You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குஜராத் 2002 கலவரம்: ஜாகியா ஜாஃப்ரியின் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கேட்கப்படும் கேள்விகள்
- எழுதியவர், வினீத் கரே
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்
2002 குஜராத் கலவரத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட எஸ்ஐடி அதாவது சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கையை ஜூன் 24 ஆம் தேதி உச்ச நீதிமன்ற அமர்வு உறுதி செய்து, பிரதமர் நரேந்திர மோதி உட்பட 60க்கும் மேற்பட்டோருக்கு க்ளீன் சிட் (குற்றமற்றவர்கள்) வழங்கியது.
கலவரத்தில் கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி எஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியாவின் மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
2002 குஜராத் கலவரத்தில் உயர் பதவிகளில் இருந்தவர்கள் சதி செய்ததாக மனுவில் கூறப்பட்டிருந்தது.
நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, எஸ்ஐடி விசாரணையை பாராட்டியதுடன், "விசாரணையின் போது எஸ்ஐடியின் செயல்பாடு மற்றும் பக்கச்சார்பான அணுகுமுறை குறித்த குற்றச்சாட்டுகள் கேலிக்குரியவை" என்று தனது 450 பக்க உத்தரவில் கூறியது.
"சவாலான சூழலில் எஸ்ஐடி அதிகாரிகள் குழு செய்த அலுப்புதரும் பணியை நாங்கள் பாராட்டுகிறோம். ஆனாலும் அவர்களால் தங்கள் பணியை திறமையாக முடிக்க முடிந்தது," என்று அந்த அமர்வு குறிப்பிட்டது.
கலவரம் தொடர்பான குற்றச்சாட்டுகள்
குஜராத் கலவரத்தில் வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாகவும், வன்முறையை செய்த கும்பலுக்கு அதிகாரப்பூர்வ விலக்கு இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ஆனால், பெரிய அளவிலான முன் திட்டமிடல், சதி மற்றும் மூத்த அதிகாரிகளின் ஈடுபாடு போன்ற குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் அவர்களின் ஈடுபாடு குறித்து சந்தேகப்பட இடமில்லை என்றும் அந்த அமர்வு கூறியது.
குஜராத் கலவரத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள். முன்னதாக, கோத்ரா ரயில் தீயிடலில் சுமார் 60 இந்துக்கள் கொல்லப்பட்டனர்.
கலவரத்தின்போது நிகழ்ந்த குல்பர்க் சொசைட்டி படுகொலையில் எஹ்ஸான் ஜாஃப்ரி உட்பட 69 பேர் கொல்லப்பட்டனர்.
அப்போது குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோதி உட்பட 63 பேர் மீது ஜாகியா ஜாஃப்ரி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக்குழு, எஸ்ஐடியை அமைத்தது.
எஸ்ஐடி தனது அறிக்கையை 2012ல் அளித்தது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்ற பாஜக தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா, ஒரு பேட்டியில், "மோதி அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், யாரும் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை, நாடு முழுவதும் உள்ள தொண்டர்கள் மோதிக்கு ஒற்றுமையாக திரளவில்லை. நானும் கைது செய்யப்பட்டேன். இவ்வளவு நீண்ட போராட்டத்திற்குப் பிறகு உண்மை வெற்றிகரமாக வெளிவரும்போது, அது தங்கத்தை விட பிரகாசமாக ஜொலிக்கிறது," என்று குறிப்பிட்டார்.
டீஸ்டா செடல்வாட், ஸ்ரீகுமார், சஞ்சீவ் பட் மீதான நீதிமன்ற கருத்துகள் மற்றும் எதிர்வினைகள்
குஜராத் கலவரம் தொடர்பாக அன்றைய முதல்வர் நரேந்திர மோதிக்கு எதிராக இரண்டு தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் பிரசாரங்கள் ஆதாரமற்றவை என்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மற்றொரு சான்றாக பாஜக தலைவர்களும் ஒரு பகுதி ஊடகங்களும் குறிப்பிட்டு வரும் நிலையில், நீதிமன்ற உத்தரவின் சில அம்சங்கள் விமர்சிக்கப்படுகின்றன.
"அரசை காப்பாற்றிய சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகளை உச்ச நீதிமன்றம் பாராட்டியது மற்றும் எஸ்ஐடியின் கண்டுபிடிப்புகளை எதிர்த்து மேல்முறையீடு செய்தவர்களின் குரலை அழுத்திவிட்டது," என்று 92 முன்னாள் அதிகாரிகள், உச்ச நீதிமன்ற உத்தரவு தொடர்பான ஒரு கூட்டு கடிதத்தில் கூறியுள்ளனர்.
அதிகாரிகளின் பட்டியலில் வஜாஹத் ஹபிபுல்லா, ஏஎஸ் துல்லத், ஹர்ஷ் மந்தர், அமிதாப் பாண்டே, ஜிகே பிள்ளை, கே சுஜாதா ராவ், ஜூலியோ ரிபேரோ, என்சி சக்சேனா மற்றும் ஜாவேத் உஸ்மானி போன்ற பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
குஜராத் ஆர்வலர் டீஸ்டா செடல்வாட் மற்றும் முன்னாள் மூத்த போலீஸ் அதிகாரி ஆர்.பி. ஸ்ரீகுமார் ஆகியோர் மீது உச்ச நீதிமன்ற உத்தரவில் கடுமையான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. அதன் பிறகு போலீசார் மின்னல் வேகத்தில் அவர்களை கைது செய்தனர்.
"குஜராத் மாநிலத்தின் அதிருப்தி அதிகாரிகள் மற்றும் சிலரின் கூட்டு முயற்சியின் நோக்கம் பரபரப்பை ஏற்படுத்துவது மட்டுமே. மேலும் இதன் அடிப்படை தவறானது என்பதும் அவர்களுக்குத் தெரியும் என்பதும் இறுதியாக வெளிவந்துள்ளது," என்று நீதிமன்றம் கூறியது.
இந்த நடைமுறையை தவறாக பயன்படுத்திய அனைவரையும் சிறையில் அடைத்து, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.
"குஜராத் கலவர விசாரணையில் போலி மோசடி ஆவணங்கள் தயாரித்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆர்வலர் டீஸ்டா செடல்வாட் மற்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆர்.பி. ஸ்ரீகுமார் ஆகியோரை குஜராத் போலீசார் கைது செய்துள்ளனர். சஞ்சீவ் பட் ஏற்கெனவே சிறையில் உள்ளார். அவர்களுடன் இவர்களும் இருப்பார்கள்" என்று இந்த உத்தரவு வெளியான ஒரு நாள் கழித்து பாஜக தலைவர் அமித் மால்வியா ட்வீட் செய்துள்ளார்.
"சஞ்சீவ் பட்டின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. கொலை மற்றும் போதைப் பொருள்களை வேறொரு மாநிலத்தில் வழக்கறிஞர் அறையில் பதுக்கிய வழக்கில் அவர் குற்றவாளி என கண்டறியப்பட்டுள்ளது. அவர் 2002 பிப்ரவரி 27 கூட்டப்பட்ட கூட்டத்தில் பங்கேற்றதாக அவர் கூறினார். ஆனால் கூட்டத்தில் இருந்த எல்லா அதிகாரிகளும் இந்த கூற்றை மறுத்துள்ளனர்," என்று சஞ்சீவ் பட் குறித்து நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
எதிர்காலம் பற்றிய சந்தேகங்கள்
பத்திரிகையாளரும் எழுத்தாளருமான கிங்ஷுக் நாக் 2002ல் குஜராத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் ஆசிரியராக கலவரம் குறித்து செய்திகள் வெளியிட்டவர். குல்பர்க் சொசைட்டி வன்முறை மற்றும் அதன் விளைவுகளுக்கு டீஸ்டாவும் ஸ்ரீகுமாரும்தான் பொறுப்பு என்று கூறப்படும் என்று தான் ஒருபோதும் நினைத்ததில்லை என்று பிபிசியிடம் அவர் கூறினார்.
இதுபோன்ற 'பழிவாங்கும் நீதி' எதிர்காலத்தில் உண்மைக்காக குரல் எழுப்பும் அரசு சாரா அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் குரலை நிறுத்திவிடும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான நீதிபதி கே. சந்துரு கூறினார்.
முன்னாள் அதிகாரிகள் தங்கள் கடிதத்தில், டீஸ்டா செடல்வாட் போன்றவர்கள் மீதான கருத்துகளை பாரா 88ல் இருந்து நீக்குமாறு நீதிமன்றத்தை கோரியுள்ளனர். மேலும், மனுதாரர்கள் மற்றும் அவர்களது வழக்கறிஞர்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் இதில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் முடிவு செய்ததா என்றும் கேட்டுள்ளனர்.
"என்ஹெச்ஆர்சி அறிக்கைகள் மற்றும் அமிகஸ் கியூரி ராஜு ராமச்சந்திரனின் அறிக்கையில் அப்போதைய முதலமைச்சர் நரேந்திர மோதியின் பங்கு குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று கூறியது என்ன ஆயிற்று," என்று அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளில் இதற்கு முன்பு இதுபோன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படவில்லை என்றும் கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.
நீதிமன்றங்கள் அரசுகளை மிக எளிதாக நம்பிவிடுகின்றன என்று முன்னாள் உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளை குறிப்பிட்டார்.
டீஸ்டா செடல்வாட்டின் கைது பற்றி கருத்து தெரிவித்த அவர், "அவர் சட்டத்தை மீறவில்லை. அரசியல் சாசனத்தால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள மனுக்கள், மறுஆய்வு மனுக்கள் போன்றவற்றைத் தாக்கல் செய்ய அவர் தனது ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்துகிறார்" என்று கூறினார்.
டீஸ்டா செடல்வாட் உள்ளிட்டோர் மீது புகார் வந்தபோது இதுகுறித்து போலீசார் விசாரிக்க வேண்டும். ஏனென்றால் நாளிதழில் வெளியான செய்திகள் உண்மையாகவோ அல்லது பொய்யாகவோ இருக்கலாம் என்று ஜி.கே.பிள்ளை கூறினார்.
"நீதிபதி காவல்துறையினரிடம், தீர்ப்பின் நகல் உங்களிடம் உள்ளதா? நீங்கள் விஷயத்தை விசாரித்தீர்களா என்று கேட்டிருக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.
உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் துரைசாமி ராஜு மற்றும் அரிஜித் பசாயத் ஆகியோரின் பெஸ்ட் பேக்கரி வழக்கில் மறுவிசாரணைக்கான உத்தரவு குறித்தும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"பெஸ்ட் பேக்கரி மற்றும் அப்பாவி குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் எரியும் போது, இன்றைய நீரோ வேறு எங்கோ பார்த்துக்கோண்டு, ஒருவேளை குற்றம் செய்த குற்றவாளிகளை எப்படி காப்பாற்றுவது என்று யோசித்துக்கொண்டிருந்திருப்பார்" என்று நீதிமன்றப்பிரிவு கூறியிருந்தது.
ரோமானியப் பேரரசின் ஐந்தாவது அரசரான நீரோ இரக்கமற்ற அரசனாக நினைவுகூரப்படுகிறார்.
நீதிபதி பசாயத்தை தொடர்பு கொண்டபோது கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
டீஸ்டா செடல்வாட் மற்றும் ஸ்ரீகுமார் மீதான உச்ச நீதிமன்றத்தின் கருத்துகள் குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் லோகுர் "ஒரு வழக்கை தள்ளுபடி செய்யும் போது இதையெல்லாம் சொல்ல வேண்டியதில்லை... இதை ஏன் சொல்ல வேண்டும்? அதற்கு என்ன தேவை? இந்த வழக்கை எப்படி தள்ளுபடி செய்கிறோம், நீங்கள் பொய் வழக்கு போட்டதால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று ஏன் சொல்ல வேண்டும்? நீதிமன்றங்களில் ஆயிரக்கணக்கில் பொய் வழக்குகள் போடப்படும் இந்த நேரத்தில்... காவல்துறை பதிவுசெய்யும் பொய் வழக்குகள் பற்றி என்ன செய்வது? பொய் வழக்கு பதிவு செய்த போலீசார் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமா?" என்று ஒரு பேட்டியில் அவர் கூறினார்.
மற்றொரு கட்டுரையில், நீதிபதி லோகூர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் உத்தரவில் டீஸ்டா செடல்வாட் கைது குறித்து பேசவில்லை என்றால், டீஸ்டாவை நிபந்தனையின்றி விடுவிக்க உத்தரவிட வேண்டும் மற்றும் கைது உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
டீஸ்டா செடல்வாட் 2007 இல் பத்மஸ்ரீ விருது பெற்றார். குஜராத் கலவர வழக்கில் பொய்யான ஆதாரங்களை உருவாக்கியதாக டீஸ்டா, ஸ்ரீகுமார் மற்றும் சஞ்சீவ் பட் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அமிகஸ் கியூரி அறிக்கை Vs SIT அறிக்கை
குஜராத் கலவரத்தில் நரேந்திர மோதி மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் சதி என மோதி ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
"டீஸ்டா செடல்வாட்டின் அரசு சாரா அமைப்பு அதைச் செய்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. அப்போது வந்த UPA அரசு டீஸ்டா செடல்வாட்டின் அரசு சாரா அமைப்புக்கு நிறைய உதவி செய்தது. இதுஅனைவருக்கும் தெரியும்,"
ஆனால், கடந்த இருபது ஆண்டுகளில், குஜராத் கலவரத்தில் நீதித்துறை செயல்முறை, எஸ்ஐடி அறிக்கைகள், நீதிமன்ற நடவடிக்கைகள் போன்றவற்றில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
சுமார் ஐநூற்று ஐம்பது பக்கங்களில் பல வாதங்களை முன்வைத்து சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு எஸ்ஐடி இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையின் கடைசிப் பக்கத்தில், "இந்தச் சட்டத்தின் விதிகளின்படி, நரேந்திர மோதி எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று SIT கருதுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், அமிகஸ் கியூரி ராஜு ராமச்சந்திரன், நரேந்திர மோதி மீது பல்வேறு குழுக்களிடையே பகைமையை பரப்பியதற்காக ஐபிசியின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவேண்டும் என்று எழுதினார்.
உண்மையில், இந்த விவகாரம் 2002 ஆம் ஆண்டு கலவரத்தின் போது நடந்த கூட்டம் தொடர்பானது. அதில் முதலமைச்சர் மோதி தங்கள் கோபத்தை வெளிப்படுத்துமாறு இந்துக்களிடம் கூறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
குஜராத் முன்னாள் அமைச்சர்கள் ஹரேன் பாண்டியா மற்றும் சஞ்சீவ் பட் ஆகியோர் நரேந்திர மோதி அப்படி கூறியதாக தெரிவித்தனர். ஆனால், அப்போதைய முதலமைச்சர் அப்படி எதுவும் கூறவில்லை என அங்கிருந்த மற்ற அதிகாரிகள் மறுத்தனர்.
சஞ்சீவ் பட்டின் வார்த்தைகளுக்கு எதிராக மற்ற அதிகாரிகளின் வார்த்தைகள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு எஸ்ஐடி செவிசாய்த்துள்ளது என்றும், எந்த ஒரு போலீஸ் அதிகாரியும் இவ்வளவு சீரியஸான விஷயத்தை எந்த அடிப்படையும் இல்லாமல் சொல்வார் என்று தெரியவில்லை என்று அமிகஸ் கியூரி ராஜு ராமச்சந்திரன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
ஸ்ரீகுமாரை "அதிருப்தி அதிகாரி" என்றும், கூட்டத்தில் நரேந்திர மோதி கூறியதாக கூறப்படும் கருத்து "கற்பனையின் கற்பனை" என்றும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் விவரித்தது.
எஸ்ஐடி அறிக்கையை ஏற்கிறீர்களோ இல்லையோ, சட்டமே பிரதானமாக இருக்கும் ஜனநாயகத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுதான் கடைசி உத்தரவு என்கிறார் முன்னாள் உள்துறைச் செயலாளர் ஜி.கே.பிள்ளை.
அப்போதைய முதலமைச்சரிடம் விசாரணை
2010ஆம் ஆண்டு, காந்திநகரில் உள்ள எஸ்ஐடி அலுவலகத்தில் அப்போதைய முதலமைச்சர் நரேந்திர மோதி ஆஜரானார். வகுப்புவாத வன்முறைக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் முதலமைச்சர் ஒருவரை விசாரணை நிறுவனம் ஒன்று விசாரித்தது அதுவே முதல் முறை.
எஸ்ஐடியின் விசாரணை 12 மாதங்கள் நீடித்ததாகவும், 163 சாட்சிகளின் வாக்குமூலங்கள் எடுக்கப்பட்டதாகவும், இவை அனைத்தும் முதற்கட்ட விசாரணையாக நடந்ததாகவும், பத்திரிகையாளரும் எழுத்தாளருமான மனோஜ் மிட்டா, "மோதி அண்ட் கோத்ரா: தி ஃபிக்ஷன் ஆஃப் ஃபேக்ட் ஃபைண்டிங்" புத்தகத்தில் எழுதியுள்ளார். அவரது விசாரணையின் பொறுப்பு ஓய்வு பெற்ற சிபிஐ அதிகாரி ஏ.கே.மல்ஹோத்ராவிடம் ஒப்படைக்கப்பட்டது.
"அவரிடம் குறைந்தது 71 கேள்விகள் கேட்கப்பட்டன. அவருடைய பதில்களைக் கொண்ட ஒவ்வொரு பக்கத்திலும் மோதி கையெழுத்திட்டார். மேலும் அந்த பதில்கள் சர்ச்சைக்குரியதாக இருந்தாலும் மல்ஹோத்ரா எந்த ஒரு பதிலையும் கவனமாக கேட்டு எதிர்கேள்வி கேட்கவில்லை என்பதை இந்தப் பக்கங்கள் காட்டுகின்றன" என்று மிட்டா எழுதுகிறார்.
குல்பர்க் சொசைட்டி மீதான தாக்குதல் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நரேந்திர மோதியிடம் கேட்டபோது, நரோடா பாட்டியா மற்றும் குல்பர்க் சொசைட்டி மீதான தாக்குதல் குறித்து இரவில் நடந்த சட்டம் ஒழுங்கு கூட்டத்தில் தான் அறிந்ததாக அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
பகலில் இந்த படுகொலை நடந்தது. உண்மையில், இந்த படுகொலைகளை சரியான நேரத்தில் தடுக்க எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில், அப்போதைய முதலமைச்சருக்கு எப்படி இந்த படுகொலைகள் பற்றி சரியான நேரத்தில் தெரிய வரவில்லை என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
SIT நரேந்திர மோதியின் கூற்றுகளுக்கு எதிர்கேள்வி கேட்கவில்லை என்றும் சம்பவத்தின் போது குல்பர்க் சொசைட்டி படுகொலை பற்றிய தகவல் தங்களுக்கு கிடைக்கவில்லை என்ற அவரது கூற்றை அது ஏற்றுக்கொண்டது என்று மனோஜ் மிட்டாவின் கூறுகிறார்.
"தனக்கு எதுவும் தெரியாது என்ற மோதியின் கூற்று சந்தேகத்திற்குரியது. ஏனெனில் பிப்ரவரி 28 அன்று அவர் செய்த சில பணிகள் குல்பர்க் சொசைட்டியிலிருந்து மூன்று கிலோமீட்டர்கள் தூரத்தில் இருந்தன" என்று அவர் எழுதுகிறார்.
கலவரத்தின் போது எஹ்ஸான் ஜாஃப்ரியிடமிருந்து உதவிக்கான அழைப்பு வந்ததை நரேந்திர மோதி மறுத்தார். மேலும் அத்தகைய தொலைபேசி உரையாடல் எதுவும் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று SIT அறிக்கையின் பக்கம் 261 தெரிவிக்கிறது.
"உச்ச நீதிமன்றம் உண்மையைக் கண்டறிய விரும்பியிருந்தால், இந்த விவகாரத்தில் மேலும் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும், ஏற்கெனவே சேகரிக்கப்பட்ட பதிவுகளின்படி செல்லாமல் இருந்திருக்க வேண்டும்" என்று நீதிபதி கே.சந்துரு கூறுகிறார்.
உடல்களை அணிவகுத்து கொண்டுசென்றதால் வன்முறை மூண்டதா?
கோத்ரா ரயில் தீ விபத்தில் இறந்தவர்களின் உடல்களை விஷ்வ ஹிந்து பரிஷத்தின் ஜெய்தீப் படேலிடம் ஒப்படைத்த விதமும், காலுபூர் ரயில் நிலையத்தில் இருந்து உடல்கள் அகமதாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட விதமும் சூழலைக் கெடுத்ததாகக் கூறப்படுகிறது.
கோத்ரா ரயில் தீயிடலில் உயிரிழந்தவர்களின் உடல்களை அகமதாபாத் கொண்டுவந்தது மற்றும் ஜெய்தீப் படேல் குறித்து எஸ்ஐடி நரேந்திர மோதியிடம் கேட்டபோது, மாவட்ட நிர்வாகம், போலீஸ் அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகளிடம் உடல்களின் கஸ்டடி இருந்ததாக அவர் பதில் அளித்தார் என்று மனோஜ் மிட்டாவின் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .
உடல்களை பெற்றுக்கொள்ளும் ஆவணத்தில் ஏன் மீண்டும் விஹெச்பி கையெழுத்திட்டது என்று எஸ்ஐடி மோதியிடம் திருப்பிக்கேட்டிருந்தால், அவருக்கு பதில் சொல்வது எளிதாக இருந்திருக்காது என்று மனோஜ் மிட்டா குறிப்பிடுகிறார்.
இறந்த நபரின் உடலை அவரது பாதுகாவலர் அல்லது சட்டப்பூர்வ வாரிசு தவிர வேறு யாருக்கும் கொடுக்க சட்டம் அனுமதிக்காது என்று மிட்டா கூறுகிறார்.
உடல்கள் மூடப்பட்ட வாகனங்களில் போலீஸ் பாதுகாப்பில் கொண்டு செல்லப்பட்டதாகவும், ஜெய்தீப் படேல் உடன் இருந்தார் என்றும் உச்ச நீதிமன்றம் தன் சமீபத்திய உத்தரவில் கூறியது.
அந்த உத்தரவின்படி, "இறந்தவர்களின் உடல்கள் கோத்ராவில் இருந்து அகமதாபாத்திற்கு திறந்த வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டதாகவோ அல்லது தனியாரால் கொண்டு செல்லப்பட்டதாகவோ எந்த தகவலும் இல்லை. உடல்களை அகமதாபாத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. விடுப்பு என்பது உள்ளூர் மட்ட அதிகாரிகளின் உணர்வுப்பூர்வமான மற்றும் ஒருமித்த முடிவாகும். மேலும் கூறப்படுவது போல் அப்போதைய முதலமைச்சரின் உத்தரவு அல்லது வழிகாட்டுதலின் பேரில் இது செய்யப்படவில்லை. இறந்தவர்களில் பெரும்பாலானோர் அகமதாபாத் மற்றும் அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் இது செய்யப்பட்டது" என்றும் உத்தரவு தெரிவிக்கிறது.
ராகுல் ஷர்மா மற்றும் சிடி என்ன ஆனது?
2004 ஆம் ஆண்டில், குஜராத் ஐபிஎஸ் அதிகாரி ராகுல் ஷர்மா, நானாவதி ஆணையத்திடம் இரண்டு அழைப்பு பதிவுகளின் குறுந்தகடுகளை சமர்ப்பித்திருந்தார். குஜராத் கலவரம் குறித்து நானாவதி கமிஷன் விசாரணை நடத்தி வந்தது.
அமைச்சர்கள், அதிகாரிகள், விஐபிகள் மற்றும் பலரின் செயல்பாடுகளை அவர்களின் மொபைல் எண்களின் உதவியுடன் இந்த தரவு கண்காணிக்க உதவியது.
இந்த அழைப்பு பதிவுகளின் அடிப்படையில் ஊடகங்களில் பல செய்திகள் வெளியாகின.
"இதன் நன்மை என்னவென்றால், குஜராத் கலவரத்தில் மொபைல் போன்கள் அதிகாரப்பூர்வ ஆதாரமாக மாறியது. இது வழக்கறிஞர்கள், ஆர்வலர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள், ஷர்மாவின் குறுந்தகடுகளை மேற்கோள் காட்டுவதை எளிதாக்கியது. இதனால் அவர்கள் மாயா கோட்னானி, ஜெய்தீப் படேல் மற்றும் மூத்த போலீஸ் அதிகாரிகள் மீது குஜராத் கலவர வழக்கில் நடவடிக்கை எடுக்க நெருக்குதல் கொடுக்க வகைசெய்யப்பட்டது," என்று மனோஜ் மிட்டா தனது புத்தகத்தில் கூறுகிறார்.
மின்னணு தரவுகளை வழங்கும்போது சில முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று நீதிபதி கே சந்துரு கூறுகிறார்.
"குற்றம் செய்தவர்கள் ஆட்சியில் இருக்கும்போது அந்த வழக்குகளில் முழுமையான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து திருப்திப்படுத்துவது கடினம்" என்கிறார் அவர்.
மறுபுறம், "எஸ்ஐடி அழைப்பு பதிவுகளை ஆய்வு செய்து, அவை ஆதாரமற்றவை என்று கண்டறிந்துள்ளது" என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் சிடி பற்றி கூறியது.
உச்ச நீதிமன்றம் நாட்டின் உச்சபட்ச நீதிமன்றமாகும். குஜராத் கலவரத்தில் உயர் பதவிகளில் இருந்தவர்களின் பங்கு என்ன என்ற சர்ச்சைக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இறுதி வடிவம் கொடுத்துள்ளது.
ஜாகியா ஜாஃப்ரியின் மகன் தன்வீர் ஜாஃப்ரி ஹஜ் யாத்திரையில் இருப்பதால், குடும்பத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை அறிய அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இந்த விஷயம் இப்போது நீதிமன்றத்தின் பட்டியலில் இல்லை என்று தெரிகிறது. ஆனால் 2002 கலவரத்தின் தீயில் கருகியவர்களிம் குடும்பங்களும், அவர்களை சார்ந்தவர்களும் அந்த காலகட்டத்தை தங்கள் மனதில் இருந்து அகற்றுவது ஏறக்குறைய இயலாத காரியம் என்றே சொல்லலாம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்