You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காரைக்காலில் காலரா, வயிற்றுப்போக்கால் 700 பேர் பாதிப்பு - அரசு நடவடிக்கை என்ன?
- எழுதியவர், நடராஜன் சுந்தர்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
புதுச்சேரியின் காரைக்காலில் பொதுமக்களுக்கு காலரா, வயிற்றுப்போக்கு அறிகுறிகள் அதிகமாக காணப்படுவதால் அங்கு பொது சுகாதார அவசரநிலையை அரசு அறிவித்திருக்கிறது. மக்களை பீதியடையச் செய்திருக்கும் இந்த தீவிர நோய்ப்பரவலை கட்டுப்படுத்த அரசு என்ன செய்கிறது, பொதுமக்கள் எப்படி தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும்?
காரைக்காலில் சாக்கடை நீர் செல்லும் பகுதிகளின் குறுக்கே செல்லும் தண்ணீர் குழாயில் கசிவு ஏற்பட்டு, அதன் மூலமாகச் சாக்கடை நீர் தண்ணீரில் கலந்ததால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுவரை மாவட்டம் முழுவதும் 700 பேர் வரை காலரா, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நான்கு பிராந்தியங்கள் உள்ளது. அதில் ஒன்றுதான் இந்த காரைக்கால் மாவட்டம்.
கடந்த ஒரு மாதமாக வயிற்றுப்போக்கு மற்றும் காலரா நோய்த்தொற்றால் நூற்றுக்கணக்கான மக்கள் இங்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகவலை சுகாதாரத் துறை அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். மக்கள் புழங்கும் தண்ணீரில் சாக்கடை நீர் கலந்ததால் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
'பொது சுகாதார அவசர நிலை'
இந்த நிலையில், காரைக்கால் மாவட்டத்தை "பொது சுகாதார அவசர நிலை" என அறிவித்திருக்கிறது மாவட்ட நிர்வாகம். இப்படியொரு அறிவிப்பை வெளியிடும் அளவுக்கா இங்கே பிரச்னை தீவிரமாகியிருக்கிறது? விவரம் அறிய மாவட்ட சுகாதாரத்துறை, மாவட்ட நிர்வாகத்துடன் பிபிசி தமிழ் பேசியது.
இந்த விஷயத்தில் மக்கள் முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அவர்கள் ஒத்த குரலில் வலியுறுத்துகின்றனர்.
மாவட்ட நலவாழ்வுத்துறை, பொது சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, நகராட்சி மற்றும் கொம்யூன் அதிகாரிகள் வயிற்றுப்போக்கிற்கான காரணத்தை கண்டறிந்து, தீவிர சிகிச்சை, விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் ஏற்கெனவே அறிவுறுத்தியிருக்கிறார்.
அதன்பேரில், காரைக்காலின் அனைத்து வீதிகளிலும் குடிநீர் குழாய்கள், தண்ணீர் தொட்டிகள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில்தான் புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நலச் சேவைகள் இயக்குநரகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
- அதில், காரைக்கால் பகுதியில் சமீப காலமாக கடுமையான வயிற்றுப்போக்கு நோய் அதிகமாகப் பதிவாகி வருகின்றன. பரிசோதிக்கப்பட்ட பெரும்பாலான தண்ணீர் மாதிரிகள் திருப்திகரமாக இல்லை. சில நோயாளிகளுக்கு காலரா தொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- இதனால் தினசரி மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அவற்றை கருத்தில் கொண்டு, சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இயக்குநரகம் காரைக்கால் மாவட்டத்தில் நிலவி வரும் கடுமையான வயிற்றுப்போக்கு நோய்/காலராவை "பொது சுகாதார அவசர நிலை" என அறிவிக்கிறது.
- இதற்கு அனைத்து தீர்வு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகளும் சுகாதார குழுவுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படுகின்றன. புதுச்சேரி மற்றும் நகராட்சி, பொதுப்பணித்துறை போன்ற துறைகளின் ஒருங்கிணைப்புடன் ஒருங்கிணைப்புக் குழுக்களுக்குத் தேவையான அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன.
மக்கள் என்ன செய்ய வேண்டும்?
இந்த விஷயத்தில் பொது மக்கள் விழிப்புடன் சில வழிமுறைகளைப் பின்பற்றவும் புதுச்சேரி அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அதன் விவரத்தை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
- போதுமான அளவு கொதிக்க வைத்த தண்ணீரை (20 நிமிடங்கள் கொதிக்கவைத்து) குடிக்கவும்
- பொது இடங்கள் மற்றும் உணவகங்களில் பாதுகாப்பான குடிநீர் பருகுவதை உறுதி செய்யவும்.
- எந்தவொரு நெருங்கிய தொடர்பும் அறிகுறிகளை உருவாக்கினால், கை கழுவுதல் உட்படத் தனிப்பட்ட சுகாதார நடவடிக்கைகளை உறுதிப்படுத்தவும்.
- சரியாகக் கழுவிச் சமைத்த உணவை உட்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் மீண்டும் சூடுபடுத்தி உணவை சாப்பிடவும்.
- சரியாக சுத்தப்படுத்தப்பட்ட பொதுக் கழிப்பிட வசதிகளைப் பயன்படுத்தவும். திறந்த வெளியில் மலம் கழிப்பதைத் தவிர்க்கவும்.
- உங்களுக்கு மலம் அதிகமாக வந்தாலோ வாந்தி எடுத்தாலோ உடனடியாக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைக்கு தெரிவிக்கவும்.
- ஓஆர்எஸ்(Oral rehydration solutions ) தீர்வின் முக்கியத்துவத்தைப் பற்றி அறிந்திருங்கள். வீட்டு அடிப்படையிலான ORSஐ உருவாக்கக் கற்றுக்கொள்ளுங்கள் தீர்வு. இது நோயின் தீவிரத்தைத் தடுக்க உதவும் (உள்ளூர் PHC குழு மற்றும் சுகாதார குழு உதவும்)
- அக்கம்பக்கத்தினர்/மூத்த குடிமக்கள் யாராவது நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் உதவி மற்றும் எச்சரிக்கை செய்யவும்.
- இப்பகுதியில் நீர் வடிகால் அமைப்பில் ஏதேனும் கசிவு காணப்பட்டால் உரிய அதிகாரிக்குத் தெரிவிக்கவும்.
- இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவது நோயின் தீவிரத்தைக் குறைக்க உதவும். சுகாதார அதிகாரிகளிடம் முன்கூட்டியே புகார் அளித்தால் உயிரைக் காப்பாற்ற முடியும்.
144 சட்டப் பிரிவின் கீழ் கட்டுப்பாடுகள்
இதற்கிடையே, காரைக்கால் மாவட்டம் முழுவதும் 144 சட்டப் பிரிவின் கீழ் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கிறது. பொது சுகாதார அவசரநிலையை அமல்படுத்த ஏதுவாக இந்த நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. அதன் விவரம்:
அனைத்து உணவகங்கள், விடுதிகள், கல்வி நிறுவனங்கள், மண்டபங்கள், தனியார் மருத்துவச் சிகிச்சை மையங்களில் இருக்கும் குடிநீர் தொட்டிகள் உடனடியாக சுற்றும் செய்து, தண்ணீரை குளோரினேஷன் செய்ய வேண்டும்.
தண்ணீரில் குளோரினேஷன் 0.5ppm அளவிற்கு மட்டுமே பராமரிக்கப்பட வேண்டும்.
கொதிக்க வைத்த தண்ணீர் அல்லது சுத்திகரிப்பட்ட RO குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி பொதுமக்களுக்கு குளோரின் கலந்த குடிநீரையே விநியோகம் செய்ய வேண்டும். விநியோகம் செய்யப்படும் தண்ணீரில் 0.5பிபிஎம் குளோரின் அளவு இருக்க வேண்டும்.மேலும் இந்த அவசர சூழலைக் கருத்தில் கொண்டு 144(2) குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973 கீழ் இவை கடுமையாகப் பின்பற்ற வேண்டும்.
பாதிப்புக்கு என்ன காரணம்?
நோய்த் தொற்றின் தீவிரம் குறித்தும், அதன் பாதிப்பு குறித்தும் காரைக்கால் பிராந்திய சுகாதார துறை துணை இயக்குநர் மருத்துவர் சிவராஜா குமாரிடம் பிபிசி தமிழ் பேசியது.
"காரைக்கால் மேடு என்ற பகுதியில் கடந்த மே மாதம் 25ஆம் தேதியிலிருந்து அடுத்த ஒன்றரை நாளில் 25 நோயாளிகள் வரை பாதிக்கப்பட்டனர். அது படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. எதனால் இவ்வாறு பாதிப்பு ஏற்படுகிறது என்பதை கண்டறிய அப்பகுதிக்கு சென்று மக்கள் பயன்படுத்தும் தண்ணீரில் கழிவுநீர் கலந்துவிட்டதா என்பதை ஆய்வு செய்தோம்," என்று மருத்துவர் சிவராஜா கூறினார்.
இந்த ஆய்வில் சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் சுகாதாரத்துறையினருக்கு கிடைத்தன. இதை விவரித்த மருத்துவர், "எங்களுடைய ஆய்வில் முதலில் இரண்டு பகுதிகளிலும், அடுத்தடுத்த ஆய்வில் மேலும் இரண்டு பகுதிகளிலும் கழிவு நீரில் கசிவு இருப்பது கண்டறியப்பட்டது. அதை அடைத்த பின்னர் அந்த பகுதிகள் பாதுகாக்கப்பட்டன. அந்த முயற்சியால் அடுத்த ஒரு வாரத்தில் நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட்டது," என்கிறார்.
ஆனால், இதன் பிறகும் அந்த பகுதியில் மேலும் சிலருக்கு காலரா, வயிற்றுப்போக்கு அதிகமாக காணப்பட்டது.
இதை ஒப்புக் கொள்ளும் மருத்துவர் சிவராஜா, "சுகாதாரத் துறை முயற்சியால் காரைக்காலில் ஒருசில பகுதிகளில் ஓரிரண்டு பேர் பாதிக்கப்பட்டனர். அந்த இடங்களை ஆய்வு செய்ததில் அங்குக் கசிவு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் 15 நாட்களுக்குப் பிறகு மேலும் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்தது," என்றார்.
"மாவட்டம் முழுவதும் மக்கள் பயன்பாட்டிற்கு செல்லும் தண்ணீர் விநியோக பாதைகளை முழுவதுமாக ஆய்வு செய்தோம். சம்பந்தப்பட்ட துறைக்குத் தண்ணீரைச் சுத்திகரிக்கச் செய்யவும், மாவட்டம் முழுவதும் கசிவுகள் இருக்கிறதா என்பதைக் கண்டறியும்படியும் வலியுறுத்தினோம்.
ஒருபுறம் மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதேவேளை நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருந்தது. அப்போதெல்லாம் தினமும் 45 பேர் வரை பாதிக்கப்பட்டனர். மேற்கொண்டு தீவிரமாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் தொற்று குறையத் தொடங்கியது. தற்போது 15லிருந்து 20வரை என்ற அளவில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. அடுத்தடுத்த வாரங்களில் இது முழுவதுமாக குறையும் என எதிர்பார்க்கிறோம், என்கிறார் மருத்துவர் சிவராஜா.
காரைக்கால் மாவட்டத்தில் 45 சதவீதம் மக்கள் RO சுத்திகரிப்பு நீரை பயன்படுத்துகின்றனர். மீதமுள்ள மக்கள் நேரடியாக வரும் நகராட்சி குடிநீரைத் தான் உபயோகம் படுத்துகின்றனர். அதிலும் இந்த வெயிலின் தாக்கத்தால் போகும் இடங்களில் கிடைக்கும் நீரைப் பருகும் சூழலில் மக்கள் இருக்கின்றனர். ஆகவே நல்ல மேம்படுத்தத் தண்ணீர் விநியோகத்தை மக்கள் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம் என்றும் மருத்துவர் என்கிறார் சிவராஜா குமார் தெரிவித்தார்.
தண்ணீரில் கலந்த சாக்கடை நீர்
இந்த பாதிப்பு சாக்கடை நீர் செல்லும் பாதை வழியாக போடப்பட்ட குடிநீர் குழாய் பாதையில் கசிவு ஏற்பட்டு, அதன் மூலமாக சாக்கடை நீர் தண்ணீரில் கலந்திருப்பதால் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக நகரங்களை விட குடிசைப்பகுதிகளில் தான் இந்நோய்த் தொற்று அதிகமாக உள்ளது. தற்போது ஒவ்வொரு பகுதிகளிலும் தண்ணீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதில் பாதிக்கும் மேற்பட்ட அளவில் தண்ணீர் தூய்மையாக இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பிரச்னைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருதவாக கூறுகிறது மாநில சுகாதாரத் துறை.
கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் காரைக்கால் முழுவதும் வயிற்றுப்போக்கு மற்றும் காலரா அறிகுறியால் சுமார் 700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே சுகாதார அவசர நிலையை கருத்தில் கொண்டு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சுகாதார குழு அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். மேலும் இதை விரைவில் கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளபட்டுள்ளதால், மக்கள் பீதியடைய வேண்டாம் என்று தமிழிசை செளந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.
காரைக்காலுக்கு சென்ற பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் இலட்சுமி நாராயணன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினார். குறிப்பாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடிநீர் குழாய்களை மாற்ற அறிவுறுத்தியுள்ளார். மேலும் குடிநீர் தரத்தை ஆய்வு செய்ய சிறப்பு குழுவை அமைச்சர் நியமித்ததுள்ளார்.
இதனைத் தொடர்ந்து காலரா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த காரைக்காலில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளித்து பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்