இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம் - இஸ்ரேலை ஜே.டி.வான்ஸ் சாடியது ஏன்?

இரான், டிரம்ப், மொஜ்தபா

பட மூலாதாரம், ISNA/WANA/Reuters

    • எழுதியவர், விக்கி வாங்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, இரான் மீதான தனது கடற்படை முற்றுகையை அமெரிக்கா விலக்கிக்கொண்டது.

"அதிபரின் உத்தரவுப்படி" முற்றுகை முடிவுக்கு வந்ததை அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையமான சென்ட்காம் தனது 'எக்ஸ்' (X) பக்கத்தில் உறுதிப்படுத்தியது; அதேவேளையில், சில அமெரிக்கக் கப்பல்கள் "அந்தப் பொதுவான பகுதியில்" தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என்றும் அது தெரிவித்துது.

இதனைத் தொடர்ந்து, இரானின் அதிஉயர் தலைவர் மொஜ்தபா காமனெயி (Mojtaba Khamenei), அமெரிக்காவுடனான ஒப்பந்தத்திற்குத் தான் "வேறுபட்ட கண்ணோட்டத்தை" கொண்டிருந்தபோதிலும் அதற்கு ஒப்புதல் அளித்ததாகக் கூறினார்; ஆனால் அது றித்த கூடுதல் விவரங்களை அவர் அளிக்கவில்லை. "இரானிய தேசத்தின் உரிமைகளைப் பாதுகாப்பேன்" என்று இரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் (Masoud Pezeshkian) அளித்த உறுதியின் பேரிலேயே இந்த ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள அதிபர் டிரம்ப் "விரக்தியின் காரணமாகவே அனைத்து வகையான அழுத்தங்களையும் பயன்படுத்தினார்" என்று காமனெயி கூறினார்.

எதிர்காலத்தில் டெஹ்ரான் மற்றும் வாஷிங்டன் இடையே "நேரடிப் பேச்சுவார்த்தைகள்" நடைபெறும் என்றாலும், இது "எதிரியின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்வதாக அர்த்தமல்ல" என்று காமனெயி குறிப்பிட்டார்.

மொஜ்தபா காமனெயி

பட மூலாதாரம், Reuters

டிரம்ப் கூறுவது என்ன?

இந்த ஒப்பந்தம் குறித்து காமனெயி கருத்துத் தெரிவிப்பது இதுவே முதல் முறையாகும். பிராந்தியப் போருக்கு வித்திட்ட பிப்ரவரி 28-ஆம் தேதி நடந்த அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களில் தனது தந்தையும் நாட்டின் முந்தைய தலைவருமான ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் மாதம் பதவியேற்றதிலிருந்து இவர் பொதுவெளியில் காணப்படவில்லை.

காமனெயி கருத்துக்கு டிரம்ப் நேரடியாகப் பதிலளிக்கவில்லை; ஆனால் 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் அவர் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், இஸ்ரேல் மற்றும் லெபனானில் இரான் ஆதரவு பெற்ற ஹெஸ்போலா அமைப்புக்கு இடையிலான மோதல் உட்பட "அனைத்து முனைகளிலும்" போர்நிறுத்தம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்ப்பதாகவும், பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கான "தங்கள் உறுதிப்பாட்டை" மத்திய கிழக்கு நாடுகள் கடைப்பிடிக்கும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்கா-இரான் ஒப்பந்தம் 14 முக்கிய அம்சங்களை மையமாகக் கொண்டுள்ளது. இதில் ஹோர்மூஸ் நீரிணை (Strait of Hormuz) மீண்டும் திறக்கப்படுதல், இரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைக் கொண்டிருக்கக் கூடாது என்ற நிபந்தனை மற்றும் நாட்டின் "மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக" 300 பில்லியன் டாலர் நிதியை உருவாக்குவதற்கான உறுதிப்பாடு ஆகியவை அடங்கும் (இதில் அமெரிக்கா நிதி பங்களிப்பு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை).

அமெரிக்க படைகள் வெளியேறுவது எப்போது?

இரு தரப்பினரும் அதிகபட்சம் 60 நாட்களுக்குள் இறுதி ஒப்பந்தத்தை எட்ட வேண்டும் என்றும் இது கட்டாயமாக்குகிறது; பரஸ்பர ஒப்புதலுடன் இந்தக் காலக்கெடுவை நீட்டிக்கவும் வாய்ப்புள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ கையெழுத்திடும் நிகழ்வு சுவிட்சர்லாந்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்தது. இருப்பினும், ஒப்பந்தம் ஏற்கனவே தொலைதூர முறையில் கையெழுத்தாகிவிட்டதால் அது ரத்து செய்யப்பட்டதாக மத்தியஸ்தம் வகிக்கும் பாகிஸ்தான் பிபிசியிடம் தெரிவித்தது. ஆனாலும், அமெரிக்க மற்றும் இரானியப் பிரதிநிதிகள் கூடுதல் பேச்சுவார்த்தைகளுக்காக சுவிட்சர்லாந்தில் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும், அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைகளுக்கான 60 நாள் காலக்கெடு தொடங்கியுள்ளதாகவும், "தொழில்நுட்ப ரீதியான பேச்சுவார்த்தைகளுக்காக" தான் சுவிட்சர்லாந்து செல்லக்கூடும் என்றும் கூறினார்.

இருப்பினும் அவர் எப்போது செல்வார் என்பதை உறுதிப்படுத்தவில்லை;

ஜே டி வான்ஸ்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு,

டிரம்புக்கு சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான டிரம்பின் முடிவுக்கு அமெரிக்காவில் சிலரிடமிருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன; குறிப்பாக, ஒப்பந்தத்தின் விதிமுறைகள் (அதிலும் குறிப்பாக இரானுக்கான மறுசீரமைப்பு நிதி) குறித்து அதிருப்தி அடைந்த குடியரசுக் கட்சியினர் இதில் அடங்குவர்.

குடியரசுக் கட்சி செனட்டர் பில் கேசிடி, இந்த ஒப்பந்தத்தை "பல தசாப்தங்களில் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான வெளியுறவுக் கொள்கை தவறு" என்று வர்ணித்தார்.

"இரானின் அணுசக்தி லட்சியங்கள் கட்டுப்படுத்தப்படவில்லை; ஹோர்முஸ் நீரிணையை அச்சுறுத்துவது பலனளிக்கும் என்பதை அவர்கள் கற்றுக்கொண்டுள்ளனர்," என்று அவர் கூறினார்.

ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றினால் ஒழிய, இரானுக்குப் பணமோ அல்லது பொருளாதாரத் தடைகளிலிருந்து விடுவிப்போ கிடைக்காது என்று கூறி, வியாழக்கிழமை வான்ஸ் இந்த ஒப்பந்தத்தை நியாயப்படுத்தினார்.

இந்த ஒப்பந்தத்தின்படி, இரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பை அழிக்க வேண்டும் என்றும், அப்பிராந்தியத்தில் உள்ள ஆயுதக் குழுக்களுக்கு (proxy groups) நிதியுதவி அளிக்காது என்பதை நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இஸ்ரேலை ஜே.டி.வான்ஸ் சாடியது ஏன்?

டிரம்ப், இஸ்ரேல், பெஞ்சமின் நெதன்யாகு

பட மூலாதாரம், Reuters

இரான் ஒப்பந்தத்தை விமர்சித்ததற்காக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அமைச்சரவை உறுப்பினர்களையும் வான்ஸ் கடுமையாகச் சாடினார்; அவர்கள் "யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்" என்று அவர் கூறினார்.

"நான் இஸ்ரேலிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் இருந்திருந்தால், உலகம் முழுவதும் எனக்கு எஞ்சியிருக்கும் ஒரே சக்தி வாய்ந்த கூட்டாளியை நான் விமர்சித்திருக்க மாட்டேன்," என்று துணை அதிபர் வான்ஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.

'நியூயார்க் டைம்ஸ்' இதழுக்கு அளித்த பேட்டியில், இந்த ஒப்பந்தத்தை விமர்சித்தவர்களில் இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடமார் பென்-க்விர் மற்றும் நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் ஆகியோரின் பெயர்களை வான்ஸ் குறிப்பிட்டார்.

அவர் பேசிய போது,"அவர்களுக்கான எனது பதில் இதுவாகத்தான் இருக்கும் - உங்கள் துல்லியமான முன்மொழிவு என்ன? நீங்கள் தொண்ணூறு லட்சம் (9 மில்லியன்) மக்கள் கொண்ட ஒரு நாடு. தேசிய பாதுகாப்பு தொடர்பான ஒவ்வொரு பிரச்னையையும் வன்முறை அல்லது கொலைகள் மூலம் மட்டுமே தீர்த்துவிட முடியாது." என்றார்.

இரானுடனான போரின்போது வாஷிங்டன் இஸ்ரேலுடன் "தோளோடு தோள் நின்று" ஆதரவளித்ததாகக் கூறிய நெதன்யாகு, அமெரிக்காவுடனான இஸ்ரேலின் நெருங்கிய உறவைத் தக்கவைத்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை வியாழக்கிழமை வலியுறுத்தினார். ஆனால், அமெரிக்கா-இரான் ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டதிலிருந்து இஸ்ரேலும் ஹெஸ்போலாவும் ஒன்றுக்கொன்று தாக்குதல்களை நடத்தி வருகின்றன. வியாழக்கிழமை லெபனானில் நடந்ததாகக் கூறப்படும் தாக்குதல்களில் மூன்று பேர் கொல்லப்பட்டதும் இதில் அடங்கும்.

ஹெஸ்போலா

பட மூலாதாரம், Reuters

ஹெஸ்போலா உடன்படுமா?

ஹெஸ்போலாவுக்கு எதிரான தனது மோதல், இரானுக்கு எதிரான போரிலிருந்து வேறுபட்டது என்று இஸ்ரேல் வாதிடுகிறது. இரான் மற்றும் அமெரிக்கா இடையேயான ஒப்பந்தத்தின் விதிமுறைகளை ஹெஸ்போலாவும் நிராகரித்துள்ளது.

இரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை இஸ்ரேல் மதிக்க வேண்டும் என்றுவான்ஸ் செய்தியாளர்களிடம் கூறினார். லெபனானின் தலைநகரான பெய்ரூட்டில் பொதுமக்களைக் கொல்லும் தாக்குதல்கள் "ஏற்றுக்கொள்ள முடியாதவை" என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு