கள்ளக்குறிச்சி மாணவி உடலுக்கு மறு பிரேத பரிசோதனை - உயர் நீதிமன்றம்

வன்முறை
பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சியில் ஜூலை 13ஆம் தேதி தனியார் பள்ளி விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட பன்னிரண்டாம் வகுப்பு மாணவியின் தந்தை அளித்த புகாரைத் தொடர்ந்து, அவரது மகளின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக நீதிபதி சதீஷ் குமார் பிறப்பித்த உத்தரவில், மருத்துவர்கள் குழு மாணவியின் உடலுக்கு மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது மாணவியின் தந்தைக்கான வழக்கறிஞர் கே.கேசவன் எந்தவித இடையூறும் ஏற்படுத்தாமல் இருக்கலாம் என்று கூறினார்.

உயிரிழந்த மாணவிக்கு நீதி கேட்டு நடந்த போராட்டத்தில் வன்முறையைத் தூண்டிய போராட்டக்காரர்களின் செயலுக்கும் நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தை ஒரு சோதனை வழக்காகக் கருதி, வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யுமாறு காவல்துறையினரைக் கேட்டுக் கொண்ட நீதிபதி, எதிர்காலத்தில் இவ்வாறான வன்முறைகளில் ஈடுபடக்கூடிய அனைவருக்கும் ஒரு சமிக்ஞையை அனுப்ப கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். வருங்காலத்தில் கல்வி நிறுவனங்களில் தற்கொலைகள் நடந்தால், அந்த வழக்கை மாநில குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு சிஐடி (சிபிசிஐடி) விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, 3 மருத்துவர்கள் கொண்ட குழு மூலம் பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்றும் நீதிபதி தமது உத்தரவில் குறிப்பிட்டார்.

உயர் நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

அரசு விளக்கம்

இந்த நிலையில், மாணவி உயிரிவந்த வழக்கை சிபிசிஐடி ஞாயிற்றுக்கிழமையே எடுத்துக்கொண்டதாக அரசு வழக்கறிஞர் கூறினார். அவரது நிலைப்பாட்டை நீதிபதி பதிவு செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் மாணவியின் பெற்றோர் தரப்பு ஊடகங்களுக்கு அளிக்கும் சர்ச்சை பேட்டிகளால் போலீஸ் விசாரணைக்கு இடையூறு ஏற்படலாம் என்று காவல்துறையின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மாணவியின் பெற்றோர் ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டார்.

மகளின் மறு பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடலை பெற்றுக் கொண்டு அமைதியான முறையில் இறுதிச்சடங்கு நடத்தவும் பெற்றோருக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.திடீரென வன்முறையாக மாறிய அமைதிப் போராட்டம் எதேச்சையாக நடக்கவில்லை என்றும் அது "ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் போல் தோன்றுகிறது" என்றும் நீதிபதி சதீஷ் குமார் விசாரணையின்போது கூறினார்.

சட்டத்தை மீறி செயல்படும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த சிறப்புக் குழுக்களை அமைக்குமாறும் காவல்துறையினரை நீதிபதி கேட்டுக் கொண்டார்.சிறுமியின் மரணம் தொடர்பாக சமூக வலைதளங்களில் இணை விசாரணை மற்றும் விவாதங்கள் நடத்தி வன்முறையைத் தூண்டும் நபர்களைக் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அரசுக்கு உத்தரவிட்டார். சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு குண்டர்கள் போல ஒரு கும்பல் செயல்படுமானால், பிறகு சட்டத்தை நிலைநாட்ட நீதிமன்றமும் அதை பராமரிக்க காவல்துறையும் எதற்கு என்றும் நீதிபதி சதீஷ் குமார் கேள்வி எழுப்பினார்.

வன்முறை

போலி காணொளி: எச்சரிக்கும் காவல்துறை

கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளி விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து ஜூலை 13ஆம் தேதி மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கடலூரில் வசிக்கும் அவரது பெற்றோருக்கு தகவல் வந்தது. இந்த விவகாரத்தில் மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர் சந்தேகம் எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதேவேளை, மாணவிக்கு மரணத்துக்கு நீதி கேட்டு கள்ளக்குறிச்சியில் உள்ளூர் அரசியல் மற்றும் மாணவர் அமைப்புகள் கடந்த ஐந்து நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன. அதன் உச்சமாக ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட போராட்டத்தில் மாணவி படித்த தனியார் பள்ளிக்குள் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் நுழைந்தனர். அவர்களில் சிலர் பள்ளி அறைகளுக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். ஏராளமான பள்ளி வாகனங்கள் மற்றும் காவல்துறை பேருந்துக்கு தீ வைத்தனர்.

இந்த நிலையில், மாணவி படித்த பள்ளியில் முன்தினம் இரவு ஒரு நபர் சிசிடிவி கேமராவை பார்த்தவாறு நுழைவதாக கூறி ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலாயின. ஆனால், போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள அரசு பள்ளியில் நடந்த லேப்டாப் திருட்டு தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து மாவட்ட காவல்துறை எஸ்பி செல்வகுமார், "கனியாமூர் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறி சமூக ஊடகங்களில் போலியான காணொளி மற்றும் போலி தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்," என எச்சரித்துள்ளார்.

தனியார் பள்ளிகள் சங்கம் கண்டனம்

தனியார் பள்ளிகள் சங்கங்கள்

இதற்கிடையே, கள்ளக்குறிச்சி வன்முறையை கண்டிப்பதோடு, எதிர்காலத்தில் தனியார் பள்ளிகள் மீது தாக்குதல் நடந்தால், போராட்டம் நடத்தப்படும் என்று தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் கூறியதை அடுத்து, அவருக்கு நீதி கேட்ப்பதாக கூறி, பள்ளி வளாகத்தில் திரண்ட போராட்டக்காரர்கள் பள்ளிக்கு சேதம் விளைவித்தனர். இதனை அடுத்து, பள்ளியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை எதிர்த்து, தனியார் பள்ளிகள் இயங்காது என தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பு அறிவித்திருந்தது.

தனியார் பள்ளிகள் இயங்காது என்று அறிவித்தை கண்டித்து, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கக்கூடாது என்றும் மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் தெரிவித்த பின்னரும், தமிழகத்தில் சில மாவட்டங்களில் தனியார் பள்ளிகள் செயல்படவில்லை. பள்ளி கல்வித்துறையின் அனுமதியின்றி விடுமுறை அளித்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருப்பூர், புதுக்கோட்டை,தென்காசி,கோவை, ஆம்பூர் பகுதிகளில் பல தனியார் பள்ளிகள் செயல்படவில்லை. விடுமுறை அளித்த பள்ளிகளிடம் அதிகாரிகள் விளக்கம் கேட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள பிற மாணவர்களின் படிப்பை உறுதிசெய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

''தனியார் பள்ளிகள் விடுமுறை அளிக்கக்கூடாது என நாங்கள் அறிவித்திருந்தோம். விடுமுறை அளிப்பதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். கள்ளக்குறிச்சி சம்பவத்தில் கட்டாயமாக நீதி கிடைக்கும். தவறு யார் செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதில் சரியான விசாரணை நடைபெறும். வன்முறை நடந்த பள்ளியை சரிப்படுத்த இரண்டு மாதங்கள் கூட ஆகும் என்பதால், அங்கு பயிலும் மாணவர்களை அருகில் உள்ள அரசு பள்ளிகளில்ஸ் சேர்க்கலாம். அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்,''என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி கலவரம்

பட மூலாதாரம், ANBIL MAHESH

பள்ளிக்கல்விதுறை அதிகாரிகளுடன், தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். பேச்சுவார்த்தையின் போது, தனியார் பள்ளியின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை தேவை என கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர் (ஏழு அமைப்புகள்), தனியார் பள்ளிகள் நாளை வழக்கம்போல் செயல்படும் என்று தெரிவித்தனர்.

அப்போது பேசிய தனியார் பள்ளிகள் கூட்டமைப்பைச் சேர்ந்த இளங்கோவன், ''தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நீடித்தால் கண்டிப்பாக எங்கள் போராட்டம் தொடரும். கள்ளக்குறிச்சி கலவரத்திற்கு காரணம் காவல்துறை முறையாக செயல்படாதது தான். கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி இறந்ததை வைத்து சில நபர்கள் முன்விரோதம் காரணமாக இந்த கலவரத்தை செய்துள்ளனர். பள்ளியில் சேதப்படுத்தி அனைத்து பொருட்கள் எல்லாம் கொள்ளை அடித்து கொண்டு சென்றுள்ளனர். இதுபோல தமிழ்நாட்டில் நடந்ததே இல்லை,'' என்றார்.

மேலும் தாக்குதலுக்கு ஆளான தனியார் பள்ளியில் பயின்ற 4500 மாணவர்கள், மீண்டும் அதே பள்ளியில் படிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் அதற்காக குழுவாக தனியார் பள்ளி சங்கத்தினர் செயல்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். அதேநேரம், கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மீது எழுந்துள்ள பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு வழக்கு தற்போது நீதிமன்றத்தில் இருப்பதால் நாங்கள் எந்த கருத்தும் கூற முடியாது என தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தார்.

காணொளிக் குறிப்பு, கல்வீச்சு, தடியடி, துப்பாக்கிச்சூடு: கள்ளக்குறிச்சியில் நடந்தது என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :