You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண போட்டோஷூட்: திருப்பதி கோயிலில் காலணி அணிந்ததற்கு மன்னிப்பு கேட்ட இயக்குநர்
இன்றைய (ஜூன் 11) இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நயன்தாராவும் அவருடைய கணவர் விக்னேஷ் சிவனும் நேற்று மதியம் தரிசனம் செய்துவிட்டு, கோவிலின் நான்கு மாட வீதியில் காலணி அணிந்து போட்டோஷூட் செய்தததற்காக மன்னிப்பு கோரியுள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதுகுறித்த செய்தியில், "திருப்பதி ஏழுமையான் கோவிலில் நயன்தாராவும் அவருடைய கணவர் விக்னேஷ் சிவனும் நேற்று மதியம் சாமி தரிசனம் செய்தனர். அடுத்து திருப்பதியில் நடைபெற்ற கல்யாண உற்சவத்தில் இருவரும் கலந்துகொண்டனர். பின்னர் கோவிலுக்கு வெளியே ரசிகர்கள் சூழ்ந்துகொண்டதால், அங்கிருந்து சென்றுவிட்ட இருவரும் சிறிதுநேரத்தில் அதே பகுதிக்கு வந்து போட்டோஷூட் நடத்தினர். அப்போது இருவரும் காலணிகள் அணிந்துகொண்டனர்.
இதனால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. திருமலையில் போட்டோ ஷூட் செய்வதோ, நான்கு மாட வீதியில் காலணிகள் அணிவதோ கூடாது என்பது ஏற்கெனவே விதிக்கப்பட்ட விதியாகும்.
இந்த நிலையில், திருப்பதியில் நடந்த தவறுக்கு மன்னிப்பு கோரி தேவஸ்தானத்திற்கு விக்னேஷ் சிவன் எழுதியுள்ள கடிதத்தில், ''காலணியுடன் நாங்கள் நடமாடியதைக் கவனிக்கத் தவறிய செயலுக்காக மன்னிப்பு கோருகிறேன். போட்டோஷூட் எடுத்தபோது காலணி அணிந்திருந்ததை உணரவில்லை, என்று விக்னேஷ் தெரிவித்திருந்தார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு முக்கிய நிபந்தனை விதித்துள்ள ரஷ்யா
இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கும் நோக்கில் ரஷ்யா முக்கிய நிபந்தனையை முன்வைத்துள்ளதாக இலங்கையின் ஐபிசி தமிழ் இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
அந்தச் செய்தியின்படி, அண்மையில் ரஷ்ய விமானம் தடுத்து வைக்கப்பட்ட சம்பவம் போன்று மீண்டும் நடக்காமல் இருப்பதை இலங்கை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
மாஸ்கோ நகரத்தில் இருந்து, ரஷ்ய அதிபரின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் அதிகாரப்பூர்வமான டாஸ் (Tass) செய்தி நிறுவனம் இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தற்போது விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் விமான பயணங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், அண்மையில் ஏரோஃப்ளாட் விமானம் தடுத்து வைக்க்பபட்டமை போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை இலங்கை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஏரோஃப்ளாட் விமானங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து எந்தவித உத்தியோகபூர்வ கோரிக்கையும் மாஸ்கோவிற்கு கிடைக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வரும் எரிபொருள் கப்பல்கள்
எதிர்வரும் வாரங்களில் ஐந்து எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளதாக எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளதாக தமிழ் மிரர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில், "நாளை முதல் எதிர்வரும் 22ஆம் தேதி வரையான 12 நாட்களுக்குள் இவ்வாறு எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் 16ஆம் தேதி இந்திய கடன் திட்டத்தின் இறுதி டீசல் கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்வரும் 22ஆம் தேதி மற்றுமொரு பெட்ரோல் கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதுடன் 20ஆம் தேதிக்கு முன்னர் மசகு எண்ணெய் கப்பலொன்றை எதிர்ப்பார்த்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்