You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காஷ்மீரி பண்டிட் சுனில் குமார் கொலை - கிராம முஸ்லிம்கள் சொல்வது என்ன?
- எழுதியவர், மாஜித் ஜஹாங்கீர்
- பதவி, ஸ்ரீநகரில் இருந்து பிபிசி இந்திக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
"எனக்கு நான்கு மகள்கள் உள்ளனர். இப்போது அவர்களை யார் வளர்ப்பார்கள்? என் கணவரை கொன்றவர்களுக்கும் இதே கதி ஏற்பட வேண்டும். என் கணவர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். வீட்டை விட்டுச்சென்ற 10 நிமிடங்களில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. அவரை கொன்று விட்டார்கள் என்று நான் அலறினேன். என் அம்மாவும் மகள்களும் பட்டாசு சத்தம் என்று சொன்னார்கள. நாங்கள் பின்னர் அங்கு சென்றபோது அவர் கீழே கிடந்தார். அதன் பிறகு எனக்கு எதுவுமே தெரியாது."
சுனிதா தனது கணவரின் உடலுக்கு அருகே அமர்ந்தபடி அழுது கொண்டே இவ்வாறு கூறினார்.
அவரது உறவினர்கள், சுனிதாவின் அருகில் அமர்ந்திருந்த பெண்கள் அனைவரும் அவருக்கு ஆறுதல் கூறுகின்றனர். ஆனால் இந்த முயற்சிகள் எதுவுமே பலனளிக்கவில்லை.
தெற்கு காஷ்மீரின் சோஃபியான் மாவட்டம் சோட்டிபுரா கிராமத்தில் வசித்துவந்த சுனில் குமார் செவ்வாய்க்கிழமையன்று தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த தாக்குதலில் சுனில் குமாரின் மூத்த சகோதரர் பீதாம்பர் நாத் பலத்த காயம் அடைந்துள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொலைக்கு பயங்கரவாதிகளே காரணம் என போலீசார் கூறுகின்றனர்.
கிராமத்தில் எத்தனை பேர் இந்துக்கள்?
சுனில் குமாரின் குடும்பத்தைத் தவிர மேலும் இரண்டு பண்டிட் குடும்பங்கள் சோட்டிபுரா கிராமத்தில் வசிக்கின்றன. இரு குடும்பங்களும் நெருங்கிய சொந்தம். இந்த மூன்று வீடுகளிலும் மொத்தம் 16 பேர் வசிக்கின்றனர்.
சுனில் குமார் மற்றும் அவரது சகோதரர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டபோது, அவர்கள் வீட்டில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள ஆப்பிள் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
சுனில் குமார் கொலைக்குப் பிறகு சோட்டிபுரா கிராமத்தில் ஆழ்ந்த அமைதி நிலவுகிறது. எல்லா இடங்களிலும் ராணுவம் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கிராமத்தில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.
காஷ்மீர் பிரிவு காவல்துறை ஆணையர் பாண்டுரங் கே பால், சுனில் குமாரின் வீட்டிற்கு வந்தபோது குடும்பத்தினரின் கோபம் அதிகரித்தது.
சுனில் குமாரின் குடும்பத்தைச் சேர்ந்த அனில் குமார், பாண்டுரங் கே.பாலின் வழியை மறித்து அவரை மேலே செல்ல அனுமதிக்கவில்லை.
"நான் அனில் குமார். நான்கு மாதங்களுக்கு முன் என் மற்றொரு சகோதரர் தாக்கப்பட்ட போது உங்களிடம் வந்தேன். எங்களுடைய உயிரைப் பாதுகாக்க ஏதாவது செய்யுங்கள் என்று சொன்னேன்.என்னால் எதுவும் செய்ய முடியாது என்று நீங்கள் சொன்னீர்கள்.என் கையில் எதுவும் இல்லை நீங்கள் உங்கள் வீட்டிலேயே இருங்கள் என்று கூறினீர்கள்," என்று அனில் குமார், பாண்டுரங் கே பாலிடம் தெரிவித்தார்.
கோபமடைந்த அனில் குமார், பாண்டுரங் கே. பாலிடம், "இன்று என்ன செய்ய இங்கு வந்துள்ளீர்கள். பதில் கூறுங்கள்" என்று சொன்னார்.
பின்னர் அனில் குமாரை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பிறகுதான் காவல்துறை அதிகாரி பால், சுனில் குமாரின் வீட்டிற்குள் நுழைய முடிந்தது.
குடும்பத்தின் குற்றச்சாட்டுகளை மறுத்த காவல்துறை ஆணையர், கடந்த முறை சுனில் குமாரின் சகோதரர் பால் கிருஷ்ணா தாக்கப்பட்டபிறகு வீட்டின் அருகே காவலர்கள் நிறுத்தப்பட்டதாகக் கூறினார். கூடவே பயங்கரவாதத்தை இன்னும் சில காலம் பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், அனில் குமாரின் ஒன்றுவிட்ட சகோதரர் பால் கிருஷ்ணா, அதே கிராமத்தில் உள்ள அவரது வீட்டின் அருகே தீவிரவாதிகளால் சுடப்பட்டார்.ஆனால் அவர் உயிர் பிழைத்தார்.
அனில்குமார் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு எந்த ஊடகவியலாளரையும் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை.
சுனில் குமாரின் குடும்பம் எப்போதுமே காஷ்மீரை விட்டுச்செல்லவில்லை. இரத்தக்களறி உச்சத்தில் இருந்தபோதும்கூட இந்த குடும்பம் காஷ்மீரை விட்டு வெளியேறவில்லை.
சுனில்குமார் விவசாயம் செய்து வந்தார். சுனில் குமாருக்கு நான்கு மகள்கள் மற்றும் மனைவி உள்ளனர்.
சுனில் குமாரின் வீட்டுக்கு ஆறுதல் கூற அப்பகுதி மக்கள் திரளாக வந்து கொண்டிருந்தனர். அண்டை வீட்டுப் பெண் ஷாஹினா சுனில் குமாரின் வீட்டிற்கு வந்தார்.
"அவரது மரணத்திற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். அவருக்கு நான்கு மகள்கள் உள்ளனர். அவர் தனது அண்டை வீட்டாருடன் மிகவும் நல்ல உறவைக் கொண்டிருந்தார். அவரது மரணத்தால் நாங்கள் ஆழ்ந்த அதிர்ச்சியடைந்துள்ளோம். நாங்கள் ஒரு நல்ல அண்டை வீட்டாரை இழந்துவிட்டோம்."என்று ஷாஹினா பிபிசியிடம் தெரிவித்தார்.
சோட்டிபுரா கிராமத்தைச் சேர்ந்த பல முஸ்லிம்கள் சுனில் குமாரின் இறுதிச் சடங்குகளுக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.
இறுதிச் சடங்குகளின் எல்லா பொறுப்புகளையும் குடும்பத்தினருடன் இணைந்து அப்பகுதி முஸ்லிம்கள் நிறைவேற்றினர். அவர்களின் உறவினர் காலமானதுபோல அவர்கள் துக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். சுனில் குமாரின் பக்கத்து வீட்டுக்காரரான முதாசிர் அகமது லோன், "சுனில் குமாரின் கொலை மிகவும் வருத்தமளிக்கிறது. நாங்கள் அதை அங்கீகரிக்கவில்லை," என்றார்.
காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக, காஷ்மீரி பண்டிட்டுகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் சாதாரண குடிமக்கள் குறிவைக்கப்பட்டு வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு காஷ்மீர் திரும்பிய காஷ்மீரி பண்டிட் ராகுல் பட் கொல்லப்பட்டதை அடுத்து, காஷ்மீரில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான காஷ்மீரி பண்டிட்டுகள் தெருக்களில் போராட்டம் நடத்தினர்.
காஷ்மீரி பண்டிட்டுகளின் இடைத்தங்கல் முகாம்களுக்குள் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தன. காஷ்மீரி பண்டிட்டுகள் மற்றும் காஷ்மீரி அல்லாதவர்கள் மீதான தாக்குதலுக்குப் பிறகு, காஷ்மீரி பண்டிட்டுகளை காஷ்மீரை விட்டு வெளியேற்றுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
காஷ்மீர் பண்டிட்டுகளின் பாதுகாப்பிற்கு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசு உறுதி அளித்தது. அரசின் இந்த உத்தரவாதத்திற்குப் பிறகுதான், பிரதமர் பேக்கேஜின் கீழ் பணிபுரியும் ஆயிரக்கணக்கான காஷ்மீரி பண்டிட்டுகள் தங்கள் ஆர்ப்பாட்டங்களை கைவிட்டனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்