கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் உத்தரவு: கல்விகூடங்களில் மரணம் ஏற்பட்டால் சிபிசிஐடி விசாரணை அவசியம்

கள்ளக்குறிச்சி வன்முறை
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

கள்ளக்குறிச்சி மாணவியின் மரணத்தை அடுத்து, வரும் காலங்களில் பள்ளி வளாகத்தில் இறப்பு நேர்ந்தால், சிபிசிஐடி மூலம் அந்த வழக்கின் விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழுவால் உடல்கூராய்வு நடத்தப்படவேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி மர்மமான முறையில் இறந்துள்ளதாக பெற்றோர் கூறியதை அடுத்து, அந்த மாணவிக்கு நீதி கேட்பதாக பள்ளி வளாகம் முன் நேற்று(ஜூலை 17) குவிந்த போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

வன்முறையின் போது, காவல் துறை வாகனம், பள்ளி வாகனத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்து, உடைத்து சேதம் விளைவித்தனர். சேதம் விளைவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், சேதத்திற்கான இழப்பீட்டை வசூலிக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில், தங்களது மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும் என கோரிக்கை வைத்த பெற்றோரின் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.சதீஸ்குமார், ''உடற்கூறாய்வு மீண்டும் நடத்தப்படும் என்றும் அதனை வீடியோ எடுக்கலாம்," என்றும் தெரிவித்தார்.

''மறுஉடற்கூறாய்வு நடக்கும். அதனை வீடியோ எடுத்துக்கொள்ளலாம். உடற்கூறாய்வு நடைபெறும்போது, சிறுமியின் தந்தை மற்றும் அவரது வழக்கறிஞர் உடன் இருக்கலாம். அதன் பின்னர் சிறுமியின் உடலை உடனடியாக குடும்பத்தினர் ஏற்க வேண்டும். மேலும் பிரச்னையை உருவாக்க வேண்டாம். சிறுமியின் இறுதிசடங்கு அமைதியான முறையில் நடைபெறவேண்டும்,''என நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், ''நீதிமன்றத்தை நீங்கள் அணுகிய போது, நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லையா? சட்டத்தை ஒவ்வொருவரும் கையில் எடுத்தால், நீதிமன்றங்கள் எதற்கு? வன்முறை எப்படி நடந்தது?. '' என மாணவியின் தந்தை சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் நீதிபதி சதீஷ்குமார் கேள்வி எழுப்பினார்.

சென்னை உயர் நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வன்முறையில் ஈடுபட்டது குறித்து பல கேள்விகளை எழுப்பிய நீதிபதி, ''வன்முறையில் ஒரு நபர் டிராக்டரை பயன்படுத்தி வாகனங்களை உடைப்பதை நான் பார்த்தேன். அங்கு குழப்பமான சூழல் நிலவியது. அங்கு கூடி சேதம் விளைவித்தவர்கள் முற்றிலும் சட்டத்திற்கு புறம்பாக நடந்துகொண்டார்கள். இந்த வன்முறை தொடர்பான விரிவான அறிக்கையை ஜூலை 29ம் தேதி காவல்துறை தாக்கல் செய்ய வேண்டும்,''என்று தெரிவித்தார்.

''தமிழகம் அமைதி பூங்கா என்ற பெயர் கொண்ட மாநிலம், ஆனால் நேற்று நடந்த வன்முறை நிலைமையை முற்றிலும் மாற்றிவிட்டது. இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்கவேண்டும். சில 100 நபர்கள் ஒன்று சேர்ந்து கலவரத்தில் ஈடுபட்டால், அதனை காவல்துறை ஒடுக்கவேண்டும். இந்த வழக்கில் முறையான விசாரணை நடைபெறவில்லை என யார் தீர்மானம் செய்தார்கள்? வன்முறையில் ஈடுபட்டவர்கள் அதை எப்படி முடிவு செய்யமுடியும்,''என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

என்ன நடந்தது?

தமிழ்நாட்டில் உள்ள கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விடுதியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டுத் துவங்கியதாக சொல்லப்படும் போராட்டம் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) வன்முறையாக மாறியது. இந்த விவகாரத்தில் மாணவி படித்த பள்ளியை வன்முறையாளர்கள் சூறையாடினர். அங்கிருந்த அனைத்து பேருந்துகள் மற்றும் காவல்துறை வாகனம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இந்த கலவரத்தில் விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வக்குமார் மற்றும் 52 காவலர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் இந்த வழக்கானது தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்திருந்தார்.

பேருந்துகள் எரிப்பு

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நேற்று நடைபெற்ற கலவரத்தில் இதுவரை 120 பேரை கைது செய்துள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கைது நடவடிக்கை பள்ளி வளாகத்தில் கலவரத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களைக் கொண்டு நடைபெற்று வருகிறது. மேலும் கலவரம் நடைபெற்ற பள்ளி அருகே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய வாகனங்கள் சுற்றுவட்டார பகுதிகளில் ஆங்காங்கே கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவற்றைக் கொண்டு காவல் துறையினர் வன்முறையில் ஈடுபட்டவர்களை அறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக மாணவியின் உடலை உடற்கூராய்வு செய்து அதன் அறிக்கை வெளியாகி இருந்தது. ஆனால் இதில் பெற்றோர் தரப்பில் ஏற்க மறுத்து மறு உடற்கூராய்வு உத்தரவிட கோரியும், இந்த வழக்கை சிபிசிஐடி எடுத்து நடத்த உத்தரவிட வலியுறுத்தியும் முறையிட்டார். இதனிடையே நேற்று மாலை இந்த வழக்கைத் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு சிபிசிஐடிக்கு மாற்றியதாக தெரிவித்தார். இதையடுத்து பெற்றோர் நீதிமன்றத்தில் வலியுறுத்திய மற்றொரு கோரிக்கையான மாணவியின் உடலை மறு உடற்கூராய்வு செய்ய வலியுறுத்திய மனுவை இன்று சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: