில் கிண்டல் பதிவுகளும் வந்துகொண்டிருக்கின்றன.

இத்தாலியின் பாரம்பரிய நகரமான வெனிஸ் தண்ணீருக்கு நடுவே அமைந்திருப்பது. நூற்றுக்கும் மேற்பட்ட சிறு தீவுகளில் அமைக்கப்பட்ட இந்நகரின் தெருக்கள் கால்வாய்கள்தான். வீட்டில் இருந்து வெளியே கால் வைக்கவேண்டும் என்றாலே இந்தக் கால்வாயில்தான் கால்வைக்கவேண்டும். இந்தத் தெருக்களில் படகின் வழியாகவே பயணிக்கவேண்டும். ஆனால், தண்ணீருக்கு நடுவே இருக்கும் வகையிலேயே திட்டமிடப்பட்டு கட்டப்பட்ட நகரம் இது. எனவே, பெங்களூருவின் நிலையை வெனிஸ் என்று கிண்டல் செய்வதே இந்தப் பதிவுகளின் நோக்கம்.

பெங்களூருவை வெனிசாக மாற்றியதற்கு பிபிஎம்பி-க்கும், கர்நாடக பாஜகவுக்கும் நன்றி என்று கூறுகிறது இந்தப் பதிவு.

டிராக்டரில் ஐ.டி ஊழியர்கள் பயணம்

திட்டமிடப்படாத வளர்ச்சியே பெங்களூரு நகரம் ஒரு இரவு வெள்ளத்தைத் தாங்க முடியாததற்கு காரணம் என்று வல்லுநர்களின் விமர்சனங்களும் வந்துகொண்டிருக்கின்றன.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஊழியர்கள் டிராக்டரில் செல்லும் வீடியோவும், ஜே.சி.பி வண்டியைப் பயன்படுத்தி வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு உணவு விநியோகம் செய்யப்படுவதும், இடுப்பளவு தண்ணீரில் மக்கள் நடந்து செல்வதும், படகுகளைப் பயன்படுத்தி வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்பதும் வெள்ளத்தின் தீவிரத்தைக் காட்டுகிறது.

ஒட்டுமொத்த பெங்களூருவுமே வாட்டர் பார்க்காக ஆகிவிட்ட நிலையில் யாருக்கு வேண்டும் ஒன்டர்லா என்று படங்களை இணைத்து ஒரு பதிவு பகிரப்பட்டுள்ளது.

பெங்களூருவில் கடற்கரை இருக்கா என்று கேட்கும் எல்லா சென்னைவாசிகளுக்கும் என்ற வாசகத்தோடு பகிரப்பட்ட இந்த பதிவில் உள்ள காணொளி வெள்ளத்தின் தீவிரத்தை கண் முன் காட்டுகிறது.

பிறரை தன்னைப் போல் நினைக்கும் மனம் வேண்டும்...

பெங்களூரு நகரின் உள் கட்டுமானம் சிதைகிறது என்றும் தமிழ்நாடு அரசாங்கம் கூர்மையாக வேலை செய்தால் இதை ஆதாயமாக்கிக் கொண்டு, தமிழ்நாட்டின் ஓசூரையும், சேலத்தையும் தகவல் தொழில்நுட்ப மையங்களாக மாற்றிவிட முடியும். 20 சதவீத தொழில்களையாவது இந்த நகரங்களுக்கு திருப்பிவிட்டால் பல வணிக நிறுவனங்கள் செழிக்கும் என்று பிரசாந்த் ரங்கசாமி என்பவர் பதிவிட்டதை தம்மை தமிழர் என்று கூறிக்கொள்ளும் ஸ்ரீகிருஷ்ணா என்ற பெங்களூரு வாசி விமர்சித்துள்ளார்.

"சென்னை வெள்ளத்தின்போது நான் தன்னார்வலராக வேலை செய்தேன். பல உதவிப் பொருள்கள் பெங்களூருவில் இருந்து வந்தன. சென்னைக்கு ஆதரவாக நின்றது பெங்களூரு. ஆனால், இந்த நபர் இந்த நேரத்தில் பெங்களூருவின் வணிகத்தை பிடுங்கிக்கொள்ளவேண்டும் என்கிறார். அடுத்தவர்களை தன் நிலையில் வைத்துப் பார்க்கும் மனது வேண்டும்" என்று கூறியுள்ளார் ஸ்ரீகிருஷ்ணா.

பெங்களூரு வெள்ளத்தை ஒட்டி சென்னையை ஒப்பிடும் பதிவுகளும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

சென்னை கடற்கரையை ஒட்டியிருக்கும், கடல் மட்டத்தில் இருந்து உயரம் குறைந்த நகரம் என்றும் ஆனால், பெங்களூரு கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் நகரம் என்றும் குறிப்பிடும் பதிவுகளும் வெளியாகின்றன.

விமான நிலையத்தில் வெள்ள நீர்

பெங்களூரு விமான நிலையத்தில் வெள்ள நீர் சூழ்ந்திருப்பதைக் காட்டும் படத்தைப் பகிர்ந்துள்ள அநிர்பன் சன்யால் என்பவர், இந்தியாவில் உள்ள அடிப்படைக் கட்டமைப்பு நிலைமையைப் பார்த்து அழத் தோன்றுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டு

சமீப காலமாக கர்நாடக அரசின் மீது எழுப்பப்படும் குற்றச்சாட்டு அரசாங்க ஒப்பந்தப் பணிகளைப் பெற 40 சதவீதம் லஞ்சம் தரவேண்டும் என்பது. வெள்ளம் சூழ்ந்த நகரின் வீடியோ ஒன்றைப் பகிர்ந்த கர்மா என்பவர், ஒப்பந்ததாரர்கள் திட்ட மதிப்பில் 40 சதவீதத்தை அமைச்சர்களுக்கு லஞ்சமாகத் தந்தால் இதுதான் நடக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அவருக்கு பதில் அளித்துள்ள வெங்கடேஷ் பெலவாடி என்பவர், இதெல்லாம் கடந்த 3 ஆண்டுகளில் கட்டப்பட்டவை என்று நினைக்கிறீர்களா? அசிங்கமான அரசியல் திட்டத்தோடு எழுதுவதை நிறுத்துங்கள், இவையெல்லாம் 15 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆண்டபோது கட்டப்பட்டவை என்று கூறியுள்ளார் அவர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: