புதுச்சேரி வந்த சொகுசு கப்பலுக்கு அனுமதி மறுத்த அரசு - என்ன நடந்தது?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 4ஆம் தொடங்கி வைத்த சொகுசு கப்பல், விசாகப்பட்டினம் சென்றுவிட்டு புதுச்சேரியை வந்தடைந்தது. ஆனால், அந்த சொகுசு கப்பல் புதுச்சேரி வருவது தொடர்பாக எந்த அனுமதியும் பெறவில்லை என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

சென்னையிலிருந்து சொகுசு கப்பல் மூலம் ஆழ்கடல் பகுதிக்குச் சென்று திரும்பும் வகையில் சுற்றுலா திட்டத்தத்தை தமிழக அரசின் சுற்றுலாத் துறை வடிவமைத்தது. அதன்படி சென்னை துறைமுகத்திலிருந்து 'எம்பிரஸ்' எனும் சொகுசு கப்பலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 4ஆம் தேதி சென்னை துறைமுகத்தில் தொடங்கி வைத்தார்.

மக்கள் சொகுசு சுற்றுலா பயணங்களை இதன் மூலம் மேற்கொள்ளலாம்.

சென்னையிலிருந்து விசாகப்பட்டினம் சென்றுவிட்டு, விசாகப்பட்டினத்தில் இருந்து இன்று காலை புதுச்சேரிக்கு வந்தடைந்தது இந்த கப்பல். புதுச்சேரி வம்பா கீரப்பாளையம் கலங்கரை விளக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பல், புதுச்சேரி ஆழ்கடல் எல்லையைச் சுற்றி பார்த்துவிட்டு, இங்கிருந்து ஆழ்கடல் எல்லை வழியாக மீண்டும் சென்னை சென்றடையத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த சுற்றுலா பயணத்தில் விசாகப்பட்டினம், புதுச்சேரியில் கப்பல் நிறுத்தப்படும்போது அங்கே உள்ள நகரைச் சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழிசை நடவடிக்கை

இதற்கிடையில் இந்த கப்பல் சென்னையிலிருந்து புறப்பட்ட அடுத்த தினம் செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், "சொகுசு புதுச்சேரி வருவது தொடர்பாக இதுவரைக்கும் எங்களிடம் அனுமதி பெறவில்லை, புதுச்சேரி அரசும் அனுமதி கொடுக்கவில்லை.

இந்த சொகுசு கப்பல் மட்டுமில்லை வருங்காலத்தில் கேளிக்கைகள் அனுமதிக்கப்பட்டாலும், அதில் எந்தவிதத்திலும் கலாச்சார சீர்கேடு இல்லாமல் இருக்கும். புதுச்சேரியில் எந்த விதத்திலும் மக்களும், இளைஞர்களும் பாதிக்காத ஒரு வகையான சுற்றுலாவாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.

அதில் ஆடல் பாடல் நிகழ்ச்சி இருக்கலாம். ஆனால் அதைக் கலாச்சார சீர்கேடு இல்லாமலும் ஏற்பாடு செய்திருக்க வேண்டும். எதிர்காலத்தில் புதுச்சேரியில் இதுபோன்று முறை வந்தாலும் அதில் கலாச்சார சீர்கேடு எந்த விதத்திலும் இல்லாமல் இருக்கும்," என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை புதுச்சேரி வந்துள்ள சொகுசு கப்பலுக்கு அரசு அனுமதி பெறாத காரணத்தினால் புதுச்சேரி கடலோர எல்லைக்குள் கப்பல் நுழைய அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் சொகுசு கப்பல் திரும்பி சென்றது.

கடலோர காவல் அதிகாரி விளக்கம்

புதுச்சேரிக்குச் சொகுசு கப்பல் தொடர்பாக புதுச்சேரி கடலோர காவல்துறை கண்காணிப்பாளர் வம்சீதர் ரெட்டியின் பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியது. அப்போது விளக்கமளித்த அவர், "கடலோர காவல்துறை தரப்பில் விசாரணை செய்ததில் துறைமுகம் மற்றும் சுற்றுலா இரண்டிலுமே இந்த சொகுசு கப்பல் புதுச்சேரி வருவதற்கு அனுமதி பெறவில்லை. அவை உள்ள வருவதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

புதுச்சேரி ஆளுநர் அலுவலகத்திலும் இந்த சொகுசு கப்பல் புதுச்சேரி வருவது தொடர்பாக இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை. இதனால் புதுச்சேரி கடலோர எல்லையிலிருந்து 5 நாட்டிக்கல் தூரத்தில் நங்கூரமிட்டு இந்தியக் கடலோர எல்லையில் இவர்கள் இந்த கப்பலை நிறுத்தி வைத்துக்கொள்ளலாம்.

ஆனால் புதுச்சேரி எல்லைக்குள் வர முடியாது. அனுமதியின்றி இந்திய எல்லையைக் கடந்து புதுச்சேரி கடலோர எல்லைக்குள் வந்தால் மட்டுமே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது அனுமதி பெறும் வரை இந்திய கடல் எல்லையில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நிற்கலாம் என்பதால் அங்கே நின்றுக் கொண்டிருக்கிறது. தற்சமயம் கப்பல் அனுமதி இல்லாத காரணத்தினால் திருப்பி சென்றுள்ளது," என்று அவர் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: