அமெரிக்கா - இரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை பாதிக்கக்கூடிய 3 காரணிகள்

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க-இரான் ஒப்பந்தத்தைப் பாதிக்கக்கூடிய மூன்று காரணிகள்

பட மூலாதாரம், Getty Images/BBC

படக்குறிப்பு, ஒப்பந்தம் இன்னும் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்திடப்படவில்லை, ஆனால் அதற்குள்ளாகவே பதற்றம் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களை நோக்கி கவனம் நகரத் தொடங்கியுள்ளது.
    • எழுதியவர், லூயிஸ் பருச்சோ
    • பதவி, பிபிசி உலக சேவை
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

பல வாரகாலமாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அமெரிக்காவும் இரானும் ஓர் ஆரம்பகட்ட ஒப்பந்தத்தை எட்டியுள்ளன.

ஆனால் அதற்குள் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான கடுமையான சவால்களை நோக்கிக் கவனம் திரும்பத் தொடங்கியுள்ளது.

புதன்கிழமை அன்று, அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் 14 பத்திகள் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பிபிசி உள்ளிட்ட செய்தியாளர்களிடம் வாசித்துக் காட்டினார்.

இந்த ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை அன்று சுவிட்சர்லாந்தில் அதிகாரப்பூர்வமாக கையொப்பமிடப்பட உள்ளது.

மேலும் இது "அதிகபட்சம் 60 நாட்களுக்குள், பரஸ்பர ஒப்புதலுடன் நீட்டிக்கக்கூடிய காலக்கெடுவில்" ஒரு "இறுதி ஒப்பந்தத்தை" எட்டுவதற்கு வழிவகுக்கிறது.

அமெரிக்கக் கடற்படை முற்றுகையை நீக்கத் தொடங்குதல், ஹோர்மூஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தை மீட்டெடுத்தல் மற்றும் இரான் மீதான "அனைத்து வகையான தடைகளையும்" நீக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துதல் ஆகியவற்றுக்கான உறுதிமொழிகளை இது முன்வைக்கிறது.

மேலும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இரானின் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக குறைந்தபட்சம் 300 பில்லியன் டாலர் (224 பில்லியன் பவுண்ட்) நிதிக்கான திட்டங்களை வலியுறுத்துவதுடன், அணு ஆயுதத்தை உருவாக்க மாட்டோம் என்ற இரானின் புதுப்பிக்கப்பட்ட உறுதிமொழியையும் உள்ளடக்கியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த முதல்கட்ட ஒப்பந்தம் "இறுதியானது அல்ல" என்று எச்சரித்ததுடன், இது தோல்வியடைந்தால் அமெரிக்கா "மீண்டும் தாக்குதல் நடத்தத் தொடங்கலாம்" என்றும் கூறியுள்ளார்.

டிரம்ப் நிர்வாகத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ள ஒப்புக்கொண்ட இரானின் நாடாளுமன்ற சபாநாயகரும் முக்கிய பேச்சுவார்த்தையாளருமான முகமது பாகர் காலிபாஃப், அமெரிக்கா மீதான தனது அவநம்பிக்கை நீடிப்பதாகவும், இரான் "தாக்குதலைத் தொடுக்கத் தயாராக உள்ளது" என்றும் அரசு ஊடகத்திடம் தெரிவித்தார்.

நிபுணர்களின் கூற்றுப்படி, பேச்சுவார்த்தைகளை ஆபத்தில் ஆழ்த்தக்கூடிய மூன்று பெரிய அச்சுறுத்தல்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்

தெற்கு லெபனானில் உள்ள நபதியா மாவட்டத்தில் உள்ள க்ஃபார் சிர்  பகுதியில், இஸ்ரேலிய தாக்குதலால் அழிக்கப்பட்ட ஒரு கட்டடத்தின் இடிபாடுகளைப் பார்க்கும் நபர் (16 ஜூன் 2026).

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, போரின் போது லெபனானில் சுமார் 50,000 வீடுகள் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இரு தரப்பினரும் "லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்துவதாக" அறிவித்துள்ளனர் என்று, முதல்கட்ட ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டபோது முக்கிய மத்தியஸ்தர்களில் ஒருவராகச் செயல்பட்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தெரிவித்தார்.

புதன்கிழமை வாசிக்கப்பட்ட இந்த ஒப்பந்தம், லெபனானையும் வெளிப்படையாக உள்ளடக்கியுள்ளதுடன், அதன் "பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை" உறுதி செய்கிறது.

இருப்பினும், பிரான்சில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு "லெபனான் விஷயத்தில் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும்" என்று டிரம்ப் கூறிய பிறகும், இஸ்ரேல் லெபனான் மீதான தனது தாக்குதல்களைத் தொடர்ந்து வருகிறது.

புதன்கிழமை அன்று, இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் நபதியா அல்-ஃபவ்கா பகுதி மற்றும் அதன் அருகிலுள்ள க்ஃபார் டெப்னிட் எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடத்தியதாக லெபனானின் அரசுக்குச் சொந்தமான தேசிய செய்தி நிறுவனம் (என்என்ஏ) தெரிவித்துள்ளது.

மேலும், லெபனான் போர்நிறுத்தக் கட்டமைப்புக்குள் கொண்டு வரப்பட்டாலும், லெபனான் எல்லையிலிருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறுவது இந்த ஒப்பந்தத்தின் ஒரு நிபந்தனை அல்ல என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். இஸ்ரேல் தனது தற்காப்புக்கான உரிமையைத் தக்க வைத்துக் கொள்ளும் என்றும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஆனால், லெபனானில் போர் முடிவுக்கு வருவது, "போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தின் பிரிக்க முடியாத பகுதி" என்று இரான் கூறியுள்ளது.

லெபனானில் உள்ள இரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவும் இதே நிலைப்பாட்டை எதிரொலிக்கிறது.

பேச்சுவார்த்தையின் அடுத்தகட்டத்தில் லெபனானில் இருந்து இஸ்ரேலியப் படைகளை முழுமையாக வெளியேற்றுமாறு கோருவதாக இரான் தனது நட்பு நாட்டுக்கு உறுதியளித்துள்ளதாக, ஹெஸ்பொலாவின் ஊடகத் தொடர்பு அலுவலகம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த ஒப்பந்தம் குறித்த இரானின் விளக்கத்துக்குத் தாங்கள் கட்டுப்பட்டவர்கள் அல்ல என்பதையும் இஸ்ரேல் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது.

இஸ்ரேலியப் படைகள் லெபனானில் உள்ள பாதுகாப்பு மண்டலங்களில் "கால வரம்பின்றி" நிலைத்திருக்கும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியுள்ளார், மேலும் லெபனான் விவகாரத்தில் இரான் இஸ்ரேலைத் தாக்கினால் அவர்கள் "முழு பலத்துடன் தாக்குவார்கள்" என்றும் எச்சரித்துள்ளார்.

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேலியப் படைகள் தெற்கு லெபனானில் தங்கியிருக்கும் என்றும், பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தாக்கும் திறனைத் தொடர்ந்து பராமரிக்கும் என்றும் கூறினார்.

பிரிட்டனின் சிந்தனைக் குழுவான ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிட்யூட்டின் அரசியல் விஞ்ஞானி முனைவர் ஹெச்.ஏ. ஹெல்லியர் கூறுகையில், அமைதி முயற்சிகளில் இஸ்ரேல் "முக்கிய தடையாக " இருந்து வருகிறது என்கிறார்.

"இரானை இலக்காகக் கொண்டோ அல்லது லெபனானில் நடந்து வரும் பேரழிவின் மூலமாகவோ மேற்கொள்ளப்படும் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள், ராஜீய முன்னேற்றத்துக்கு இருக்கும் ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது" என்று அவர் குறிப்பிடுகிறார்.

இரான் நேரடி மோதலுக்குள் இழுக்கப்பட்டால், "அணுசக்தி கோப்பு குறித்த கணிசமான பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்பே" இந்த செயல்முறை முறிந்துவிடக்கூடும் என்று ஹெல்லியர் கூறுகிறார்.

லெபனான் அதிபர் ஜோசப் அவூன் இந்த முதல்கட்ட ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளார், இது "வன்முறைச் சுழற்சிக்கு ஒரு திட்டவட்டமான முடிவைக் கொண்டுவரும் நடைமுறை நடவடிக்கைகளாக" மாறும் என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

லெபனானைப் பொறுத்தவரை, போரின் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. 3,700க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், சுமார் ஒரு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் மற்றும் தெற்குப் பகுதியின் பெரும்பகுதி பரவலான அழிவைச் சந்தித்துள்ளது.

இரானின் அணுசக்தித் திட்டம்

இரானில் நெடுஞ்சாலைக்கு அருகில் "நடான்ஸ்"  என்று எழுதப்பட்ட நீல மற்றும் பச்சை நிற சாலை அடையாளப் பலகை உள்ளது. அதன் பின்னணியில் ஒரு மலைத்தொடர் காணப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

மற்றொரு சிக்கலான விஷயம் இரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஆகும், இருப்பினும் அதை பறிமுதல் செய்ய வேண்டிய அவசரம் இல்லை என்று டிரம்ப் கூறியுள்ளார்.

இரான் தனது அணுசக்தித் திட்டம் அமைதியான ஒன்று என்பதை தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது, மேலும் அணு ஆயுதங்களை உருவாக்கப் போவதில்லை என்பதை இந்த ஒப்பந்தத்தில் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இருப்பினும், தற்போதுள்ள செறிவூட்டப்பட்ட பொருட்களின் நிலை உள்ளிட்ட முக்கிய கேள்விகள் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டிய இறுதி ஒப்பந்தத்தைப் பொறுத்தே உள்ளன.

சேமித்து வைக்கப்பட்டுள்ள செறிவூட்டப்பட்ட பொருளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து இரு தரப்பினரும் கொள்கை ரீதியாக முடிவு செய்ய ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதற்கான குறைந்தபட்ச அணுகுமுறையாக "சர்வதேச அணுசக்தி முகமையின் மேற்பார்வையின் கீழ் அந்த இடத்திலேயே டவுன்-பிளெண்டிங் (வீரியத்தைக் குறைப்பது)" இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரைவு விதிகளின் கீழ், 60 நாட்கள் பேச்சுவார்த்தை காலத்தின்போது இரு தரப்பும் "தற்போதைய நிலையை" பராமரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரான் தனது அணுசக்தி நடவடிக்கைகளை விரிவுபடுத்தாது, அதே நேரத்தில் அமெரிக்கா புதிய தடைகளை விதிப்பதையோ அல்லது பிராந்தியத்தில் தனது ராணுவ இருப்பை அதிகரிப்பதையோ தவிர்க்கும்.

சர்வதேச அணுசக்தி முகமையின் கூற்றுப்படி, இரான் கடந்த ஆண்டுக்குள் 60% வரை செறிவூட்டப்பட்ட சுமார் 400 கிலோ யுரேனியத்தைச் சேகரித்திருந்தது.

ஓர் அணு ஆயுதத்துக்கு தேவையான செறிவூட்டல் அளவு சுமார் 90% ஆகும்.

அதிபர் பராக் ஒபாமா பேச்சுவார்த்தை நடத்திய 2015 அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ், இரான் செறிவூட்டலை 3.67% ஆக கட்டுப்படுத்தியது. டிரம்பின் முதல் பதவிக் காலத்தில், 2018 இல் அமெரிக்கா அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிய பிறகு, இரான் தனது அணுசக்தித் திட்டத்தை கணிசமாக விரிவுபடுத்தியது.

இரான் மீண்டும் ஆயுதத் தரத்திலான யுரேனியத்தைச் செறிவூட்டுகிறது என்று அதிபர் கருதினால், அவர் "மீண்டும் ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்க வாய்ப்புள்ளது" என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத்தின் முன்னாள் துணைத் தலைமை அதிகாரியான தரின் செல்னிக், பிபிசி ரேடியோ 4 இன் டுடே நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

ஹோர்மூஸ் நீரிணை

இந்த ஒப்பந்தம் பிப்ரவரி முதல் முற்றிலும் முடங்கியுள்ள ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. போருக்கு முன்பு, உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் சுமார் 20% இந்த முக்கியமான கப்பல் போக்குவரத்து பாதை வழியாகவே சென்றது.

வெள்ளிக்கிழமை ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து இந்த நீர்வழிப்பாதை மீண்டும் திறக்கப்படும் என்றும், இரான் மேற்கொள்ளும் கண்ணிவெடி அகற்றுதல் உள்ளிட்ட தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்புத் தடைகள் நீக்கப்படுவதால் 30 நாட்களுக்குள் முழுமையான செயல்பாடுகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அது கூறுகிறது.

"பாரசீக வளைகுடாவிலிருந்து ஓமன் கடல் வரை மற்றும் அதற்கு நேர்மாறாகவும்" முதல்கட்ட 60 நாட்களுக்கு இந்த நீரிணை கட்டணமில்லாமல் இருக்கும் என்று ஒப்பந்தம் குறிப்பிடுகிறது.

இந்த நீர்வழிப்பாதையின் எதிர்கால நிர்வாகம் மற்றும் கடல்சார் சேவைகள் குறித்து சர்வதேச சட்டத்துக்கு இணங்க, ஓமன் மற்றும் பிற வளைகுடா நாடுகளுடன் இரான் பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் அது குறிப்பிடுகிறது.

இது எதிர்காலத்தில் சுங்க கட்டணங்கள் நடைமுறைக்கு வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும்.

இந்த நீரிணையை நிர்வகிப்பதில் தங்களுக்குப் பெரிய பங்கு வேண்டும் என்பதை இரான் ஏற்கெனவே சுட்டிக்காட்டியுள்ளது.

இரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாஹி கூறுகையில், இந்த நீரிணையைக் கடந்து செல்லும் கப்பல்களுக்குச் சேவைக் கட்டணம் விதிக்கப்படும் என்றார். இருப்பினும், அந்தக் கட்டணங்கள் எவற்றை உள்ளடக்கியதாக இருக்கும் என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை.

குறிப்பிட்ட சேவைகளுக்கான கட்டணங்கள் அனுமதிக்கப்பட்டாலும், சர்வதேச சட்டத்தின் கீழ் நீரிணையைக் கடந்து செல்வதற்கான சுங்கக் கட்டணங்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

இருப்பினும், பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த நீரிணை சுங்கக் கட்டணம் இல்லாமல் தொடரும் என்று அமெரிக்க மூத்த அதிகாரி நம்பிக்கை தெரிவித்தார்.

இரான் தனது நிலைப்பாட்டை நிலைநிறுத்த முற்படலாம் என்று கூறிய அந்த அதிகாரி, ஆனால் வளைகுடா நாடுகள் தங்கள் பொருளாதாரங்களுக்கான கட்டணமில்லா அணுகுமுறையைக் கட்டுப்படுத்தும் எந்தவொரு ஏற்பாட்டையும் ஏற்றுக்கொள்ளாது என்று குறிப்பிட்டார்.

இரான் கட்டணங்களை விதிப்பதற்கு எதிராக எத்தகைய பாதுகாப்பு வழிமுறைகள் உள்ளன என்று முன்பு கேட்டபோது, டிரம்ப் "பொது அறிவு" என்று பதில் அளித்திருந்தார். இரான் ராணுவ பதற்றத்தை மேலும் அதிகரிக்க விரும்பாது என்றும் அவர் கூறினார். வளைகுடா நாடுகள் சுங்கக் கட்டணங்களை உள்ளடக்கிய எதிர்கால அமைப்பை "ஒருபோதும்" ஏற்றுக்கொள்ளாது என்றும் அமெரிக்கா நம்புகிறது.

அதே சமயம், நடைமுறை ரீதியான கேள்விகளும் இன்னும் எஞ்சியுள்ளன.

கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு "வாரங்கள் முதல் மாதங்கள் வரை" ஆகலாம் என்று ஓய்வு பெற்ற அமெரிக்க கடற்படை ரியர் அட்மிரல் மார்க் மாண்ட்கோமரி பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் போர்நிறுத்தம் நீடிப்பதை உறுதி செய்யும் வரை எச்சரிக்கையுடன் செயல்பட வாய்ப்புள்ளது.

"தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டால், ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்ல ஒரு துணிச்சலான கேப்டன் மட்டுமே முன்வருவார்" என்று நெருக்கடி மேலாண்மை நிறுவனமான ஈஓஎஸ் ரிஸ்க் குரூப்பைச் சேர்ந்த மார்ட்டின் கெல்லி பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தார்.

இருப்பினும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இந்த ஒப்பந்தம் இன்னும் "ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமாக மட்டுமே உள்ளது. அது பேச்சுவார்த்தைக்கான ஒரு கட்டமைப்பு, இறுதியான தீர்மானம் அல்ல" என்று ஹெல்லியர் எச்சரிக்கிறார்.

மேலும், "கடினமான வேலை இன்னும் தொடங்கவே இல்லை" என்றும் அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு