ஆசிரியர் முகப்பருவை ஊசியால் குத்தியதால் மாணவர் இறந்ததாக சர்ச்சை - நடந்தது என்ன?

    • எழுதியவர், பிரசன்னா வெங்கடேஷ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் முகப்பருவை ஊசியால் குத்தியதால் பத்தாம் வகுப்பு மாணவர் உயிரிழந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. ஆனால், பள்ளி மாணவர் உயிரிழப்பை பகடைக்காயாக அரசியல்வாதிகள் பயன்படுத்துவதாக சம்பந்தப்பட்ட ஆசிரியை கூறியுள்ளார். இந்த விஷயத்தில் என்ன நடந்தது?

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த இந்து மலையாளி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் சேவத்தான், இவர் தனது மகனை ஜமுனா மரத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளியில் பத்தாம் வகுப்பில் சேர்த்து படிக்க வைத்தார்.

இந்த நிலையில் ஜூன் 28ஆம் தேதி அன்று அப்பள்ளியின் ஆசிரியை மகாலட்சுமி, அலைபேசியில் இருந்து சேவத்தானை தொடர்பு கொண்டு, "உங்களுடைய மகனின் முகம் வீங்கி உள்ளது. உடனே அவரை அழைத்துச் செல்ல வாருங்கள்," என அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.

சந்தேகம் எழுப்பும் பெற்றோர்

இதையடுத்து தன் மகனை அழைத்து வர சேவத்தான் சென்ற போது அவரது முகம் முழுவதும் வீங்கி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பிறகு தமது மகனிடம் என்ன நடந்தது என்று கேட்டபோது, 'என் முகத்தில் இருந்த பருவை பள்ளி ஆசிரியை மகாலட்சுமி ஊசியால் குத்தி அகற்ற முயன்றார். அதனால் முகம் வீங்கியது' என்று மகன் கூறியதாகவும் அதன்பேரில் அவரை நம்பியந்தல் அரசு மருத்துவமனையில் சேர்த்ததாகவும் சேவத்தான் தெரிவித்தார்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் பாகாயம் மருத்துவமனைக்கு அனுப்பி தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், மாணவனின் உடல்நிலை மேலும் மோசமானதால் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த நிலையில், தங்களுடைய மகனின் மறைவுக்கு ஆசிரியை மகாலட்சுமியே காரணம் என்று கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

"எனது தம்பியின் உடல்நிலை மோசமாக இருக்கிறது என்பது குறித்து முன்கூட்டியே பள்ளியிலிருந்து தகவல் அளித்து இருந்தால் நிச்சயம் அவனை காப்பாற்றி இருப்போம்" என்கிறார் உயிரிழந்த சிவகாசியின் அண்ணன் அஜித்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "எனது தம்பியை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் தான் பள்ளியில் சேர்த்து விட்டோம். உடல்நிலை சரியில்லை என ஆசிரியர் மகாலட்சுமி தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்த உடனேயே நாங்கள் பள்ளிக்குச் சென்று தம்பியை வீட்டிற்கு அழைத்து வந்தோம். அடுத்த நாள் காலை அரசம்பட்டு கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எனது தம்பியை அழைத்துச் சென்று சிகிச்சை மேற்கொண்டோம் அங்கு அவருக்கு ஊசி போடப்பட்டது. இருப்பினும் வலி அதிகமாக இருந்ததால் அடுக்கம்பாறை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் மீண்டும் சேர்த்தோம். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம் அங்கு தம்பிக்கு ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவன் உயிர் போய் விட்டது. எனது தம்பிக்கு எந்தவிதமான தீய பழக்கமும் இருந்ததாக எங்களுக்கு இதுவரை தெரியவில்லை," என்கிறார்.

"பகடைக்காயாக பயன்படுத்துகின்றனர்"

ஆனால் "சிறுவனின் கட்டியில் நான் எதையும் குத்தவில்லை. சிலர் அரசியல் ஆதாயத்துக்காக சிறுவன் உயிரிழந்த விஷயத்தில் எனது பெயரை தொடர்புடுத்துகின்றனர்" என்கிறார் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள ஆசிரியர் மகாலட்சுமி.

மேலும் அவர் பிபிசி தமிழிடம் கூறுகையில், "தன்னிறைவுத் திட்டத்தின் (SSS) மூலம் பள்ளிக்காக மூன்று லட்சம் ரூபாய் மதிப்பில் பள்ளிக்கான புதிய இடத்தில் மதில் சுவர் கட்ட ஒப்பந்தம் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் ஒப்பந்ததாரர் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகைக்கும், ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்திலும் மதில்சுவர் கட்டாமல் வேறு இடத்தில் தரமற்ற முறையில் மதில்சுவர் கட்டினார். இதனால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் அளித்தேன். இதை தொடர்ந்து அதிமுக நிர்வாகிகளிடையே பிரச்னை ஏற்பட்டது. அதிமுகவினர் ஏற்கெனவே தொலைபேசியில் என்னை மிரட்டி வந்தனர். சிறுவனின் கட்டியில் நான் எதையும் குத்தவில்லை. சிலரின் அரசியல் ஆதாயத்திற்கு இறந்த குழந்தையை பகடைக்காய் ஆக்குகின்றனர்," என்கிறார்.

இதையடுத்து ஆசிரியர் மகாலட்சுமி மீது புகார் தெரிவித்து வரும் அதிமுகவினரிடம் பேசினோம்.

"மலைவாழ் மக்கள் எதைச் சொன்னாலும் நம்பி விடுவார்கள் என்கின்ற தைரியத்தில் தன் மீது உள்ள புகாரை திசை திருப்புவதற்கு ஆசிரியர் மகாலட்சுமி எங்கள் மீது பழியை சுமத்துகிறார்" என்கிறார் கலசலிங்கம் அம்மா பேரவை துணை செயலாளர் செல்லா.

"உயிரிழந்த மாணவனுக்கு எந்த தீய பழக்கமும் கிடையாது. சம்பந்தப்பட்ட கிராமத்தில் மாணவன் குறித்து விசாரித்தால் உண்மை என்னவென்று தெரியும். மாணவனின் முகத்தில் இருந்த கட்டியை ஆசிரியை மகாலட்சுமி ஊசி மூலம் கிளறி விட்டுள்ளார். அது 'செப்டிக்' ஆகி மூன்று நாள் கழித்து மாணவனின் முகம் வீங்கிய பிறகு கடைசி நேரத்தில் பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளார்.

இதற்கு இடையில் மாணவனை உரிய சிகிச்சைக்காக மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லவில்லை. இதுவே அந்த மாணவன் உயிரிழப்புக்கு காரணம். பள்ளி இருக்கும் இடத்திற்கும் மாணவனின் பெற்றோர் வசிக்கும் இடத்திற்கும் தோராயமாக முப்பது கிலோ மீட்டர் இருக்கும். பள்ளியில் நடந்த பிரச்னைக்கும் இந்த மாணவன் உயிரிழப்புக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது," என்று அவர் பிபிசி தமிழிடம் மேலும் கூறினார்.

"மாணவனின் சடலத்தை சம்பந்தப்பட்ட பள்ளி வளாகத்தில் வைத்து போராட்டம் நடத்துவதாக ஊர் மக்கள் முடிவெடுத்தார்கள். இதனால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்கின்ற காரணத்தினால் காவல்துறையிடம் சமரசமாக பேசி ஊர் மக்களை சமாதானப்படுத்தி உடலை நல்லடக்கம் செய்தோம்," என்கிறார் கலசப்பாக்கம் அதிமுக ஒன்றிய செயலாளர் வெள்ளையன்.

மேலும் இவர் பிபிசி தமிழிடம் கூறுகையில், "கிராம மக்களை நாங்கள் சமாதானம் செய்யாமல் இருந்திருந்தால் இந்நேரம் உயிரிழந்த மாணவனின் சடலத்தை மாணவன் படித்த பள்ளியில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டிருப்பார்கள். மலைவாழ் மக்களின் பிள்ளைகளின் படிப்பு கெட்டு விடக்கூடாது என்பதற்காக கிராம மக்களின் போராட்டத்தை தடுத்து நிறுத்தினோம். கிராம மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட ஆசிரியர் மகாலட்சுமி முறையாக பதில் கூற வேண்டும். அதை விட்டுவிட்டு எங்கள் மீது வீண் பழி சுமத்த கூடாது," என்றார்.

"ஆசிரியர் மகாலட்சுமி அதிமுக நிர்வாகிகள் மீது முன்வைத்த புகாரின் உண்மைத் தன்மை குறித்து உரியமுறையில் விசாரிக்கப்படும். அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

உயிரிழந்த மாணவனின் கிராமத்தில் சாராயம் புழக்கத்தில் இருக்கிறதா? சம்பந்தப்பட்ட மாணவன் சாராயம் குடித்தாரா? என்பது குறித்து உரிய முறையில் விசாரிக்கப்படும் என பிபிசி தமிழிடம் வேலூர் சரக டிஐஜி அனி விஜயா தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: